|
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....? |
|
- அசோகன் பி.|ஆகஸ்டு 2001| |
|
|
|
சென்ற மாத இதழ் என்ன காரணத்தாலோ வாசகர்களிடமிருந்து அதிகமான எதிர்வினைகள் உண்டாக்கவில்லை. இதைப் பற்றி ஒரு நண்பருடன் பேசுகையில், அவர் ''அப்படித்தானப்பா இருக்கும். நீ பாட்டுக்கு மக்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், அல்லது சர்ச்சையில் ஈடுபட்டாயானால் நாம் எல்லோரும் வாயை மூடிக்கொள்ளுவோம் என்பது தெரியாதா'' என்றார். இன்னொருவர் ''அப்படியில்லை. தமிழர்கள் விவாதத்துக்கு அஞ்சுபவர்களல்லர். ஆனால் தமிழ்ப் பத்திரிக்கையில் அல்லது தமிழில் அப்படி ஒரு விவாதம் நடப்பது சற்று அரிது. இரண்டு அல்லது மூன்று பேர் கூடினால் எதைப் பற்றியும் விவாதம் பண்ணுவோம் - ஆங்கிலத்தில்! என்றார்.
இந்த கருத்து என்னை சற்று நெளிய வைத்து. ஏனெனில் சில நாட்களுக்கு முன் New Media Forum என்று அமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் இணையத் தளங்களைப் பற்றி இதே ரீதியில் நான் பேசினேன். அந்த அரங்கில் பலரது கருத்தும் இவ்வாறே இருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால்: "தமிழ் இணைய தளங்கள் செய்தி மற்றும் அரசியல் போன்ற துறைகளில் என்றும் வெற்றி பெறா; ஏனெனில் அது போன்ற உள்ளடக்கங்களை தமிழர்கள் ஆங்கிலத் தளங்களில் தான் படிப்பார்கள். சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் அல்லது சற்று மாறுபட்ட (அதாவது இலக்கியம் போன்ற ஜோல்னாப்பை சமாசாரங்கள்) உள்ளடக்கங்களும் தான் தமிழில் படிப்பார்கள்."
சிறிது யோசித்தால் இது சரியான மதிப்பீடாகத் தான் தோன்றுகிறது. இந்த மாதம் உலகெங்கும் தமிழ் என்கிற கோணத்தில் எழுத முற்படும் போதும், சில எண்ணங்கள் எழுந்தன. முதலில், இணையத்தமிழ் வளர்ந்ததில் வெளிநாட்டுத் தமிழர்கள் தாம் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். இன்னமும் தமிழ்நாட்டில் தமிழர்கள் தின வாழ்வில் உபயோகிக்கும் மொழி ஆங்கிலமாகத்தான் இருக்கிறது.
உண்மையில், இன்றைய நிலையில் ''தேமதுரத் தமிழோசை'' தமிழ்நாட்டில் ஒலிக்க வைப்பது தான் பெரிய வேலையாக இருக்குமென்று எண்ணத் தோன்றுகிறது. நண்பர்கள் முத்து நெடுமாறன் மற்றும் மணிவண்ணன் அவர்களுடன் சென்னையில் ஒருமுறை உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த பணியாளரிடம் முத்து ஆதங்கத்துடன் சொன்னது நினைவுக்கு வருகிறது: ''தமிழ் காதில் விழவேண்டும் என்று நாங்களெல்லாம் ஆசையாக சென்னைக்கு வருகிறோம். நீங்கள் என்னவோ ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்கள்''.
உலகெங்கும் பல ஆர்வலர்கள் செய்து வரும் பெரிய சேவைகளை அவமதிப்பதாக எண்ணிவிட வேண்டாம். அத்தகைய ஆர்வலர்கள் மட்டுமே தமிழைப் பற்றியும் அதைப் பரப்புவது பற்றியும் யோசிக்கவும் உழைக்கவும் வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தையே சொல்கிறேன். |
|
இணைய மாநாடு இம்மாதம் 26, 27, 27 தேதிகளில் கோலாலம்பூரில் நடக்க இருக்கிறது. அது பற்றிய செய்திகளை அடுத்த இதழில் பார்ப்போம். வெவ்வேறு அமர்வுகளில் கணினியில் தமிழ், அதுசார்ந்த தொழில்நுட்பங்கள், தரவுகள், இணையத்தில் தமிழ் கணினிசார்ந்த தமிழ்கல்வி என்று பல தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட இருக்கின்றன. இந்த அமர்வுகள் பற்றிய முழு விபரங்களை http://www.aaraamthinai.com/tamilinternet மற்றும் http://www.tamilinternet.org ஆகிய இணைய முகவரிகளில் காணலாம்.
IIT - ன் பழைய மாணவர்கள் சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய கட்டுரை இடமில்லாத காரணத்தால், அடுத்த இதழில் வரும்.
மீண்டும் சந்திக்கும் வரை,
பி. அசோகன், ஆகஸ்டு 2001 |
|
|
|
|
|
|
|