இரண்டு முட்டாள்கள்?
|
|
|
|
'பொழுது விடிந்துவிட்டது, எழுந்திருங்க எல்லாரும், நாலாபக்கமும் இரைதேடக் கிளம்பவேண்டும்' என்று விவாதம் செய்வதுபோல வளாகத்து மரங்களிலிருந்து பறவைகளின் விதவிதமான கிரீச்சொலிகள் காலையைப் புத்துணர்வுள்ளதாக்கிக் கொண்டிருந்தன. இந்த ஊரடங்கு வந்ததில், தெருவில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் பேருந்துகள், ஆட்டோக்கள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் நாராச ஒலிகள் இல்லாததும் ஒரு நல்ல மாற்றமாகத்தான் இருக்கிறது. அதற்காக இந்நிலை நீடித்து, அன்றாட வாழ்க்கை முறையை முடக்க வேண்டுமென யாரும் விரும்ப மாட்டார்கள். இந்த நோயிலிருந்து விடுபட்டு ஊரும் உலகமும் பழைய நிலைக்கு வந்த பின்னும் இயற்கையை நாசமாக்காமல் காக்கும் மனமாற்றம் வந்தால் போதும்!
பால்கனியில் நின்று குளிர்ந்த காற்றையும், பறவைகளின் சிலும்பல்களையும் அனுபவித்துக்கொண்டிருந்த மாதுரி, பால்வண்டியின் ஓசை கேட்டு, மணி ஏழாகிவிட்டதே என்று தினசரிக் கடமைகளுக்கு விரைந்தாள்.
குளித்து முடித்து சமையல்கட்டில் நுழைந்ததுமே, காலைச் சிற்றுண்டிக்கு வேண்டிய தயார்நிலையில் இருந்தது அடுப்படி. 'வீட்டிலிருந்து வேலை' என்று ஏற்பட்ட நாள்முதல் விஸ்வா அட்டவணை போட்டுக்கொண்டு இந்த உதவிகளைச் செய்வதால் வேலைக்காரி இல்லாத சிரமமே தெரிவதில்லை.
விளையாட்டுப்போல நாலு மாதம் ஓடிவிட்டது. வெளியே தெருவே போய் நாலு பேரோடு பழகி நண்பர்களுடன் அளவளாவி, என உற்சாகமாக வேலைக்குப் போன நிலை மாறியதில் ஆண்களுக்கு ஒருவித அலுப்பு என்றால், என்னதான் உதவி இருந்தாலும் யந்திரத்தனமாக தினம் சமையல், சாப்பாடு, வீட்டுவேலை, தூக்கம் என்றானதில், எப்போதுதான் இதற்கு முடிவோ என்று பெண்களுக்கும் சலிப்பாகத்தான் இருக்கிறது! விஸ்வா குளித்து வருமுன் காலை உணவைத் தயாரிக்க மும்முரமானாள்.
உணவை மேஜையில் வைக்கையில் வெளியே அழைப்புமணி ஒலித்தது. இந்நாட்களில் மிகத்தேவையானால் அன்றி யாரும் வருவதில்லையே என எண்ணியபடி கதவைத் திறந்தாள். வீட்டுவேலை செய்யும் பொன்னிதான், கையில் ஒரு தூக்குடன் நின்றிருந்தாள். அவள் வீடு, பாலத்தின் அந்தப் பக்கம்தான் இருக்கிறது. இந்தத் தொற்றின் காரணமாக இவர்களை வேலை செய்யக் குடியிருப்பில் அனுமதிப்பதில்லை.
"ரேஷன் அரிசியில் கொஞ்சம் சோறு மட்டும் ஆக்கி வெச்சேன், பாவம் மாசமாயிருக்குற பொண்ணு, மல்லிகாவுக்கு வெறும் ஊறுகாயும் சோறுமாதான் போடுறேன், இதில் முழு ஊரடங்குன்னு இன்னிக்கு கடையும் இல்லை. ஏதாவது கொளம்பு, வெஞ்சனம் இருந்தாக் குடு தாயி" என்றவண்ணம் நின்றாள்.
காலையில் செய்த இட்லியும், சாம்பாரும் எப்படியும் மீதமாகத்தான் போகிறது; பாவம், ஒரே பெண்ணைப் பெற்று, வாயும் வயிறுமாக வந்திருப்பவளுக்கு நல்ல உணவுகூடக் கொடுக்க முடியாத நிலை. நாலைந்து இட்டிலி, கொஞ்சம் குழம்பு, சிறிய பாட்டிலில் கொஞ்சம் ஊறுகாய், சில பழங்கள் என்று ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள். 'ஆமாம் பொன்னி, நாலுநாள் முன்னேதானே வேலை செய்யிற வீடுகள்ல சம்பளம் வாங்கினே; அதுக்குள்ளயா செலவாயிட்டது?" என்று யதார்த்தமாகக் கேட்டாள். ஆரம்பமானது புலம்பல் கச்சேரி!
"மாதுரிம்மா, நீயும், மத்த வீடுங்கள்லயும் மாசம் தவறாம சம்பளம் குடுக்கிறீங்க. ஆனா, எம்புருஷன் இருக்குதே, அது ஆகாசத்தில வெச்சாலும் எடுத்துடும், அடிவயித்தில வச்சாலும் கிளப்பிக்கிட்டுப் போயிடும்; அதுதா இந்த மனுஷன் குடிக்குத் தப்பி எட்டாவது பிளாக்கம்மா மூலமா பாங்கிக் கணக்கு தொடங்கி போட்டுட்டு, பாதிதான் வூட்டுக்கு கொண்டு போறேன். நாளைக்கே இந்தப் பொண்ணுக்கு பேறுகாலம் பார்த்து நல்லபடியா அனுப்பி வைக்க நாலு காசு வாணாவா?" பாசமும் பொறுப்பும் முந்தி நிற்க அவள் பதில் உரைத்தாள்.
"ஏன் பொன்னி, இப்பதான் ஊரடங்குன்னு கடையெல்லாம் மூடியிருக்கே; அப்ப எப்படிக் குடிக்கிறான் உன் வீட்டுக்காரன்?" என்று வெள்ளந்தியாகக் கேட்டாள் மாதுரி.
"நீ ஒண்ணு தாயி, நாலு பக்கத்திலேந்தும் சரக்கு கொணாந்து மூணு வெல வெச்சு விக்கிறானுங்கோ; குடுக்குறதைக் குடுத்தா யாரும் கேட்கவோ, கண்டுக்கவோ மாட்டாங்க. எப்பவும் எங்களுக்கு விடிவில்லம்மா. சரி அங்க மல்லிகா ஒண்டியா இருக்கும், வாரேன்" என்று விடைபெற்றுச் சென்றாள்.
மகன் விபுலும் எழுந்து வந்தான். காலை உணவுக்கடை, அடுத்து வீடு சுத்தம் செய்தல் என்று வேலைகளில் ஆழ்ந்துவிட்டாள். கல்லூரியின் நீ...ண்ட விடுமுறையைக் கழிக்க கைபேசி, கணினி என்று சுறுசுறுப்பானான் விபுல். ஊடகங்களில் உலாவும் தகவல்களில் கைபேசிப் பதிவுகளால் ஏற்படும் சில வம்பு வழக்குகளைப் பற்றிப் பார்த்தும் கேட்டும் இருந்த மாதுரிக்கு, இவன் சதா கைபேசியில் ஆழ்ந்திருக்கிறானே, ஏதாவது பிரசினை வராதிருக்க வேண்டுமே என்று கவலையும் எழுந்தது. |
|
சொல்லிக்கொள்ளாமல் தடாலென்று வெளியில் செல்லும் வழக்கம் வேறு இருக்கிறது. விஸ்வா இதில் எல்லாம் தலையிட மாட்டார். "அவன் ஒண்ணும் குழந்தையில்லை; அவனுக்கும் எல்லாம் தெரியும்" என்று இவள் வாயை அடைத்துவிடுவார். நாட்களும், வாரங்களும் யாருக்கும் காத்திராது நகர்ந்து கொண்டிருந்தன.
"கொஞ்ச நாளாகவே இந்தப் பையன் விபுல் சரியாயில்லைனு நெனைக்கிறேன்; கைபேசியும் கையுமா இருக்கிறது புதுசில்லை. ஆனா நெனச்சப்பெல்லாம் வெளியே கிளம்பறான். எங்காவது சுத்தித் திரிஞ்சு போலீஸ், அது இதுன்னு வந்துடுமோன்னு பயமாயிருக்கு" கணவரிடம் மெதுவாகப் பேச்செடுத்தாள் மாதுரி.
"உனக்கு எதனால் இந்த சந்தேகம் வந்தது? காரணமில்லாமல் ஊர் சுத்தறவனில்லை அவன். நல்ல சினேகிதர் வட்டம் இருக்கு அவனுக்கு. அவங்க செய்வதும் உருப்படியான வேலையாகத்தான் இருக்கும்" என்று மகனுக்குப் பரிந்து வந்தார் விஸ்வா. "அப்படியே வெட்டியாகச் சுற்றினால், போலீஸ் நிறுத்தி தோப்புக்கரணமோ, குட்டிக்கரணமோ போடச்சொன்னா போட்டு, முட்டிவலியோட வந்துட்டுப்போறான்" என்று கிண்டலாக முடித்தார்.
"நீங்க இப்படிப் பரிந்து வரதினாலதான் அவனுக்கு இன்னும் துளிர்த்துப் போயிடறது. இப்பகூட மணி ஏழாகப் போறது, ஊரடங்கு சமயம்; வீடு வந்து சேராம எங்கதான் போனானோ? " என்று அலுத்துக் கொண்டிருக்கையிலேயே சிநேகிதனின் காரில் வந்து இறங்கினான் விபுல்.
★★★★★
அன்றைய பொழுது வாயில்மணி ஓசையுடன் விடிந்தது.
பொன்னிதான்; வாயெல்லாம் பல்லாக "நேத்து ராவு மல்லிகாவுக்கு பொம்பளப்பிள்ளை பொறந்திருக்கும்மா. நம்ம தம்பி மட்டும் சமயத்திலே வராம இருந்திருந்தா, நான் இப்படி நல்ல சேதியோடவந்திருக்கவே மாட்டேன்" என்று நெகிழ்வுடன் கூறினாள். "எங்க விபுலா? அவன் உனக்கு என்ன ஒத்தாசை செய்தான்? அவனும், அவன் கைபேசியும் தானே அவன் உலகம்?" என்று புரியாமல் கேட்டாள் மாதுரி.
"நேத்து முழு ஊரடங்கு இல்லியா? அப்பப் பார்த்து மல்லிகாவுக்கு நோவு கண்டுடிச்சி. இந்த மனுசனைக் காலையிலிருந்தே காணோம். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக ஒரு ஆட்டோகூட கிடைக்கலை. எதேச்சையா தம்பி அந்தப் பக்கமா போயிட்டிருந்திச்சா? என்ன வேலையாய் போயிட்டிருந்திச்சோ, என் பதட்டத்தைப் பார்த்து, நின்னு அக்கறையா விசாரிச்சுச்சு. ஆம்புலன்ஸுக்கு போன் போட்டுப் பார்த்தா, யாரும் எடுக்கலை. சாதாரணமாவே ஆம்புலன்ஸ் எங்க மாதிரி குடிசை, சந்துப்பக்கம் எல்லாம் அப்படி வந்துடாது. போன் போட்டாலும் அது வரக்கொள்ள பிள்ளை பொறந்து காதுகுத்துகூட ஆயிடும். தம்பிதான் யார் யாருக்கோ போன் போட்டு, அவங்க செனேகிதப் பசங்க காரோட வந்தாங்க. காமணியிலே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டோம். அங்கே போனா, 'இந்தப் பொண்ணுக்கு ஒடம்பு பலவீனமாயிருக்கு, ரத்தம் ஏத்தினாத்தான் பிரசவம் சுலபமாகும், ஆனா எங்க ரத்த வங்கியிலே ரத்தமில்லை'ன்னுட்டாங்க. பொறவும்கூட தம்பிதான் தெரிஞ்சவுங்களுக்கெல்லாம் போனில் சேதி அனுப்பி, அவுங்களிலே ஒருத்தங்க ரத்தம் குடுத்து, அவ்வளவு உதவியா இருந்தாங்க" என்று கதைபோல் கூறி முடித்துவிட்டு, "அந்தப் பொண்ணு அங்க தனியா இருக்கும் நான் வாரேன் தாயி" என்று கிளம்பிவிட்டாள்.
தூங்கியெழுந்து வந்த விஸ்வா விவரங்களைக் கேட்டுவிட்டு, "பார்த்தாயா, நான்தான் சொன்னேனே, நம்ம பையன் எவ்வளவு பொறுப்பா, உதவியிருக்கான்? அவனுடைய சிநேகிதர்களெல்லாமே உதவி செய்யும் மனதோடு எவ்வளவு ஒற்றுமையாக செயல்பட்டிருக்காங்க" என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, அங்கு கைபேசியும் கையுமாக வந்தான் விபுல். "சரி சார், இன்னும் அரை மணியில் நானும் என் பிரெண்ட்ஸும் அங்கு இருப்போம்", என்றபடி யாருக்கோ பதிலிறுத்தவன், "அம்மா, நாங்க சிலபேர் வாலன்டியரா பதிவு பண்ணியிருக்கோம். ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோருக்கு முறை வைத்துக்கொண்டு தேவையான மளிகை, மருந்து, காய்கறிகள் என்று வாங்கிக் கொடுக்கிறோம். நாம் வீட்டிலேயே சௌகரியமா வேளைக்கு சமையல், சாப்பாடு என்று இருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் சிறிய தேவைகளுக்குக்கூட யாருமில்லாமல் எவ்வளவு சிரமப்படுவார்கள்? இதற்கெல்லாம்தான் இப்போது கைபேசி மிகவும் உதவியாக இருக்கிறது." என்று விளக்கினான்.
'அடேயப்பா, இந்தக்கால இளைஞர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!' என்று வியந்தபடி, விபுலைப் பெருமைபொங்கப் பார்த்தாள் மாதுரி.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
இரண்டு முட்டாள்கள்?
|
|
|
|
|
|
|
|