Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
இந்திய சதுரங்கத்தின் முன்னோடி - மனுவேல் ஆரான்
பண்டிதரும் பாமரரும் இரசிக்கும் இசை - அருணா சாயிராம்
கோடிகளை விடக் கொள்கை முக்கியம்: டாக்டர் கிருஷ்ணஸ்வாமி
- அலர்மேல் ரிஷி|அக்டோபர் 2003|
Share:
Click Here Enlarge'சகோதரத்துவப் பாலம் கட்டப் படமெடுக்கிறோம். அசூயைச் சுவர்களைத் தகர்க்கச் சுடுகிறோம்' (We film to build bridges of brotherhood. We shoot to destroy walls of prejudice) என்று பறை சாற்றுகிறது இவரது கடிதத் தாளின் கொள்கை வாசகம். படம் எடுப்பதுதான் தொழில் என்று வந்தபின்னும், சம்பாதிக்கும் பொருட்டு மக்கள் நலத்தைக் கெடுக்கும் சிகரெட் விளம்பரப் படம் தயாரிப்பதில்லை என்று உறுதியாக நின்றவர். இவர் தயாரித்த 'Indus Velley to Indira Gandhi' ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் உலக அளவில் விநியோகிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம். அண்மையில் இவர் மத நல்லிணக்கத்துக்காக 'சத்பாவனா உத்ஸவ்' நிகழ்ச்சியைச் சென்னையில் நான்கு நாட்கள் கொண்டாடிய போது முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜரால் உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவர்தான் கிருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி அவர்கள். பேசும்படம் தமிழில் வந்தபோதே கல்கியின் தியாகபூமி நாவலைப் படமாக்கிய இயக்குனர் கே. சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர். டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களுடன் தென்றலுக்காக உரையாடியதில் சில பகுதிகள்:

கே: உங்கள் பின்புலம் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

வி: அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் 'திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து PhD பட்டமும் பெற்றேன்.

கே: அமெரிக்காவிலேயே தங்கி வேலையைத் தேடிக்கொள்ள நினைத்தீர்களா?

வி: இல்லை. கொலம்பியாவில் எனது பேராசிரியராய் இருந்த Eric Barnouw என்பவர் ·புல்பிரைட் நிதி உதவியுடன் (Fullbright Scholarship) இந்தியாவிற்கு வந்தார். சேர்ந்து இந்தியா முழுவதும் சென்று செய்திகளைச் சேகரித்து இந்திந்த் திரைப்படம் (Indian Film) என்ற புத்தகத்தை இருவருமாக எழுதி முடித்தோம். கொலம்பியா பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது. 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

கே: 'கிருஷ்ணஸ்வாமி அசோசி யேட்ஸ்' எப்படி உருவானது?

வி: மேற்படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பிய எனக்குப் பல நிறுவனங்களிலிருந்தும் பணி நியமனம் கிடைத்தது. ஆனால் எனக்குள் நான் இன்னொருவரிடம் வேலைக்குப் போகாமல் என் சொந்தக் காலில் நின்று உழைத்து முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்தது. ஏகப்பட்ட தன்னம்பிக்கையும் என்னுள் இருந்தது. முன் அனுபவம் எதுவும் இல்லாமல் 1964இல் 'கிருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளேயே விளம்பரக் கம்பெனிகளிடமிருந்தும், படத்தயாரிப்பாளர்களிடமிருந்தும் ஒப்பந்தங்கள் வர ஆரம்பித்தன.

கே: நிறுவனத்தின் நோக்கம் எப்படிப்பட்டது? இலாபம் கருதியதா அல்லது சேவை மனப்பான்மையா?

வி: இலாபம் என்னுடைய குறிக்கோள் இல்லை என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரத்தில் சில அடிப்படைக் கொள்கைகள் இருக்க வேண்டும். உதாரணமாக சிகரெட் கம்பெனி ஒன்று என்னிடம் விளம்பரப்படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்ட போது நான் மறுத்து விட்டேன். மக்கள் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகைபிடித்தலை நான் ஆதரிக்கவில்லை.

அதுபோலவே, ஒரு மருத்துவர் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்து நிறுவ இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு விளம்பரப்படம் கேட்டு வந்தார். தனி மனிதரின் இந்தப் பெரிய முதலீட்டில் உருவாகும் மருத்துவ மனையில் சாதாரண மக்கள் அணுகி மருத்துவ உதவி பெறமுடியாது. ஏகப்பட்ட சோதனைகள், ஸ்கேன் என்று செலவு வைத்து போட்ட முதலைத் திரும்பப் பெற முயற்சிப்பார். இதை அவரும் ஒப்புக்கொண்டார். இதில் தவறு ஒன்றுமில்லை என்று வாதிடவும் செய்தார். ஆனால், அவர் வேண்டுகோளை நான் நிராகரித்துவிட்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் "உன்னிடம் குவிந்துள்ள செல்வம் உன்னுடையதில்லை. ஆண்டவன் உன்னை ஒரு அறங்காவலனாகத்தான் (trustee) படைத்திருக்கின்றான். நீ பெற்றெடுத்த குழந்தைகளும் உனக்குச் சொந்தமானவையல்ல. அவர்களுக்கு நீ ஒரு காவலன். அவர்களை நல்லவர்களாக வளர்க்கும் பொறுப்பு உன்னுடையது" என்று மகாத்மா காந்தி சொன்னதை நினைத்துக் கொள்கிறேன். இந்தப் பொன் மொழியை மிகவும் நேசிக்கின்றேன்.

கே: உங்கள் நிறுவனத்தில் உங்கள் மனைவி டாக்டர் மோஹனா தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றாரே. அவர் இத்துறையில் பயிற்சி பெற்றுள்ளவரா?

வி: மோஹனா பயோகெமிஸ்ட்ரியில் PhD பட்டதாரி. தங்கப்பதக்கம் வென்றவர். அவருடைய துறையில் மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் என்னுடைய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற சூழல் சுவையான ஒரு பின்னணியைக் கொண்டது.

1984ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அகதிகளைச் சந்தித்துப் பேட்டி கண்டு செய்திப்படம் ஒன்று தயாரிக்குமாறு மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடமிருந்து எனக்கு அவசர அழைப்பு வந்தது. பஞ்சாப் அகதிகளோடு உரையாடு வதற்கு எனக்கு ஹிந்தி தெரியாது. மொழி பெயர்ப்பாளர் தேவை. பாதுகாப்புத் துறையின் கெடுபிடி (security regulations) காரணமாக வெளியாட்களை நான் அழைத்துக் கொள்ள முடியாது. என் மனைவி ஹிந்தி மட்டுமல்லாமல் பஞ்சாபி, உருது, மராட்டி, தெலுங்கு போன்ற மொழிகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் எனக்கு உதவியாக அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

எங்களுக்கென்று டில்லியிலிருந்து தினமும் அமிர்தசரஸ¤க்குப் போய்வர தனி விமானம் (chartered plane) அளிக்கப்பட்டது. அந்த செய்திப்படத் தயாரிப்பில் என்னோடு இணைந்து செயல்பட்ட என் மனைவி பின்னர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுவிட்டார். இதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கே: உங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள செய்திப்படங்கள் விளம்பரப் படங்கள் குறித்து...

வி: மத்திய அரசாங்கம் வேண்டுகோளின்படி நான் தயாரித்த படங்கள் ஏராளம். சுற்றுலாப் பயணிகளுக்காக Glimpses of India, 19ஆம் நூற்றாண்டின் இந்திய அறிவியல் மறுமலர்ச்சி குறித்த 'When the Waves Came', குடியாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் ஒத்துழையாமை ஆகிய நான்கு குறிக்கோள்களை வலியுறுத்தும் 'Four Ideals', பல திரைப் படங்களிலிருந்து சேகரித்து இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் திரைப்படத்தின் பங்கு என்னும் பொருளில் 'Through a Different Lens'

பொற்கோயிலில் தீவிரவாதம் பற்றி 'After a Thousand Days of Terror' ஆகிய செய்திப்படங்களை ஆங்கிலத்தில் எடுத்திருக் கின்றேன். இவை தவிரச் சான்றோர் பெருமக்கள் சிலருடைய வரலாற்றையும் செய்திப்படமாக எடுத்திருக்கின்றேன். மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், இரமண மஹரிஷி ஆகியோர் வரலாறுகளைக் குறிப்பிடலாம். இவற்றில் சில படங்கள் ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளில் திரையிடப்பட்டுள்ளன.

சமுதாய விழிப்புணர்வு அடிப்படையிலும் சில படங்கள். உதாரணமாக கங்கை ஆற்றின் தூய்மை கெடுவது குறித்து 'Action Rishikesh/Hardwar', 'Laproscopic Surgery', லக்னோவில் உள்ள மத்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ஆராய்ச்சியில் முதன் முதலாக வெற்றிகரமாகக் கண்டு பிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தும் 'Saheli', தேர்தலில் வாக்குரிமையைப் பயன்படுத்துவதன் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் 'மணிமகுடம் உன் வாக்குரிமை' என்னும் தமிழ்ப் படமும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில செய்திப்படங்கள்.

அமெரிக்காவிலுள்ள என் மகன் கே. சுப்பிரமணியன் (தாத்தாவின் பெயர்) குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் (குறிப்பாக தமிழ் நாட்டின்) குறித்து 'A Child-in-Law' என்று ஒரு ஆங்கில செய்திப்படம் தயாரித்து அது நமது தூர்தர்ஷனிலும், அமெரிக்க கேபிள் சானல் பலவற்றிலும் திரையிடப் பட்டது. எனக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த 'I' (நான்) என்ற ஆங்கில செய்திப்படம் (1968) நான் ஓர் இந்தியன் என்று அடையாளங்காட்டிப் பெருமைப்படும் விதத்தில் நம் நாட்டின் சிறப்புக்களை எடுத்துக்கூறும் படம். பலராலும் பாராட்டிப் பேசப்பட்ட படம் இது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு 'செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சராயிருந்த ஐ.கே.குஜரால் அவர்கள் "இப்போது நான் ஓர் இந்தியன் என்பதில் உண்மையிலேயே பெருமைப்படுகின்றேன்" என்று பாராட்டுரை வழங்கினார்.

மற்றொரு செய்திப்படம் இந்தியா-5555 (4பாகங்கள்) ஐயாயிரம் ஆண்டுகளில் இந்தியா கண்ட நாகரிகங்களின் மதிப்பீடுகள், ஐந்து நூற்றாண்டுகளின் இந்திய வரலாறு, ஐம்பது ஆண்டுகளின் குடியாட்சி, ஐந்து ஆண்டுகளின் புதிய பொருளாதார விழிப்புணர்வு என்ற செய்தித் தொகுப்புகளுடன் தயாரித்த இப்படத்தைப் பார்த்துப் பாராட்டியவர்கள் பலர். இதில் குறிப்பிட்டுக் கூறவேண்டியவர் காஞ்சி ஜயேந்திர ஸ்வாமிகள். எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து படத்தைப் பார்த்து அவர் பாராட்டிக் கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். "எங்களைப் போன்றவர்கள் பொதுவாகத் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் நம்முடைய தர்மத்தின் அடிப்படையில் கலை, கலாச்சாரம், இலக்கியம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்பனை வளத்தோடும் புதிய சிந்தனைகளோடும் அகில உலகமும் பாராட்டும் விதமாக எடுத்திருப்பதால் என்னுடைய கொள்கையின் விதிவிலக்காக கிருஷ்ணஸ்வாமியின் படங்களைப் பார்க்கின் றேன்" என்றார். என்னுடைய உழைப்பிற்குக் கிடைத்த மிகப்பெரிய இலாபமாக இப்பாராட்டை நான் மதிக்கிறேன்.

இச்செய்திப்படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை தர இருந்த போது நம் நாட்டைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வெள்ளை மாளிகையில் இந்தப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இப்படத்தின் எடிட்டிங், ஒலிப்பதிவு, தந்திரக் காட்சிகள் போன்ற தொழில் நுட்பங்களின் பொறுப்புக்களை ஏற்றுத் திறம்பட தயாரித்தவர்கள் என் இரண்டு பெண்கள் லதாவும் கீதாவும். மொத்தத்தில் என் குடும்ப அங்கத்தினர்கள் நால்வருமே என்னோடு இணைந்து பொறுப்பேற்று செயல்படுகின்றனர்.

1976ல் தயாரித்த 'சிந்து சமவெளி முதல் இந்திராகாந்தி வரை' (Indus Valley to Indira Gandhi) என்ற 4 மணி நேர ஆங்கிலமொழி செய்திப்படம் (2 பாகங்கள்) ஹாலிவுட் முத்திரையில் 'Warner Brothers' நிறுவனத்தால் அகில உலகத்திற்கும் விநியோகிக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமைக்குரியது. இந்திய நாட்டின் ஐந்தாயிரம் ஆண்டுகளின் வரலாறு மற்றும் பண்பாடு இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்திராகாந்தி மறைந்தபோது இத்திரைப்படத்தை ராஜீவ் காந்தி அவர்கள் பதினைந்தே நாட்களில் இந்தி மொழியில் தயாரித்தளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் என் நண்பர் கே.ஏ.அப்பாஸ் அவர்களின் மொழிபெயர்ப்போடு இத்திரைப்படம் குறித்த காலத்தில் தயாரித்து வெளியிடப்பட்டது.
கே: நீங்கள் நடத்திய சத்பாவனா உத்ஸவ் பற்றிச் சொல்லுங்கள்...

ப: மதங்கள் அனைத்தும் அன்பைத்தான் போதிக்கின்றன என்பதை வலியுறுத்தும் விதமாக ஜூலை மாதத்தில் நான்கு நாட்கள் சென்னையில் இந்த விழாவை நடத்தினோம். எனக்கு யோகி அரவிந்தரின் இலக்கியப் படைப்புகளில் ஈடுபாடு உண்டு. அவரது 'சாவித்ரி' என்ற படைப்பை என் பெண்கள் நாட்டிய நாடகமாக்கினார்கள். இதற்கு சர்வ தேச விருதும் கிடைத்தது. எனக்குப் பிடித்த மற்றொரு கவிஞர் மஹாகவி பாரதியார். தாகூரைப்போல நீண்ட ஆயுள் இருந்திருந்தால் பாரதிக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவருடைய கவிதைகளைக் கொண்டு 'பாரதியின் விஸ்வரூபம்' என்ற நாட்டிய நிகழ்ச்சி அமைத்தோம்.

என் நண்பர் ஷியாம் ஜோஸப் பேச்சுவாக்கில் ஒரு நாள் என்னிடம் "நாம் ஏசுபெருமானின் வாழ்க்கையை மேடையில் நாட்டிய நாடகமாக்கினால் என்ன?" என்று கேட்டபோது எனக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. 'பவனி வருகிறார் ஏசு' என்ற பெயரில் அமைந்தது நாட்டிய நாடகம். இம்மூன்றும் மூன்று நாட்களில் அமைத்து நான்காம் நாள் 'வைபோகமே' என்ற தலைப்பில் இந்துக் கடவுளர் திருமணக் காட்சிகளாக ஒரு நிகழ்ச்சியுமாய் விழா நடத்தினோம். என் மனைவிக்கு கபீர்தாஸரின் பாடல்களில் ஈடுபாடும் தேர்ச்சியும் உண்டு. எனவே கபீர் தாஸரின் கவிதைகளின் தொகுப்பில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியைப் படமாக்கி அதை நான்கு நாட்களும் திரையிட்டோம்.

இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் மதத்தலைவர்கள் வரிசையில் தலாய் லாமா, அன்னை தெரெசா, ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி, காஜீ முஹமது அயூப், ஸ்வாமி ரங்கநாதாநந்தா ஆசார்ய துளஸீ இன்னும் பலரையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களைத் தொகுத்த ஒரு நிழற்படத்தையும் நான்கு நாட்களும் திரையிட்டோம். எல்லா மதக்கருத்துக்களின் அடிப்படையிலும் அன்பு ஒன்றே வலியுறுத்தப்பட்டிருப்பதை எடுத்துக் கூறிய ஒரு கன்னி முயற்சி (maiden effort) என்று இதைச் சொல்லலாம். ஸத்பாவனா என்பதின் விளக்க மாக மதநல்லிணக்கம் இதில் வலியுறுத்தப் பட்டது.

தங்களுக்கிடையே உயர்வு தாழ்வு என்பது எனக்கு மட்டுமல்ல என்னுடைய மூத்த தலைமுறைக்கும் இருந்திருக்கவில்லை.

இதற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். இந்தக்காலத்தில் சில குறிப்பிட்ட நாட்களிலும் விழாவின் போதும் கோயில்களிலும் சமபந்தி போஜனம் நடக்கின்றது. எனக்குப் பூணூல் போட்ட அன்று எங்கள் பண்ணையில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் இன்றைக்கு நாம் தலித் என்று சொல்கின்றவர்கள் எல்லோருக்கும் எங்கள் வீட்டில் விருந்து கொடுத்தார் என் தந்தை.

கே: செய்தி விளம்பரம் தவிர வேறு வகைப் படங்கள் தயாரித்திருக் கின்றீர்களா?

வி: தொலைக்காட்சித் தொடர்கள் பல தயாரித்திருக்கின்றது எங்கள் நிறுவனம். ஜெயகாந்தனின் 'நல்லதோர் வீணை' என்ற புதினம் (12பாகம்) தேவன் அவர்களின் 'துப்பறியும் சாம்பு' (15பாகம்), இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றைக்கொண்டு ஹிந்தியில் 'உபாஸனா' (22பாகம்) என்றும் தமிழில் 'ஆலயம்' என்றும் தயாரித்து தமிழ் இலக்கியத்தை உலக அளவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினோம். ஆலயம் என்ற நாடகத்தில் கண்ணகியாக கீதாவும், மணிமேகலையாக லதாவும் நடித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் பாராட்டைப் பெற்றனர். சிங்கப்பூர் தொலைக் காட்சிக்காக சுஜாதாவின் 'சின்னக் குயிலி' (13பாகம்) தயாரித்தளித்தோம். சிறுகதைகள் என்று எடுத்துக்கொண்டால் 'சுயரூபம்' (13பாகம்), 'சக்தி' (13பாகம்) 'ஊரறிந்த ரகசியம்' (16பாகம்), ஹிந்தியில் 'Jaanaa Pehchaanaa' (13பாகம்) போன்றவை. இந்திய நாட்டின் பல்வேறு வகை யான நடனங்களை பிரபல நாட்டிய மணிகள் 200 பேர்களைக் கொண்டு ஆடச்செய்து படமாக்கி (33பாகம்) உலகின் பல நாடுகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'When the Gods Dance' (தெய்வங்கள் ஆடும்போது) என்ற நிகழ்ச்சி தூர்தர்ஷனில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இப்படத்திற்கு 1999ல் 32வது அமெரிக்க நாடுகளின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விழாவில் 'Creative Excellence Award' வழங்கப்பட்டது.

கே: உங்கள் தந்தை, மறைந்த டைரக்டர் கே. சுப்ரமணியம் இந்தியாவில் பேசும் படங்கள் அறிமுகமான காலத்திலே கொடி கட்டிப் பறந்த முன்னணி டைரக்டர். அவர்களை நினைவு கூரும் விதமாக நீங்கள் உங்கள் தயாரிப்பில் ஏதேனும் குறிப்பிட முடியுமா?

வி: இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கல்கி அவர்கள் எழுதிய 'தியாகபூமி' என்ற நாவலை என் தந்தை திரைப்படமாக்கினார். சுதந்திரப் போராட்டத்திற்கு அது துணை செய்வதாய்க் கூறி பிரிட்டிஷ் அரசு அதைத் திரையிட அனுமதி மறுத்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே அது திரைக்கு வந்தது. அத்திரைப்படம் எடுத்து 50ஆவது ஆண்டில் அதாவது 1990ல் அதே திரைக்கதையை ஹிந்தியில் டெலி பிலிமாகத் தயாரித்து திரையிட்டேன்.

வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரான்சு, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெற்ற திரைப்படம் தொடர்பான பேரவைகளில் அவர்கள் அழைப்பிற்கிணங்கி கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்புக்களை நிறையப் பெற்றிருக்கின்றேன்.

கே: உங்களைப்போல உங்கள் மனைவி மற்றும் பெண்களுக்கும் பாராட்டுக்கள் விருதுகள் கிடைத்ததுண்டா?

வி: நிச்சயமாக. பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து வெளிவருவதற்கான வழி வகைகளை எடுத்துக்கூறும் விதமாக எடுக்கப்பட்ட 'How they left Hell behind' என்ற செய்திப்படத்திற்கு ஹெல்ஸிங்கியில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. அதேபோல் 'When the Gods Dance' என்ற படத்தை இயக்கி அதில் நாட்டியமும் ஆடிய என் பெண்களுக்கு அமெரிக்காவில் இல்லினாய்ஸ் நகரில் விருது கிடைத்தது.

கே: உங்கள் அடுத்த தயாரிப்புகள் தயாராகிக்கொண்டிருக்கின்றனவா?

வி: நானே எழுதி இயக்கும் இரண்டு வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கடராமனின் வாழ்க்கை வரலாறு, இன்னொன்று பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

******


நெஞ்சு நெகிழ்கிறது

காஞ்சி சங்கர மடத்தைப் பற்றியும் காஞ்சி சங்கராச்சாரியார் பற்றியும் செய்திப்படம் ஒன்று தயாரிக்க அனுமதி கேட்டிருந்தேன். அதற்கு பெரியவர் இப்போது வேண்டாம் நான் சொல்லி அனுப்பும்போது வந்தால் போதும் என்று கூறிவிட்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அழைப்பு வந்தது. என்னுடன் இணைந்து படம் எடுக்கும் என் அலுவலகத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஒரு கிறித்துவர். நலிந்த தோற்றம் கொண்ட காஞ்சிப்பெரியவர் பொதுவாகவே மக்கள் தரிசனத்திற்காக வெளிவரும்போது ஒரு குறுகிய இடைவெளி வழியாக உடம்பைக் குறுக்கிக்கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு வந்து இரண்டொரு நிமிடங்களில் திரும்பிப் போய்விடுவார். அன்றும் அவர் உள்ளேயிருந்து வந்த அந்தக் கணத்திலே தன்னுடைய கண்களில் ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது போன்ற ஓர் உணர்வைப் பெற்றதாக வில்லியம்ஸ் கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெற்று இப்போது லண்டனிலிருக்கும் வில்லியம்ஸ் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பெரியவரின் பார்வை தீட்சண்யம் பற்றிக் குறிப்பிடத் தவறுவதேயில்லை. நினைத்தால் இன்றைக்கும் என் நெஞ்சு விம்முகிறது.

******


விருதுகள் பல

இந்திய ஜனாதிபதியிடமிருந்து சிறந்த இயக்குனர் என்பதற்காக இருமுறையும், சிறந்த தயாரிப்பாளர் என்பதற்காக இருமுறையும் தேசீய விருது பெற்றிருக்கிறேன். ஹானலூலுவில் Watumull Foundation என்னுடைய படைப்பாற்றலுக்கும் சமுதாய சிந்தனைக்கும் 'Honor Summus Award' என்ற விருது வழங்கி கௌரவித்தது. மற்றும் 'For the sake of Honour Award', 'Seva Ratna Award' போன்றவையும் உண்டு.

சந்திப்பு: டாக்டர் அலர்மேலு ரிஷி
More

இந்திய சதுரங்கத்தின் முன்னோடி - மனுவேல் ஆரான்
பண்டிதரும் பாமரரும் இரசிக்கும் இசை - அருணா சாயிராம்
Share: 




© Copyright 2020 Tamilonline