|
தென்றல் பேசுகிறது.... |
|
- |பிப்ரவரி 2015| |
|
|
|
|
|
ஜனவரி 23ம் நாளன்று தொடங்கிய வாரத்தை 'நமஸ்தே ஒபாமா' வாரமாகக் குறிப்பிடுமளவுக்கு அதிபரின் இந்திய விஜயம் பெரும் வெற்றிகரமானதாகக் கருதப்படுகிறது. அவருக்கும் பிரதமர் மோதிக்குமிடையே இருக்கும் 'பெர்சனல் கெமிஸ்ட்ரி', ஒபாமா வந்த விமானத்தின் படிக்கட்டருகேயே சென்று மோதி கட்டியணைத்து வரவேற்றதிலேயே புலப்பட்டது. பதவிக்காலத்தில் இரண்டுமுறை இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபரும் ஒபாமாதான். அத்தோடு, மீண்டும் என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வருவேன் என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது. அவர் வருகையினால் பொதுவாக இரண்டு நாடுகளுக்குமிடையே வணிக உறவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதென்றாலும், இந்தியாவில் பொதுநிலை அணுச்சக்தித் திட்டத்துக்கு (Civil Nuclear Program) அமெரிக்கா உதவத் தீர்மானித்திருப்பதை ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதலாம். சீனாவின் வணிக, அரசியல், பொருளாதார விரிவாக்கப் போக்குகளுக்கு முட்டுக்கட்டை போடும் உள்நோக்கம் இருப்பதும் உண்மைதான். சூரியசக்தி உட்பட முக்கியமான பல துறைகளில் இருநாடுகளிடையே கூட்டுறவுக்கு அதிபரின் இந்த விஜயம் உந்துசக்தியாக அமையப்போவது நிச்சயம். உலகின் இரண்டு பெரிய மக்களாட்சி நாடுகள் கைகோப்பதால் நல்ல பலன்கள் விளையுமென எதிர்பார்க்கலாம்.
*****
தமிழரின் ஒப்பற்ற வாழ்நெறி நூலான திருக்குறளின் குஜராத்தி பதிப்பை ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்று பிரதமர் மோதி வெளியிட்டார். "இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அது பொருந்துவதாகவும் மதிப்புக்குரியதாகவும் இருக்கிறது. நாடு, தலைவர், சமுதாயம், மொழி, மதம் அல்லது ஜாதி குறித்த எந்தக் குறிப்பும் இதில் இல்லாமையால்தான் இது உலகப் பொதுமறை எனப்படுகிறது" என்று அவர் பேசினார். மத்திய மனிதவளத் துறையின்கீழ் இயங்கும் மத்திய செவ்வியல் தமிழ் கழகம் திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிலும் போட்டிகள் மூலம் இளைய தலைமுறையினரினை குறளைப் பொருளோடு அறியச் செய்வதும், கற்றதன்படி நிற்கச் செய்வதும் இன்றைய பெற்றோரின் கடமையாக இருக்கிறது. தமிழ்ச்சங்கங்கள் இந்த முயற்சிக்குக் கைகொடுப்பது மிகமிக அவசியம். டாலஸின் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும், அதன் ஆதரவோடு விரிகுடாப்பகுதிக் கலைமன்றமும் இந்தப் பணியைச் சில ஆண்டுகளாகச் செய்துவருவது பாராட்டவும் பின்பற்றவும் தக்கது.
***** |
|
அமெரிக்காவில் தமிழ்க்கல்வியை பல்கலைக்கழக அளவில் முன்னெடுத்துச் செல்வதில் பெரும்பங்கு வகித்தவரும், தமிழ் ஏன் செம்மொழியாகக் கருதப்பட வேண்டும் என்பதைச் சரியான வாதங்களுடன் அப்போதைய இந்திய ஜனாதிபதிக்கு எழுதி, தமிழைச் செம்மொழியாக நடுவண் அரசு அங்கீகரிப்பதில் முக்கியப்பங்கு ஆற்றியவருமான பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' கொடுத்திருப்பது வரவேற்புக்குரியது. எண்ணற்ற அவரது தமிழ் மாணவர்கள் அமெரிக்காவிலும் பிறவிடங்களிலும் தமிழ் மற்றும் பிறமொழி ஆராய்ச்சியிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். பேராசிரியரின் விருது குறித்த சிறப்புப் பார்வையும் அவரது மாணவர்களின் பாராட்டு மழையும் இந்த இதழில் இடம்பெறுகின்றன. இதுகுறித்துப் பாராட்டத் தென்றல் அவரை அழைத்தபோது, "தமிழுக்குப் பணி செய்வதே ஆனந்தம். விருது வருவதெல்லாம் பின்னால்தான்" என்றார் பேரா. ஹார்ட். சிலைகடத்தல் ஏதோ சினிமாக்கதை என்றல்லாமல், அவற்றை இனங்காணுவதையும் இந்தியாவுக்கு மீட்பதையும் ஒரு தொண்டாகச் செய்துவரும் 'பொயட்ரி இன் ஸ்டோன்' விஜயகுமார் அவர்களுடனான நேர்காணல் ஒரு துப்பறியும் நாவல்போல விறுவிறுப்பானது. டிசம்பர் மாதம் சென்னை இசைமழையில் பங்கேற்றுப் பொழிந்த அமெரிக்கக் கலைமேகங்கள் குறித்த கட்டுரையும் பெருமிதம் தருவது. கவிதை, கதை, சமையல், பயணம் என்று வழக்கமான அறுசுவை விருந்தும் உண்டு.
தென்றல் வாசகர்களுக்குச் சிவராத்திரி, வேலன்டைன்ஸ் நாள் வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
பிப்ரவரி 2015 |
|
|
|
|
|
|
|