|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
என்னுடைய நெருங்கிய சிநேகிதிக்கு ஏற்பட்ட ஒரு துயரமான நிகழ்ச்சி. நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களுக்கு எழுதுகிறேன். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை.
என் சிநேகிதிக்குத் திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது. இரண்டு பெண்கள். 16 வயது, 9 வயது. அவள் கணவர் நல்லமாதிரி. கலகலப்பான பேர்வழி. பார்ப்பதற்கு லட்சிய தம்பதி, லட்சியக் குடும்பம் போலத்தான் சமுதாயத்துக்குத் தெரிந்தது. ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பெரிய வணிக நஷ்டம் ஏற்பட்டதில், குடிக்காமல் இருந்தவர் குடிக்கத் தொடங்கினார். இரண்டு வருடங்களில் பிசினஸ் மீண்டும் தலைதூக்கி, இழந்ததெல்லாம் திரும்ப வந்துவிட்டது. ஆனால், இவருடைய குடிப்பழக்கம் மட்டும் போகவில்லை. இரவு ஏன் வருகிறது என்று வேதனைப்படுவாள் என் தோழி. தன் கணவரை விட்டுக்கொடுக்காமல் அவருடைய பழக்கங்களையும் தன்னுடைய பிரச்சனைகளையும் குடும்பத்தினர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. நண்பர்களில் அவருடைய நண்பர் குடும்பம் ஒன்றிற்கும், எங்கள் தோழிகளில் இரண்டு குடும்பத்திற்கும் மட்டும்தான் இவளுடைய போராட்டம் தெரியும். எத்தனையோ கவுன்சலிங், போதை அடிமைத்தனம் நீக்க (De-addiction) சிகிச்சை என்று போய்விட்டுத்தான் வந்தாள். மிகவும் வெறுத்துப் போய், ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தால்தான் வழிக்கு வருவார், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தனியாக ஒரு இடம் பார்த்துக் கொண்டுபோய் விட்டாள். அவர் இவளிடம் பலமுறை கெஞ்சியிருக்கிறார், திரும்ப வரச்சொல்லி. இவள் சிறிது மனது மாறினாலும் கூட, பெண்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே மறுத்துவிட்டாள்.
இரண்டு மாதம் முன்பு ஓவராகக் குடித்ததோ என்னவோ, அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, எமர்ஜென்சி போய்ச் சேர்வதற்குள் போய்விட்டார். கணவர் உயிர் பிரிந்தபோது இவளோ, குழந்தைகளோ அருகில் இல்லை. உறவினர்களுக்கெல்லாம் இவர்கள் தற்காலிகமாகப் பிரிந்திருந்தது அப்போதுதான் தெரியவந்தது. சிலர் குற்றப்பத்திரிக்கை வாசித்தனர். கணவரை மிகவும் நேசித்தவள் என் சிநேகிதி. அவர் பிரிவை நினைத்து உருகி, உருகிப் போய், தான் தனியாகக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பிரிந்து வாழ்வது நல்லதா இல்லையா என்று பலமுறை யோசித்திருக்கிறாள். நாங்கள் தோழிகள் இரண்டு பேர். நிலைமை இந்த எல்லைக்குக் கொண்டு வந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரின் அப்பா அம்மா இரண்டு பேரும் தங்கமானவர்கள். வயதானவர்களிடம் நம் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சொல்லி பாரம் ஏற்றக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் இவள் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்த அப்பா, "நீ அவனை விட்டுப் பிரிந்தபோது எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் வந்து அவனுடன் தங்கியிருப்போமே. எல்லாரும் இருந்தும் இப்படி அவனைத் தனியனாக்கி விட்டோமே" என்று குலுங்கி அழுதார். இவளுக்குக் குற்ற உணர்ச்சி அதிகமாகி விட்டது. எல்லாம் முடிந்து இரண்டு மாதம் ஆனாலும், இன்னமும் அதே துயர நிலையில் இருக்கிறாள். தான் தவறு செய்துவிட்டதாகத் தன்னையே நொந்து கொள்கிறாள், நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அந்தப் பெண் குழந்தைகளைப் பார்த்தாலும் பரிதாபமாக இருக்கிறது. என் சிநேகிதி இருக்கும் நிலையில் அவள் ஏதாவது விபரீதமாகச் செய்துகொண்டு விடுவாளோ என்கிற பயமும் எனக்கு இருக்கிறது. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். எந்த மாதிரி அறிவுரையை அவள் ஏற்பாள் என்று புரிபடவில்லை.
நன்றி வணக்கம்.
இப்படிக்கு, ........... |
|
அன்புள்ள சிநேகிதியே
உங்கள் சிநேகிதியின் துயரம் நன்றாகப் புரிகிறது. கணவரை இழந்த சோகம், சுற்றத்தின் குற்றச்சாட்டு, கடைசி நாளில் அவரருகே இல்லாத (கடமை தவறியதைப் போல்) குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்ந்து அவரைச் சுயநிந்தனையில் கொண்டு தள்ளியிருக்கிறது. உடனே அதிலிருந்து விடுபட முடியாது. ஆனால் ஒரு அருமைத் தோழியாக நீங்கள் உங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் இன்னும் பலநாள் தொடர்ந்து கொடுப்பது நிலைமையில் முன்னேற்றம் கொடுக்கும். அதைச் செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எந்த மாதிரி அறிவுரை கொடுக்கிறீர்கள் என்று தெரியாது. சாதாரணமாக இதுபோன்ற கட்டத்தில் உங்கள் தோழி, "நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது; இப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று தன்னையே நொந்துகொண்டு புலம்புவார். நீங்கள், "நீ செய்ததில் தவறில்லை" என்று அவருக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இன்னும் அவர் சுயநிந்தனையிலிருந்து விடுபடவில்லை. கொஞ்சநாள் எடுக்கும். அவர் சுயசிந்தனை அதிகமாகும் போது நிந்தனை குறையலாம். நீங்கள் செய்வதெல்லாம் அவருடைய சுயபச்சாதாபத்தைக் காதில் வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது உதவியாக இருக்கமுடியுமா என்று பாருங்கள் - சமைத்தல், ஒழித்தல், குழந்தைகள் ஹோம் வொர்க் முடித்துவிட்டார்களா என்பது போன்ற விஷயத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீசாமல், அடக்கி வீசுங்கள். "எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ உணர வையுங்கள். உங்கள் தோழி, தொழிலிலோ அல்லது அவர் பெண்களின் படிப்பிலோ இல்லை வேறு உடல் நலமில்லாத உறவினரைப் பராமரிப்பதிலோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் குற்றவுணர்ச்சி மறைந்து பழைய நிலைக்கு வருவார், கண்டிப்பாக.
|
|
|
|
|
|
|
|