|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜனவரி 2015||(1 Comment) |
|
|
|
|
|
அதிபர் ஒபாமா தனது முக்கியமான வாக்குறுதி ஒன்றைச் சிறப்பாக நிறைவேற்றிவிட்டார். இராக்கிலும் ஆஃப்கனிஸ்தானத்திலும் இருந்த அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றுவிட்டார். அவரே கூறியிருப்பது போல, அவர் பதவியேற்றபோது இந்த இரண்டு நாடுகளிலும் 180,000 அமெரிக்கத் துருப்புகள் இருந்தன. இப்போது 15,000க்கும் குறைவு! 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட துருப்புக்கள் தாயகம் திரும்பிவிட்டனர்.
மற்றொரு முக்கியமான வளர்ச்சியையும் குறிப்பிட்டாக வேண்டும். அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே தனியார் துறையில் 6.7 மில்லியன் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. அதிபர் புஷ்ஷின் காலத்தில் 3.1 மில்லியன் மட்டுமே. 2014 நவம்பர் மாதத்தில் 321,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பில் இத்தனை வளர்ச்சி 1999ம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் மிக அதிகம் என்கிறது புள்ளிவிவரம். சென்ற ஆண்டைவிடப் பணியின்மை 7% குறைந்துள்ளதும் கவனிக்கத் தக்கது.
சென்ற நான்காண்டுகளில் முதன்முறையாக கேஸொலீன் விலை 3 டாலருக்கும் கீழே இறங்கியுள்ளதும் புத்தாண்டை உற்சாகத்தோடு வரவேற்கச் செய்கிறது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக உற்பத்தி நிறுவனங்களின் எரிபொருள் செலவு குறையும்; அது ஊதிய உயர்வாக மாறும். 2015ல் மக்களின் பணப்பையில் நூறு பில்லியன் டாலர் எஞ்சிநிற்கும் என்கிறது ஒரு கணிப்பு. அது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இவை யாவுமே 2015 நல்ல ஆண்டாக விடியும் என்பதற்குக் கட்டியம் கூறுவன!
*****
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஏதோ இந்தியாவின் சவலைக் குழந்தைபோலவும், அங்கிருப்பவர்கள் எப்போது பிரிந்து போகலாம் என்று காத்திருந்தது போலவும் ஒரு பிரமையை இதுவரை ஏற்படுத்தி வந்தவர்கள் ஏமாந்து போனார்கள். அங்கே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் தவித்தபோது இந்திய ராணுவம் கணமும் தாமதியாமலும் தயங்காமலும் மீட்பு வேலையைச் செய்து அவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பிரதமர் மோதியின் வளர்ச்சிநோக்கு நிறைந்த பிரசாரமும், பாகிஸ்தானில் தாலிபான் பள்ளிக்குழந்தைகளைக் கொன்று குவித்ததும்கூட இந்த மாநிலச் சகோதர சகோதரிகளின் கண்களைத் திறந்திருக்கலாம். ஜம்மு காஷ்மீர் மக்கள், எல்லா மிரட்டல்களையும் மீறி, உயிருக்கும் அஞ்சாமல், பெரும் எண்ணிக்கையில் வாக்களித்து இந்தியாவின் தேசியக்கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இது நல்லதொரு தொடக்கம்.
***** |
|
'ஹரிமொழி' ஹரி கிருஷ்ணனின் வெவ்வேறு சுவாரசியமான முகங்களை இந்த இதழ் நேர்காணல் வெளிக்கொணருகிறது. பாரதியையும் கம்பனையும் பிற புராண இதிகாசங்களையும் அவர் வாசிக்கும் முறை எத்தனை நுணுகியது, மாறுபட்டது என்பதை 'ஹரிமொழி' வாசகர்கள் வியந்து எழுதியதுண்டு. அந்தத் தொடருக்குப் பின்னிருக்கும் மனிதரை இந்த இதழில் வாசகர்கள் சந்திக்கலாம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழரான சுமி சோமாஸ்கந்தா ஜெர்மனி டி.வி.யில் பிரபலம், ஒரு கொலம்பியரைக் கணவராகக் கொண்டவர். இந்த இளம் சாதனையாளரை மற்றொரு நேர்காணலில் கண்டு மகிழலாம். 'அரங்கனும் ஆர்லோவ் வைரமும்' சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்ட வெகு விறுவிறுப்பான கதை. 2015ம் ஆண்டின் இந்த முதல் இதழ் உங்கள் வாழ்வில் வண்ணமூட்ட வந்திருக்கிறது. வாசித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று எங்களுக்கும் சொல்லுங்களேன்!
வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், குடியரசு நாள் வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
ஜனவரி 2015 |
|
|
|
|
|
|
|