|
தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். |
|
- அசோகன் பி.|அக்டோபர் 2003| |
|
|
|
சென்ற மாதம் நான் எழுதியதைப் பற்றி சில கருத்துக்களுடன் ஒரு பெரிய மின்னஞ்சல் வந்தது. அதன் சாரம்:
"மாற்றங்களும், அம்மாற்றங்களைப் பற்றிய விவாதங்களும் காலங் காலமாகத் தொடர்பவை. அறிவியல் கண்டுபிடிப்புகளும், அதன் விளைவாகத் தொழில்நுட்ப முன்னேற்றங்களும், அதனைச் சார்ந்த மாற்றங்களும் மனித வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த நூறாண்டுகளில் நடந்துள்ளன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும், ஏதாவது ஒரு எதிர்வினையை உண்டாக்குகின்றன. இந்த எதிர்வினைகள் எப்படி இருக்கும்? அவற்றின் பாதகங்கள் யாவை? போன்றவற்றை பெரும்பாலும் முதலில், அல்லது சீக்கிரம், எடைபோட முடிவதில்லை.
தொற்றுநோய்கள் பெரிதும் குறைய உதவிய மருத்துவத்துறை முன்னேற்றங்கள் அதன் விளைவாக மக்கள்தொகை வெகுவேகமாக அதிகரிக்கச் செய்துவிட்டன - இதனால், ஏழைநாடுகளில் வாழ்க்கைத்தரம் உயராமல் குறைந்தது என்று ஒரு அபிப்பிராயம் உண்டு. போர்க்கருவிகளைப் பற்றிப் பேச வேண்டியதே இல்லை. இயந்திர மயமாக்கலும், அதிகமான வாகனங்களும் மாசுபடுதலை அதிகரிக்கின்றன. 'ஒசோன்' மண்டலத்தின் செயல்திறன் குறைகிறது; இதனால் உலகளாவிய, மீண்டும் பழைய நிலைக்குத் திருப்ப முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மாற்றங்களைத் தடுக்க முடியாது; தவிர்க்க முடியாது. அவற்றின் பின்விளைவுகளை முழுவதும் முன்கூட்டியே எடை போட முடியாது. இந்த நிலையில் என்னதான் செய்வது? சிலர் இது இப்படித்தான் இருக்கும். எனவே மாற்றம் கெடுதல் - பழமையே நல்லது என்று கிளம்பி விடுகிறார்கள். சிலர் நாளையைப் பற்றி என்ன கவலை என்று இருக்கிறார்கள். பெரும்பாலோர் தங்களுக்கு மிக அருகில் ஏதேனும் நடந்தால் தவிர இதைப் பற்றி எண்ணுவதே இல்லை! |
|
ஆகவே மக்களை ஒன்று திரட்டுவது என்பதோ, அதன் மூலம் நன்மை செய்யும் இயக்கம் உருவாக்குவதோ நடக்காது. எல்லோரும் 'ஆகா! ஓகோ!' என்பார்கள். அத்தோடு சரி"
எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அந்த நம்பிக்கைக்குக் காரணம் சொல்லமுடியவில்லை. அதுதான் நம்பிக்கை என்பதோ? இணையமும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களும், இதேபோல் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு மிகச் சுலபமாகிவிட்டது - அதே நேரம் `தொல்லைத் தபால்'களும் அதிகரித்து விட்டன. எனக்குத் தொழில்முறையில் தினமும் நூறுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வருகின்றன; தனிப்பட்ட முறையில் இன்னொரு நூறு! ஆனால் அந்த நூறில் எண்பதுக்குமேல் 'வயக்ரா' விற்பவை; அல்லது ஆப்பிரிக்காவில் எங்காவதிலிருந்து பல கோடி சம்பாதிக்க உதவ முற்படுபவை... இந்த அழகில் இன்னும் இந்தியா மற்றும் தமிழகத்திலிருந்து இவை வர ஆரம்பிக்கவில்லை. அதுவேறு தொடங்கிவிட்டால், 'வாலிப வயோதிக அன்பர்களே!!' எனத் தொடங்கும் மின்னஞ்சல்களும் உலகப் புகழடையும். நினைக்கவே தலை சுற்றுகிறது. நண்பர் முத்து நெடுமாறன் அவர்களே, உண்மையிலேயே இந்தத் தமிழ் இணையம் மற்றும் தமிழ் மின்னஞ்சல் எல்லாம் பரவுவதோடு, தமிழ் spamஉம் பரவும் என்று பயமாக இருக்கிறது. தமிழ் googleஐ விட தமிழ் spam filter இன்னமும் அவசரமாகத் தேவை.
மீண்டும் சந்திப்போம், பி. அசோகன் அக்டோபர் 2003 |
|
|
|
|
|
|
|