Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
அரசியல் பழகு
ஒரு கிராமம், ஒரு கோவில்
- லதா ரகு|மார்ச் 2021|
Share:
சௌக்கியமா என்று செல்வம் ஆரம்பித்த சம்பிரதாய செல்பேசி உரையாடல் உப்புச்சப்பில்லாமல் இருந்தது. ரங்கு லேசுப்பட்ட ஆளில்லை.

"என்ன வேணும்? வேலை சம்பந்தமாவா?"

ஒரு நிமிடம் மனதில் எழுந்த அவமான உணர்வை அவசரமாக வார்த்தைகள் கொண்டு புறந்தள்ளினான். "அதே, சட்டுன்னு கேட்டுட்டே. உங்கள் ஊர் கோவிலைப்பத்தி இந்த வாரம் எழுதணுமாம், எடிட்டர் கட்டளை" தயக்கத்துடன் தொடங்கிய விளக்கம். ரங்குவின் சுருக்கமான "எப்ப வரே" என்பதில் சடாரென்று முடிந்துபோனது. நாளும் முடிவு செய்யப்பட்டது.

அவர்கள் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ரங்கு ஒரு கிராமப் பள்ளியில் வாத்தியாராகவும், செல்வம் சென்னையில் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் நட்பைத் தொடருகிறார்கள். பத்திரிகை வேலையில் மிகவும் பிடித்து ஈடுபட்டிருந்தவனுக்குச் சனிதசை ஆரம்பமானது. இந்தியாவை மாற்றி அமைக்கக்கூடிய கட்டுரைகளை எழுத வல்லவன் என்ற அபார நம்பிக்கையுடன் இருந்தவன், வேலை பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகை நஷ்டத்தில் ஓட, வேறொரு நிறுவனம் அதை வாங்க, அவர்களின் பிரதான பதிப்பாக வெளியாகும் பெண்கள் பத்திரிகைக்கு உதவியாசிரியனாக மாற்றப்பட்டான்.

கோல வகைகள், பன்னீர் மக்கனி செய்யும் விதம், ராசிபலன் போன்ற அத்தியாவசியக் கட்டுரைகளுடன், பெண் அடிமைத்தனம், பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் வேலைவாய்ப்பு போன்ற 'தேவையற்ற' கட்டுரைகளை நடுநடுவே எழுதினான். அவற்றுக்கு சீஃப் எடிட்டரின் ஒப்புதல் அவ்வளவு எளிதில் கிடைத்ததில்லை.

"நாட்டைத் திருத்த எண்ணமா? போன வாரம் வந்த இதழில் அதிக கமெண்ட் பெற்ற கட்டுரை எது தெரியுமில்ல? குழந்தை வளர்ப்பு. பெண்களோடு சென்டிமென்ட் புரிஞ்சு எழுதணும். பல்ஸ் புடிச்சுப் பாரு, அவங்க துடிப்பு எதுலே இருக்குன்னு தெரியும். அதைக் கவர் பண்ணி எழுது. அதை விட்டுட்டு, பெண் சுதந்திரம், பெண் உரிமை எல்லாம் யாருக்குப் புரியும்? இல்லை யாருக்குத் தேவை?"

பெண்கள் பற்றிய புரிதலுக்கான அடித்தளத்தை அவன் வீடு அமைத்துக் கொடுத்திருந்தது.

"அம்மா, கணிதம் முதல் பாடமாக வேண்டாம். சரித்திரம்தான் வேணும். நீதான் அப்பாகிட்ட சொல்லணும்."

அவன் என்றும் அம்மாபிள்ளை. அப்பாவிடம் பயம். அம்மாவிடமும் பயம்தான். இருந்தாலும் அவள்மூலம் காய் நகர்த்திப் பார்க்க நினைத்தான். அம்மா தன் இயலாமையை உடனே கூறிவிட்டாள்.

"போடா, உனக்குச் சமர்த்து பத்தாது. அப்பாவுக்கு எல்லாம் தெரியும். சரியாத்தான் முடிவெடுப்பார். எது நல்லதுன்னு அவருக்குத் தெரியாதா? இதோ பாரு, படிப்பைப் பத்தியெல்லாம் நான் என்ன கண்டேன். அப்பா சொன்னதைக் கேளு."

தன் இடமாகச் சமையலறையை மட்டும் பார்ப்பது அவளுக்கு ஒரு விதத்தில் சௌகர்யமாகவே இருந்தது.

கடைசியில் அப்பாவின் ஆசைப்படி அவன் படித்தான். பெண்களைப்பற்றிய புரிதலுக்கு சில வருடங்களில் நடந்த மற்றொரு சம்பவம்.

கூடப்படித்த பெண்ணுக்கும் பையனுக்கும் காதல். நண்பர்கள் பலர் ஊதி விட அசுரரூபம் எடுத்தது. பார்க், பீச் என்று கண்டபடி சுற்ற, விஷயம் பெற்றோர்கள் காதுக்கு எட்டியது. அதன்பின் அந்தப் பெண் கல்லூரிக்கு வருவதை நிறுத்திவிட்டாள். என்ன ஆயிற்று என்றுகூட பார்க்கமுடியாதபடி இரவோடு இரவாக மொத்தக் குடும்பமும் எங்கேயோ மறைந்துபோனது. இவன் நண்பன்தான் பைத்தியம் பிடித்தாற்போல் அலைந்து, படிப்பைக் கோட்டைவிட்டு, அவள் நினைவாகவே வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டான். இதில் .செல்வத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது, சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணைக் கடை வீதியில் பார்த்தபோது, கையில் ஒரு குழந்தையோடு கடையில் புத்தகப் பை வாங்கிக்கொண்டிருந்தாள்.

"வசந்தா.... நீ... நீங்கள் வசந்தாதானே?"

உடனே புரிந்துகொண்டாள். "செல்வம், எப்படி இருக்கே? செல்லம் மாமாக்கு வணக்கம் சொல்லு" என்றாள். "அப்பாவுக்குத் தெரியாதா, நல்லது எது கெட்டது எதுன்னு. பாரு, நல்ல புருஷன், கை நிறையச் சம்பளம், பெரிய வீடு, பிக்கல் பிடுங்கல் இல்லை, அழகா ஒரு பையன். எல்லாம் அப்பா எடுத்த முடிவாலதானே!"

பெண்கள் இப்படித்தான் என்னும் நினைப்பு அவனுள் ஊறிப்போனது.

"வாங்கோ சௌக்கியம்தானே'' என்று ரங்குவின் மனைவி உதிர்த்த வார்த்தைகளில் உற்சாகமில்லை. ரங்குவும் பேசவில்லை. அதுதான் சுபாவம் என்று எண்பது சதவீதம் தள்ளுபடி கொடுத்தாலும், மீதம் இருபதிலும் எங்கோ இடித்தது.

"ஏண்டா, ஏதேனும் அசெளகர்யமா? சொல்லி இருக்கலாமே. இன்னொரு நாள் வந்திருப்பேனே."

"ஒண்ணுமில்ல, அம்மாவுக்கு திடீர்னு உடம்பு முடியாமல் போய்டுத்து. என்னால உன்கூட வரமுடியாது. சென்னைக்குக் கிளம்பிண்டே இருக்கோம். நடு ராத்திரி ஃபோன் வந்தது. சொல்ல முடியலே, சாரிடா."

ரங்குவின்மேல் நிறையப் பரிதாபமும், எரிச்சலால் கொஞ்சம் கோபமும் வந்ததை முகம் காட்டிக்கொடுத்தது.

"கவலைப்படாதே. உன் வேலை அதனால் தடைப்படாது. கோவில் குருக்கள் முகவரி இதுதான். அவரைப் போய்ப் பார். எல்லாமும் அழைத்துச்சென்று காட்டுவார். என்னைவிட அவர்தான் சரியான சாய்ஸ். வருஷக் கணக்கா இங்கயே இருக்கார்."

முகவரியை விசாரித்தபடி அந்த வீட்டின்முன் நின்றான். கோவிலுக்கு மிக அருகிலிருந்தது அந்த ஓட்டுவீடு. பாசி படர்ந்து உடைந்த நிலையில் பல ஓடுகள் வீட்டின் வயதையும் குருக்களின் நிலைமையும் படம்போட்டுக் காட்டின.

லேசாக மூடியிருந்த கதவை அசைத்து "சார்!" என்று குரல் கொடுத்தான். அந்த அழைப்பு அவனுக்கே அபத்தமாகத் தோன்ற, "அய்யா!" என்று மாற்றிக் குரல் கொடுக்கலாமா என்று நினைக்குமுன் சற்றே பூசினாற்போல் தெரிந்த பெண்மணி ஒருவர் கதவை அகலத் திறந்தார்.

"ரங்கநாதன் சொல்லியிருந்தார், மதராசிலிருந்து வரேள்போல. உள்ளே வாங்கோ."

சற்றே ஆண்பிள்ளைத்தனமான கட்டைக் குரல், சுற்றி முடியப்பட்ட ஈரமான தலைமுடி, அழுத்தமாக உள்ளே சொருகப்பட்ட சாமந்திக் கிள்ளல், கைகளில் மருதாணி, இடுப்பில் மடிசார், கிழிசல்களோடு. எழுபதுகளின் திரைப்படத்திலிருந்து வெளிவந்த தோற்றம்.

"இருங்கோ ரேழியைச் சாத்திட்டு வந்துடறேன். கோவில் நடை சாத்தறத்துக்குள்ள போயிடலாம்."

"லாம்"மில் சற்றே திகைத்தான்.

அவன் சிந்தனையில் பெண்கள் நிறையப் பேசுவார்கள், சுயசிந்தனை இல்லாமல் பேசுவார்கள், தேவையில்லாததைப் பேசுவார்கள். இந்த அபிப்பிராயங்களாலேயே காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை.

"குருக்கள்...?"

"உங்க நண்பர் சொல்லலையோ? இவருக்குக் கொஞ்சம் உடம்பு முடியாமல் இருக்கு. ஒரு வாரமா படுக்கைதான் வாழ்க்கைன்னு ஆயிடுத்து. கோவில் வேலைக்குக்கூட வேறு ஏற்பாடாயிருக்கு. கவலைப்படாதேள், நேக்கும் கோவில் சரித்திரம் நன்னாவே தெரியும். காலையும் மாலையும் அவன் மொகம் பார்த்து வளர்ந்ததில்லையோ இந்தச் சரீரம்."

தன்னை அறியாமல் தயக்கத்தை உச்சிட்டு வெளிப்படுத்தினான். எப்படிச் சமாளித்து மறுப்பது! ஒரு பெண், அதுவும் படித்தவர்போல் தெரியவில்லை. சமையல், குழந்தைகள், வீடு, கணவன் இவற்றைத் தவிர ஸ்லோக புஸ்தகங்கள் மட்டுமே அறிந்தவர்போல் தெரிகிறது. இவரிடம் என்னத்தைக் கேட்டு, என்னத்தைக் கட்டுரையாக எழுதி! தான் படித்த புராணத் தகவல்களைச் சொல்லக்கூடும். அவன் தேடல் பற்றிய புரிதல்கூட இருக்காது.

"சிரமம் வேண்டாம். குருக்களுக்கு உடம்பு வேறு சரியில்லை. அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள். வேறொரு சமயம் வறேன்."

"சிரமமா? அந்தப் பரப்பிரும்மத்தைப் பத்திப் பேசக் கெடச்ச பாக்கியம். வாங்கோ,நடை சாத்திடப் போறா." மேலே பேச இடங்கொடுக்காமல் கிளம்ப, வேறுவழி தெரியாமல் செல்வம் தொடர்ந்தான்.

"ஆத்துலே வேலை முடிச்சு ஈசனைப் பார்க்க நேரம் ஒதுக்கிட்டீங்க போல," கோவில் வாசலில் யாரோ ஒருவர் விசாரித்தார்.

"இன்னிக்கு வீட்டுக்கு வருவேன்னு சொல்லி இருக்கேள்," வேறொருவர்.

சிரிப்புத்தான் வந்தது. நன்றாக வம்பு பேசி நேரத்தைச் செலவழிப்பவரை நம்பி இங்கு வந்து...!

"மாமி, பையனிடமிருந்து கடிதாசி வந்ததா?" மற்றொருவர்.

நீண்டு வளர்ந்த அந்தக் கோவில் நடையில் பேசாமல் நடப்பது சிரமமாக இருந்ததால், கடைசிக் கேள்வியின் நாயகனான அந்தப் பையனிடமிருந்தே பேச்சை ஆரம்பித்தான். "பையனுக்கு எங்கே வேலை?"

"வேலையா? ஈசுவரா, அவ்வளவு வயசாகல்ல. இப்பதான் வேத பாடசாலையிலே படிக்கறான்."

"வேதபாடசாலையா? இன்னும் அதெல்லாம் இருக்கா?"

"என்ன இப்படிக் கேட்டுட்டேள். உங்க மதராசில்தான் இருக்கு," இடத்தின் பெயரைச் சொன்னார்.

"அட, வீட்டுக்குப் பக்கந்தான். நீங்கச் சொல்லித்தான் அப்படி ஒன்று இருப்பது தெரியும். என்ன சொல்லிக் கொடுப்பார்கள், வேதமா?"

"அதுவும் உண்டு. தவிர பத்தாவதுவரை படிப்பும் உண்டு. முடிச்சதும் வேதபாராயணம் இஷ்டமென்றால் அதைச் செய்யலாம். படிப்பைத் தொடரப் பிரியம் என்றால் அதற்கும் வழி உண்டு. சமஸ்கிருதம், தமிழ், கிரந்தம் எல்லாம் சொல்லித் தரா. பார்க்கலாம்,என்ன செய்யப் போறான்னு."

"நீங்க மனசிலே என்ன வெச்சிருக்கீங்க?"

"நான் எதற்கு நினைக்கவேண்டும்?"

அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சென்னையில் இருக்கும் தாய்மார்கள் குழந்தைகளைப் பாட்டு, டான்ஸ் என்று ஒவ்வோரிடமாக அழைத்துக்கொண்டு சுற்றுவதை அறியாதவர்.

"குழந்தைகளுக்கு என்ன தேவைன்னு நாமதான் புரியவைக்க வேண்டும்."

"இதை ஒத்துக்கமாட்டேன். குழந்தைகளுக்குப் படிப்பு சுயசிந்தனையைக் கத்துத் தரதுக்குத்தான். தனக்கு வேண்டியதைத் தானே தீர்மானிக்கும் வயது பத்தாவது படித்து முடிக்கும்போது வந்துவிடும். அப்போ அவனே தீர்மானிக்கட்டும். என்னால் முடிஞ்சது, ஈசனிடம் அவனை நல்ல வழியில் கொண்டுசெல்ல வேண்டிக்கிறது மட்டும்தான்."

பட்டென்று முகத்தில் யாரோ அறைந்ததுபோல் இருந்தது. பெண்ணியம்பற்றி எவ்வளவோ பேசி இருக்கிறான், பெண் உரிமைகள் பற்றி நிறையக் கட்டுரைகள். ஒன்றும் அறியாதவரென்று நினைத்தவரிடம் தெரிந்த தெளிவில் பெண்ணைப் பற்றிய பார்வை புதிய வடிவெடுத்தது. எங்கோ ஒரு சின்ன கிராமத்தில் தெரிந்த அந்தப் பெண்ணின் தெளிவு, இனிவரும் தலைமுறை பற்றிய கவலையை அழித்தது.

அவனுக்கு நம்பிக்கை வந்தது. இவரால் கட்டுரைக்குத் தேவையான விஷயங்கள் தெளிவாகவே கொடுக்கப்படும். ஆனால் இந்தக் கட்டுரையை அவன் இப்போது எழுதப் போவதில்லை. பெண்களைப்பற்றிய கட்டுரை ஒன்றைப் புதிய கோணத்தில் எழுதப் போகிறான்.

எடிட்டரிடம் பேசவேண்டும் .
லதா ரகு,
சென்னை
More

அரசியல் பழகு
Share: 




© Copyright 2020 Tamilonline