Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
அகநக நட்பு
- மருங்கர்|அக்டோபர் 2020|
Share:
வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா" எனக் கேட்டாள். "இல்ல, இன்னைக்கு குடிக்கணும்போல இல்ல" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மீண்டும் அவள் "நான் சொன்னத மறக்காம தாமு அண்ணாவிடம் கேளுங்க, அவர் தப்பா நினைக்கமாட்டார்" என்றாள். "சரி எத்தனை தடவைதான் சொல்லுவ" என்று சற்றே கோபமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அவள் என்னை டீ குடிக்கக் கூப்பிட்டதே இதை ஞாபகப்படுத்தத்தான் என்று எனக்குத் தோன்றியது. வீட்டைவிட்டுக் கிளம்பும் வேளையில் சண்டை வேண்டாம் என்று கிளம்பினேன்.

திருச்சி கந்தக பூமி. வெய்யிலின் கடுமை எப்போதுமே அதிகம். இன்று காலை ஒன்பதே முக்காலுக்கே நல்ல தாக்கம். சில்லென்று வந்த வேப்பமரக் காற்று, வெய்யிலின் கடுமையைச் சற்று தணித்தது. என் வீட்டில் அருகிலேயே பேருந்து நிறுத்தம். வீட்டிலிருந்து பொன்மலை பேருந்து நிலையம் பத்து நிமிடந்தான். அங்கே போனால் உட்கார இடம் கிடைக்கும். மெதுவாக நடந்தேன்.

என் பெயர் கோபாலன் (எ) கோபி. ஒரே பையன் ராஜ். கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டான். மூன்று வாரத்துக்கு முன்னால்தான், ஒரு வருடம் அமெரிக்காவில் இருந்துவிட்டு இந்தியா வந்தோம். பயணக்களைப்பு நீங்க மூன்று வாரம் ஆகிவிட்டது. பையனையும் பேரக் குழந்தைகளையும் நினைத்து அசைபோடும் நேரத்தில், பொன்மலை பேருந்து நிலையம் வந்துவிட்டது. கடிகாரம் மணி 10:10 எனக் காட்டியது. ராஜ் என் பிறந்த நாளைக்கு வாங்கிக்கொடுத்த கடிகாரம்.

வண்டி வருவதற்கு முப்பது நிமிடம் உள்ளது. அதுக்குள்ளே நம்ம முருகன் டீ ஸ்டால்ல ஒரு டீ சாப்பிட நினைச்சேன். நான் வீட்டில் இரண்டாவது டோஸ் டீ குடிக்காததுக்கு இதுவும் ஒரு காரணம்.

முருகன் டீ ஸ்டால் பஸ் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. கடையை நெருங்கியதும், முருகன் "வாங்க தாமோதரன் சார். பார்த்து ரொம்ப நாள் ஆச்சு! எப்படி இருக்கீங்க? பிரயாணம் எப்படி இருந்தது?" என மளமளவெனக் கேள்விகளை அடுக்கினான். மெதுவாக ஒன்று ஒன்றாக பதில் சொன்னேன். "அப்படியே சூடா ஒரு டீ போடு. உன் கடை டீ சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!" என்றேன். ஊர் விஷயங்களை ஒன்று விடாமல் ஒப்பித்தான்.

என் கையில் டீயைக் கொடுத்தபடி "அமெரிக்க டீ ஸ்டால் எப்படி இருக்கும் சார்?" என்று கேட்டான். நான் சும்மா இல்லாமல், "ஒன்ன மாதிரி அழுக்குச் சட்டை எல்லாம் போடமாட்டாங்க" என்றேன். அவன் முகம் சற்றுச் சுருங்கியதைக் கண்டு, அப்படியே வேறொரு விஷயத்திற்கு மாறினேன்."

அங்கே காஃபி ஆர்டர் பண்ணா கப்பு மாறாம இருக்க, கப்புல நம்ம பேரை எழுதித் தருவாங்க. நான் என் பேரை கோபின்னு சொன்னேன். வெள்ளைக்காரி என்ன புரிஞ்சுண்டான்னு தெரியல, அவ 'காபி'ன்னு (Kappi) எழுத்திட்டா" என்று சொன்னேன். என்ன புரிஞ்சதோ தெரியல, சிரித்தான்.

"ஆனா உன்ன மாதிரி வெளிப்படையா பேசற நல்ல மனசு, அங்க பார்க்கலைப்பா!" என முடித்தேன். அவன் மனம் சந்தோஷப்பட்டதை உணர்ந்தேன். சாதகமான கருத்துக்களை மனிதர்கள் எப்பொழுதும் விரும்புவார்கள், யாரும் விதி விலக்கல்ல என நினைத்தபடி கடிகாரத்தைப் பார்த்தேன். இன்னும் 5 நிமிடம் இருந்தது. "சரி வரேம்ப்பா!" என்று சொல்லிவிட்டு, டீக்காசைக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

எண் 21 பேருந்தை, ஓட்டுநர் குறுகிய பாதையில் திருப்பியது இங்கிருந்தே தெரிந்தது. சுமார் 60 பேர் காத்திருந்தனர். உட்கார்ந்து செல்ல என்ன வழி என்று சுற்றிப் பார்த்தேன். என் தெருப்பையன் கண்ணனைப் பார்த்தேன். அவனைக் கூப்பிட்டு, கைக்குட்டையைக் கொடுத்து இடம் பிடிக்குமாறு சொன்னேன். அவன் கையில் ஏற்கனவே இரண்டு கைக்குட்டைகள். "சார், அம்புஜம் மாமியும், கௌரி டீச்சரும் ஏற்கனவே கேட்டிருக்காங்க. சரி கொடுங்க" என்றான்.

அவனிடம் "டேய்! நீ முதல்ல டீச்சருக்கு இடம் போட்டுவிட்டு எனக்கு இடம் போடுடா" என்ன நக்கலாகச் சொன்னேன். அவன் திரும்பிப் பார்த்து "சார்! இந்தக் கிண்டல்தானே வேண்டாங்கிறது" என்று சொல்லிவிட்டு ஓடினான். அவனுக்கு கௌரி டீச்சர் பொண்ணு மேல ஒரு கண்ணு!!

தீரன் சின்னமலை பேருந்து மெதுவாக நிறுத்தத்திற்கு வந்தது. கண்ணன்போல இளவட்டங்கள் வரிசையாக 'டக் டக்' என்று ஓடும் பேருந்தின் படிக்கட்டில் ஏறினார்கள். சில பசங்களின் கையில் பல கைகுட்டைகள்! சில குரங்குகள் ஜன்னல் கம்பியை எம்பிப் பிடித்து இடம் பிடித்தன. நான் வேறு கண்ணனை முதல்ல டீச்சருக்கு இடம் பிடின்னு சொல்லிட்டேன். எனக்கு உட்கார இடம் கிடைக்குமான்னு சின்ன பயம். தாமு வீட்டுக்குப் போக ஒரு மணி நேரமாவது ஆகும்.

கண்ணன் சாமர்த்தியசாலி. எப்படியோ மூன்று சீட்டுகளைப் பிடித்துவிட்டு, எனக்குக் கை காட்டினான். பேருந்து நின்றது. சீட்டு பிடிக்காதவர்கள் முண்டி அடித்துகொண்டு உள்ளே சென்றனர். நான் மெதுவாக ஏறி உள்ளே சென்று உட்கார்ந்தேன். பின்னர் திரும்பி கண்ணனுக்கு "தேங்க்ஸ்!" சொன்னேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. டிக்கெட்டை வாங்கிய பிறகு, சற்றே கண்ணை மூடினேன் பேருந்து முன்னோக்கி நகர, என் மனம் பின்னோக்கி நகர்ந்தது. நானும் தாமுவும் சிறுவயது நண்பர்கள். படித்தது வளர்ந்தது எல்லாம் லால்குடிதான். நாங்கள் ஒன்றாகப் பள்ளிக்குப் போவோம். அவன் பின்னால் மிதிவண்டியில் உட்கார்ந்து போன நாட்களை மறக்க முடியுமோ! ஒன்றாகப் படித்த நாங்கள் வேறு வேறு மேஜர் எடுத்ததால் இருவேறு கல்லூரியில் படித்தோம். நான் பொறியியல் படித்து குரூப் 1 தேர்வில் தேர்வு பெற்று, பொன்மலை ரயில்வே வொர்க்‌ஷாப்பில் பணியில் சேர்ந்தேன். அவன் வேலைக்குச் சிறிது கஷ்டப்பட்டான். நாங்கள் வாரத்திற்கு இரு முறையாவது பார்த்துக் கொள்வோம். சினிமாவுக்குப் போவது, காவிரி பாலத்தில் பேசிக்கொண்டே நடப்பது, உச்சிப் பிள்ளையார் கோவில் மலைமேல் உட்கார்ந்து கொண்டு வெட்டிக்கதை அடிப்பது என்று காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தோம். எப்படியோ அவன் தந்தைமூலம் அவனுக்குக் கூட்டுறவு வங்கியில் ஒரு வேலையும் கிடைத்தது.

திடீரென்று பேருந்தின் வேகம் குறைந்து நின்றது. பின்னிருந்து ஒரு குரல். "பாலக்கரை ரயில்வே கிராஸிங்! இனிமே போன மாதிரிதான்" என்று யாரோ ஒருவர் புலம்பினார். தலையை வெளியே விட்டுப் பார்த்தேன். சுமார் 10 வண்டிகளாவது முன்னால் இருக்கும். சுற்றிப் பார்த்தேன். அங்கே ஒரு சிறு புத்தகக் கடை. டீ மற்றும் 'தம்' பிரியர்கள் கீழே இறங்கினர். நான் என் சக பிரயாணியிடம் எனது இருக்கையைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு இறங்கினேன். கடையில் புத்தகங்கள். புதிதாக வந்த இரு நாவல்களை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.

தாமு ஒரு புத்தகப்பிரியன். கல்கி, சாண்டில்யன், சுஜாதா தொடக்கி சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் வரை படிக்காத புதினங்கள், கட்டுரைகளே இல்லை. நான் அவனைப்போல் இல்லை. வெறும் வார, மாதப் பத்திரிக்கைகளோடு சரி. பல நாட்கள் அவன் தான் படித்த பல கதைகளை, அவரவர் பாணியிலே சொல்வதைக் கேட்டு வியந்திருக்கிறேன். தாமுவின் ஆஃபீஸ் அருகில் புதிதாக ஒரு புத்தகக்கடை திறந்தார்கள். அவன் அங்கேதான் அவனது துணைவி சுந்தரியைப் பார்த்தான்.

அது அவள் தந்தையின் கடை. முழுப்பொறுப்பும் அவளிடமே. அவள் 'ஜாடிக்கேத்த மூடி'. இவன் புத்தகப்பிரியன் என்றால் இவள் 'புத்தக அடிமை'. சட்டென்று பற்றிக்கொண்டது காதல். அதற்குப் பிறகு எங்கள் சந்திப்பு மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறைதான். நாங்கள் சந்திக்கும்போது 'சுந்தரி புராணம்'தான். கவிதை சொல்லுகிறேன் என்று பிதற்றுவான். எனக்கு அதைக் கேட்டதும் 'கிளிஞ்சல்கள்' படத்தில் வரும் காதல் பைத்தியம் ஞாபகம்தான் வரும். அவனை தப்பாகச் சொல்ல மாட்டேன். மனித வாழ்வில் காதல் என்பது ஒரு அத்தியாயம். சிலருக்கு அது திருமணத்திற்குப் பின்னரே தொடங்குகிறது. ஆனால் பலருக்கு அது கானல் நீர்.

வீட்டில் எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்து, அவசர அவசரமாகக் கல்யாணமும் மூன்று மாதங்களுக்குள் நடந்து முடிந்தது. என் அதிர்ஷ்டம்தான் மனைவி மாலதியாக வந்தது என சொல்லவேண்டும். வாழ்வில் எல்லாம் ஏறுமுகம்தான். அலுவலகத்தில் பதவி உயர்வு, புது வீடு எனச் சென்றது. தாமுவின் காதலை அவன் வீட்டில் ஏற்கவில்லை. அவன் அப்பாவிற்கு என்மேல் நல்ல அபிப்பிராயம். எனது படிப்பும், உத்தியோகமும் கூட இருக்கலாம். இப்போது எனக்குக் கல்யாணம் வேறு ஆகிவிட்டது. நம் ஊரில் கல்யாணம் ஆனவன் சில விஷயங்களைப் பேசுவதும் கல்யாணம் ஆகாதவன் பேசுவதும் வெவ்வேறு விதமாகப் பார்க்கப்படும். பலமுறை நான் பேசியபிறகு அவர் சம்மதித்தார்.

சுந்தரி வீட்டில் அவ்வளவு எதிர்ப்பில்லை. அவர்கள் கல்யாணம் இனிதே நடந்தது. அதன் பிறகு சுந்தரிக்கு என்மேல் தனி மரியாதை மற்றும் அன்பு. என்னை "கோபியண்ணா" என்றுதான் அழைப்பாள். நாட்கள், வாரங்களாகவும் , மாதங்களாகவும் , வருடங்களாகவும் ஒடின. எனக்கு ஒரு பையன், அவனுக்கும் ஒரே பையன்தான். எங்களைப்போல் எங்கள் குழந்தைகள் ஒட்டிக் கொள்ளவில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. தீடீரென்று ஒரு குரல் "சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்துருச்சு! எல்லாரும் இறங்குங்க" என்றது. மெதுவாக இறங்கினேன்.
தாமுவின் வீடு ஒரு மைல் தூரம்தான். ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு போய் இறங்கினேன். வாசலில் யாரோ உட்கார்ந்து இருந்தார். அருகில் போனதும், அவர் "யார் வேணும்?" என்றார். "நான் தாமுவைப் பார்க்க வந்திருக்கேன்" என்றேன். "அவர் இப்ப இங்கே இல்லையே, நாங்க இந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கோம்" என்றார்.

அப்போது "ஹலோ கோபி சார்!" என்று பரிச்சயமான ஒரு குரல். திரும்பிப் பார்த்தால் பாஸ்கரன். அந்தத் தெருவில் கடை நடத்துகிறார். "வாங்க நம்ம திண்ணையில் உட்கார்ந்து பேசுவோம்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடம் "என்ன சார் ஆச்சு, சொல்லுங்க" எனக் கவலையுடன் கேட்டேன். "ஒரு எட்டு, ஒன்பது மாசத்துக்கு முன்னாடி, அவருக்கு எதோ உடம்பு சரியில்லன்னு நினைக்றேன். எங்கட்ட விவரம் சொல்லலை. ஒரு வாரம் பக்கத்தில இருக்கற கிளினிக்ல அட்மிட்ஆயி இருந்தாரு. அப்படியே தில்லைநகர் பையன் வீட்டுக்குக் கூட்டிட்டு போய்ட்டாங்க. அவங்க பையன் மட்டும் வந்து எல்லா சாமானையும் எடுத்திட்டுப் போய் வீட்ட வாடகைக்கு விட்டுட்டான்" என்றார்.

ஒரு பையன் அப்போது எதோ ஒரு சாப்பாட்டுக் கேரியரை அவரிடம் கொடுத்தான். "இன்னைக்கு நான் ஒரு பொழுது. மெஸ்ல சொல்ல மறந்துட்டேன். மணி பன்னிரண்டரை ஆகப்போகுது. எனக்கு வந்த சாப்பாடுதான். சாப்பிடுங்க" என்றார்.

நான் மறுத்து "எனக்கு மனசு சரியில்ல. நான் கிளம்பிப் போய் அவனைப் பார்க்கணும்" என்றேன். அதற்கு பாஸ்கரன் "சார் எங்க அப்பா எப்பவும் சொல்வார்கள் யார் வீட்டுக்கும் லஞ்ச் சமயத்தில போனா அவங்களும் இடைஞ்சல் , நமக்கும் தர்ம சங்கடம். அதனாலே கடையிலிருந்து எனக்கு வந்த சாப்பாடுதான். சும்மா சாப்பிடுங்க!" என்றார். அவர் கூறியது சரியெனப் படவே சாப்பிட ஆரம்பித்தேன். பிரிஞ்சி ரைஸ், தயிர்ப் பச்சடி. சாப்பிட்டுக்கொண்டே "பாஸ்கரன், அமெரிக்காவில் இருந்து அவன் வீட்டு நம்பருக்கும், செல் நம்பர்க்கும் பலமுறை கூப்பிட்டேன். பதிலே இல்லை! இப்போ புரியுது. அவன் பையன் , சுந்தரி நம்பர்கூட என்கிட்ட இல்லை. அவன் பையன்கூட ஒண்ணும் சொல்லலை" என வருத்தப்பட்டேன். வேகமாகச் சாப்பிட்டுவிட்டு, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

தாமுவின் பையன் வீடு எனக்குத் தெரியும். தெருவில் வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டு தில்லைநகருக்குக் கிளம்பினேன். மனதில் குழப்பம் அதிகமாய் இருந்தது. " என்ன ஆயிருக்கும்! ஒண்ணும் புரியலையே!" கண்ணைச் சற்று மூடினேன்.

என் அமெரிக்கப் பயணத்துக்கு முன் தாமுவிடம் இருந்து எனக்கு ஒரு ஃபோன் கால். "கோபி! உன்கிட்ட அவசரமாப் பேசணும். திரு.வி.க . பார்க்கில் மீட் பண்ணலாம் வரியா" என்றான். நான் உடனே கிளம்பிப் போனேன். அங்கே சற்றுக் கவலையுடன் உட்கார்ந்து இருந்தான்.

"என்னடா ஆச்சு?" எனக் கேட்டேன். அதற்கு அவன் "எனக்கு அவசரமாக இரண்டு லட்சம் தேவைப்படுது. ஏன் எதுக்குன்னு கேக்காதே. சமயம் வரப்ப, நானே சொல்றேன்" என்றான்.

தாமு இதுவரை என்னிடம் பணம் கேட்டதே இல்லை. சினிமா, ஹோட்டல் போனா அவன் ஒரு தடவை செலவு செய்வான், நான் ஒரு தடவை செலவு செய்வேன். நான் உடனே "சரி கிளம்பு" என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து, வங்கிக்கு அவனை கூட்டிக்கொண்டு சென்றேன். உடனடியாக இரண்டு லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். அவன் "ரொம்ப தேங்க்ஸ் டா! எப்ப தர முடியும்னு தெரியலை. சீக்கிரமாய்த் தரேன்" என்றான். "நீ கேட்டதே ரொம்ப சந்தோஷம்! எப்ப தரமுடியுமோ அப்ப தா" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன். நடந்து ஒரு வருஷம் ஓடிவிட்டது.

ஆட்டோ ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு முன்னமாதிரி கையில பணம் இல்லை. என் பையனை வேலையிலிருந்து லே ஆஃப் பண்ணியதால் நிறைய அமெரிக்கச் செலவுகளை நானே பார்க்க வேண்டியதாயிற்று. மாலதிக்கு முட்டி ஆபரேஷன் கட்டாயம் பண்ணனும்னு டாக்டர் சொல்லிவிட்டார். இரண்டு மூட்டுலயும் பிரச்சனை. அவ விந்தி விந்தி நடக்கிறதப் பார்க்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. அவளுக்கு வேற சில பிரச்சனைகளும் இருக்கு. கிட்டத்தட்ட பத்து லட்சம் செலவாகும்ன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால தாமுகிட்டப் போய்ப் பணத்தை கேட்கலாம்னு கிளம்பினேன். இப்ப அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே!

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். சுந்தரிதான் வந்து கதவைத் திறந்தாள். "அண்ணே! வாங்க, வாங்க! எப்படி இருக்கிங்க? எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க. உள்ள வாங்க" என்று மளமளவெனப் பேசினாள். அவள் வார்த்தைகளில் உண்மையான அன்பும், சந்தோஷமும் தெரிந்தன.

"எங்கம்மா தாமு, அவனை முதல்ல கூப்பிடு" என்றேன். "ஏங்க, இங்கே வாங்க. யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க". எனக் கத்தினாள். தாமு மெதுவாக பக்கத்தில் இருக்கும் பெட்ரூமில் இருந்து ஹாலுக்கு வந்தான். "அடேய்! என்னடா ஆச்சு! எப்படி இருக்க" என அவனை ஆரத் தழுவினேன். அவன் இருசுற்று மெலிந்துதான் இருந்தான்.

கண்களில் நீருடன் சுந்தரி "அண்ணா, நீங்க ஊருக்கு போனபிறகு அவருக்குப் பல பிரச்சனைகள். சின்னச் சின்ன தெரிஞ்ச வேலை செய்யவே கஷ்டப்பட்டார். தெரிஞ்ச இடத்துக்கு போகறத்துக்கே ஒரே குழப்பம். அடிக்கடி மறந்து போய்டுவார். மூணு நாலு தடவை செல்ஃபோனை தொலைச்சுட்டார். டாக்டர்கிட்ட செக்கப் கூட்டிட்டு போனோம். டெஸ்ட் எல்லாம் பண்ணிப் பார்த்துட்டு அவருக்கு அல்ஷைமர் நோய் ஸ்டேஜ் 4ல இருக்கார்னு சொல்லிட்டாங்க. பொதுவா இது மெதுவா பரவுகிற வியாதி. நம்ம கெட்டநேரம், இவருக்கு கொஞ்சம் வேகமாகவே ப்ரோக்ரஸ் ஆகுது. உயிருக்கு ஒரு பிரச்சனையும் இல்ல , இன்னும் பத்து வருஷம் இருப்பாருன்னு சொல்லிட்டார். அங்கே தனியா இருக்க வேணாம்னு பையன் இங்கே கூட்டிட்டு வந்துட்டான்." என்று அழுது முடித்தாள்.

"நீங்க இவரோட பேசிக்கிட்டு இருங்க. இதோ வரேன்" என்று சொல்லிவிட்டு சமையல் அறைப்பக்கம் சென்றாள். தாமு என்னைப் பார்த்து "கையில என்னடா ஏதோ புத்தகம் வச்சுருக்க" என்று கேட்டான். "உனக்கு கொடுக்கத்தான் வாங்கிட்டு வந்தேன்" என்று சொல்லி அவன் கையில் கொடுத்தேன். "வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சிடா! நீங்க ஏங்க இதை இப்படி பண்ணீங்கன்னு கேட்கறா? ஆனா எனக்கு அப்படி பண்ண மாதிரி ஞாபகமே இல்லை" என்றான். எனக்கு கண்களில் வந்த தண்ணீரை சற்று மறைந்துவிட்டு அப்படியே பேச்சை வேறு திசைக்கு திருப்பினேன். அவனுக்கு மிகவும் பிடித்த கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பற்றிப் பேச ஆரம்பிதேன். "நான் அமெரிக்கா போகும்போது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் வாங்கிக்கொண்டு போய் முடித்தும் விட்டேன்டா" என்று சொன்னேன்.

"நா உனக்கு காலேஜ் படிக்கறப்போ ஆரம்பிடான்னு சொன்னேன். உனக்கு இப்பதான் அது உறைச்சிருக்கு" எனச் சொல்லி சிரித்தான். நான் வந்தியத்தேவனை பற்றிப் பேசினேன். அவனுக்கு ரொம்ப்ப பிடித்த பாத்திரம். ரசித்து ஒரு மணி நேரம்கூடப் பேசுவான். இப்போது பல விஷயங்களை மறந்து இருந்தான். அப்படியே பேசிக்கொண்டே இருந்தேன். பள்ளி, கல்லூரி நாட்கள் பற்றிப் பேசினோம்.

"அண்ணா! அவர் சிரிச்சுப் பேசி, ஏன் இவ்வளவு நேரம் பேசியே ரொம்ப மாசம் ஆச்சு. அடிக்கடி வாங்கண்ணா" என்று சொல்லியபடியே வாழைக்காய் பஜ்ஜியும் டீயும் என் பக்கத்தில் வைத்தாள்.

"இதோ டாய்லெட் போய்ட்டுவரேன்" என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து செல்ல, "சாப்பிடுங்கண்ணா, அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு அவன் பின்னால் போனாள். நான் சாப்பிட்டபடியே மனதில் பல எண்ணங்கள். "நான் பணம் கொடுத்ததைக் கட்டாயம் சுந்தரிகிட்ட சொல்லி இருக்கமாட்டான். இவனுக்கு ஞாபகமும் இருக்காது. நான் சொன்னால் சுந்தரி கட்டாயம் நம்புவா, ஆனா அது சரியில்லை. இவன் எப்படி செலவை சமாளிக்கிறான்னு தெரியலை. நாம எப்படியாவது சமாளிச்சுக்கலாம்" என்று நினைத்து அவனிடம் பணம்பற்றிப் பேசக்கூடாது என முடிவு எடுத்தேன்.

அவர்கள் வந்ததும் "நான் இப்ப கிளம்பிப் போனாதான் வீட்டுக்கு ஒரு ஆறு மணிபோல போய்ச்சேரலாம். மாலதி வேற தனியா இருக்கா. அப்ப கிளம்பட்டுமா?" என்று கேட்டேன்.

"அண்ணா இவரோட பழகி பழகி எனக்கு மறதி வந்திரும் போல!, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று உள்ளே சென்றாள் . சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தவளின் கையில் ஒரு காசோலை, இரண்டு லட்சத்திற்கு!

"அண்ணா, ஒரு நாள் இவர் பழைய டைரியை பார்க்கறப்போ உங்க பேர், அட்ரஸ் கீழ ஒரு குறிப்பு எழுதி வச்சு இருந்தாரு. எதோ ஒரு தேதி போட்டு "நான் கோபிகிட்ட இரண்டு லட்சம் வாங்கி இருக்கேன். நான் மறந்தாலும் நீங்கள் கொடுத்துவிடுங்கள். அவன் கேட்கமாட்டான்" அப்படீன்னு. அவர் சொன்ன மாதிரி நீங்க கேட்கவேயில்லயே. என் பையன்கூட உங்க வீட்டுக்கு ரெண்டுதடவை போனான். நீங்க ஊர்லருந்து இன்னும் வரலேன்னு பக்கத்து வீட்டுல சொன்னாங்களாம்" எனச் சொல்லி முடித்தாள்.

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. தாமுவும் "கோபி எனக்கு எழுதியதும் ஞாபகம் இல்லை, உன்கிட்ட வாங்கினதும் ஞாபகம் இல்லைடா!" என்றான். என் கண்களில் மளமளவெனக் கண்ணீர் கொட்டியது.

"இவனுக்கு மருத்துவ செலவுக்கு என்ன பண்ணுவம்மா?" என்றேன். "எங்க அப்பாவோட பூர்வீக சொத்து விற்றதில் கொஞ்சம் பணம் வந்தது" என்றாள் .சற்று நிம்மதியாகக் காசோலையை வாங்கிக்கொண்டு "சரி, வரேண்டா! அடிக்கடி வந்து பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தேன்.

தெருமுனையில் ஆட்டோ பிடித்துக் கொள்ளலாம் என்று மனதெல்லாம் சந்தோசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். "நான் கேட்கக்கூடாதுன்னு நினைத்தேன், ஆனால் அவன்....!"

மருங்கர்,
லேக்வில், மின்னசோட்டா
Share: 




© Copyright 2020 Tamilonline