முரண்பாடு கருப்ஸ் பாண்டியன்
|
|
|
|
|
1942
ஒதேர்பெர்க் நகரம், பிரண்டென்பேர்க் மாகாணம், ஜெர்மனி.
கேபர்ட் ரோசலேர் அந்த அமைதியான அறையில் மரச் சாய்வுநாற்காலிக்கு தன்னைக் கொடுத்திருந்தார். கடிகார முள்ளின் சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம். வெளியிலுள்ள நிலைக்குமாறாக அவரின் உள்மனம் ஓய்வின்றி உரக்க இரைந்துகொண்டிருந்தது. சுருங்கிய விழியில் வலியின் உச்சம் தெரிந்தது. சிறிது நேரமேனும் கண்ணயர முயற்சிப்பதே அவரின் தற்போதைய பெரிய போராட்டம். உறக்கம் அவரை அந்தளவுக்கு வஞ்சித்தது. காரணம் மனசாட்சி.
அவர் நினைவலைகளில் அடாரா சவுக்கை சுழற்றிச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தான். அடாரா, யூத இனத்தில் பிறந்ததைத் தவிர எந்தப் பாவமும் அறியாதவன். சோபிபார் ரயில்பாதை வேலை நடக்கையில் எவ்வளவு துடிப்புடன் வேலைசெய்தான்; தனக்கும் தன் இனத்திற்கும் தன் கையாலேயே போடும் மரணப்பாதை அது என்று ஒரு நிமிடமேனும் அறிந்திருப்பானா? அந்த வேலையின்போது நடந்த சம்பவம்.... சோபிபார் ரயில்பாதை வேலையை மேற்பார்த்துக்கொண்டிருந்தார் கேபர்ட். ஐநூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் வேலை செய்ய, அவர்களின் ஏவல் அதிகாரிகளாய் கடும்பணிபோல் பாவித்து பாவம் செய்துகொண்டிருந்தனர் ஜெர்மானிய அதிகாரிகள்.
கேபர்ட் தண்டவாளங்களைத் தாண்டுகையில் கல் இடறிக் கீழே விழுந்தார். ரத்தத்திற்குச் சாதி தெரியுமா, அடிபட்ட இடத்தில் துளிர்த்தது. அருகே வேலை செய்துகொண்டிருந்த அடாரா அவரை நிமிர்த்தினான். பரபரவெனத் தன் அழுக்கான அரைகுறை சட்டையைக் கிழித்தான். கிழித்த துண்டினால் ரத்தத்தைத் துடைக்க முயல, படாரென்று விழுந்தது ஒரு பிரம்படி அவன் கையில். அடி விழுந்த வேகத்தைவிடப் பல மடங்கு வேகத்தில் பறந்து விழுந்தது கிழித்த துணி. கண்ணில் எரிமலை காட்டி நின்றார் ஓர் அதிகாரி. "எங்களைத் தொடுமளவுக்கு எங்கிருந்து வந்தது தைரியம்? உன் கந்தைத்துணி கொண்டு எங்கள் ரத்தம் துடைப்பாயா?" என்றது அவர் பார்வை.
அன்றைய இரவு. கேபர்ட் நெற்றியில் மருத்துவர் இட்ட கட்டுடன் மெத்தையில் மல்லாந்திருந்தார். அவரின் மனக்கண்முன் அடாராவின் முகம். "அவன் கண்ணில் என்ன பரிதவிப்பு, கருணை! நம்மவர்கள் இவ்வளவு கொடுமைப்படுத்தியும் அவன் இனம்மறந்து உதவவந்தானே, என்ன பெருந்தன்மை, என்ன பண்பு, என்ன ஒரு மனிதத்தன்மை! நொடிநேரம் அருகே இருந்தாலும் என்ன அக்கறை காட்டினான். அவனுக்கு நான் செய்த பெரியவிஷயம், வெறுப்பாக விசாரிப்பதுபோல் பாவனை செய்துகொண்டு அவன் பெயரைக் கேட்டது. நான் எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கோழை? எவ்வளவு இரக்கமற்றவன்? அரசாங்கப் போர்வையில் இரக்கத்தை விலைபேசிக் கொண்டிருக்கிறேனே?" கேள்விகளுக்கு நடுவே உறங்கிப்போனார்.
ஆனால் அன்று வந்த உறக்கம் இன்று வரமறுத்தது. கடமை என்ற பெயரில் மனிதத்தன்மையின்றிச் செய்த செயல்கள் கொஞ்சமா, நஞ்சமா? கொடுமை செய்யாவிட்டால் தலைவன் என் தலையைக் கொய்துவிடுவான் என்று அஞ்சி, கெஞ்சிய யூதர்களை இரக்கமின்றி வஞ்சித்தது எந்தவகை தர்மம்? எந்தவகை நியாயம்? ஒருவேளை நானும் யூதனாய்ப் பிறந்திருந்தால் என் நிலையும் அதுதானே? எந்த இனத்தில் பிறந்திருந்தாலும், ஒரு யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருந்தால் என் நிலையும் அதுதானே? என் வேலைக்காக, என் வாழ்விற்காக, என் குடும்பத்திற்காக என்ன செய்தாலும் அது சரியா? நான் வாழ ஆசைப்படும் அதே வாழ்க்கையைத்தானே அவர்களும் வாழ ஆசைப்படுவார்கள்?
ஒருவாரம் முன்னால் நடந்தேறிய அந்தக் கொலைவெறி கூட்டாட்டத்தின் முதல் அத்தியாயத்தை நேரில் பார்த்தபின்பு உள்ளுக்குள் ஏற்பட்ட நடுக்கம் இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. அரசவை கூட்டம் கூடி, மாநாடு நடத்தி யூதர்களை அழிப்பதைப்பற்றிப் பேசுகையில் பரிதவிக்க மறந்த மனசு இப்போது பாறாங்கல்லாய் கனத்தது. அவர் இறுக்கமான முகத்துடன் பார்த்த அந்தக் கொடூரக்காட்சி சிந்தையைவிட்டு அகல மறுத்தது.
யூதர்கள் ரயிலிலிருந்து இறங்கித் தங்கள் உடமைகளுடன் அகதிகள் முகாம் என்று கூறப்பட்ட இடத்திற்குள் நுழைகின்றனர். மேற்பார்வை கோபுரத்தின்மீது நின்றபடி கேபர்ட்டும் இரண்டு சக அதிகாரிகளும் பார்த்துக்கொண்டிருக்க, மனிதக்கூட்டத்தை துப்பாக்கி ஏந்திய உக்ரேனியப் படைவீரன் ஒருவன் வழிநடத்திச் சென்று, உடமைகளை அங்குள்ள அறைகளில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கிறான். மனிதக்கூட்டம் இயங்குகிறது. பின் ஆடவர், பெண்டிர் மற்றும் குழந்தைகள் எனப் பிரியுமாறு உத்தரவிடுகிறான். பிரிந்தன மனிதமந்தைகள். ஆடைகளைக் களையுமாறு உத்தரவு பிறக்கிறது. தயங்கிய மனித கூட்டத்தில் தடியடி நடக்க, பிறந்த மேனியாகிறது மனிதமந்தை. உரத்த குரலில் ஜெர்மானிய அதிகாரி உத்தரவிடுகிறார், "நீங்கள் யாவரும் குளிக்கப் போகிறீர்கள், இங்கு முகாமில் அதிகம்பேர் இருப்பதால் கூட்டம் கூட்டமாகத்தான் குளிக்கவேண்டும். இங்குள்ள பெரிய குளியலறையில் அதற்கான வசதிகள் தயாராக உள்ளன. நான் சொன்னவுடன் அங்கே தெரியும் பாதைவழியாக அனைவரும் உள்ளே செல்ல வேண்டும்." |
|
அதிகாரி உத்தரவிட்டுவிட்டு கேபர்ட் இருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தின்மீது பார்வையை வீச, கேபர்ட் மனஉறுத்தலில் ஆழ்ந்து சிந்தித்தவண்ணம் இருக்க, சக அதிகாரிகள் தமது கட்டை விரலை உயர்த்தி சமிக்ஞை செய்ய, உத்தரவிட்ட அதிகாரி மனிதக்கூட்டத்தை உள்செல்லுமாறு அறிவித்தார்.
கூட்டம் உள்ளே ஓடியது. கதவுகள் அடைக்கப்பட்டன, எஞ்ஜின்கள் இயக்கப்பட்டன, கார்பன் மோனாக்சைடு பொங்கிப்பரவியது கால்வாய்க்குள் யூதர் உயிர்குடிக்க. 30 மணித்துளிகள், அதற்குள் தள்ளுமுள்ளு சத்தங்கள், அழுகுரல்கள், கதவு தட்டப்படும் சத்தங்கள், கூவல்கள், ஓலங்கள், மூச்சுத் திணறல்கள், அமைதி, அமைதி, அமைதி. எஞ்ஜின்கள் அணைக்கப்பட்டு, சிலமணி நேரம் கொலைத்துக் களைத்த அதிகாரிகள் ஓய்வெடுத்து, மதுபானம் அருந்தினர்.
அதிகாரிகள் முன்னிலையில் கதவு திறக்கப்பட, அந்தக் கோரக்காட்சி கேபர்ட்டின் நெஞ்சை உலுக்கியது, மற்றவர்கள் வெற்றிக் கொக்கரிப்பை மகிழ்ச்சியுடன் எழுப்ப அவர்களை விநோதமாய் பார்த்தவாறே செய்வதறியாது நின்றார் கேபர்ட்.
கொடுமையின் உச்சம். யூதப் பிணங்களை அள்ள யூத அடிமைகள். முதல் முகாமில் அடைபட்டிருந்த வேலைக்கைதிகள் அழைத்துவரப்பட அவர்களில் ஒருவனாய் அடாரா. பிணம் அள்ள வருகிறோம் என்றறியாத அந்த கூட்டம் நெஞ்சக்கூட்டை அடைக்கும் அம்மணக்குவியலை கண்டவுடன் திக்கித்து நிற்க. அடாரா ஓடத் துவங்கினான் பிணக்குவியலை நோக்கி. மண்டியிட்டான் பிணங்களுக்கு மத்தியில்.
கண்ணீர் சொட்ட, கேபர்ட்டை அவன் பார்க்க, அந்தக்கண்களில்... இயலாமையின் பொருமல், ஏமாற்றத்தின் வலி, அநீதியை தட்டிக்கேட்க ஏற்பட்ட தவிப்பு, நீங்களெல்லாம் மனிதர்கள்தானா என்ற கோபக்கேள்வி, நங்கள் என்ன பாவமையா செய்தோம் என்ற கதறல், நீங்களும் உங்கள் சந்ததியும் என்ன ஆகிறதென்று பாருங்கள் என்ற சாபம், அட மிருகக்கூட்டமே! நாங்களாடா அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வெறுப்புக்கேள்வி. இன்னும் எத்தனை எத்தனையோ.
அப்படி ஒரு பார்வையை எந்த ஜென்மத்திலும் ஒருவன் காணமுடியாது, காணக்கூடாது என்றே தோன்றியது கேபர்ட்டுக்கு. அந்த நொடியில் நிகழ்ந்தது கொடுமையின் முத்தாய்ப்பு. உடன்நின்ற சக அதிகாரி தன் கைத்துப்பாக்கியால் அடாராவை நாசவார்த்தையில் திட்டியபடியே சுட, நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தான் அடாரா. ஆயிரம் கேள்விக்கணை வீசிய அவன் கண்வழியே உயிர் பிரிவது தெரிந்தது.
தீயில் காய்ச்சிய ஊசிகொண்டு இருதய தசையில் செலுத்துவது போன்று ஓர் உணர்வு ஏற்பட, தாங்கமாட்டாமல் அங்கிருந்து விறுவிறுவெனத் தன் அலுவக அறை நோக்கி நகர்ந்தார் கேபர்ட். விடுப்புக்கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, சக அதிகாரிகளிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டார் தன் சொந்த ஊர் நோக்கி. இன்று, ஒதேர்பெர்க், பிரண்டென்பேர்க் மாகாணம், ஜெர்மனி.
சிந்தனைகள் தூங்க விடாமல் துவைத்தெடுத்தன. நெஞ்சு வலித்தது. இருதயம் நின்று நின்று துடிப்பதுபோன்ற உணர்வு, சுவாசம் இடைவெளி விட்டு இயக்கம் பெற்றது, நாற்காலியில் இருந்து எழ முயல, உடல் ஒத்துழைக்க மறுக்க, மூளைக்குள் ரத்த நாளங்கள் வெடிக்க...
மறுநாள், ஊருக்குச் சென்றிருந்த கேபர்ட்டின் மனைவியும், ஒரே மகனும் திரும்பிவந்து திறக்காத கதவை நெடுநேரம் தட்டிக் கொண்டிருந்தார்கள்.
மகா, கெய்தர்ஸ்பர்க், மேரிலாந்து |
|
|
More
முரண்பாடு கருப்ஸ் பாண்டியன்
|
|
|
|
|
|
|
|