Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
'பொயட்ரி இன் ஸ்டோன்' விஜயகுமார்
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2015||(2 Comments)
Share:
சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாகப் பணியாற்றிவரும் விஜயகுமார், தமிழகத்தைச் சேர்ந்தவர். சிற்பம், ஓவியம், நுண்கலைப் பொருட்கள்மீது தணியாத ஆர்வம் கொண்டவர். சர்வதேச சிலைகடத்தல் கும்பல்மூலம் வெளிநாடுகளுக்குப் போன இந்தியக் கலைப் பொருட்கள் குறித்துப் பல ஆண்டுகளாக ஆய்வுசெய்து www.PoetryinStone.in என்ற தனது இணையதளத்தில் ஆதாரங்களுடன் எழுதிவருகிறார். விருத்தாசலம் கோயிலைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஸ்ரீபுரந்தன் கிராமத்தின் நடராஜர் சிலை போன்றன இவரது பெருமுயற்சியால் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவரிடம் இவற்றைக் குறித்து உரையாடினோம். அதிலிருந்து...

கே: சிற்பங்கள், கலைப்பொருட்கள்மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
ப: சிறுவயதிலிருந்தே கோவிலுக்குச் செல்வது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, ரசிப்பது என்று ஆர்வம் இருந்தது. தற்செயலாகக் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படிக்க, அது மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்தது. இணையத்தில் "பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை" என்று ஒரு யாஹூ குழுமம் இருந்தது. அதில் இணைந்தேன். அவர்களுடன் கலந்துரையாடி வந்தியத்தேவன் வழி, அருண்மொழிவர்மன் வழி என்றெல்லாம் பயணங்கள் மேற்கொண்டோம். அப்படிக் கண்ட பல காட்சிகள் என்னை பாதித்தன. நல்ல கலைச் சிற்பங்கள் உள்ள கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பதைப் பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது.

பல ஆலயங்களுக்கு அந்தந்த ஊரில் இருப்பவர்களே போவதில்லை. அதனால் அவை மோசமாக இருந்தன. கோயில் என்பது ஒரு எகனாமிக் சென்டர். கோயிலைச் சுற்றி கிராமம் அமைந்திருக்கும். கோயிலுக்கென்று அருகில் ஒரு குளம் இருக்கும், ஊருக்கு என்று தனியாக ஒரு குளம் இருக்கும். இவற்றை அழியாமல் பாதுக்காத்தாலே தண்ணீர், சுற்றுச்சூழல், விவசாயம் எனப் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அந்தக் காலத்தில் நீர் மேலாண்மை இப்படித்தான் நடந்திருக்கிறது. தற்போது கோயில்கள் சிதிலமடைந்துவிட்டன. அதைப் பார்த்து வருந்திய நண்பர்களில் சிலர் அவை குறித்து எழுத ஆரம்பித்தார்கள். சிலர் கல்வெட்டாய்வு என்று போனார்கள். நான் இவற்றை எல்லாம் படங்களாக எடுத்து ஆவணப்படுத்த முடிவுசெய்தேன். நம் நாட்டில் வரலாற்றாய்வு நூல்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் கற்றவர்கள்மட்டுமே படிக்கும் வகையில் அமைந்துள்ளன. சாமான்ய மனிதனுக்குப் பயன்படும் வகையில் நூல்கள் இல்லை. ஆகவே ஒரு எளிய மனிதருக்கும் புரியும் வண்ணம் எழுத நினைத்தேன். அதற்கு இணையத்தில் எழுதுவதுதான் சரி என்று முடிவுசெய்தேன்.



முதலில் கோயில்கள், அவற்றுக்குச் செல்லும் வழிகள், சிற்பங்கள், அவற்றின் அங்க அடையாளங்கள் பற்றியெல்லாம் எழுதினேன். அதன்பிறகு complicated forms, Miniatures குறித்து எழுதினேன். இணையத்தில் அதிகம் எழுதினால் படிக்கமாட்டார்கள் என்பதால் நிறையப் படங்களுடனும் சிறிது தகவல்களுடனும் முதலில் ஒரு குழுமத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் அவற்றை தனிப்பட்ட தகவல் ஆவணக் களமாக வடிவமைத்தால் தகவல்கள் நிலைத்திருக்கும் என்று நண்பர்கள் கருதினர். அப்படி ஆரம்பித்ததுதான் www.poetryinstone.in. முன்பின் பார்த்து, பேசிப் பழகியிராத, இணையம் மூலம்மட்டுமே அறிமுகமாயிருந்த அமெரிக்காவில் வசிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் அந்த வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார். அவரே அதனை வடிவமைத்து, ரிஜிஸ்டர் செய்து, எப்படி எழுத வேண்டும் என்று இணையத்தின்மூலம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அப்படி ஆரம்பித்ததுதான் "பொயட்ரி இன் ஸ்டோன்".

கே: www.poetryinstone.in தளம்வழியே நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள்?
ப: தமிழிலும் ஆங்கிலத்திலும் அதில் எழுதிவருகிறேன். பல சிற்பங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அதுபற்றித் தமிழில் மட்டும் எழுதினால் அது குறுகிய அளவில்தான் பார்வையாளர்களைச் சென்றடையும். தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதும்போது அது உலகளாவிய மக்களைச் சென்றடையும். இப்படி ஆராயும்போது நிறைய ஆலயங்களில் சிற்பங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை; அவை எங்கு போயின என்று தேடிப்பார்த்ததில் சில மியூசியத்தில் இருப்பதையும், சில காணாமல் போய்விட்டதையும் அறியமுடிந்தது. காணாமல் போனவை எங்கிருக்கின்றன என்று பார்த்தபோது வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களிலும், தனிநபர் சேகரங்களிலும் இருப்பது தெரிந்தது. இவை எப்படி வெளியே போயின என்பது ஒருபுறம், அப்படி வெளிநாட்டில் இருப்பது நம்முடையவைதான் என்று தெரிந்தபின், அவற்றை எப்படி மீட்பது என்பது இன்னொரு புறம். அதுபற்றியெல்லாம் ஆதாரங்களுடன் இந்தத் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கே: உங்கள் முயற்சியால் மீட்கப்பட்ட சிலைகள் குறித்துச் சொல்லுங்களேன்!
ப: ஸ்ரீபுரந்தன் கிராமத்தின் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த நடராஜர் சிலை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை, இரண்டும் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்க நாங்கள் முயற்சி எடுத்தோம். இதுதவிர மீட்கவேண்டியவை இன்னமும் ஏராளம் இருக்கின்றன. அது பற்றிய குறிப்புகளை ஆதாரங்களுடன் எனது தளத்தில் வெளியிட்டிருக்கிறேன்.



கே: ஓ! அந்தச் சிலைகள் எப்படி வெளியே சென்றன, எப்படி மீட்கப்பட்டன, என்பது குறித்துச் சொல்லுங்களேன்...
ப: ஒருமுறை இணையத்தில் சிலைகள் குறித்துத் தேடிக்கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் சிலையை வாங்கியிருப்பதை அறிந்தோம். அதன் படத்தைப் பார்த்தபோது அதை முன்னமேயே எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்றியது. காரணம், அது வித்தியாசமான சிலை. கைகள் இரண்டும் சற்றே உடைந்திருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் பல சிலைகளின் படங்களை நாங்கள் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறோம். அதனால் இந்தச் சிலை எங்கள் ஆவணத்தில் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், அது சோழர்காலத்துச் சிலை என்பதும், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது. டாக்டர் டக்ளஸ் பேரட் என்பவர் 1974ல் வெளியான தனது நூலில் இந்தச் சிலையின் படத்தைக் குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கிறார். French Institute of Pondicherry இதே படத்தைத் தனது ஆய்வு நூலில் வெளியிட்டிருக்கிறது. 1970 முதல் 1994 வரை அவர்கள் இதே அர்த்தநாரீஸ்வரர் சிலையின் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். ஆனால் விருத்தாசலத்தில் விசாரித்ததில் சிலையேதும் அங்கிருந்து காணாமல் போகவில்லை என்றார்கள். விருத்தாசலத்தில் இருக்கும் ஃபேஸ்புக் நண்பர் ஒருவரிடம் அங்கிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையைப் படமெடுத்து அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பினார். அதை ஆராய்ந்து பார்த்ததில் அந்தச் சிலை போலி என்பது தெரிந்தது.

கே: என்ன, போலியா!
ப: ஆம். அதாவது 2002ல் அந்தத ஆலயக் கும்பாபிஷேகத்தின் போது அந்தச் சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன. உண்மையான சிலையை வெளிநாட்டிற்குக் கடத்திவிட்டு, அதேபோன்ற போலிச்சிலை ஒன்றை அங்கே வைத்திருக்கிறார்கள். அதாவது சிலையின் உடைந்த கையைச் சரிசெய்வதாகச் சொல்லி அதற்குப் பதிலாகப் போலி சிலையைச் செய்து வைத்துவிட்டு, உண்மையான சிலையைக் கடத்திவிட்டார்கள். ஆனால் அதைச் செய்த ஸ்தபதி சிலையின் கையை வேறு கோணத்தில் வைத்திருக்கிறார். உற்றுப் பார்த்தாலே அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அதுகூடத் தெரியாமல் போலிச் சிலையை 12 வருடங்களாக வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
கே: அடடா, பிறகு?
ப: முதலில் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைககப்பட்டிருந்த அர்த்தநாரீஸ்வரர் படத்தையும் எங்களிடமிருந்த பழைய அர்த்தநாரீஸ்வரர் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டும் ஒன்றுதான் என்பது தெரியவந்தது. உடனே, எங்களிடம் இருந்த ஆதாரங்களைத் திரட்டி, ஆஸ்திரேலியத். தொலைக்காட்சிகளுக்கும், இதழ்களுக்கும், இந்திய அரசுக்கும் அனுப்பினோம். இந்தியாவில், பெரிய அளவில் எதிர்வினை எதுவும் இல்லை; ஆனால், ஆஸ்திரேலியாவில் பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் வெளியாகி அது பெரும்பிரச்சனையை ஏற்படுத்தியது. யூடியூபில், அந்தச் சிலை நம்நாட்டைச் சேர்ந்ததுதான் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு, பிரச்சனையை மக்களிடம் கொண்டுசென்றோம். தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசுக்கு அழுத்தம் தரவே அந்த நாடு சிலையை திருப்பித்தரச் சம்மதித்தது.

உலகம் முழுக்க சிலைத்திருட்டுகள் நடந்துவருவதால் அதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. 1972ல் இயற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையொப்பம் இட்டுள்ளன. அதன்படி அந்தந்த நாட்டில் உள்ள கலைப்பொக்கிஷங்கள் குறித்து அரசுகள் பட்டியலிட வேண்டும். அதில் ஏதாவது தொலைந்து போய்விட்டிருந்தது என்றால் அதுகுறித்து படத்துடன், ஆதாரத்துடன் இதழ்களில் சோஷியல் மீடியாக்களில் அறிவிப்புச் செய்திருக்க வேண்டும். 1972க்குப் பிறகுதான் ஒரு நாட்டிலிருந்து அது வெளியே சென்றிருக்கிறது என்பதற்குச் சரியான ஆதாரம் இருந்தால் அந்த கலைப்பொக்கிஷத்தை வாங்கிய நாடு எந்தவித இழப்பீடும் இல்லாமல் உடனடியாக அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.

அதன்படி French Institute of Pondicherryயின் புகைப்பட ஆதாரத்தை வைத்து 1994வரை அந்தச் சிலை இந்தியாவில்தான் இருந்தது என்பதை நிரூபித்தோம். அவர்களிடம் இருந்த சான்றிதழில் 1969-1970ல் டில்லியில் அதனை வாங்கியதாக போலிப்பத்திரம் தயாரித்து அமெரிக்காவில் இருந்து விற்பனை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தச் சிலை நம்மிடம் தான் இருந்தது என்பதற்கு வலுவான ஆதாரம் இருந்ததால் ஆஸ்திரேலிய அரசு சிலையை திருப்பித்தர ஒப்புக்கொண்டது. சிலை நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தது. இதேபோல்தான் ஸ்ரீபுரந்தன் கிராமத்து நடராஜர் சிலையும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது.

கே: ஓ! அதுகுறித்தும் சொல்லுங்களேன்!
ப: சுத்தமல்லி ஊரின் ஆலயம் முற்றிலும் இடிந்துபோனதால் அங்கிருந்த சிலைகளை ஸ்ரீபுரந்தன் ஆலயத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார்கள். கடத்தல்காரர்கள் இரண்டு கோயில் சிலைகளையும் ஒன்றாகத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அதில் நடராஜர் சிலை மட்டுமே தற்போது மீட்கப்பட்டிருக்கிறது. நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் கேன்பரா அருங்காட்சியகத்தில் இருக்கும் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. உடனே நாங்கள் நண்பர் ஒருவர்மூலம் அங்குள்ள நடராஜரை ஹை ரெசல்யூஷனில் படமெடுக்கச் செய்து, ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் நடராஜர் படத்தையும் ஹை ரெசல்யூஷனில் எடுத்து ஒப்பிட்டோம். 28 இடங்களில் அதில் ஒற்றுமை இருந்தது தெரியவந்தது. ஆனால் ஆஸ்திரேலிய நேஷனல் கேலரியின் டைரக்டர் "எல்லா நடராஜர் சிலையும் ஒரேமாதிரிதான் இருக்கும். இது அதுவல்ல" என்று சொல்லிவிட்டார். பின்னர் அந்த ஆதாரங்களை இணையதளத்தில் Return of the Dancer என்று வெளியிட்டோம். இணையத்தில் இவ்வளவு ஆதாரத்துடன் போட்டதால் வேறு வழியில்லாமல் போய்விட்டது. இந்திய அரசும் சிலையைக் கேட்டு அவர்களை வலியுறுத்தவே, அவர்கள் வேறு வழியில்லாமல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் சமீபத்தில் அங்கே சென்றபோது நடராஜர் சிலையை ஒப்படைத்தனர். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மொத்தம் 29 சிலைகள் காணாமல் போயின. இதுவரை ஒரே ஒரு சிலைதான் திரும்ப வந்திருக்கிறது. மற்றச் சிலைகள் இன்னமும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன.



கே: இந்தச் சிலைகளை வாங்குவது யார்?
ப: சிலைக்கடத்தல் மிகப்பெரிய நெட்வொர்க். இந்தியா மட்டுமல்லாமல், ரோம், கிரேக்கம், இத்தாலி என்று உலகின் பல நாடுகளிலும் சிலைத்திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலைப்பொருள் சேகரிப்பாளர்கள், அருங்காட்சியகங்கள், தனிநபர்கள் என பலர் பொருட்களின் பழமை, பணமதிப்பு காரணமாக வாங்குகின்றனர். ஆனால் கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் வழிபாட்டிலுள்ள சிலைகள் ஏலத்திற்கு வராது. ஆனால் நம் நாட்டில் வழிபாட்டில் இருக்கும் சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் அதற்கான வணிகர்கள், டீலர்கள், ஏஜன்சிகள் உள்ளனர். அதன்மூலம் பல வழிகளில் சிலைகளைக் கடத்த ஆரம்பித்தனர். நான்கு மில்லியன் டாலருக்குக்கூட நமது சிலைகள் விற்கப்படுகின்றன.

கலைப்பொருள் சேகரிக்கும் ஆர்வம் ஒன்று; ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ஆகச் செய்வது மற்றொன்று. அதாவது கலைப்பொருளை வாங்கி ஐந்து வருடத்திற்குப் பின்னர் பலமடங்கு விலையில் விற்பது. இதைச் சில மியூசியங்களே ஊக்குவிக்கின்றன. காரணம், மியூசியம் கலைப்பொருளை வாங்கினால் சில கட்டுப்பாடுகள், விதிகள், வரிகள் உள்ளன. ஆனால் அன்பளிப்பாகக் கிடைத்தால் வரி செலுத்தத் தேவையில்லை. அதனால் மியூசியங்களின் ஊக்குவிப்பில் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் இவற்றை வாங்கி, தம்மிடமே வைத்துக்கொண்டு, பின்னால் விற்கின்றனர் அல்லது அன்பளிப்பாக அளிக்கின்றனர். கொடுப்பவர்களுக்கு 40 சதவீதம்வரை வரிவிலக்கு கிடைக்கும். இப்படிப் பல பொருளாதாரக் காரணங்கள் இவற்றின் பின்னால் இருக்கின்றன. அமெரிக்காவில் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றனர். இதெல்லாம் ஒருவித நவீனமுறைத் திருட்டு.

கே: எங்கெங்கெல்லாம் நமது சிலைகள் இருக்கின்றன, அவற்றை மீட்க நாம் செய்ய வேண்டியது என்ன?
ப: பல நாடுகளில் நமது சிலைகள் இருக்கின்றன. சிங்கப்பூரில், ஒஹையோவில், ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவின் பல மியூசியங்களில் இருக்கின்றன. அவற்றைப் படம் எடுத்து, எந்த ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஒப்பீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒஹையோ மியூசியத்தில் நமது சிலைகள் இருக்கின்றன என்பது தெரிந்ததும், அவர்களுக்கு ஜூலை 21, 2013ல் ஆதாரங்களுடன் தெரிவித்தோம். உடனே அவர்கள் இந்தியன் எம்பஸிக்குக் கடிதம் எழுதினர். அங்கிருந்து மூன்று மாதங்கள்வரை பதில் வரவில்லை. ஃபிப்ரவரியில் இந்திய தூதருக்கு எழுதினர். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. நாங்கள் மீடியா மூலம் அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அவர்கள் கடைசியில், மீடியாக்களை அழைத்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதங்களை வெளியிட்டு, "இந்திய அரசாங்கத்திற்கே இது குறித்து அக்கறையில்லை. நாங்கள் என்ன செய்வது?" என்று தெரிவித்துவிட்டனர். நாங்கள் சிலையை திருப்பித் தரத் தயாராக இருக்கிறோம். உங்கள் அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னமும் அமெரிக்காவில்தான் அந்தச் சிலை இருக்கிறது. இதேபோல் சிங்கப்பூரில் உள்ள சிலை திருட்டுச் சிலை என்று தெரிவித்தவுடன் உடனே டிஸ்ப்ளேயில் இருந்து எடுத்து விட்டார்கள். ஆனால் இங்கிருந்து யாருமே அது குறித்து அக்கறை எடுத்து திரும்பக் கேட்காததால் அந்தச் சிலையை திரும்ப டிஸ்ப்ளேயில் வைத்து விட்டார்கள்.

அதுபோல ஒரிஸ்ஸா மாநிலத்தின் பரூத் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் இருக்கும் யக்ஷியின் ஸ்தூபம் அமெரிக்க கஸ்டம்ஸின் கைவசம் இருக்கின்றது. அதன் சர்வதேச மதிப்பு 50 மில்லியன் டாலர். அது இந்தியாவைச் சேர்ந்ததுதான் என்பதற்கான பட ஆதாரங்களை மகாராஷ்டிராவில் இருக்கும் எங்கள் நண்பர்கள் மூலம் கண்டுபிடித்து அமெரிக்கக் கஸ்டம்ஸூக்கு அனுப்பினோம். அதனை ஒரிஸாவில் சிலர் பாரம்பரிய குலதெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதைத் தமது பாரம்பரியச் சொத்தாக 1978ல் படத்துடன் ரிஜிஸ்டரும் செய்திருக்கிறார்கள். 2004ல் அதை வீடு புகுந்து திருடிச் சென்றுவிட்டார்கள். அந்த ரிஜிஸ்டர் செய்த நகல், அதன் படம், திருட்டு நடந்ததற்கான F.I.R. நகல் என எல்லாமும் எடுத்துக் கொடுத்தாகிவிட்டது. மூன்று வருடம் ஆகிறது. நமது அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்கா திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால் நம்மவர்கள் வாங்கிக் கொண்டுவரத் தயாராக இல்லை. இந்தியாவைப் பொருத்தவரை இதுமாதிரி கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பத்தூர் நடராஜரைக் கூட அந்தப்பீடத்தின் அடியில் இருந்த கறையான் மண்ணை ஒப்பிட்டுத்தான் நம்முடையதென்று நிரூபிக்கமுடிந்தது. அதுபோல சிவபுரம் நடராஜர் சிலை மீட்பதிலும் பல சிக்கல்கள்.



கே: ஓ. என்ன அது?
ப: 1956ல் நடந்த சம்பவம் அது. சிவபுரத்தில் மண்ணைத் தோண்டும்போது மொத்தம் ஆறு சிலைகள் கிடைத்தன. ஒரு நடராஜர், ஒரு சோமாஸ்கந்தர், ஒரு சம்பந்தர், ஒரு பிள்ளையார், இரண்டு அம்பாள் சிலைகள் கிடைத்தன. அதை கலெக்டர் மியூசியத்துக்குக் கொடுக்காமல் அந்தக் கோயிலுக்கே கொடுத்து விட்டார். ஊர் மக்கள் அதை க்ளீன் செய்ய ஒரு ஸ்தபதியிடம் கொடுத்து விட்டனர். ஸ்தபதி அதற்கு டூப்ளிகேட் செய்து அங்கே வைத்து விட்டார். ஒரிஜினல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டது. 1965ல் பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டக்ளஸ் பாரெட் சிவபுரம் வந்து பார்த்து விட்டு "இவையெல்லாம் நகல்கள்" என்று கூறியதுடன், Early Chola Bronzes என்ற தனது புத்தகத்திலும், இவையெல்லாம் நகல்கள், ஒரிஜினல் பாம்பேயில் ஒரு டீலரிடம் இருக்கிறது, நானே அதைப் பார்த்தேன் என்றும் எழுதிவிட்டார். அந்தப் புத்தகம் வந்து ஆறுமாதம் கழித்து நம்மவர்கள் பம்பாய்க்குப் போனார்கள். அதற்குள் சிலை அமெரிக்காவிற்குப் போய்விட்டது.

அமெரிக்காவில் நார்ட்டன் சைமன் என்பவரது மியூசியம் புகழ்பெற்றது. அவர் இந்த நடராஜர் சிலையை வாங்கி இருக்கிறார். சில ஆண்டுகள் கழித்து இதனை க்ளீன்செய்ய அவர் லண்டன் அனுப்பியபோதுதான் சிலைபற்றிய தகவல் வெளிவந்தது. இந்திய அரசு அச்சிலையை திருப்பிக் கொடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தது. நார்டன் சைமன் ஃபவுண்டேஷனோ தாங்கள் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து அதை வாங்கியதாகவும் இந்தியாவிற்கு நடராஜர் சிலையின்மீது எந்த உரிமையும் இல்லையெனக் கூறி, திருப்பித்தர மறுத்தது.

சென்னை மியூசியத்தின் மேற்பார்வையாளரான பி.ஆர். ஸ்ரீனிவாசன் என்பவர் 1963ல் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அவர் அதில் ஒரிஜினல் நடராஜரையும், சோமாஸ்கந்தரையும் படம் பிடித்திருந்தார். அவர் படம் எடுத்தது 1955ல். அது புத்தகமாக 1963ல் வெளியானது. அந்தப் படங்களையும், நார்டன் சைமன் மியூசியத்தின் நடராஜரையும் ஒப்பிட்டதில் அந்தச் சிலை நம்முடையதுதான் என்பது தெளிவாயிற்று. இறுதியில் நார்டன் சைமன் ஃபவுண்டேஷனும் இந்திய அரசும் கோர்ட்டுக்கு வெளியே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. முதலாவது நடராஜர் சிலையை பொதுவான மியூசியத்தில் அமெரிக்காவில் காட்சிப் பொருளாக வைக்கலாம். அதன்பிறகு இந்தியாவிற்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அதற்காக இந்திய அரசு பணம் எதுவும் கொடுக்காது. இரண்டாவது 1972ல் இருந்து ஒரு வருடத்திற்கு எந்த இந்தியக் கலைப்பொருளையும் அது இந்தியாவை விட்டு வெளியே இருக்கும் பட்சத்தில் வாங்கலாம் என்று இருந்தது. இந்த விதியை ஏன் சேர்த்தார்கள், எதற்குச் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை.

கிட்டத்தட்ட 28 செப்புத் திருமேனிகள் நார்டன் சைமனிடம் இருப்பது தெரிய வந்தது. இதுதவிர நிறைய இந்திய கலைபொருட்கள் அவர்களிடம் இருந்தன. அங்கே திருட்டுப் போன சோமாஸ்கந்தர் சிலையும் இருந்தது. அதை பி.ஆர்.ஸ்ரீனிவாசனின் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரிஜினல் சிலை அது என்பது தெரிந்தது. இதே நடராஜர் சிலை வாங்கப்பட்டபோதுதான் இதுவும் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை மீட்க அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல; "All accused arrested and convicted. There is no information about the remaining idols" என்று சொல்லி வழக்கை முடித்து விட்டது. நடராஜர் சிலை இந்தியாவிற்குத் திரும்பி வந்துவிட்டது. ஆனால் மற்ற நான்கு சிலைகளும் (பிள்ளையார், ஞானசம்பந்தர், இரண்டு அம்பாள்) இன்னமும் அங்கேயேதான் உள்ளன. அவை மட்டுமல்ல; இன்னமும் பல சிலைகள் அங்கே இருக்கின்றன. இப்படித்தான் பல இடங்களிலும் ஒரே ஒரு சிலை மட்டும் மீட்கப்பட்டு மற்றச் சிலைகள் அங்கேயேதான் உள்ளன. அவற்றை மீட்க யாரும் முயற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

கே: தமிழகத்தில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு என்ற ஒன்று இருக்கிறதல்லவா?
ப: ஆமாம். ஆனால் அவர்களுக்கு போதிய சுதந்திரமோ, அதிகாரமோ இல்லை. மேலும் தமிழகத்தில் மட்டுமே அப்படி ஒரு பிரிவு இயங்கி வருகிறது. அதற்குப் போதிய அலுவலர்களோ, நிதி ஆதாரங்களோ கிடையாது. சகதுறைகளின் ஒத்துழைப்பும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால் அவர்களால் சிலைகடத்தல்களின் மீது போதிய கவனம் செலுத்த முடியவில்லை. அமெரிக்காவில் இதுபோன்ற ஆயிரம் பொருட்களை கஸ்டம்ஸ் சீஸ் செய்து வைத்துள்ளனர். அவர்கள் அதனைத் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தியா அதில் ஆர்வம் காட்டவில்லை.

கே: அரசு இதில் ஆர்வம் காட்டாததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ப: இவையெல்லாம் திரும்பி வந்தால் எப்படி இவையெல்லாம் முதலில் வெளியே போனது என்ற கேள்வி வரும். அதனால் அரசியல் ரீதியாக நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் வரும். அதனால்தானோ என்று எனக்குத் தோன்றுகிறது. அரசு முழுமனதோடு தீவிர நடவடிக்கை எடுத்தால் அடுத்த தலைமுறையில் யாரும் சிலைக்கடத்தலில் ஈடுபடமாட்டார்கள். வெளிநாடுகளிலும் வாங்கமாட்டார்கள். சுமார் 35 கோடி ரூபாய்க்கு இந்த நடராஜரை வாங்கினார்கள். இப்படி எத்தனையோ. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிப்பவனை நாம் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறோம். ஆனால் இப்படிக் கொள்ளையடிப்பவர்களைக் கண்டுகொள்ளாமலே இருக்கிறோம்.

கே: மக்களுக்கு இந்த சிலைத்திருட்டுக்கள் பற்றி ஏன் எதுவுமே தெரியவில்லை?
ப: மக்களில் பலர் சொந்த ஊரைவிட்டுப் பிழைப்பிற்காக வெளியே சென்றுவிட்டார்கள். கிராமங்களில் ஆலயங்கள் பாழடைந்து கிடக்கின்றன. மக்கள் கவனமின்மையால் பலவற்றில் சிலைகளைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். French Institute of Pondycherry நிறைய டாகுமெண்ட்டுகள் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் கிட்டத்தட்ட 1 லட்சம் படங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் வரலாற்றாய்வுகள் நடந்து புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதால் ஓரளவு விழிப்புணர்விருக்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் அப்படி விவரங்கள் கிடையாது. சிலைகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன.

கே: சிலைத் திருட்டுகளைத் தடுப்பது எப்படி?
ப: வாங்குபவர்கள் இருப்பதினால்தான் கடத்துகிறார்கள். பெரிய மியூசியங்கள், உலகின் பெரும்பணக்காரர்கள்தான் வாங்குகிறார்கள். திருட்டுப்பொருள் என்று தெரிந்தேதான் வாங்குகிறார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டு சிலைகள்தான் வந்திருக்கின்றன. வரவேண்டியவை நிறைய. இவை 69-72ல் விற்கப்பட்டதாக பொய்ப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு தைரியமாக வாங்கக் காரணம், இந்தியா கண்டுகொள்ளப்போவதில்லை, ஏதாவதொரு பேப்பரைக் கொடுத்தால் போதும், பேசாமல் இருந்துவிடுவார்கள் என்ற அலட்சியம். இந்த எண்ணத்தைத்தான் நாங்கள் மாற்றியிருக்கிறோம். இதை ஒரு இயக்கமாக எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட அரசாங்கங்களை, மீடியாக்களைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் இரண்டு சிலைகள் திரும்பி வந்திருக்கின்றன சிங்கப்பூர் மியூசியத்தில் இருக்கும் பார்வதி, ஒஹையோவின் டோல்டோ அருங்காட்சியகத்தில் இருக்கும் விநாயகர் என கிட்டத்தட்ட 80 சிலைகளை நாங்கள் அடையாளம் காட்டியிருக்கிறோம். இவற்றையும் திருப்பிக் கொண்டுவர வேண்டும்.

அதே சமயம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் சிலைகள் கோயிலுக்குப் போவதில்லை. அவற்றை குடோனில் சிலைகளோடு சிலைகளாக வைத்துள்ளார்கள். லண்டன் கோர்ட்டில் வாதாடும்போது இந்தச் சிலையை எங்கே வைப்பீர்கள் என்று கேட்டதற்கு 'நாங்கள் கோயிலில் வைப்போம்' என்று சொல்லிவிட்டு, இங்கே வந்ததும் அதை குடோனில் போட்டு விட்டார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஸ்ரீபுரந்தன் சிலையும் குடோனில்தான் உள்ளது. பாதுகாப்பாக வைக்கிறோம் என்ற பெயரில் குடோனில் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அபத்தம்.

கே: சிலைகளை மீட்க என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
ப: ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டிடம் நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன. நாம் அந்தப் படத்தின் பெரிதுபடுத்தப்பட்ட பிரதியை வாங்கி, அது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரத்தைச் சேகரித்து, அந்தச் சிலை அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரண்டாவது அங்கே இருப்பது அதே சிலைதானா என்பதைக் கண்டறிய வேண்டும். சிலை இல்லாவிட்டால் எங்கே போயிற்று என்று தேடவேண்டும். இவையெல்லாம் பல குழுக்கள் இணைந்து செய்யவேண்டிய பணிகள். சிலைகளைத் திரும்பக் கொண்டுவருவது ஒருபுறம், இருக்கும் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுவிடக் கூடாதென்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். அதற்காகச் சில திட்டங்களையும் கைவசம் வைத்திருக்கிறோம்.

கே: என்ன அது?
ப: முதலில் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிலைகளை அலங்காரம் ஏதுமில்லாமல் படமெடுக்க வேண்டும். ஒரு பிரதியைச் சேகரிப்பில் வைத்துக்கொண்டு மற்றொரு பிரதியை மையக்காப்பகம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு அனுப்பிவிட வேண்டும். இரண்டாவதாக, பல கோயில்களில் செப்புத்திருமேனிகள் அவை குடோனில் இருக்கின்றன. விழாக்களின்போது எடுத்து வந்து, விழா முடிந்ததும் மீண்டும் அங்கே வைத்துவிடுகிறார்கள். அவற்றிற்கு பெயிண்டில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள்தான் அடையாளம். சிலையை மாற்றி வேறொரு சிலையை வைத்து அதே பெயிண்டைக் கொண்டு எழுதினால் விஷயம் தெரியாதவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதாவது 001 என்ற சிலை வெளியே போயிருக்கிறதா, அதே 001 திரும்ப வந்துவிட்டதா அவ்வளவுதான். வெறும் எண்ணிக்கைதான் அங்கே கணக்கு. இந்த முறையை மாற்ற வேண்டும். அவற்றை முறையாக ஆவணப்படுத்த வேண்டும். மூன்றாவது சிலையின் அடிப்பாகத்தில் ஏதேனும் அந்தச்சிலை பற்றிய குறிப்பு இருந்தால் அவற்றை யாரும் வாங்குவதில்லை. ஆகவே சிலைகளின் மீது நாம் அந்தச் சிலை எந்த கோயிலைச் சேர்ந்தது, என்ன சிலை என்பதுபோன்ற குறிப்புகளைப் பதிந்துவிட வேண்டும்.

சிலைக் கடத்தலைத் தடுக்க முக்கியமான வழி ஒன்று உண்டு. நம் மியூசியங்களில் இருக்கும் சிலைகளை ஒரு நீண்டநாள் ஒப்பந்தத்தில் பத்து வருடம் இருபது வருடம் என்ற கணக்கில் வெளிநாட்டு மியூசியங்களுக்கு வாடகைக்குக் கொடுக்கலாம். பத்து வருடம் கழித்து அதை வாங்கிக்கொண்டு விட்டு வேறொரு சிலையைக் கொடுக்கலாம். பத்தாயிரம் மியூசியங்கள் கேட்டாலும் கொடுக்கக்கூடிய அளவிற்கு நம்மிடம் சிலைகள் இருக்கின்றன. பூஜையில் இல்லாத, குடோனில் வைக்கப்பட்ட இந்தச் சிலைகளை வாடகைக்கு விடுவதன்மூலம் வெளிநாட்டு மியூசியங்களுக்கும் லாபம், நமக்கும் வருமானம். 35 கோடி கொடுத்து ஒரு சிலையை வாங்குகிறான் என்றால் அது அவ்வளவு எளிதில் கிடைக்காத பொருள் என்பதால்தான். அதை எளிதில், அதிகாரபூர்வமாக, குறைந்த செலவில் கிடைக்கும் என்றால் ஏன் ஒருவர் திருட்டுப்பொருளை வாங்கப் போகிறார்? அரசாங்கம் யோசிக்க வேண்டும்.

கே: பழைய ஆலயங்களெல்லாம் சிதிலமடைந்து கொண்டிருக்க புதிது புதிதாக ஆலயங்கள் தேவைதானா?
ப: ஆயிரக்கணக்கான கோயில்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை பரமாரிக்காமல், புதிதாகக் கோவில் கட்டுவதில் அர்த்தமே இல்லை. பழைய கோயில்களைப் புனரமைப்பது அது இருக்கும் ஊருக்கும் நன்மையைத் தரும். அருகிக்கொண்டிருக்கும் சிற்பக் கலைக்கும், ஸ்தபதிகளுக்கும் வேலை கொடுத்த மாதிரி இருக்கும்.

கே: இன்றைய இளைஞர்கள் நமது கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்களா?
ப: நிச்சயமாக. குறிப்பாக ஐ.டி. துறையிலிருக்கும் பல இளைஞர்கள் மிக ஆர்வமாக இருக்கின்றனர். மதுரையில் அ. முத்துக்கிருஷ்ணன், 'பசுமை நடை' என்ற அமைப்பை நடத்திவருகிறார். மாதந்தோறும் மதுரை மாவட்டத்திலுள்ள தொல்லியல் சிறப்புமிகுந்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அதில், இளைஞர்கள் மட்டுமின்றி, கிராமத்தினர்கூடப் பங்களிக்கிறார்கள். பல இளைஞர்கள் உழவாரப் பணி, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி, இயற்கை விவசாயம் எனப் பலவழிகளில் செயல்படுகின்றனர். இளைஞர்கள்மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மதுரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அப்போது கடத்தல்கள் தடுக்கப்படும். மக்களுக்கு நம்மிடமுள்ள சிறப்பு என்னவென்பது தெரியவரும். அதனைப் பாதுகாக்கும் ஆர்வமும் அக்கறையும் வரும்.

கே: பாழடைந்த கோயில்களில் கேட்பாரற்று இருப்பதைவிட அமெரிக்க நகரங்களில் சிலைகள் பாதுகாப்பாக இருப்பது நல்லதுதானே என்று சிலர் கருதுகிறார்களே!
ப: ஆம். என்னிடமே அப்படி விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள். அவர்களுக்கு என் பதில் என்னவென்றால் இது நம்முடைய சொத்து கிடையாது. இவை நம் முன்னோர்களில் யாரோ ஒரு ராஜா சொல்லி, யாரோ ஒரு ஸ்தபதி செய்து வழிபாடு செய்வதற்காக ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மக்கள் வழிபடுவதற்காகவே ஆலயங்களும் சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் அமைக்கப்பட்டனவே தவிர, சிற்பி தனது கலைத்திறனைக் காட்டுவதற்காக அல்ல. அது அந்தக் கோயிலில்தான் இருக்க வேண்டும். நம் கடமை அதை அந்தக் கோயிலில் வைத்துப் பாதுகாப்பது. இதை ஆஸ்திரேலியாவில் வைக்கலாமா, அமெரிக்காவில் இருக்கலாமா என்ற கேள்விக்கே இடமில்லை. இதை நல்லபடியாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது நம் கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் நமக்கு இவற்றைத் தந்துள்ளனர். நமது அலட்சியத்தாலும், அக்கறையின்மையாலும் நமது செல்வ வளங்களைப் படிப்படியாக இழந்து வருகிறோம்.

இந்தச் சிலைகளை வெறும் கலைப்பொருளாகப் பார்ப்பதே தவறு. இவற்றை மன்னர்கள் வழிபாடு செய்வதற்கான திருமேனியாகத்தான் உருவாக்கி ஆலயங்களுக்கு அளித்திருக்கிறார்கள். அதைக் கடத்திக்கொண்டு போய் மியூசியங்களில் ஏ.சி. அறையில் வைத்து, பார்ப்பதற்கு 50 பவுண்ட், 20 டாலர் என்று கட்டணம் வாங்கி, ஒளிவெள்ளம் பாய்ச்சி நிழல்விழும் அழகைப் பார்க்க நன்றாக இருக்கலாம். ஆனால் அந்தச் சிலை உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்லவே! சொல்லப்போனால் பிற நாடுகளில் சிலைகள் மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் நமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பின் நமது அரசுகள் ஆளும்போதுதான் திருடப்படுகின்றன. காரணம், சிலைகளை தெய்வமாகப் பார்க்காமல் வெறும் கல்லாகப் பார்க்கும் போக்கு அதிகரித்ததுதான்.

கே: Poetryinstone தவிர நீங்கள் செய்யும் பிற பணிகள் யாவை?
ப: ipp.org.in என்ற வலைத் தளத்தை நடத்திவருகிறோம். இந்தியாவில் எங்கு சிலைகள் காணாமல் போனாலும் எங்களுக்குத் தகவல் கொடுங்கள், உங்களிடம் அதற்கான படம் இல்லை என்றால் நாங்கள் அதைத் தேடிப் பார்க்கிறோம். 'பொயட்ரி இன் ஸ்டோன்' தளத்தில் கோவில்பற்றிப் படிக்கலாம். ஆனால் India Pride Project என்பது சிலைத் திருட்டிற்காக FIR பதிவு செய்வதற்கு. இந்தியாவில் என்ன பிரச்சனை என்றால் படம் இருந்தால்தான் FIR ரிஜிஸ்டர் செய்வார்கள். பல கோயில்களில் படம் எடுத்தால் சுவாமிக்கு பவர் போய்விடும் என்று நினைப்பதால் படமெடுக்க முடியாத சூழல். மக்களிடம் சிலைத் திருட்டுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை இந்தத் தளத்தின் மூலம் செய்து வருகிறோம்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: அரசாங்கத்தின் கவனத்தை இந்தக் கொள்ளையின் மீது எப்படித் திருப்புவது, அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது? தகவலறியும் உரிமையில் (RTI) போடவேண்டுமா, ஒரு பொதுநல வழக்குப் போடவேண்டுமா என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்தியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் போடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவர்களிடம் இருக்கும் நமது கலைப்பொருட்களை அதன்மூலம் எளிதில் திரும்பக் கொண்டு வந்துவிட முடியும். ஏற்கனவே எகிப்து, இத்தாலி, கம்போடியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டு விட்டார்கள். அமெரிக்க அரசு இதற்குத் தயாராக இருக்கிறது. நாம்தான் தயாராக வேண்டும்.

இரண்டாவது மக்களிடையே சிலைகடத்தல் பற்றி விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும். திருடுபோன சிலைகள் எல்லாமே வரவேண்டும். கணக்குக்கு ஒன்று வந்ததும் கேஸை மூடக்கூடாது. மூன்றாவது, பழம்பொருட்கள் பாதுகாப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்போது 100 வருஷத்திற்கு மேற்பட்ட பொருள் இருந்தால் அதனை ரிஜிஸ்டர் செய்யவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஒரு பொருள் 100 வருஷத்திற்கு மேற்பட்ட பொருள் என்று யார் பரிசீலித்துச் சான்றிதழ் தருவது? இதில் எல்லாம் மாற்றம் வேண்டும். அடுத்தபடியாக பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் சினிமாவே உலகம் என்றிருப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

அடுத்தபடியாக கார்ப்பொரேட்ஸ் இவற்றில் ஆர்வம் காட்டவேண்டும். ஒரு 300 ரூபாய் துணியை கடையிலிருந்து பணம்கொடுக்காமல் வெளியே எடுத்துச்சென்றால் மணியடித்து அதை அறிவிக்கிறது. அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நம் சிலைகள் திருடப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போதும் அதேமாதிரி எச்சரிக்கை அலாரம் அடிக்கும்படிச் செய்யமுடியும். ட்ராக்கிங் டெக்னாலஜி மூலம் இதனைச் செய்யமுடியும். இதில் திறன்வாய்ந்தவர்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

சர்ச்சைக்குரிய விஷயமாயிற்றே என்று நழுவலோ தயக்கமோ இல்லாமல் வெளிப்படையாகப் பேசுகிறார். தன்னலமற்ற அவர்தம் முயற்சிகளுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


சட்டபூர்வச் சிலைகடத்தல்!
புதிய சிலையைச் செய்து அதற்கு சர்டிஃபிகேட் வாங்கி, அதற்குப் பதிலாக பழைய சிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அப்படித்தான் பல கலைப்பொருட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. ஒரிஜினல் வெளியே சென்றுவிடும். டூப்ளிகேட் நம்மிடத்தே இருக்கும். இதுவொரு டெக்னிக்; இதுமாதிரிப் பல உத்திகள். சிலைகள்தான் என்றில்லை, தூண்கள், அதிஷ்டானங்கள், சிகரங்கள் எனப் பலவும் garden furniture என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இவற்றை அனுப்பப் பல நெட்வொர்க்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சட்டத்துக்குட்பட்டவை போலவே இவை போகின்றன. 2002 முதல் இன்றுவரை சுமார் 15000 சிலைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம். அவற்றின் மதிப்பு பல மில்லியன் டாலர், இந்திய ரூபாயில் பல்லாயிரம் கோடி! அதுபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருக்கும் இந்தியத் தொல்பொருள் கழகத்தின் (ASI site) மியூசியத்திலிருந்து நிறைய திருட்டுப் போயிருக்கிறது என்று நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். அவர்களால் ஒரு சிலையைக்கூட அது எந்த நாட்டில் இருக்கிறது என்று அறியமுடியவில்லை. 1976-2001வரை ASI 16 சிலைகளை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால் 2001 முதல் இன்றுவரை எதுவும் மீட்கப்படவில்லை. அவற்றைக் கண்டுபிடித்து இது இங்கே இருக்கிறது என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால் அவர்களோ நான்கு மட்டுமே எங்களது, மற்றவை எங்களதல்ல என்று சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கிறது.

- விஜயகுமார்

*****


தலைமுறை தாண்டிய இயக்கம்
Poetryinstone தளத்தில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் கட்டுரைகள் வெளியாகின்றன. ஆங்கிலத்தில் எழுதுவது நான். தமிழில் எழுதத் தயங்கினேன். விசாகப்பட்டினத்தில் இருக்கும் திவாகர் சார் என்னைத் 'தமிழில் எழுது' என்று ஊக்குவித்தார். என் எழுத்தில் ஏற்படும் தவறுகளையும் இன்றைய நாள்வரை அவர்தான் சரி செய்கிறார். "வெறும் படம் போடாமல் விளக்கமாக எழுது" என்று என்னை ஊக்குவித்தவர் அவர்தான். இதன்மூலம் பலர் நண்பரானார்கள். அவர்கள் எனக்குப் பின்பலமாக இருக்கின்றனர். உலகெங்கும் வசிக்கும் பலர் - இந்தியர் மட்டுமல்ல; பலரும் - இந்தத் தளத்திற்கு கைகொடுத்துள்ளனர். நாங்கள் நன்கொடை வாங்குவதில்லை. வணிகரீதியான விளம்பரங்கள் வெளியிடுவதில்லை. இதில் இடம்பெறும் படங்களுக்கு காபிரைட் போடுவதில்லை. வாட்டர்மார்க் கிடையாது. ஏனென்றால் இந்தச் சிற்பங்களை, ஆலயங்களை உருவாக்கிய முன்னோர்களே தங்கள் கையெழுத்தைப் போடவில்லை. தமக்குரியது என்று சொல்லிக்கொள்ளவில்லை. நான், எனது என்றெல்லாம் ஒருவர் உரிமைகொண்டாட ஆரம்பித்தால் அவரது ஆயுள்காலத்தோடு அது முற்றுப்பெற்றுவிடுகிறது. அப்படியல்லாமல் இதனை ஒரு இயக்கமாகச் செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு.

- விஜயகுமார்

*****


சிலைகளுக்கான தகவல் களஞ்சியம்
வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தமிழகம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து யாத்திரை செல்வோம். இம்முறை மகாராஷ்டிரா 10 நாள் சென்றுவந்தோம். அருண் வெங்கட்ராமன் போன்ற நண்பர்கள் எங்களுடன் வருவார்கள். படம் எடுத்து உதவுவார்கள். ஒரு காமெரா மூட்டையே எங்களுடன் பயணப்படும். இந்தமுறை சுமார் 40000 படங்களாவது எடுத்திருப்போம். அதற்கு முன்னர் பாதாமி, ஹம்பி சென்று வந்தோம். நாங்கள் கோயில்களை முழுமையாகப் படம் எடுத்து அங்குள்ள எல்லாவற்றையும் ஆவணப்படுத்துகிறோம். இணையத்தில் செப்புத் திருமேனிகள் என்பதற்காக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதுபோலக் கற்சிலைகளுக்காக மற்றொரு பக்கம். ஒவ்வொருவரும் அவர்கள் வசிக்கும் பகுதி அருங்காட்சியகங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள நமது செப்புத் திருமேனிகளை, கற்சிலைகளைப் படம்பிடித்துப் பதிவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இன்றைக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலுமுள்ள அருங்காட்சியகங்களில் இருக்கும் திருமேனிகளின் படங்கள் சேகரிப்பில் உள்ளன.

எங்ளுடைய நோக்கம் என்னவென்றால் ஒரு சிற்பம் பற்றிய தகவல் வேண்டுமென்றால் அது உடனடியாகக் கிடைக்க வேண்டும். அந்த வகையில் ஆவணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதாவது பாண்டியன் எட்டாம் நூற்றாண்டு என்று தேடினால் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்காலக் கோயில்கள் அனைத்தும் வந்துவிடும். அதில் சிவன் வேண்டுமென்றால் சிவன், விஷ்ணு என்றால் விஷ்ணு என்று தேடினால் கிடைக்கும். இந்தப் பணிகளைத்தான் செய்துவருகிறோம்.

- விஜயகுமார்

*****


சிலை திருடுபோவதே தெரிவதில்லை
செப்புத் திருமேனிகளுக்கு விலை அதிகம். ஆனால் அவற்றைக் கண்டுபிடிப்பது எளிது. ஆனால் தொலைந்த கற்சிலைகளைக் கண்டுபிடிப்பது கடினம். ஏனென்றால் உலோகத்தை டேட் செய்வதுபோல கற்சிலைகளை டேட் செய்வது மிகமிகக் கடினம். டேட் செய்பவர்களும் மிகக்குறைவு. புதிய கற்சிலைகளுக்கும் பழைய கற்சிலைகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பதும் கஷ்டம். ஸ்ரீபுரந்தனில் எடுத்த 28 மொத்த சிலைகளின் எடை 17 டன். சோமாஸ்கந்தர், நடராஜர் எல்லாம் 400, 450 கிலோ. இருபதுபேர் ஒரு லாரியைக் கொண்டுவந்து அதில் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். கற்சிலைகள் இன்னும் எடையதிகம். 5 டன், 7 டன் எடையுள்ள சிலைகள் இருக்கின்றன. சுத்தமல்லி சிலைகள் எல்லாவற்றிற்கும் அதன் அடிப்பகுதியில் 'சுத்தமல்லி' என்ற பெயர் இருந்தது. ஆனால் ஸ்ரீபுரந்தன் கோயிலில் எதுவுமே இல்லை. சுத்தமல்லி ஆலயம் முற்றிலும் இடிந்துபோனதால் அவற்றை ஸ்ரீபுரந்தனில் கொண்டு வைத்திருந்தார்கள். இரண்டு கோயில் சிலைகளையும் ஒன்றாகத் தூக்கிக்கொண்டு போய்விட்டாகள். எது எந்தக் கோயில் சிலை என்பது கடத்தல்காரர்களுக்குத் தெரியாது. ஆனால் மியூசியம் வாங்கியது எல்லாம் ஸ்ரீபுரந்தன் சிலைகள்தான். சுத்தமல்லியை வாங்கவில்லை. காரணம், அவற்றின் பீடத்தில் அடையாளம் எழுதியிருந்ததுதான்.

சமீபத்தில் ஒரு செய்தித்தாளில் 1950ல் திருடுபோன சிலைகளின் படத்தைப் போட்டு இவை இப்போதுதான் திருடுபோயின; தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25000 பரிசு என்று அறிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் நமது சிலைகள் திருடுபோன விஷயம் நமக்கே தெரியாது என்பதை நாம் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம் என்றாகிறது. இதையெல்லாம் தகுந்த நபர்களுடன் ஆலோசித்துப் பின்னர் அறிவிக்கலாம். அதற்கான துறைரீதியான அனுபவம் வாய்ந்த ஆட்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் ஏனோ அப்படிச் செய்வதில்லை.

- விஜயகுமார்
Share: 




© Copyright 2020 Tamilonline