Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி - அத்தியாயம் 10
- சந்திரமௌலி|பிப்ரவரி 2015|
Share:
Click Here Enlarge"பரத். வைல்ட் கார்ட் என்ட்ரி மாதிரி ஒரு எதிர்பாராத தேர்வு" புன்னகைத்தவாறே ஒரு அதிர்ச்சி அறிவிப்பை அளித்த திருப்தியோடு அங்கு இருந்தவர்களின் முகமாற்றத்தைக் குறும்பாக கவனித்தார் விஷ்வனாத்.

சக்ரவர்த்தியும், கோபால்ரத்னமும் ஒருகணம் உறைந்துபோனார்கள். வினயும், கேந்திராவும் வேறு காரணத்துக்காக ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். மொத்தத்தில் அந்த அறையில் காலம் ஒருகணம் உறைந்துதான் போனது. சக்ரவர்த்தி சற்றே சுதாரித்து, "விஷ்வா, நீங்களே சொல்றீங்க இது எதிர்பாராத தேர்வுன்னு. யார் இந்த பரத்? இதுவரை இந்தப் பெயரை கேள்வியே பட்டதில்லையே. இவரோட திறமை, அனுபவம், பின்னணி இதைப்பத்தி கொஞ்சம் இந்த போர்டுக்குச் சொல்லமுடியுமா?" என்று சொல்லிவிட்டு, சட்டென்று "அஃப்கோர்ஸ் இது உங்க டீம். நான் இதில் மூக்கை நுழைக்கிறதா நினைக்கவேண்டாம். ஆனால் இந்த புது எஞ்ஜின் வெற்றியிலதான் இந்த கம்பெனி, நம்ம எல்லார் எதிர்காலமும் இருக்குங்கிறதால இந்த கேள்விகள் அவசியம்னு நினைக்கிறேன்" என்றார்.

"சரியான கேள்விகள். இதை வரவேற்கிறேன். பரத் நம்ம கம்பெனிக்கு, ஏன் இந்த இண்டஸ்ட்ரிக்கே புதுசு. நான் இந்த இண்டஸ்ட்ரில கால் எடுத்து வச்சபோது அவன் பொறந்திருக்ககூட மாட்டான். இஞ்சினியரிங் படிப்பெல்லாம் இல்லை. இந்தக் கம்பெனில சேந்து 48 மணிநேரம்கூட ஆகலை." சக்கரவர்த்தி இடைமறித்து ஏதோ சொல்ல ஆரம்பித்தார். "அப்புறம் ஏன் இந்த முக்கியமான பொறுப்புள்ள டீம்ல இந்த பையனை செலக்ட் பண்ணினேன் - இதுதானே உங்க கேள்வி? பரத்துக்கு சாதாரணமா நாம எதிர்பார்க்கிற இஞ்சினியரிங் படிப்போ, இண்டஸ்ட்ரி அனுபவமோ இல்லாம இருக்கலாம். ஆனால் ஹீ இஸ் அன்கன்வென்ஷனல். கடந்த பத்து வருஷத்துல நம்ம கம்பெனி தயாரிச்ச இஞ்சின்களப்பத்தி எல்லா விஷயமும் விரல்நுனியில வெச்சிருக்கான். அதுமட்டும் இல்லை. நம்ம வி-8 இஞ்சினை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு, யார் சீக்கிரம் அதை அசெம்பிள் பண்றாங்கனு ஒரு தேர்வு வெச்சோம். நம்ம கம்பெனில நிறய அனுபவம் இருக்கற அசெம்பிளி ஃபோர்மேனெல்லாம் விட பரத் வேகமா அசெம்பிள் பண்ணினான். இந்த இண்டர்ஸ்ட்ரில என் இத்தனை வருஷ அனுபவத்தை வச்சு சொல்றேன், பரத் ஒரு சரியான தேர்வு. இந்த ஆபரேஷனுக்கு நான் மூளைன்னா, நான் எதிர்பார்க்கிறதை, வேகமா செயல்படுத்தற கைகளை நான் தேடினேன். அந்த கைகள் இந்த பையன் பரத்."

"நிச்சயம் சரியான செலக்‌ஷன்தான் அங்க்கிள். நானும் கேந்திராவும் இதை நிச்சயம் வரவேற்கிறோம். பரத்கிட்ட நீங்க சொல்றமாதிரி ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னெஸ் இருக்கு. சரியா உற்சாகப்படுத்தினா நம்ம கம்பெனிக்கு அவன் ஒரு நல்ல அடிஷன்ங்கிறதுல சந்தேகமே இல்லை. வாட் கேந்திரா?" என்று கேந்திராவையும் துணைக்கழைத்தான்.

கேந்திராவால் இன்னும் பரத் தன் அப்பாவின் பார்வையில் இவ்வளவு சீக்கிரம்பட்டு இவ்வளவு முக்கியமான பொறுப்புக்குப் பாத்திரமானதை நம்பமுடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு இதெல்லாம் தன் எண்ணத்துக்கேற்ப நடப்பதாகவே நினைத்துக்கொண்டாள். "பரத் நிச்சயம் நல்ல சாய்ஸ்தான்" என்று ஆமோதித்தாள். கோபால்ரத்னம், "விஷ்வா இதை கொஞ்சம் யோசிக்கிறது நல்லது. நம்ம கம்பெனில தங்கள் திறமைகளை நிரூபிச்ச எத்தனையோ தகுதியானவங்க இருக்காங்க. எல்லாருக்குமே இது ரொம்ப ப்ரெஸ்டீஜியஸ் ப்ராஜெக்ட்னு தெரியும். இப்படி நேத்திக்கு கம்பெனில சேர்ந்த, எந்தத் தகுதியும் நிரூபிக்காத ஒருத்தரை இவ்வளவு முக்கியமான டீம்ல சேர்த்தால் அது நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும். உன்னோட உள்ளுணர்வைமட்டும் வெச்சு பரத்தை இந்த டீம்ல போடறது நல்லதாத் தெரியலை" என்றார்.

"லெட் மீ பி க்ளியர். ஏற்கனவே சொன்னமாதிரி பரத்கிட்ட நான் என்ன தகுதிகள் எதிர்பார்த்தேனோ அது இருக்கு. எனக்குத் தேவையான ஆட்கள், வசதிகள், முதலீடு இருந்தால்தான் இந்தப் புது இஞ்சின நான் நினைச்ச மாதிரி வெற்றிகரமா கொண்டுவரமுடியும். இதுலே எந்தக் குறுக்கீடு இருந்தாலும் என்னால நான் நினைச்சமாதிரி செயல்பட முடியாது. இந்த செலக்‌ஷன் தப்பானால் அதனோட விளைவுகளுக்கு நான் பொறுப்பெடுத்துக்கறேன்" தீர்மானமாக அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷ்வனாத்.

கோபால்ரத்னம் தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்தன்போல, "பரத் புதுவரவு. விசுவாசமா இருப்பானா? ரகசியங்களை காப்பாத்துவானா?"

"நம்ம லீகல் அண்ட் ஹெச்ஆர் டிபார்ட்மெண்ட் முழுப்பின்னணி சோதனைபண்ணி பரத்தைப்பத்திக் குடுத்த க்ளீன் ரிப்போர்ட் இதோ இருக்கு. அவன்கிட்ட சாதிக்கிற வெறி நிச்சயம் இருக்கு. இப்படிப்பட்டவங்க குடுத்த வேலைலதான் குறியா இருப்பாங்க. எப்படி நாம வேலை செய்யற கம்பெனிக்குக் குழி பறிக்கலாம், நாம லாபம் பாக்கலாம்னெல்லாம் பாக்கமாட்டாங்க."

சக்கரவர்த்திக்கு அந்த கடைசி வாக்கியத்தை விஷ்வனாத் தன்னைப் பார்த்துத்தான் சொன்னதுபோலப் பட்டது. கோபால்ரத்னம் மீண்டும், "விஷ்வா, உன் செலக்‌ஷன் சரியாவே இருக்கட்டும். எதற்கும் ஒரு தற்காப்புக்கு ஏன் கோவிந்தை ஐந்தாவது மெம்பரா உன் டீம்ல சேத்துக்ககூடாது? அவர் திறமைசாலி. பரத் ஏதாவது சொதப்பினால் உனக்குச் சரிகட்ட கோவிந்த் இருக்கறது நல்லது" என்றார்.

விஷ்வனாத் தன் இருக்கையை விட்டு எழுந்துவிட்டார். "ஜென்டில்மென் ஐ எம் டன். என் ப்ராஜட்பத்தி போர்டுக்கு இன்ஃபார்ம் பண்ணதான் வந்தேன். நோ மோர் சஜஷன்ஸ் ப்ளீஸ். எப்படி இந்த ப்ராஜெட் முன்னேறுதுன்னு பத்து நாளைக்கு ஒரு ரிப்போர்ட் உங்களுக்கு வரும். எனக்கு டீம் மீட்டிங்குக்கு நேரமாகிவிட்டது. தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்" என்று அந்தப் பேச்சை அத்தோடு முடித்துவைத்தார்.
கூட்டம் முடிந்து கேந்திரா கிளம்பும்போது, பரத்திடம் இந்த நல்ல விஷயத்துக்கு உடனே ட்ரீட் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். பரத் திறமைசாலி. இந்த புதிய இஞ்சின் உருவாக்கத்தில் நிச்சயம் அப்பாவின் நம்பிக்கையை இன்னும் சம்பாதித்து கேந்திரா மோட்டார்சில் சீக்கிரம் பெரிய அந்தஸ்து அடைந்துவிடுவான். அப்புறம்.. அப்புறம்... அவளுக்கு கற்பனை, சங்கர் பட பாட்டுபோல கலர்ஃபுல்லாக விரிந்தது. சக்கரவர்த்தி கிளம்பியபோது, கோபால்ரத்னம் ஜாடையாக இப்போது என்ன செய்வது என்பதுபோல அபிநயித்தார். பெரும்கடுப்பில் இருந்த சக்கரவர்த்தி அவர் காதோரமாக பிறர் கேட்காதவாறு, "உங்க பையன் வாயைக் கொஞ்சம் பொத்திவைங்க" என்றவாறு வெளியேறினார்.

கேன்டீனில் மதிய சாப்பாட்டு நேரப் பரபரப்பு திமிலோகப்பட்டது. கிட்டத்தட்ட ஆயிரம்பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக்கூடம். நான்குவித உணவுத் தயாரிப்பாளர்கள், நல்லதரத்தில் தயாரித்த உணவு வகைகள் செவ்வக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழித்தட்டுகளில் வாசனைதுளைக்கப் பறிமாறப்பட்டன. தொழிலாளர்கள் உணவு டோக்கன்களை வரிசையில் நின்று வழங்கி எந்தத் தள்ளுமுள்ளும் இல்லாமல் உணவைப் பெற்றுக்கொண்டு சீராக, காலியாயிருந்த இருக்கை மேசைகளில் அமர்ந்து கொண்டார்கள். அந்தக்காட்சி கேந்திரா மோட்டார்சின் தொழிற்கூடத்தில் மோட்டார் பாகங்கள் எந்தப் பிசிறும் இல்லாமல் ஓர் ஒழுங்கோடு சேர்க்கப்படுவதுபோல இருந்தது.

தொழிலாளர், மேலாளர் என்ற பாகுபாடு கேந்திரா மோட்டார்ஸ் உணவுக்கூடத்தில் என்றும் கிடையாது. தொழிலாளர்களுக்கு என்ன உணவோ அதே உணவுதான் மேலாளர்களுக்கும் என்பதால் மேலாளர்களும் வரிசையில் நின்று அதே உணவைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த நேர்த்தியும், கட்டுப்பாடும் விஷ்வனாத்தும், கோபால்ரத்னமும் கம்பெனி ஆரம்பித்த புதிதிலேயே ஏற்படுத்தியவை. அவற்றைக் கம்பெனி வளர்ந்தபின்னாலும் தளர்த்தவில்லை. தொழிலாளர்களுக்கு தங்கும் குடியிருப்பு தொழிற்சாலைக்கு அருகிலேயே ஏற்படுத்தி, தொழிற்சாலை கேன்டீனில் நல்ல உணவு, அவர்கள் பிள்ளைகளுக்குப் படிக்க ஊக்கத்தொகை என்பதெல்லாம் ஒரு தொலைநோக்கோடு விஷ்வனாத் ஏற்படுத்தியவை. ஆரம்பத்தில் நிதிநெருக்கடி இருந்த காலத்திலும் இவற்றுக்குச் செலவுசெய்ய அவர் அஞ்சியதில்லை.

தொழிலாளிகளின் போனஸ், சம்பளம் போன்றவற்றில் லாபத்திற்கேற்பக் கணக்குப்பார்த்து கூட்டிக்குறைத்துக் கொடுத்தாலும், தங்குமிடம், உணவு, பிள்ளைகளின் படிப்பு உதவி இவற்றில் என்றும் கைவைத்ததில்லை. இதனாலேயே தொழிலாளிகள் விசுவாசத்தோடு இருந்ததோடு, இதுவரை தொழிலாளர்கள் யூனியன், போராட்டம், ஸ்ட்ரைக் என்று எதிலும் இறங்கியதில்லை. விஷ்வனாத் சிலசமயம் வேடிக்கையாக கேந்திரா மோட்டார்சின் வெற்றிக்குப் பெரிய காரணம், அந்த கேன்டீனின் வெங்காயசாம்பாரும், வெண்பொங்கலும் என்பார்.

"ஐ அம் வாணி" மேட்சிங்க் ரப்பர் வளையல்களோடு நீட்டப்பட்ட மிருதுவான கைகளை லேசாகக் குலுக்கி "ஐ அம் பரத், நைஸ் டு மீட் யூ" என்றான் பரத். நீங்க வி-9 இஞ்சின் தயாரிக்கிற டீம்ல செலக்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள். வாணி 25 லிருந்து 30 வயதுக்குள் இருக்கலாம், ஆனால் பார்வைக்குச் சற்று வயது குறைந்தவளாகவே தென்பட்டாள். மாநிறமா கருமையா என்று சட்டென்று இனம்பிரிக்கமுடியாத உடல்நிறம். பளீரென்ற முகத்தில் அறிவுமின்னலை ஒருமுறைக்கு இருமுறை காட்டக்கூடிய பெரிய கண்கள். வெட்டிவிடப்படாத அடர்த்தியான கருங்கூந்தல் அமைதியாக கொண்டையில் அடங்கியிருந்தது. கால்சராயும், காலர்வைத்த சட்டையும் அதன்மேல் கோட்டும் அணிந்திருந்தாலும், பெண்மை மாறாமல் ஒரு சிறிய திலகமும், கைகளில் ரப்பர் வளையல்களும் அணிந்திருந்தாள்.

"இந்தியா மொதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பினா மாதிரி வந்த ஒரேநாள்ல நம்ம பாஸோட டீம்ல செலக்ட் ஆயிட்டீங்க. கம்பெனி முழுக்க உங்களப்பத்திதான் பேச்சு" என்று இயல்பாகப் பாராட்டினாள் வாணி. பரத்தும், தூரத்திலிருந்து கண்களாலும், விரல்களாலும் தன்னைச் சுட்டி, கம்பெனி பணியாளர்கள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக்கொள்வதை கவனித்தான். எத்தனை நாள் உதவாக்கரை, இலக்கில்லாதவன், வேலைக்கஞ்சுபவன் என்று வாங்கிக் கட்டிக்கொண்டிருப்போம். திடீரென சுக்கிரதசை அடித்தாற்போல வேலை, அதிலும் பிடித்தமான வேலை; அதற்கும் மேலே இந்தியாவையே ஏன் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கப்போகும் ஒரு புது இஞ்சினைத் தயாரிக்கும் பணியில் அவன் நான்குபேரில் ஒருவன். வாணியின் பாராட்டுக்கள் அவனுக்கு கூச்சத்தைத் தந்தாலும், உள்ளூரப் பெருமிதமும் தந்தது.

இதற்கும் இனி பழகிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, "தேங்க்ஸ்ங்க. உள்ள ஒரே டென்ஷனா இருக்கு. பாஸ் என்ன பொறுப்பு தரப்போறாரோ அத சரியா செய்யணுமேனு இருக்கு."

"கவலையே வேண்டாம். ரொம்ப அனுபவம் இருக்கிற டாக்டர் மித்ரன் நம்மகூட இருக்காரு."

"அந்த தாடி வச்ச சீரியஸ் ஆசாமிதானே. கணக்கு ப்ரொபசர்மாதிரி இறுக்கமா மூஞ்சிய வச்சுக்கிட்டு அவர் உண்டு அவர் வேலை உண்டுனு இருக்காரு. இன்னிக்கு காலைல ரெண்டு தடவை பேசப்பாத்தேன். ஏதோ தப்புப் பண்ண துணைக்குக் கூப்டா மாதிரி விறைப்பா பாத்துட்டு லேபுக்கு போயிட்டாரு."

"அப்ப பாஸ்கிட்டேயே என்ன டவுட் இருந்தாலும் கேளுங்க. அவர் ரொம்ப நல்லவர்."

"பாஸ்கிட்ட சந்தேகமெல்லாம் கேக்கற அளவு பரிச்சயம் இல்லை. என்னோட ஒரே ஆபத்பாந்தவன் சாரி ஆபத்பாந்தவி நீங்கதான். நிஜமாவே நான், நாம ஜெயிக்கணும்னா எனக்கெல்லாம் கொஞ்சம் பரிச்சயமாகிறவரைக்கும் ஹெல்ப் பண்ணுங்க. புண்ணியமாப் போகும். என்னடா முதல்தடவை இப்பதான் பேசறோம் இவ்வளவு உரிமை எடுத்து பேசறானேன்னு பாக்காதீங்க."

"நீங்க கேக்கவே வேண்டாம். நீங்களும் நானும் இந்த ப்ராஜெக்ட்ல ஒண்ணா வேலை பண்ணப்போறோம்னு தெரிஞ்சதும் எங்க அப்பா உங்களுக்கு நான் எல்லா உதவிகளையும் செய்யணும்னு கொஞ்சநேரம் முன்னாலதான் ரெகமண்ட் பண்ணிட்டுப்போனார்."

"உங்க அப்பாவா? அவர் எதுக்கு எனக்கு ரெகமெண்ட் பண்ணனும். என்னை எப்படித் தெரியும்?"

"உங்களுக்கு விஷயமே தெரியாதா. எங்க அப்பாதான் பாஸோட டிரைவரா இருக்காரு."

"ஓ கதிரேசன் அண்ணனா, இப்ப தெரிஞ்சுருச்சு. அவரோட பொண்ணா நீங்க?"

"சரி பேசிகிட்டே சாப்பாட்டை கோட்டை விட்டுரப்போறோம். ரெண்டு மணிக்கு பாஸோட மீட்டிங் வேற. வாங்க சாப்பிடலாம். டோக்கன்லாம் வாங்கிட்டீங்களா?"

"ஓ இதோ இருக்கே" வரிசையில் போய் நின்றார்கள். வாணிக்குப் பின்னால் பரத் நின்றான்.

பரத்துக்கு வாழ்த்துக்களை நேரில் தெரிவிக்க நினைத்து போர்டு மீட்டிங் முடிந்ததும் கேந்திரா கேன்டீனுக்குள் நுழைந்தாள். அவளுக்கு நிறைய தொழிலாளர்கள், அவள் புதியபதவிக்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் கேந்திராவால் பரத்தை உடனே நெருங்கமுடியவில்லை. ஆனால் பரத்தும் வாணியும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது அவள் கண்களில் பட்டது. விகல்பமாக எதுவும் இல்லாவிட்டாலும் ஏனோ கேந்திராவுக்கு ஒரு பொறாமையும், தன்னால் இப்படி சகஜமாக பரத்தோடு பேச, பழக முடியவில்லையே என்ற ஏக்கமும் எழுந்தது. இதற்குள் பரத்தும், வாணியும் சாப்பாட்டு வரிசையில் நின்றுவிடவே, தொழிலாளர்கள் விலகியபிறகு கேந்திரா பரத்தை அப்போது சந்திக்கும் எண்ணத்தை கைவிட்டு மறுபடி அலுவலகம் நோக்கி நடந்தாள். பரத்தும், வாணியும் ஒரே டீமில் இனி ஒன்றாக வேலை பார்க்கப்போகிறார்கள். வாணிக்கு கிடைத்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு நடந்தாள்.

"உங்களுக்கும் சேத்து நானே டோக்கன் குடுத்துடவா?" பரத் வாணியிடம் கேட்டான். முன்னால் நின்ற வாணி, "வேணாம், இதோ இருக்கு" என்று தன் கைபர்சைத் திறந்து டோக்கனை எடுத்தாள். அப்போது அந்த பர்சின் உள்ளே இருந்த புகைப்படம் பரத்தின் கண்ணில் பட தப்பவில்லை. அதிர்ச்சியாக, "வாணி யாரு இந்த ஃபோட்டோல இருக்கறது? உங்க அம்மாவா?" என்றான்.

பர்சை மறுபடி பிரித்து, அந்த ஃபோட்டோவை நன்றாகக் காட்டி, "இவங்களா? இவங்க எங்க அம்மாவுக்கும்மேலே, எனக்கு பாட்டி மாதிரி. எல்லாரும் ஆனா ஆத்தானுதான் கூப்பிடுவாங்க. எங்க பூர்விக கிராமதேவதைனு சொல்லலாம். நான் இன்னிக்கு பெரியபடிப்பு படிச்சு நல்லநிலைல இருக்கக் காரணம் இவங்கதான். நான்னு இல்லை எவ்வளவோ பேருக்கு வழிகாட்டி இவங்கதான்."

"இவங்க பேர் என்ன?"

"இவங்க பேர் வள்ளியம்மா. ஏன் இவங்களை உங்களுக்குத் தெரியுமா?"

"இல்லை ஒரு க்யூரியாசிடிதான், எனக்கு இவங்களைத் தெரியாது" பரத் பொய் சொன்னான். அப்போது அவன் மனதில், தன் பாட்டியைப்பற்றிய ரகசியம் தெரிந்துகொள்ள வாணி வழியாக ஒரு பாதை கிடைத்ததென்று நினைத்துக்கொண்டான்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline