|
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் |
|
- அசோகன் பி.|ஆகஸ்டு 2005| |
|
|
|
லண்டன் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்றல் குடும்பத்திலுள்ள அனைவரும் எங்களது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதமும், உயிர்ச்சேதமும் என்றும் மன்னிக்க முடியாதவை. இந்த அழிவுச் செயல்களுக்குக் காரணமாக இருந்த அனைத்து அமைப்புக்களையும், நபர்களையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தங்களது போக்கையும் அதன் விளைவுகளையும் ஆழ்ந்து ஆராய வேண்டியது அதிமுக்கியம். இத்தனைநாள் இப்படிப்பட்ட சிந்தனை வேண்டும் என்று சொல்வதே தேசத்துரோகம் என்றும், பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகுமென்றும் இருநாடுகளின் ஆட்சியாளர்கள் முழங்கிக் கொண்டிருந்தனர். அதேபோல் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அழகான சோடனையை முன்வைத்து விவாதங்களைப் பின்தள்ளிவிட்டார்கள். ஆனால், உண்மையில் அவர்களது முயற்சிகள் (இராக் மற்றும் ஆ·ப்கன் போர்கள்) எதிர்மறையான பலன்களையே தந்துள்ளன. இராக்கைக் காட்டி, எளிதில் தங்களை நியாயப் படுத்திக்கொள்ள பயங்கரவாதிகளால் இப்போது முடிகிறது. எல்லாவற்றையும் விடப் பெரிய கேலிக் கூத்து, அமெரிக்கா பாகிஸ்தானின் துணையுடன் இம்முயற்சியில் இறங்கியதுதான். கடைசியில் அந்த நாட்டிலிருந்தே பயிற்சிபெற்று பயங்கரவாதிகள் லண்டனில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இழந்த உயிர்கள் விலைமதிக்க முடியாதவை. ஆனால் குறுகிய நோக்கினால் அரசுகளால் அவிழ்த்துவிடப்பட்ட இந்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' அவ்வுயிர்களை விடப் பெரிய ஓர் இழப்பை நோக்கி அவர்களைத் தள்ளிச் செல்லத் தொடங்கியுள்ளது. தேசபக்தியின் பெயராலும், பாதுகாப்பின் பெயராலும் மனித உரிமைகளைக் குறுக்கியதின் நேர் விளைவுதான் ஒரு தவறும் செய்யாத ஒருவர் தன்னுயிரை இழக்க நேர்ந்தது. அதை விடப் பெரிய கொடுமை அத்தவறு மீண்டும் நிகழலாம் என்று உடனே சிலர் சொல்லத் தொடங்கியது. |
|
சில அப்பாவிகள் இறந்தாலும் எங்களது குறிக்கோள் நிறைவேறினால் சரி என்று ஒருநாட்டின் காவல்துறை சொன்னால் பயங்கரவாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் வேண்டுமென்று பலரைக் கொல்கிறார்கள். நாம் தெரியாமல் சிலரைக் கொன்றால் பரவாயில்லை என்ற மிகக் கொடுமையான, தவறான, ஒரு கோட்பாட்டிற்கு நம்மைத் தள்ளிசெல்லும் முயற்சியை வெற்றிபெற விடக் கூடாது. விட்டோமானால், பயங்கரவாதம் வென்றுவிட்டது; நாகரீகத்தையும், மனிதநேயத்தையும் முற்றிலும், வென்றுவிட்டது என்றுதான் அர்த்தம்.
அமெரிக்க, இங்கிலாந்துத் தலைவர்களும் அவரது ஆலோசகர்களும் உண்மையில் மனிதநேயம் கொண்டவர்களாக இருப்பார்களானால், உண்மையில் தங்களது நாடுகளையும் அதன் மக்களையும் காக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்தவர்களானால், உடனடியாக தங்களது அணுகுமுறையைப் பற்றி யோசிக்க வேண்டும். உலகமக்கள் அனைவரும் அவர்களை இதற்கு உடன்பட வைக்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்
பி. அசோகன் ஆகஸ்டு 2005 |
|
|
|
|
|
|
|