Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிறுகதை
மனோதத்துவம்
பிதாமகன்
- சித்ரா ரமேஷ்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlarge(சிங்கப்பூர் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்களைப் பற்றிய குறிப்பு தென்றல் அக்டோபர் 2008 இதழில் வெளியாயிற்று. சிறுகதையை இந்த இதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.)

இப்பத்தான் இந்த காடியை வாங்கினேன்! அப்படியே ஃபேமிலியோட கோயிலுக்குப் போய்ட்டு வரும்போது உங்க கால் வந்துச்சு! சரின்னு அப்படியே அவங்களை இறக்கி விட்டுட்டு வந்துட்டேன். இந்த வேலைக்கு நேரம் பார்க்க முடியுமா? யார் எப்ப கூப்பிட்டாலும் போகணும். இப்ப காடி விலையெல்லாம் குறைஞ்சிட்டு! நீங்ககூட வாங்கணும்னா சொல்லுங்க, நான் ஏற்பாடு செய்யறேன். செகண்ட் ஹாண்ட் வாங்கணும்னாக் கூட சொல்லுங்க! என் கூட்டாளி ஒத்தர் நல்லாப் பாத்து வாங்கித் தருவார். ரொம்ப நாளா மெர்ஸிடஸ் வாங்கணும்னு பார்த்துட்டே இருந்தேன். இப்பத்தான் கிடைச்சுது" என்று வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தவன், முரளியின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசுவதை நிறுத்தினான். ’படுபாவி ராம்கி! காஸ்கெட் சர்வீஸ் நம்பர் கொடுத்ததோடு என்னை இப்படி கழட்டி விட்டுட்டியே! இவன் பென்ஸ் கார் வாங்கிய பிரதாபத்தை கேட்டுக் கொண்டு வருவதற்கா?’ அப்பா இறந்த துக்கத்தைக் கூட ஒரு நிமிடம் மறந்து விட்டதாகத் தோன்றியது.

"உங்க ஃபாதர் உங்க ஹைட் இருப்பாரா? இன்னும் நல்ல உயரமா இருப்பாரா?" விட்டால் தன்னை படுக்க வைத்து காரியமெல்லாம் நடத்தி ஒரு டெமொ பார்ப்பான் போலிருந்தது.
அப்பா இறந்து விட்டதாக ஹாஸ்பிடலில் சொன்னதும் ஒரு கணம் ஆடிப்போய்விட்டான். லேசான துக்கத்தோடு என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. மாலா தான் உடனே சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி விட்டாள். பாடியை மார்ச்சுவரியில் வைத்துவிடச் சொல்லி ஊருக்குப் போன் செய்து, அந்தப் பக்க அழுகையை சமாளித்து 'உங்க ஃப்ரெண்ட் ராம்கிக்குப் போன் பண்ணுங்க! மேல்கொண்டு என்ன செய்யலாம்னு கேளுங்க' என்று சொன்னதும் ராம்கிக்கு போன். அவனுக்குத்தான் எப்படித்தான் எல்லாம் தெரிகிறதோ? எந்த இடத்துலே நகை வாங்கலாம் என்கிறதிலிருந்து மாவடு எங்கே கிடைக்கிறது என்பது வரை அவனிடம் கேட்கலாம். "டேய், புதுசா முஸ்தபா எதித்தாப்புலே திறந்திருக்கற ஹோட்டல்ல சப்பாத்தி மட்டும் வாங்கி சாப்பிட வேண்டாம்!"

"ராம்கி! அப்பா போய்ட்டார்! என்ன பண்றது?" என்றதும்

"பாடிய ஊருக்குத்தானே கொண்டு போகப் போறீங்க?" என்று கேட்டதும் தான் அந்தக் கேள்வி தோன்றியது.

"அப்பா முகமுழி கூட கிடைக்காமப் போயிடுமா"ன்னு ஊர்லே உங்க அண்ணா, அக்கா கேட்டாச்சு! ஊருக்குத்தான் கொண்டு போக வேண்டும்", என்று மாலா சொல்லிவிட்டாள். "ஆமாம்! ஊருக்குத்தான் அனுப்பணும்".

"பாடியை அவசரப்பட்டு வீட்டுக்கு எடுத்துண்டு போக வேண்டாம். முதல்ல எம்பாம் பண்ணி நீட்டா பேக் பண்ணி ஊருக்கு அனுப்ப என்ன வழின்னு பாப்போம். அப்புறம் பாடிய வீட்டுக்குக் கொண்டு போறதைப் பத்தி யோசிப்போம். செல்வராஜ் வீட்டுலே இதே மாதிரிதான் ஆச்சு. அவர் ஊருக்குத்தான் கொண்டு போனார். நீ முதல்ல காஸ்கெட் சர்விஸுக்குப் போன் பண்ணு".

"காஸ்கெட் சர்வீஸா?"

ஆமாம்பா! தமிழ் முரசுலே கடைசி பக்கத்திலெப் பாரு! ராஜூ காஸ்கெட் சர்வீஸ்ன்னு படத்தோட போன் நம்பரும் போட்டிருக்கும். போன் பண்ணிக் கேளேன்."

"சரி! நீயும் கொஞ்சம் வர்றியா?" என்று கேட்டதும் ராம்கி தயங்கியவாறு "இன்னிக்கி முடியாது. நாளைக்கு வறேன்" என்று சொல்லி போனை வைத்து விட்டான். மாலா "இன்னிக்கி சனிக்கிழமை! ரொம்ப சாஸ்திரம் பாக்கறவங்க மாதிரி இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்லை. உங்க ஃபிரெண்டுக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. பக்கத்துலே உமா நின்னு சொல்லியிருப்பா! ஒரு சமயம் அவசரம்னா கூட பொண்டாட்டி சொல்றதைத்தான் கேக்கணுமா?" என்று அந்த சமயத்துக்குப் பொருத்தமில்லாமல் ஏதோ பொருமினாள்.

"சரி! இப்ப போன் பண்ணிக் கேக்கறத்துக்கு எதுக்கு அவன் வரணும்?" ராம்கி சொன்ன காஸ்கெட் சர்வீஸுக்கு போன் பண்ணியதும் அவன் வந்து விட்டான்.

"சரி வாங்க சார் கடைக்கு போய் வேணுங்கற சாமானெல்லாம் ஏத்திக்கிட்டு வந்துடலாம். அதுக்குள்ளே நீங்க ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணிச் சொல்லிடுங்க! ரீத் வைக்க எத்தனை ஸ்டாண்ட் வேணும்? வரவங்களுக்குத் தண்ணி கலக்கி நீங்களே கொடுத்திடுவீங்களா? நம்ம கடைலேந்து தண்ணி பாக்கெட் எடுத்துக்கறீங்களா?"

முரளிக்கு கதை, வசனம் ஒன்றும் புரியவில்லை. அவனிடம் பாடியை ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு ஆயிரம் சந்தேகங்கள். கடைசியில் "உங்க ஃபாதர் உங்க ஹைட் இருப்பாரா? இன்னும் நல்ல உயரமா இருப்பாரா?" விட்டால் தன்னை படுக்க வைத்து காரியமெல்லாம் நடத்தி ஒரு டெமொ பார்ப்பான் போலிருந்தது. கடைசியில் அவனே "அதெல்லாம் நல்ல நீட்டா பேக் பண்ணி அனுப்பிறலாம். ஆனா இன்னிக்கே அனுப்பிறலாமா? இன்னிக்கி இனிமே முடியுமா தெரியலை" என்று சொன்ன பிறகுதான் பிரச்சனையின் முழுத் தீவீரம் புலப்பட்டது. வாங்கியிருந்த டிக்கெட்டை உபயோகிக்க முடியுமா? வேறு எந்த ஏர்லைன்ஸில் அனுப்ப வசதிப்படுமோ அதில் தனக்கும் அம்மாவுக்கும் டிக்கெட் வாங்கவேண்டும். ஊருக்கு வேறு ஒரு மணிக்கு ஒரு முறை போன் செய்து நிலவரத்தைச் சொல்ல வேண்டும். மாலாவையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போக முடியாது.

ஐந்து வருடத்துக்கு முன்னால் சிங்கப்பூருக்கு வந்தபோது இங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை. இங்கே இருப்பவர்களைப் பார்த்து மெள்ள வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து, இருக்கின்ற பணத்தைத் துடைத்து எடுத்து வீட்டை வாங்கிப் புதிது பண்ணி குடியேறியாகிவிட்டது. இதில் வருடம் ஒரு முறை சென்னைப் பயணம். விசிஆர், விசிபி, காமிரா, வாக்மேன், டிஸ்க்மென், பாடி ஸ்ப்ரே என்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கி அங்கிருந்து இங்கே வரும்போது இங்கே கிடைக்காததை அள்ளிக் கொண்டு வந்து இப்படியே ஐந்து வருடம் ஓடிவிட்டது. இந்த முறை செலவோடு செலவாக அப்பா அம்மாவைக் கூட்டி கொண்டு வந்ததுதான் தப்பாகிவிட்டது. ஒரு மாதம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. காலையில் எழுந்ததும் வாக்கிங் போய்விட்டு சன் டிவியில் அகால நேரத்தில் வரும் தொடர்களையெல்லாம் ரெகார்ட் பண்ணி நிதானமாக பார்த்துவிட்டு, 'ஸ்ட்ரெயிட் டைம்ஸ்', நியூஸ் பேப்பர், தமிழ் முரசு எல்லாவற்றையும் படித்துக்கொண்டு நன்றாய்ப் பொருந்திவிட்டது போல்தான் இருந்தது. உட்லண்ட்ஸிலிருந்து ஜோகூர் போகும் பாலத்தைக் காட்டிய போது "இது வழியாத்தானே ஜப்பான்காரன் சைக்கிள்லே வந்து சிங்கப்பூரை பிடிச்சான்?" இரண்டாம் உலகப் போர் கதையைக் கண்கள் மின்னப் பேசினார். அப்பா இரண்டாம் உலகப் போரின் தீவிர ரசிகர். இரண்டாம் உலகப்போரைப் பற்றியத் திரைப்படங்கள் எது வந்தாலும் தன்னையும் கூட்டிக்கொண்டு போய் மார்னிங் ஷோ பார்த்தது நினைவுக்கு வந்தது. வயிற்று வலி என்று ஆரம்பித்த பிரச்சனை. பூண்டு ரசம், கஷாயம், ஜெலுஸில் எதற்கும் அடங்காமல் கடைசியில் டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுத்தும் சரியாகாமல், வயிற்று வலி, வயிற்று வலி என்று துடித்ததைப் பார்த்து பயந்து போய் ஹாஸ்பிடலில் சேர்த்து என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் மாஸிவ் ஹார்ட் அட்டாக் என்று சுருட்டிப் பொட்டலமாய் கொடுத்து விட்டார்கள்.

"உங்கப்பாவுக்கு எண்பது வயசு இருக்குமா? எதுக்கு சார் கஷ்டப்படறீங்க? போறவங்களெல்லாம் புண்ணியம் செஞ்சவுங்க. வந்தவெரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கோர் இடமேதுன்னு பாடியிருக்காங்களே" கண்ணதாசன் பாடலை ராஜுவிடமிருந்து எதிபார்க்கவில்லை. "பரவாயில்லை சார்! நீங்க நல்லாப் படிச்சு பெரிய வேலை பாக்கறீங்க. உங்கப்பாவை நல்லபடியாத் திருப்பி அனுப்ப வசதியிருக்கு! போன வருஷம் சார்ஸ் வந்தப்ப எத்தினி வசதி இருந்தாலும் சொந்தக்காரங்களுக்கு மூஞ்சியக் கூட பாக்கவுடாம அப்படியே பாக் பண்ணிப் புதைச்சாங்க. ப்ரேயர்ஸ் எல்லாம் நாந்தான் சொன்னேன்" என்று அவன் பேசியது ஆறுதலாக இருந்தது. இதுவரை அம்மா பக்கத்தில் நின்று ஆறுதலாக ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. "சின்னதா ரோஜாமாலை ஒண்ணு கொணாந்திருக்கேன். அதையும் போட்டுடுங்க! அப்புறம் மூடிடுவேன். உங்க மிஸஸ், குழந்தைங்க, அம்மா எல்லாரையும் ஒரு வாட்டி பாத்துடச் சொல்லுங்க. உங்க ஐய்யிரு யாராச்சும் வந்து மந்திரம் சொல்லணுமா? நான் ப்ரேயர்ஸ் சொல்லிட்டுத்தான் இருக்கேன். காத்து கருப்பு எதுவும் அண்டாம இருக்க பாருங்க தாயத்து" என்று கையிலும் கழுத்திலும் தடிமனாக போட்டிருந்த பிரேஸ்லெட்டையும், செயினையும் தொட்டுக் காட்டினான்.

ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டு வந்ததிலிருந்து புது வேஷ்டியைக் கொண்டா, சட்டையைக் கொண்டா, அங்கவஸ்திரம் இருக்கா என்று கேட்டு அவனே அப்பாவிற்கு அலங்காரம் பண்ணி விபூதி இட்டு மாலை போட்டு, விட்டால் லேசாக ரோஸ்பவுடர் போட்டு மேக்கப் செய்து விடுவான் போலிருந்தது. "ஊருக்குப் போய் ரொம்ப நேரம் வைக்காதீங்க வெளியே எடுத்து குளிப்பாட்டி பாடையெல்லாம் கட்ட வேண்டாம். அப்படியே நாசூக்கா பெட்டியோட தூக்கச் சொல்லுங்க" என்ற எச்சரிக்கையோடு சவப்பெட்டிக்கு ஆணி அடித்து மூடி விட்டான்.

"பெரியம்மா பயப்படாதீங்க. நான் ப்ரேயர்ஸ் சொல்லிட்டுத்தான் மூடியிருக்கேன். வீட்லெ நடமாட்டம் ஒண்ணும் இருக்காது. கருமாதி, படையல் எல்லாம் ஊர்லதானா? ஊர்லேந்து வந்து இங்க சிவன் கோயில்ல படையல் போட்டு சாமி கும்பிட்டுக்கலாம்" என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் தயங்கினான். பணம் கேட்கத்தான் தயங்குகிறான் என்று நினைத்து "இருங்க மிஸ்டர் ராஜு எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா போஸ்ட் டேட்டட் செக் கொடுத்திடரேன். நீங்க நாலு நாள் கழிச்சு பணம் எடுக்கலாம்." "அது பரவாயில்லை. கிளம்பும்போது சொல்லிக்கக் கூடாது. அதான். அப்புறம் எந்த ஃபிளைட்டுன்னு கன்பர்ம் ஆச்சுன்னா பாடிய ஏர்போர்ட் கொண்டு போறத்துக்கு வேற வண்டி வெச்சிருக்கேன். அதை அனுப்பிடுவேன்."

வேறு டிக்கட் தனக்கும் அம்மாவுக்கும் ஏற்பாடு செய்து கிளம்பியாகி விட்டது. "என்னம்மா வந்த இடத்திலே இப்படியாச்சேன்னு இருக்கா? அப்பா வயித்து வலின்னு சொன்னதுமே ஹாஸ்பிடல்ல கொண்டு போய்க் காமிச்சிருக்கலாம். எனக்குத் தெரியாம போச்சு"
மீனா மீனான்னு கூப்பிட்டா இனிமே ஏன்னு கேக்க மாட்டேன். மீனாக்குப் பூ வாங்கிண்டு வந்தா அதை அவ படத்துக்குப் போட்டு பூஜை பண்ணுங்கோ. எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. அதை சொல்லிக் கூப்பிட்டா பூவை வெச்சுக்கறேன்னு சொல்லிட்டேன்
"அதுக்கு என்னடா இப்போ! ஒருத்தர் முன்ன பின்ன போக வேண்டியதுதானே! உங்களுக்கெல்லாம் ரொம்ப சிரமம் கொடுக்காமப் போனாரே!" என்று அம்மா மேலும் பேசினாள், "உங்கப்பாவுக்கு நான் இரண்டாம் தாரம். தெரியுமா?" அவனுக்குத் தெரியும். அப்பா இதுதான் உன் பெரியம்மா போட்டோ என்று காட்டியிருக்கிறார். சொன்னான்.

"நீ போட்டோ பாத்திருக்கியா? எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணின உடனே எல்லாரும் நான் ரொம்ப அதிருஷ்டம் பண்ணினவ. மூத்த தாரத்துக்குக் குழந்தைகள் கிடையாதுன்னு சொன்னா. அப்பல்லாம் யார் பொண்ணுக்கிட்ட வந்து உனக்கு அவரைப் புடிச்சிருக்கான்னு கேட்பா? ஏதோ எல்லாப் பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆற மாதிரி எனக்கும் ஆச்சுன்னு நினைச்சிண்டு இருந்தேன். அப்புறம் கல்யாணமெல்லாம் முடிஞ்சு இவரோட குடித்தனம் பண்ண ஆரம்பிச்சாச்சு. உங்கண்ணா ரங்கு வயித்துலே மூணு மாசம். வெள்ளிக்கிழமை சாயங்காலம் உங்கப்பா கை நிறைய பூ வாங்கிண்டு மீனா மீனான்னு கூப்பிடுண்டே இருக்கார். நான் காதிலேயே போட்டுக்காம பேசாம இருந்தேன். கல்யாணம் ஆனதிலேந்தே மீனா மீனான்னு உங்க பெரியம்மா பேரைத்தான் சொல்லி என்னை கூப்பிட்டுண்டு இருந்தார். ரொம்ப ஆசைப்பட்டு பண்ணிண்ட்டாராம். அவகூட வாழ எனக்குத்தான் கொடுத்து வைக்கலேன்னு சாந்தி முகூர்த்தத்தன்னிக்கே சொல்லிட்டார். அதையெல்லாம் எந்த பொம்மனாட்டியும் பெரிசா எடுத்துக்கமாட்டா! எதோ பாவம் ஆசையா அவகிட்ட இருந்தார். அதே மாதிரி நம்பகிட்டேயும் இருப்பார்ன்னு இருந்துட்டேன். அன்னிக்கு என்னவோ மனசுலே ஒரு ஆவேசம். மீனா மீனான்னு கூப்பிட்டா இனிமே ஏன்னு கேக்க மாட்டேன். மீனாக்குப் பூ வாங்கிண்டு வந்தா அதை அவ படத்துக்குப் போட்டு பூஜை பண்ணுங்கோ. எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. அதை சொல்லிக் கூப்பிட்டா பூவை வெச்சுக்கறேன்னு சொல்லிட்டேன். அவா அம்மா அதான் உங்க பாட்டி இதையெல்லாம் பாத்துண்டேயிருக்கா. வாயைத் திறந்து ஒண்ணும் சொல்லலே. உங்கப்பா, உன்னையும் என்னையும் வாழ வைக்கத் தெய்வமாயிட்ட அவளை இப்படியெல்லாம் பேசறியே. மீனான்னா எனக்கு உயிர்ன்னு உனக்குத் தெரியாதா? அம்மா நீயாவது அவகிட்டச் சொல்லக் கூடாதா? மீனாக் கிட்ட நான் எவ்வளவு ஆசையா இருந்தேன்னு. அப்புறம் வேற கல்யாணம் கூட வேணாம்னு இருந்தேன் நீங்கள்லாம் பிடிவாதம் பிடிச்சு பண்ணி வைச்சீங்க! இப்பப் பாரு இவ இந்த பேச்சு பேசறதை கேட்டுண்டு நிக்கறேன்னு சொன்னார். உங்கப் பாட்டி அப்பத்தான் வாயைத் தொறந்து, என்னடா இது அசடாட்டம் பேச்சு. அவ சொல்றதிலே என்ன தப்பு? மீனான்னா உனக்கு உயிர்ன்னு போட்டோ வச்சு மாலைப் போட்டு அவளையே நெனச்சிண்டு இருக்கியே. அதே மாதிரி அவ பண்ணினா ஒத்துப்பியான்னு கேட்டா! உங்கப் பாட்டி அப்படியெல்லாம் பேசுவான்னு எதிர்பாக்கலை. உங்கப்பா பதிலே பேசலை. உங்க பெரியம்மா போட்டோவை எடுத்து உள்ள வெச்சுட்டார். அதுக்கப்புறம் எங்கிட்ட மீனான்னு பேசறதை நிறுத்திட்டார். ஆனா என்னை எந்த பேர் சொல்லியும் கூப்பிட மாட்டார். இந்தான்னு குரல் கொடுப்பார், ஏய்ன்னு கூப்பிடுவார் ரொம்ப அவசரம்னா அம்மா தாயே லலிதாம்பிகேன்னுதான் கூப்பிடுவார். இப்படியே எங்க தாம்பத்தியமும் முடிஞ்சு போச்சு"

முரளிக்கு அம்மாவைவிட அப்பாவிடம் தான் நெருக்கம் அதிகம். அம்மாவிடம் இப்படி நெருங்கிப் பேசியதே இல்லை. அப்பா அம்மாவைப் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார் என்பதைக் கூட உணர்ந்ததில்லை. அப்பா அம்மாவை கணவன் மனைவியாக யோசித்திருந்தால் தானே இதை உணர முடியும்? எப்போதும் அப்பா அம்மாவாகவே தான் உணர்ந்திருக்கின்ற உறவு.

"ஏம்மா இப்போ அப்பா போனப்புறம் பழசையெல்லாம் கிளறிண்டு"

"மனுஷா செத்துப் போய்ட்டா தெய்வமாய்டுவாளாடா?" அம்மாவுக்குள் இப்படி ஒரு மனுஷி இருப்பதை அம்மாவை ஒரு பெண்ணாகக் கூட நினைக்காத தன்னையும் அப்பாவையும் ஒரு கணம் நினைத்தான்.

சென்னையில் வந்து இறங்கியாகிவிட்டது. அண்ணா வீட்டு ஹாலை ஒழித்து வைத்திருந்தார்கள். கொண்டு போனவுடனேயே மன்னி "சீக்கிரம் எடுத்துடணும். ஃபிளாட்டுலே ரொம்ப நாழி வச்சுக்க முடியாது" என்று அவசரப் படுத்தினாள். பெட்டியின் மூடியைத் திறக்கப் போனபோது என்னவோ பாம்பு இருப்பது போல் அண்ணாவும் மன்னியும் வேண்டாம் வேண்டாம் என்று அலறினார்கள்.

"என்னண்ணா இது? கடைசி முகமுழிகூட கிடக்காமப் போய்டுமான்னு கலாட்டா பண்ணி கிட்டத்தட்ட ஆறாயிரம் டாலர் செலவழிச்சு எடுத்துண்டு வந்திருக்கேன். இப்போ வேண்டாம்னு அலறீங்களே?" அவனையும் மீறி வார்த்தைகள் வந்து விட்டன.

"இல்லேடா! சாஸ்திரிகளுக்கு சொல்லியனுப்பியாச்சு. முக்கியமா நிம்மியும் காயத்ரியும் வந்துடட்டும் அவாள்லாம் வந்தபுறம் திறக்கலாம்ன்னு சொன்னேன்."

"முதல் ரெண்டு அட்டாக்குலே தப்பிச்சார். ரெண்டாவது அட்டாக்லெ போய்ட்டார்" என்று மன்னி யாருடனோ போனில் பேசிகொண்டிருந்தது காதில் விழுந்தது.

முதல் இரண்டு அட்டாக்கா? நம்மிடம் சொல்லக்கூட இல்லை. ரத்தம் கொதித்தது. அப்பாவே போன பிறகு இதையெல்லாம் கேட்டுச் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை.

"என்ன மாமா இவ்வளவு லேட்டா வர்றேளே! ஏற்கெனவே வயசானவர். போய் ரெண்டு மூணு நாளாச்சு. சட்புட்டுன்னு காரியத்தை முடிச்சு பொணத்தை எடுக்க வேண்டாமா?" என்று சாஸ்திரிகளிடம் அண்ணா கத்திக் கொண்டிருந்தான்.

"உங்க அவசரம் எனக்குப் புரியறது. காருக்குப் புரியலையே. வர்ற வழியிலே மக்கர் பண்ணிடுத்து. டிரைவரை எடுத்துண்டு போகச் சொல்லிட்டு கால் டாக்ஸிக்குப் போன் பண்ணி அது வந்து சேர்றதுக்கு லேட் ஆயிடுத்து" என்று சாஸ்திரிகள் தணிவாகப் பேசினார். மடமடவென்று காரியங்கள் முடிந்து சின்ன செம்பில் சாம்பலாகக் கொடுத்த அப்பாவை பெஸண்ட் நகர் கடலில் கரைத்தாகி விட்டது. எல்லாம் ஐந்து மணி நேரத்தில் முடிந்து விட்டது. இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தோன்றியது.

"ஒம்பதாம் நாள் கல்லூனி காரியத்தை ஆரம்பிச்சுடலாம். இங்கேயே கிருஷ்ண தீர்த்தம்னு புதுசா கட்டியிருக்கா. மொசைக் தரை, டைல்ஸ் எல்லாம் பதிச்சு நீட்டா இருக்கும். கிரேக்கியம் வரைக்கும் அங்கேயே பண்ணிடலாம். நமக்குன்னு ஒரு ரூம் கொடுத்துடுவா. இப்ப என் நாத்தானார் ஆத்துக்காரர் போனப்ப அங்கதான் எல்லா காரியமும் செஞ்சா" காயத்ரி ஏற்பாடு செய்துவிட்டாள். "பத்து வரைக்கும்தான் இருக்க முடியுமா? அதுக்கு இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்கே! மாலா ஏதாவது தைக்க கொடுத்திருக்காளா? திவ்யாக்கும் தினேஷுக்கும் ஏதாவது வாங்கிண்டு போகணும்னா அதையெல்லாம் போய் வாங்கிண்டு வந்துடு முரளி! பத்து முடிஞ்சு ஊருக்கு கிளம்பத்தான் நேரம் சரியா இருக்கும்" என்று மன்னி சொன்னதும் "பட்சணமெல்லாம் இப்பவே வாங்கி வச்சுக்க வேண்டாம். கிளம்பற சமயத்தில் இங்க பக்கத்திலேயே சூர்யா ஸ்வீட்ஸிருக்கே, அங்க போய் ஃபிரெஷா வாங்கிக்கலாம்" என்றாள் அம்மா சாதாரணமாக.

"நாங்க இலைக்கு ஜாங்கிரி போடச் சொன்னோம். நீங்க கல்லு மாதிரி மைசூர்பாகு போட்டு ஏமாத்தீட்டீங்க. கிரேக்கியத் துக்கு ஐம்பது அறுபது பேர் வருவா. இந்த மாதிரி பண்ணிடாதீங்கோ" என்று கறாராய் பேசிவிட்ட திருப்தியில் "என்னடா உங்க மாமியாராத்துலே மோதிரம் போட்டாளா? இப்பவே புது டிரஸையும் கொடுத்துட வேண்டியதுதானே. இன்னிக்குதானே நீ ஊருக்கு கிளம்பணும்?" என்று அத்தை கல்யாணப் பரபரப்பில் இருப்பவள் போல் சீர் வரிசை பற்றிப் பேசினாள்.

"கூட ஒரு ஐம்பது ரூபாயாவது போட்டுக் கொடுங்கோ! எனக்கு கையிலே வந்து சேரும்போது ஒண்ணுமிருக்காது" என்று சாஸ்திரிகள் வாயைத் திறந்து கேட்டதும்,

"என்ன மாமா மேலெ கேட்டுண்டேயிருக்கேளே. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் ராஜூ சாஸ்திரிகள் கிட்ட கொடுத்தாச்சே" என்று அண்ணா அல்பத்தனமாக சண்டைக்குப் போனார்.

"கார்ல வந்து பணம் வாங்கிண்டு போறதோட அவர் வேலை முடிஞ்சுடுத்து. நீங்கதான் பாக்கறேளே! நாங்கத்தான் இங்க எல்லா காரியமும் பண்றோம்" என்று அவர் கூனிக் குறுகிக் கேட்டபோது கூட அண்ணா அசைந்து கொடுக்கவில்லை.

"என்னம்மா! அப்பா இல்லாமத் தனியா இருக்கறாப்புலே இருக்கா? வருஷாப்திகம் முடிஞ்சதும் உன்னை சிங்கப்பூர் கூட்டிண்டு போறேன்" என்று அம்மாவிடம் சொன்னான். "அதுக்கென்னடா? வந்தாப் போச்சு. இத்தனை நாள் அவரை விட்டுட்டு எங்கேயும் போக முடியலை. எனக்கென்ன தனி? நான் பாட்டுக்கு சமச்சுண்டு, குழந்தைகளோட பேசிண்டு பொழுதை போக்கிண்டுடுவேன். காயத்ரியாத்துக்கும் நிர்மலாவாத்துக்கும் போய்ட்டு வந்தா பொழுது போய்டறது. வருஷாப்திகத்துக்கு மாலாவையும் குழந்தைகளையும் கூட்டிண்டு வா" என்று அம்மா சமாதானம் ஆன மாதிரி தைரியமாகப் பேசினாள். "பணமெல்லாம் வச்சிருக்கியா? நிறைய செலவாயிடுத்துப் போல இருக்கே"

முதல் நாள் காரியம் பண்ணுவதற்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆகிறது என்று அண்ணா கணக்குக் காட்டி கையில் கொண்டு வந்த பணத்தையெல்லாம் துடைத்து அண்ணாவிடம் கொடுத்தாகி விட்டது. அதை கவனித்து விட்டுத்தான் அம்மா கேட்கிறாள்.

"இல்லேம்மா! ஆயிரம் ரூபாய் தனியா எடுத்து வச்சிருந்தேன். சிடி பாங்க்லே லோன் போட்டிருக்கேன். ரெண்டு மாசம் சம்பளம் வந்தா சமாளிச்சுக்கலாம்" என்றான். கால் டாக்ஸி வருவதற்குள் மாலாவுக்குப் போன் செய்துவிட்டு சூர்யா ஸ்வீட்ஸ் போய் எதாவது வாங்கி வந்து விடலாம் என்று கிளம்பினான்.

"என்ன முரளி அங்க எல்லாரும் அப்பாவை சரியா கவனிச்சுக்கலை அங்க வந்து போய்ட்டார்ன்னு எதாவது சொன்னாங்களா?" என்று மாலா கலக்கத்துடன் கேட்டாள். "அதெல்லாம் ஒண்ணுமில்லை. பசங்களுக்கு என்ன ஸ்வீட் வேணும்னு கேட்டுச் சொல்லு" என்றதும்,

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க பத்திரமாக வந்து சேருங்க", என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

சாவை எதிர்பார்த்து இயல்பாய் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆனால் தனக்கு உபரியாக கிட்டத்தட்ட பத்தாயிரம் டாலர் செலவு! திரும்பிப் போய் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு டாலர் கணக்குப் பார்த்து செலவு செய்து அடுத்த வருடம் ஊருக்கு வருவதற்கு பணம் சேர்க்க வேண்டும்.

காலையில் மேலே பணம் கொடுக்கக் கூடாதா என்று கேட்ட சாஸ்திரிகள் வருவதைப் பார்த்தான். மெர்ஸிடஸ் வாங்கிய ராஜூவும், காரில் வந்து இறங்கிய நாகராஜ சாஸ்திரிகளும் ஞாபகத்திற்கு வந்தனர்.

"நாளைக்கு நனைச்சு காய வைக்க வேஷ்டியெல்லாம் எடுத்துண்டு போகணும்" காலயில் நடந்ததை மறந்து விட்டார்.

"காலம்பற அண்ணா கிட்ட பணம் கேட்டீங்களே! இந்தாங்க வச்சுக்கோங்க" என்று ஐந்நூறு ரூபாயை அவர் கையில் திணித்தான். குழந்தைகளிடம் ஒன்றும் வாங்கி வர முடியவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்.

கையில் இருக்கும் பணம் ஏர்போர்ட் போகப் போதுமா என்ற கவலையுடன் டாக்ஸிக்காகக் காத்திருந்தான்.

சித்ரா ரமேஷ்
More

மனோதத்துவம்
Share: 




© Copyright 2020 Tamilonline