|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
நமஸ்காரம். எழுதுவதற்குத் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் ஊர், பெயர் குறிப்பிடுவதில்லை என்பதனால் தைரியமாக எழுதுகிறேன். கூச்ச சுபாவம். யாரிடமும் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. பாட்டு, புத்தகம் இதுதான் என் பொழுதுபோக்கு. எனக்குக் கணவர் இல்லை. ஒரே ஒரு பையன் ஐ.டி.யில் வேலை செய்கிறான். அவன் ஏழு வருடமாக இங்கே இருக்கிறான். எனக்கு இது அமெரிக்கா ஆறாவது ட்ரிப். அவனுக்குக் கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பித்தேன். "விசா பிரச்சனை இருக்கிறது. அங்கு யாரையும் பார்க்க வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டான். எனக்கு இருந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் போயிற்று. இந்தியாவில் இருக்கும்போது வெளியில் போய் பெரிய வேலை ஒன்றும் தேடிக் கொள்ளவில்லை. மாமனார், மாமியார் கூட இருந்தார்கள். ஏதோ பாட்டு, படிப்பு, டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாரும் போய்ச் சேர்ந்த பிறகு என் பையன்தான் உலகமாகிப் போனான்.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு தனக்கு இங்கே ஒரு பெண்ணைப் பிடித்துப் போய்விட்டதாகச் சொன்னான். வேறு ஜாதி. ஆனால், வெஜிடேரியன். பார்க்க நன்றாக இருந்தாள். சமமான படிப்பு. நான் என்ன சொல்ல. இங்கே வந்திருந்தபோது வீட்டுக்கு அழைத்து வந்தான். சமைத்துப் போட்டேன். எங்கோ ஒருநாள் வெளியில் அழைத்துப் போனார்கள். போனேன். சமயம் கிடைத்த போதெல்லாம் அவர்களைத் தனித்து விட்டுவிட்டு நான் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடுவேன். ஏதோ நல்லபடியாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறான் என்று சந்தோஷப்பட்டேன். அந்த நிம்மதி நீடிக்கவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னால் அந்தப் பெண் அவனை நிராகரித்து விட்டாள். என்ன காரணம் என்று கேட்டேன். "ஏதேதோ அல்பமான காரணம் சொல்கிறாள். உன் அம்மா என்னிடம் பேசுவதில்லை. என்னைப் பிடிக்கவில்லை. நீ அம்மா-பிள்ளையாக இருக்கிறாய் என்கிறாள். விட்டுவிடு. அவள் இல்லை. அவ்வளவுதான்" என்று சொன்னான்.
என் பையன் சோகத்தில் இருப்பதைப் பார்க்கப் பொறுக்கவில்லை. அவனுக்கே தெரியாமல் நானே முனைந்து இந்தியாவிலிருந்து இங்கு வரத் தயாராக இருந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன். சுமாராக இருந்தாள். குடும்பமும் சுமார் குடும்பம்தான். ஆனால் மிக நல்லவர்களாகத் தெரிந்தார்கள். அப்புறம் அவனுக்கு மெள்ள அறிமுகப்படுத்தினேன். முதலில் தயங்கினான். பெண் சற்று மொழுமொழுவென்று இருப்பாள். அவன் முதலில் காதலித்த பெண் நல்ல உயரமாக, உடல்வாகுடன் இருப்பாள். இந்தப் பெண் அதற்கு நேர் எதிர். "பேசிப் பாரேன், அழகில் என்ன இருக்கிறது?" என்று சொன்னேன். அவனும் முயற்சித்தான். "என்ன முடிவெடுத்தாய்?" என்று எப்போது கேட்டாலும், "பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்" என்றான். எனக்கு அந்த பெண்ணைப் பிடித்துத்தான் போயிருந்தது. உடம்பு கொஞ்சம் பருமனாக இருந்தால் என்ன, பாவம் அவளை யாராவது ரிஜெக்ட் பண்ணிவிடப் போகிறார்களோ என்று வருத்தப்படுவேன். முடிவில் என் பையன் 'சரி' என்றான். நான் சந்தோஷப்பட்டேன்.
இப்போது மறுபடியும் தலைவலி. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வருவதாகச் சொல்லி இருந்தான். அப்போது கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டு பக்கத்திலும் முடிவு செய்தோம் . சரி, அமெரிக்கா போய்விட்டு வந்த பிறகு கல்யாண சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று இங்கே கிளம்பி வந்துவிட்டேன். நான் பேசுவதற்கு எப்போதும் கூச்சப்படுவதால், வரப்போகிற மருமகளிடம் என்ன நடக்கிறது அவர்களுக்குள் என்றுகூடக் கேட்டுக் கொள்ளவில்லை. ஏதேனும் கேட்டால் நான் 'nosy' என்று தப்பாக எடுத்துக்கொள்ளப் போகிறார்களே என்று பயம்.
நான் இங்கு வந்தபின் பையனிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு கேட்டேன். அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை. எனக்கு ஏதோபோல் இருந்தது. பேசாமல் கேட்பதை விட்டுவிட்டேன். மறுபடியும் நேற்று மெல்ல ஆரம்பித்தேன். இந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இன்னொரு அழகான பெண், இங்கேயே இருப்பவள், அவளுடன் பழகியிருக்கிறான். இவளும் வெஜிடேரியன், ஆனால் எங்கள் ஜாதியல்ல. தமிழும் கொச்சையாகப் பேசுகிறாள். இவன் அவளை வீட்டுக்கு ஒருமுறை அழைத்து வந்தபோது நான் தவறாகவே நினைக்கவில்லை. இவனுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகியிருந்ததே. இப்போது சொல்கிறான், "சென்னையில் இருப்பவள் ஒத்துவராது போல இருக்கிறது" என்று.
பல காரணங்களைச் சொல்லுகிறான். எனக்கு ஒரே ஷாக் ஆகிவிட்டது. நல்லதோ கெட்டதோ, அவள் நம் ஊர், இனத்தைச் சேர்ந்தவள். படித்தவள். பண்பாகத்தான் பேசுகிறாள். வாக்குக் கொடுத்துவிட்டோம். என்ன சொல்லி நிறுத்துவது! நம் பாஷைகூடத் தெரியாத பெண்ணை, சிறிது அழகாக இருக்கிறாள் என்று மனம் மாறிவிட்டானே. நாளைக்கு அந்தப் பெண்ணும் இவனைவிடப் பெரிய பதவியில் இருப்பவனைப் பார்த்துவிட்டு, இவனைக் கழற்றிவிடலாமே. ஏன் இப்படி மனம் மாறிக்கொண்டே இருக்கிறான். இவனை நம்பியிருந்த, நிச்சயம் செய்த பெண்ணின் மனம் எப்படி இருக்கும்? அவனைக் கேட்டால், "என் மனது எப்படி வேண்டுமானாலும் மாறும். என்னை ஒருத்தி dump பண்ணும்போது, நான் செய்தால் என்ன! கல்யாணமா ஆகிவிட்டது? இதெல்லாம் இங்கே சகஜம்தான்" என்று சொல்லி என் வாயை அடைத்துவிட்டான். நான் இந்தச் சம்பந்தத்தில் முழு முனைப்பாக இருந்ததால் எனக்கு மிகவும் சங்கட நிலையாக இருக்கிறது. திரும்பி இந்தியா போகும்போது (அவர்கள் எனது தூரத்து உறவினர்கள்) அவர்களைச் சந்தித்தால் எப்படி இருக்கும். அந்தப் பெண் எத்தனை கனவு கண்டிருப்பாள். இப்போது இவன் பார்த்திருக்கும் பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பான் என்று என்ன நிச்சயம்! நான் ஒரு மண்டு. யாரிடமும் தைரியமாகப் பேசத் தெரியவில்லை. அதனால்தானோ இத்தனை கோளாறு என்று என்னையே நான் நொந்துகொள்கிறேன்.
இந்தப் பையன் மாறுவதற்கு ஏதாவது வழி இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா, கோயிலில் நேர்ந்துகொள்ள வேண்டுமா என்று தெரிந்தாலும் சொல்லுங்கள். உங்களைச் சகோதரி போல் நினைத்து இதனை எழுதுகிறேன்.
இப்படிக்கு, ........... |
|
அன்புள்ள சிநேகிதியே
உங்கள் கூச்ச சுபாவத்தையும், குறைவாகப் பேசும் குணத்தையும் தாழ்வாக நினைக்காதீர்கள். அதுவே உங்கள் திறமை. அதுவே உங்கள் நிறைவு. அதற்காகவே சிலருக்கு உங்களைப் பிடிக்கும். "பேசிக் கொண்டே போகிறாளே, நிறுத்த மாட்டாளா.." என்று ஆதங்கப்பட்ட ஆண்கள் என்ன, பெண்களையும் பார்த்திருக்கிறேன்.
உங்கள் மகன் தன் கற்பனையில் ஒரு அழகான பெண்ணை வரைந்து வைத்திருக்கிறான். ஒரு காதலில் தோல்வி அடைந்த சோகத்தில் காம்ப்ரமைஸ் செய்துகொண்டு, நீங்கள் பார்த்து வைத்திருந்த பெண்ணை அவள் பண்பிற்காக மணந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறான். பண்பை உணர்ந்து பாராட்டும் பண்பு அவனிடம் இருக்கிறது. ஆனால், புற அழகில் மயங்காதவர்கள் யாரும் பொதுவாக இருப்பதில்லை. "நேரேகூடப் பார்க்க முடியவில்லையே! நிச்சயம்தானே ஆயிற்று" என்று மனதைச் சமாதானம் செய்துகொள்ளப் பார்க்கிறான். அவனுக்கும் உள்ளே குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்காது. ஆனால், இந்தப் பெண்ணை நேரில் பார்த்து, பழகி, அனுபவிக்கும் உற்சாகம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் நிச்சயம் இல்லை. Ethical angle என்று பார்த்தால், உங்கள் மகன் செய்வது விரும்பத்தகாதது. ஆனால் Practical angle என்று பார்க்கும்போது, எப்போது மனதில் ஒரு சஞ்சலம் ஏற்பட்டதோ, அப்புறம் திருமணம் ஆன பிறகும் அது தொடர்ந்து, ஒரு நிலையில் விவாகரத்துவரை போகவும் வாய்ப்பு இருக்கிறது. இது உங்கள் மகன் வாழ்க்கை. உங்களால் நியாயத்தை எடுத்துச் சொல்லத்தான் முடியும். விருப்பு, வெறுப்புகள் அவரவரைப் பொறுத்தது. உங்கள் மகன் எடுக்கும் முடிவுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். கொஞ்சம் embarassing ஆகத்தான் இருக்கும். வேறு வழியில்லை. இந்தக் காலத்தில், திருமண விஷயத்தில், இந்த இளைய சமுதாயத்தில் ஒருவரைக் காட்டித்தான் கொடுக்க முடியுமே தவிர, கட்டிக்கொள் என்று கட்டாயப்படுத்த முடியாது. உங்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணையோ, அல்லது, இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணையோ மணந்து மகிழ என் வாழ்த்துக்கள்.
|
|
|
|
|
|
|
|