Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
ஜெயா பத்மநாபன் எழுதிய Transactions Of Belonging
- அருணா கிருஷ்ணன்|ஆகஸ்டு 2014|
Share:
ஜெயா பத்மநாபன் எழுதி வெளியான முதற் புத்தகம் 'Transactions Of Belonging'. இது இவர் எழுதியுள்ள பன்னிரண்டு ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு. பன்னிரண்டாவது கதையான 'Indian Summer' ஒரு நாடக வடிவில் அமைந்துள்ளது. பெரும்பாலான கதைகள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நிகழ்வதாக அமைந்திருந்தாலும், ஒவ்வொரு கதையும் ஒரு வித்தியாசமான விதத்தில் மனதைத் தொடுகின்றது. நகைச்சுவைக்கும் குறைவில்லை.

சில சமயங்களில் கதையின் கரு - உதாரணமாக 'The Smell of Jasmine', "இப்படியும்கூட நடக்குமா?" என்று நம்மை நினைக்க வைக்கிறது. கல்கத்தாவின் விபசார விடுதியில் வாழ்ந்தாலும் தன் சிந்தனைத் திறனால் மாறுபட்டு நிற்கும் பெண் (Blue Arc); மனைவியை இழந்து மனிதர்கள் உறவாடலின்றி, பரபரப்பான பெருநகரில் வாழ்ந்தாலும் தனிமையில் வாடும் முதியவர் (Strapped for Time); குடிகாரத் தந்தை, அவரை எதிர்த்து நிற்க முடியாமல் அடங்கி அவதிப்படும் தாய் என்னும் சிறிய குடும்பத்தில் வளரும் சிறுவன் (Curtains Drawn); குடியில் தன்னையிழந்த தந்தை, Autism நோயினால் அவதியுறும் தம்பி இவர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டு வேற்றுமத வாலிபனை விரும்பும் இளம்பெண் (Jumble); தந்தை இறந்தபின் தாயுடன் மாமாவின் ஆதரவில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, தலையில் சுமத்தப்பட்ட தம்பியின் வளர்ப்புப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, தனது தாயின் மரணச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளப் போராடும் சிறுமி (The Length of a Breath) என்று விதவிதமான கதாபாத்திரங்கள் நமது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதிக்கின்றனர். அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும், கொந்தளிக்கும் உணர்வுகளையும் நீண்ட நேரம் நினைவில் சுமந்து கொண்டிருப்போம்!

சில எழுத்தாளர்களின் கதை சொல்லும் பாணி, ஆரம்பத்திலிருந்து முடிவுவரை ஒரே நேர்கோடாக அமையும். கதையின் முடிவும் திட்டவட்டமாக அமைந்திருக்கும். ஜெயா பத்மநாபன் இதற்கு விதி விலக்கு. கதை முடிவை வாசகர்களின் யூகத்திற்கு விடும் உத்தியை 'Mustard Seeds' மற்றும் 'His Curls' கதைகளில் கையாண்டிருக்கிறார். இந்தக் காரணத்தாலேயே இவை நம் நினைவில் நிலையாக அமர்கின்றன. தமது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பல Book Reading நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜெயா பத்மநாபன், கதாசிரியர் என்ற முறையில் தாம் எதிர்பார்ப்பதும், இவ்வாறு வாசகர்கள் நினைவில் தமது கதைகள் நிற்பதுதான் என்று கூறுகிறார்.
மனிதர்களின் கடுமையான, கொடுமையான குணாதிசயங்களையே பெரும்பாலான கதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இக்கதைகளும் இதுபோன்ற கதாபாத்திரங்களும் நம்மைச் சுற்றி இருக்கக்கூடும் என்ற எண்ணமே நம்மை வெகுவாகப் பாதிக்கிறது. இவை பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. மனதைத் திணறடிக்கும் உணர்ச்சிகளை அள்ளி வீசுபவை.

'The Little Matter of Fresh Meadows Feces' என்கிற கதையில், கடிதங்கள் மற்றும் டைரிக் குறிப்புகள் மூலம் இந்தியாவில் வாழும் முதிய தலைமுறைக்கும், அமெரிக்காவில் வாழும் இளைய தலைமுறைக்கும் இடையேயான வித்தியாசங்கள், கலாசாரப் பார்வைகள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார். கதை முடியும்போது மெலிதான சோகம் மனதைக் கவ்வுகிறது.

'India Currents' இதழின் ஆசிரியரான ஜெயா பத்மநாபன் நடைமுறை வாழ்க்கையை மிக உன்னிப்பாகக் கவனித்து எழுதுபவர் என்பதை இக்கதைகள் தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய கூர்த்த கவனம் ஒரு எழுத்தாளருக்கு முக்கிய பலம். பத்திரிகைத் தலையங்கம் எழுதுவதில் 2014ம் ஆண்டுக்கான முதலிடத்தை Peninsula Press Club இவருக்கு வழங்கியுள்ளது. Writer's village Award, 3 Katha Award, Lorian Henningway Title ஆகிய விருதுகள் இவரது சிறுகதைகளுக்குக் கிடைத்துள்ளன.

இது அவரது முதல் புத்தகம் என்று சொல்ல முடியாத அளவில் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகின்றது. இவரது புத்தகத்தைப் படிப்பவர்கள் இக்கதைகளை மிகவும் விரும்பலாம் அல்லது வெகுவாக வெறுக்கலாம். ஆனால் கண்டிப்பாக மறந்துவிட முடியாது. கவனிக்கப்பட வேண்டிய இளம் எழுத்தாளர்களில் ஜெயா பத்மநாபனும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. இதை வாங்க

அருணா கிருஷ்ணன்,
சன்னிவேல், கலிஃபோனியா

*****


நூல்: Transactions of Belonging,
ஆசிரியர்: ஜெயா பத்மநாபன்,
பதிப்பாளர்: Platinum Press.
Share: 
© Copyright 2020 Tamilonline