Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
ஆசிரியர் பக்கம்
கலாச்சாரம்: பிரிவினை, பகை, பாலம்
- அசோகன் பி.|ஜூலை 2001|
Share:
Click Here Enlargeசென்ற இதழில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் பலரிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே முதலில் ஒரு தன்னிலை விளக்கம்; ஏன் ஒரு கட்சி வென்றது? அல்லது ஏன் மற்றொரு கட்சி தோற்றது? என்று ஆராய்வதல்ல எனது நோக்கம். பலர் இந்த வெற்றி/தோல்விக்கான காரணங்களை ஆய்ந்து கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் நான் கூற வந்தது, இந்த தேர்தலின் விளைவாக அறியப்பட்ட ஒரு எண்ணப்போக்கையும் வித்தியாசத்தையும் பற்றியதே. இன்னும் கூறப் போனால் இந்த வேற்றுமை பல காலமாக இருந்து வந்தது அறியப்பட்டதுதான். ஆனால் அந்த வேற்றுமை இன்னமும் வெளிப்படையாய் தெள்ளத்தெளிவாய் தெரிந்ததைத்தான் நான் குறிப்பிட்டேன்.

இந்த வேற்றுமையைக் களைய வேண்டியது மிக்க அவசியம் என்று சிலரும் எனக்கு எழுதியுள்ளனர். எனக்கு எழுதியவர்களுக்கெல்லாம் நன்றி.

பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைந்த பிரிவின்படியே இந்த வேறுபாடு அமைந்துள்ளது என்பதை முன்னரே சுட்டிக் காட்டியிருந்தேன். இதைப் படித்துவிட்டு என்னுடன் பேசிய ஒரு நண்பர், "இந்த இடைவெளிக்கான முழுப் பொறுப்பையும் படித்தவர்களே ஏற்க வேண்டும்" என்று சொல்லி, "அவர்கள் தங்களது கருத்துக்களைப் பிறருக்குப் புரிய வைக்கவும் இல்லை; பிறருடைய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் இல்லை" எனவும் வாதிட்டார்.

இந்த இடைவெளி, வேற்றுமை பற்றித்தான் எனது கவலையே தவிர யார் வென்றார்கள்/யார் வென்றிருக்க வேண்டும் என்பது அல்ல. அதுவுமில்லாமல் நான் இந்த இடவெளியை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதவில்லை. உலகெங்கும் இன்று பரவி வரும் கலாசார, இன மற்றும் மொழிப் பிரிவினை மற்றும் அவை சார்ந்த விரோத மனப்பாங்கின் ஒரு வெளிப்பாடாகவே இதையும் பார்க்கிறேன்.

சிறு வயதிலிருந்தே நம் அனைவருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கிறது. அதாவது நமக்குப் பழக்கமில்லாதது எதுவும் பரிகசிக்கத்தக்கது என்கிற எண்ணம்தான் அது. பின்னாளில் பொருளாதார இடர்ப்பாடுகள், வேலையின்மை ஆகியவை இம் மனப்பான்மையுடன் சேர்ந்து கொள்ளும்போது, 'அயலோரே' நமது பிரச்சினை எல்லாவற்றுக்கும் காரணம் என்கிற உணர்வும் தோன்ற ஆரம்பிக்கிறது. சாதி, மதம், மாநிலம், நாடு, இனம், நிறம் எனும் இந்த எல்லா வித்தியாசங்களையும் முதலீடாக வைத்து பிரித்தாளும் சில சுயநலக்காரர்களுக்கு இத்தகைய எண்ணமுடைய இளைஞர்கள் பகடைக் காய்களாக மாறிவிடுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலை வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் எல்லாவற்றிலும் நிலவிவரத்தான் செய்கிறது. இங்கிலாந்து, ஜெர்மனி, ·பிஜி, அஸ்ஸாம் என்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் இந்தப் பிரிவினைவாதம் வளர்க்கப்பட்டு கலவரங்கள் வெடிக்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

புலம் பெயர்ந்தோர் தமது மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை குறித்துத் தமது குழந்தை களுக்குத் தெரிவதில்லை என்று வருந்தி அவற்றைக் கற்பிக்கும் அதே கவனத்துடன், மக்கள் யாவரும் ஓரினம் என்பதையும் கற்பிக்க வேண்டும்.
பிறரைப் பகைவராய்ப் பார்க்கும் நச்சு இயக்கங்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு கலை, இலக்கியம் மற்றும் நுண்கலை ஆகியவை பெருமளவில் உதவக்கூடும். ஆகவே இந்த இடை வெளியைக் குறைப்பதில் பெரும்பங்காற்றிய மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பல மொழி விற்பன்னர்களும் ஆற்றிய பணிகளுக்காக தென்றல் சிரம் தாழ்த்தி வணங்குகிறது. இவ்வாறு சேவையாற்றிய பெரியோர்களில் ஒருவரான ஏ.கே. ராமாநுஜம் அவர்களைப் பற்றிய கட்டுரையுடன் 'முன்னோடிகள்' என்னும் புதிய பகுதியையும் தொடங்குகிறோம், பின் வரும் இதழ்களில் தமிழில் புதிய முயற்சிகளை மேற்கொண்ட பலரைப் பற்றி எழுத இருக்கிறோம்.

தென்றல் இதழைத் தயாரிப்பதில் 'முரசு அஞ்சல்' மென்பொருட் தொகுப்பு உபயோகிக்கப்படுகிறது. இந்த தொகுப்பை வெளியிட்டும் மற்றும் பலவாறாகவும் கணினி உலகில் தமிழுக்குத் தொண்டு செய்து வரும் நண்பர் திரு. முத்து நெடுமாறன் அவர்களுக்கு (காலம் தாழ்த்தி) நன்றி தெரிவித்து அவர்தம் பணி மேலும் தொடர வாழ்த்துகிறோம். இவரும் மற்ற பல தமிழன்பர்களும் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் "தமிழ் இணையம் 2001" மாநாட்டிற் கான பணிகளில் மும்முரமாக இருக்கிறார்கள். இந்த மாநாட்டுச் செய்திகளை வரும் இதழ்களில் எதிர்பாருங்கள்.

குழந்தைகள் பகுதி ஒன்றையும் ஆரம்பிக்க உத்தேசித் துள்ளோம். கதை, படம் என்று மட்டும் இல்லாமல் வெளி நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு உதவும் வகையிலான பகுதியாக இருக்கும். உங்கள் எண்ணங்களையும், ஆலோசனைகளையும் எழுதுங்கள்.

சென்ற இதழின் தலையங்கம் பற்றி சொன்ன சிலர், சென்னை மற்றும் பிற IIT யின் பழைய மாணவர்கள் தாய்நாட்டுக்காக எடுத்து வரும் ஆக்கபூர்வமான செயல்கள் பற்றிச்சொன்னார்கள். இதைப்பற்றிய ஒரு கட்டுரை அடுத்த இதழில் வர இருக்கிறது.

மீண்டும் சந்திக்கும் வரை,
பி.அசோகன்
ஜூலை 2001.
Share: 
© Copyright 2020 Tamilonline