Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
குற்றம் புரிந்தவன் வாழ்….
உலக அழகி
- பானுமதி பார்த்தசாரதி|நவம்பர் 2017|
Share:
ஹாலில் ஸஹனாவுக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் பலத்த விவாதம். இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போனால் கைகலப்பில் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறதே என்று சலித்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜோதி. அவர்களின் அம்மா.

"ஒவ்வொருத்திக்கும் இரண்டு கழுதை வயதாகிறதே அப்படி என்னடி சண்டை, ஆர்க்யுமென்ட் உங்களுக்குள்ள?" ஜோதி.

"உம்,ஒரு கழுதைக்கு எத்தனை வயசு என்றுதான்" என்றாள் பெரியவள் ஸஹானா, அம்மாவை முறைத்தபடி.

"அதேதான்" என்றாள் ஸ்ரீரஞ்சனியும் கோபமாக.

"என்னோடு சண்டை போடுவதற்கு மட்டும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து விடுவீர்களே! சரி, விஷயத்தைச் சொல்லுங்கள். உங்கள் விவாதத்திற்கு நான் பதில் சொல்லமுடிகிறதா என்று பார்க்கிறேன்" என்றாள் ஜோதி.

"அம்மா, இந்த வருடம் உலகப் பேரழகியாக வரப்போவது யார்? ரஷ்யப் பெண்ணா, ஈஜிப்ஷியனா? நான் ரஷ்யப்பெண் என்கிறேன். இவள் எகிப்துப் பேரழகி என்கிறாள். உனக்குத்தான் எல்லா விவரமும் அப்டுடேட்டாகத் தெரியுமே!" என்றாள் ஸ்ரீரஞ்சனி.

தலையில் லேசாக அடித்துக் கொண்டாள் ஜோதி. "கர்மம், இதற்காடி இப்படி அடித்துக் கொண்டீர்கள்? ஏதாவது பாட சம்பந்தமா ஆர்க்யூ செய்தால்கூடப் பரவாயில்லை. இப்படி நேரத்தை வீணாக்குவதற்கு எனக்குக் கிச்சனில் கொஞ்சம் ஹெல்ப் செய்தால்கூட என் வேலை சீக்கிரம் முடியும். இந்த டம்ளர்களில் பாதாம்பால் வைத்திருக்கிறேன் எடுத்துக் குடியுங்கள்" என்றாள் ஜோதி இரண்டு டபரா செட்டில் பாலை வைத்தபடி.

ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் கொண்டார்கள். "அம்மா, இப்ப சொல்லு" என்றாள் ஸஹானா விட்ட இடத்திலிருந்து.

"என்னத்தைச் சொல்றது? உடம்பு முழுவதும் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் சபையில் காட்டிக்கொண்டு இந்த வருடம் அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் சில வருடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். காலத்திற்கும் யார் கொண்டாடப் படுகிறார்களோ அவர்கள்தான் உலகமகா அழகி" என்றாள் ஜோதி.

"அம்மா நீ பேசறது விதண்டாவாதம். கடைசிவரை எப்படிக் கொண்டாடப் படுவார்கள்? வயது ஆகும்போது இளமை போய் அழகு மாறிவிடும் இல்லையா?" ஸ்ரீரஞ்சனி.

"இல்லை. அழகு கூடும்" ஜோதி.

"ஏய் ஸ்ரீ! இன்னைக்கு முழிச்ச முகமே சரியில்லை. அம்மாவிடம் மாட்டிக் கொண்டோம்" என்றாள் ஸஹானா.

"ஏம்மா, உனக்குத் தெரிஞ்ச அப்படிப்பட்ட உலக அழகி யார்? கொஞ்சம் சொல்லேன்" ஸ்ரீரஞ்சனி கேலியாகக் கேட்டாள்.

"என் அம்மா, உங்கள் பாட்டி" என்றாள் ஜோதி.

ஸஹானா அடக்க முடியாமல் சிரித்தாள். அவள் குடித்துக் கொண்டிருந்த பாதாம்பால் வாயிலிருந்து பீறிட்டது. ஸ்ரீரஞ்சனியும் அடக்க முடியாமல் சிரித்தாள்.

"ஏம்மா இப்படி ஜோக்கடிக்கிறாய்? பாட்டி ரொம்ப அன்பானவள், அமைதியானவள் ஒத்துக்கிறோம். அதற்காக உலகப் பேரழகிங்கிறாயே? பாட்டி சின்ன வயதில்கூட ரொம்ப சுமாராகத்தான் இருந்திருப்பாள். ஏதோ நீ தாத்தாவைப் போல் இருப்பதால்அப்பா மயங்கி விட்டார்" ஸஹானா.

"அழகிப் போட்டியில் வெறும் அழகை மட்டுமே வைத்தா தேர்ந்தெடுக்கிறார்கள்? அறிவுசார்ந்த கேள்விகளும் கேட்கிறார்கள் இல்லையா?" ஜோதி.

"ஆமாம்."

"அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றவாறு வாழ்ந்து காட்டுகிறாள் என் அம்மா" என்றாள் ஜோதி.

"தாத்தா சம்பாதிச்சு கொண்டுவந்தார். பாட்டி வீட்டைப் பார்த்துக் கொண்டாள். இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதானே!" ஸஹானா.

"சாதாரண சம்பவம்தான். ஆனால் தாத்தா குறைந்த சம்பளத்தில் சாதாரண தாலுக்கா ஆபீஸ் கிளார்க்தானே. நாங்கள் மூன்று பேர் தவிர எங்கள் தாத்தா, பாட்டி. என் அம்மா எல்லோரையும அந்தக் காலத்தில் அனுசரித்துப் போன பெரிய மனுஷி. மாமனார், மாமியாருக்கு நல்ல மருமகள். என் அப்பாவிற்குப் பிரியமான மனைவி. எங்களுக்கு அருமையான அம்மா."

"பாட்டிஎதுவரையில் படித்திருக்கிறாள் அம்மா?" ஸ்ரீரஞ்சனி.

"ஐந்தாம் வகுப்பு" ஜோதி.

"ஓ! ஐந்தாம் வகுப்புப் படித்த உலக அழகி" என்று கூறிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் ஸஹானா.கூடவே சிரித்தாள் ஸ்ரீரஞ்சனி.

"சீ, பெரியவர்களைப் பரிகாசம் செய்யாதே. ஐந்தாவது படித்த என் அம்மா எங்கள் எல்லோரையும் எப்படிப் படிக்க வைத்திருக்கிறாள் பாரு. என் பெரியண்ணா ஐ.பி.எஸ். ஆஃபீசர். அக்கா ஜெயந்தி மிலிட்டரி ஹாஸ்பிடல் டாக்டர். நான் ஃபிஸிக்ஸில் டாக்டரேட். இங்கே கல்லூரிப் பேராசிரியை. நாங்கள் படித்த படிப்பு, அம்மா என்ற ஏணி மூலம்தான் மேலே ஏறி வந்தோம். அதனால் நாங்கள் வாங்கிய பட்டங்கள் எல்லாம் என் அம்மாவுக்குத்தான்."

"அமெரிக்காவிலிருக்கும் நந்தகுமார் அங்கிளை விட்டு விட்டாயே அம்மா" ஸ்ரீரஞ்சனி.

"நந்தகுமார் அங்கிள் எங்களுடன் பிறந்தவர் இல்லை. அவர் அப்பா எங்கள் வீட்டு நிலத்தில் எரு வண்டி ஓட்டயவர். அந்தக் காலத்தில் சாதாரண டைஃபாய்ட் ஜுரத்திற்குக்கூட சரியான மருந்து இல்லாமல் அவன் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்களாம். உங்கள் பாட்டிதான் நந்துவை அழைத்து வந்து விட்டாள். எங்களோடு சேர்த்து வளர்த்தாள். நால்வருக்கும் சமமாகத்தான் எல்லாம் செய்வாள். எங்கள் எல்லோரையும் விட வயதில் சிறியவன். அதனால் எங்களுக்கு மிகவும் செல்லம்."

"பாட்டி நிஜமாகவே கிரேட்தான்" என்ற ஸ்ரீரஞ்சனி, "உறவில்லாத ஒருவர்மேல் இத்தனை பாசம் வைப்பது பெரிய விஷயம் இல்லையா?" என்றாள்.
தொடர்ந்து "அம்மா, பாட்டியைப் பற்றிக் கொஞ்சம் விரிவாச் சொல்லேன்" என்றாள் ஸஹானா.

"பாட்டி வீட்டில் சமையலறையிலேயே இருபத்து நான்கு மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறாளே ஸ்வர்ணா அத்தை, நீங்கள் எதைக் கேட்டாலும் செய்து தருவாளே அந்த அத்தை...." என்று நிறுத்தினாள் ஜோதி.

"ஆமாம்மா, அந்த அத்தை சின்ன வயதில் ரொம்ப அழகாய் இருந்திருப்பாள் இல்லையா?" ஸஹானா.

"ஆமாம்" பெருமூச்செறிந்தாள் ஜோதி.

"ஏம்மா, அவள் பாட்டி வீட்டிலேயே தங்கியிருக்கிறாள். கல்யாணம் ஆகலையா? இல்லை, விதவையா?" ஸ்ரீரஞ்சனி.

"ஆனால் அம்மா, அந்த அத்தைகூட நன்றாகப் படித்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவள் ஆங்கிலம் பேசினா அவ்வளவு அழகாக இருக்கும்" ஸஹானா.

"உனக்கு எப்படித் தெரியும்? அவள் யாருடனும் அவ்வளவாகப் பேச மாட்டாளே!" ஜோதி.

"நீயும் அப்பாவும் எங்களைப் பாட்டி வீட்டுக்கு சம்மர் வெகேஷனில் அனுப்புவீர்கள் இல்லையா? அப்போ ஒருமுறை, நாங்கள் பண்ணிய லூட்டி தாங்காமல் எங்களுக்கு ஒரு டெஸ்ட் கொடுத்துவிட்டு ஆஃபீஸ் போய்விட்டார் தாத்தா” என்றாள் ஸ்ரீரஞ்சனி.

"என்ன டெஸ்ட்?" ஜோதி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஷேக்ஸ்பியர் பற்றி அழகான ஆங்கிலத்தில் நான்கு பக்கம் எழுதவேண்டும். பெரிய மாமாதான் பெரிய ஐ.பி.எஸ். ஆஃபீஸராயிற்றே என்று நான் அவரிடம் ஓடிவிட்டேன்" ஸ்ரீரஞ்சனி.

"இரண்டு பேரும் ஒரே மாதிரி எழுதினால் தாத்தா அதற்கு வேறு கோபிப்பாரே என்று யோசனை செய்துகொண்டு, தோட்டத்தில் துணி தோய்க்கும் கல்லில் உட்கார்ந்திருந்தேன். அப்போது ஸ்வர்ணா அத்தை கிடுகிடுவென்று நான்கு பக்கங்கள் ஷேக்ஸ்பியரைப் பற்றி, அவரது காமெடி, ட்ராஜடி நாடகங்கள் பற்றி மிக அழகாகக் கூறினாள். ஒதெல்லோ, மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ் போன்ற நாடகங்களில் காணப்படும் கதாபாத்திரங்கள் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கலாம். அவள் சொல்லும்போது நானும் அப்படியே எழுதிக் கொண்டேன்" ஸஹானா.

"தாத்தா வந்ததும் இருவரும் காட்டினோம்" ஸ்ரீரஞ்சனி.

"என்ன சொன்னார் தாத்தா?"

"மாமா சொல்லிக் கொடுத்த கட்டுரையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தின் நயமும் நடையழகும் இல்லை." என்று கூறிவிட்டார்.

அத்தை சொல்லிக்கொடுத்த என் கட்டுரையைப் படித்தவர், "ஸ்வர்ணாவே மொத்தக் கட்டுரையும் டிக்டேட் செய்தாளா?" என்று கேட்டார். "ஆமாம்" என்றேன். அவளைத் தவிர வேறு யாரால் இவ்வளவு அழகாக, கோர்வையாக சொல்ல முடியும்?" என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார்.

"அப்பாவிற்கு அவர் தங்கைமேல் பாசமும் அதிகம். கோபமும் அதிகம்" என்று தனக்குள்ளே முனகிக்கொண்டாள் ஜோதி.

"ஏனம்மா அப்படி?" என்றனர் இருவரும்.

"அவள் பி.ஏ. ஆங்கில இலக்கியம். யாரோ ஒருவனை நம்பி ஏமாந்து போயிருக்கிறாள். அவன் ஏற்கெனவே திருமணமானவன் வேறு. ஸ்வர்ணா அத்தை வீட்டுக்குத் திரும்பிவரப் பயந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள். யாரோ சிலர் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து விட்டு வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்னார்கள். எனக்கு அப்போது பதினெட்டு வயது. என் தாத்தாவும், உன் தாத்தாவும் ஒரேயடியாகக் குதித்தார்கள். என் பாட்டி சத்தமே இல்லாமல் அழுதுகொண்டு இருந்தாள். ஆனால் என் அம்மா யாரையும் லட்சியம் செய்யாமல், மருத்துவ மனைக்குச் சென்று அத்தையுடன் இருந்து அவளையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.”

"என் தாத்தாவும் அப்பாவும் இருவரையும் உள்ளே விடாமல் கத்திக் கூப்பாடு போட்டார்கள். பாட்டிமட்டும் அம்மாவை ரகசியமாகக் கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள். அப்போது என் அம்மா, என் பாட்டியைக் காட்டி 'என் மாமியாருக்கு வயது அறுபது. இந்த வயதிலும் புருஷனுக்கும் பிள்ளைக்கும் பயந்து அழுவதைக்கூட ரகசியமாக அழுகிறாள். அந்தப் புண்ணியவதி இன்னும் கொஞ்சநாள் உயிரோடு இருக்க வேண்டாமா? உங்கள் மானம் போயிற்றே என்று நீங்கள் குதிக்கிறீர்கள்! இந்தப் பெண் வாழவேண்டிய வயதில், வாழ்க்கையை இழந்து நிற்கிறாளே என்று துடிக்கிறதே அந்தப் பெற்றமனம்! என்னையும் இந்தப் பெண்ணையும் துரத்திவிட்டு அந்தத் தாயை எப்படி சமாதானப்படுத்துவீர்கள்?’ என்று பலமாக விவாதம் செய்தாள்.

அப்போது அவளைப் பார்த்தால் பாரதியின் நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செறுக்கும் கொண்ட புதுமைப் பெண்ணாகத்தான் தெரிந்தாள். தன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், அத்தையைப் பற்றியும் பாட்டியைப் பற்றியும் தான் கவலைப்பட்டாள். ஒருவழியாக உள்ளே சேர்த்துக் கொண்டார்கள்.

"அப்போது உள்ளே வந்தவள்தான் எங்கள் அத்தை. நத்தையாய் சமயலறையிலேயே சுருண்டு விட்டாள். என் அம்மாவைத் தவிர வேறு யாருடனும் பேசமாட்டாள். அத்தையின் நிலையைப் பார்த்த பாட்டி, அந்தக் கவலையிலேயே நோயில் விழுந்து சில வருடங்களில் இறந்தாள். அவள் இறப்பதற்கு முன் என் அம்மாதான் தாயாக அவளைப் பார்த்துக் கொண்டாள். அம்மா, பாட்டியின் கண்ணீரைத் துடைத்து நான் இருக்கும் வரையில் ஸ்வர்ணாவைக் கட்டாயம் காப்பாற்றுவேன் என்ற வாக்குறுதி அளித்தாள்.”

"பாட்டிக்குப் பிறகு,அவளுடைய மொத்த நகைகளையும் என் அம்மா தாத்தாவுடன் போய், நகைக் கடையிலேயே விற்று, அத்தையின் பெயரில் வங்கியில் ஃபிக்ஸட் டெபாஸிட்டில் போட்டாள். இதையெல்லாம் பார்த்த என் தாத்தாவிற்கும் மனம் மாறிவிட்டது. பாட்டி இறந்த பிறகு அவருக்கு தைரியமே போய்விட்டது. அவரும் தன் கையிலிருந்த பணத்தை என் அம்மாவின் மேல் இருந்த நன்றி உணர்ச்சியால் என் அம்மாவுக்கும், அத்தைக்கும் சமமாகப் பிரித்து எழுதிவிட்டார். அவரும் சில வருடங்களுக்குப் பிறகு போய் சேர்ந்துவிட்டார்.”

"என் அம்மாவின் வளர்ப்பினால் தான் நாங்களும் குடும்பத்துடன் இணைந்து புரிதலோடு சந்தோஷமாக வாழமுடிகிறது. இப்போது சொல்லுங்கள்! என் அம்மா எப்படிப்பட்டவர்? காலம் காலமாக நிலைத்து நிற்கத் தகுதியானவள் தானே! உலக அழகிதானே?" ஜோதி பெருமையுடன் கேட்டாள்.

"அம்மா, பாட்டிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால் உலக அழகிப் பட்டம் வேற பிராஞ்ச். நீ ஏன் கன்ஃப்யூஸ் செய்துகொள்கிறாய்? ஆளைவிடு தாயே! இனிமேல் உன் எதிரில் உலக அழகி பற்றிப் பேச்சே எடுக்க மாட்டோம்" என்று தலைக்கு மேலே இரு கைகளையும் கூப்பி விட்டு ஓடினாள் ஸஹானா.

"ஆம், அம்மா. ஒன்று வெளியழகு. மற்றொன்று உள்ளழகு. புரிந்துகொள். நீ சொல்வது போல் பார்த்தாலும், உனக்கு உன் அம்மா அழகி என்றால் எங்களுக்கு எங்கள் அம்மாதான்" என்றபடி ஸ்ரீரஞ்சனி ஸஹானாவைப் பின் தொடர்ந்தாள்.

"யார் என்ன சொன்னாலும் எனக்கு என் அம்மாதான் உலக அழகி" என்று முடித்தாள் ஜோதி.

பானுமதி பார்த்தசாரதி,
சான் ரமோன், கலிஃபோர்னியா
More

குற்றம் புரிந்தவன் வாழ்….
Share: 




© Copyright 2020 Tamilonline