|
கருக்கலைப்பு என்பது பிறக்காத குழந்தையைக் கொல்வது |
|
- மணி மு.மணிவண்ணன்|டிசம்பர் 2005| |
|
|
|
கலி·போர்னியாவில் ஆளுநர் ஆர்னால்டு ஸ்வார்ட்சநெக்கர் விருப்பத்தில் நவம்பரில் நடந்த பரபரப்பான சிறப்புத் தேர்தல் குறிப்பிடத்தக்கது. வாக்காளர்முன் வைக்கப் பட்ட மக்கள் மசோதாக்கள் எல்லாமே தோற்றதில் பலத்த அடி ஆர்னால்டுக்குத் தான். தோல்வியை மிகக் கண்ணியமாக ஏற்றுக் கொண்டு, இதை மக்கள் தனக்குக் கற்பித்த பாடமாக எடுத்துக் கொள்வேன் என்று அவர் சொன்னது பாராட்டுக்குரியது.
மக்கள் மசோதாக்களிலேயே சிக்கலானது கருக்கலைப்பு பற்றிய மசோதா 73. பெற்றோர் அல்லது காப்பாளர் ஆதரவில் வாழும், முதிராத வயதுச் சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்வதைப் பற்றிய அந்த மசோதா, மருத்துவ அவசரநிலை இருந்தா லொழிய, கருக்கலைப்பு செய்வதற்கு 48 மணி நேரம் முன்னதாகப் பெற்றோர் அனுமதி வாங்க வேண்டும் என்றது. முதிராத வயதினருக்கு ஒரு சாதாரண ஆஸ்பிரின் கொடுப்பதற்குக் கூடப் பெற்றோர்கள் அனுமதி வேண்டும்; ஆனால், வாழ்க்கையில் தீராத் தழும்பை ஏற்படுத்தக் கூடிய கருக் கலைப்பைப் பெற்றோர்களுக்குத் தெரியாம லேயே செய்யமுடிவது நியாயமா என்று வாதாடினர் ஒரு சாரார். கருக்கலைப்பு மாத்திரைகளை விழுங்கி விட்டு இறந்து போன கலி·போர்னியச் சிறுமிகளை இவர்கள் சுட்டிக் காட்டினர்.
"கருக்கலைப்பு என்பது கருவுற்ற ஆனால் பிறக்காத குழந்தையைக் கொல்வது" என்ற இந்த மசோதா கருக்கலைப்பு உரிமைக் குழுக்களைப் பயமுறுத்தியது. கருக்கலைப்பைச் சட்ட விரோதமாக்கும் வலதுசாரிகளின் தேசிய முயற்சியின் ஒரு கூறாகவே இதை இடதுசாரிகள் கண்டனர். தொலைக்காட்சி விளம்பரங்களும், செய்திகளும், வீட்டில் வந்து குவிந்த விளம்பரங்களும், தொலை பேசியில் வந்து பதிந்த வேண்டுகோள்களும் மசோதாவின் இரு பக்கத்து வாதங்களையும் அடுக்கின. கலி·போர்னியா தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த மசோதா விளக்கத்தில் இருபக்க வாதங்களும், அவற்றுக்கு மறுப்புரையும், மசோதாவைப் பற்றிய சட்டமன்ற ஆய்வாளர் கட்டுரையும், தேர்வுக்குப் படிக்கவேண்டிய பாடங்களைப் போல் மிரட்டின.
கலி·போர்னியாவின் புதிய வாக்காளர்கள் பலர் கத்தோலிக்கக் கிறித்தவர்களான மெக்சிகன் அமெரிக்கர்கள். மேலும் பலர் பழமைவாத நம்பிக்கையுள்ள பிற நாடு களிலிருந்து வந்து குடியேறியவர்கள். தமிழ் அமெரிக்கர்களிடையும் இந்த மசோதா காரசாரமான விவாதங்களுக்கு வழி வகுத்தது. பெற்றோருக்குக் கட்டாயம் இந்த உரிமை இருக்க வேண்டும், கேட்கும் போதெல்லாம் கிடைப்பதற்கு கருக்கலைப்பு என்ன கத்தரிக்காயா என்று ஒரு சாரார் கொதித்தனர்.
மற்றொரு சாராரோ, கருக்கலைப்பு உரிமை பற்றிய அமெரிக்க வரலாற்றில் ஆழ்ந்தனர். கருக்கலைப்பு செய்து கொண்ட சிறுமிகளில் 80% - 90% தங்கள் பெற்றோர் அனுமதி யுடனே செய்து கொள்கிறார்கள் என்பது இவர்களுக்கும் ஆறுதல் அளித்தது. ஏனைய சிறுமிகள், ஏதோ ஒரு காரணத்தினால் தங்கள் பெற்றோரிடம் இதை மறைத் திருக்கிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் தங்கள் சின்னஞ்சிறு பெண்கள் உடலுறவு கொண்டு கருவுருவதைத் தாங்கமுடியாத குடும்ப அவமானமாகக் கருதுகிறார்கள். வேறு சில குடும்பங்களில், சிறுமிகள் காமுக வன்முறைக்கு ஆளாவதால் கருவுற்றிருக் கிறார்கள். சிலருக்குக் கருக்கலைப்பு வெளியில் தெரிந்தால் தாங்கள் மறைத்து வைத்திருந்த காமுகக் குற்றங்கள் அம்பல மாகிவிடுமோ என்ற பயம்.
இந்த மசோதா, ஒருவிதக் கவலையும் இல்லாமல் ஆடிப்பாடித் திரிய வேண்டிய சிறுமிகள், வயது வந்த பெரியவர்களாலேயே எளிதாகத் தீர்வுகாண முடியாத சிக்கல் களில் ஆழ்ந்திடும் சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், உடலுறவையும், காமக் கவர்ச்சியையும் வியாபார நோக்கங் களுக்காகச் சிறுவர்களிடமும் பரப்பிவரும் ஒரு சமுதாயம் அதனால் எழும் சிக்கல் களுக்குத் தீர்வு காணவேண்டிய கட்டாயத் தைச் சுட்டிக் காட்டுகிறது. இறுதியில் மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மசோதா 73 தோற்றுப் போனாலும், வேறு வடிவங்களில் இந்த விவாதம் தொடரும் என்பதில் ஐயமில்லை. உடலுறவுக் கல்வி, திருமணத்துக்கு முன்பே உடலுறவு, காம இச்சைகள் பற்றிய விவாதங்கள் தமிழ்நாட்டிலும் வெடிக்கத் தொடங்கியுள்ளன. நடிகை குஷ்பூவின் கருத்துகள் அரசியல், சமூக வட்டங்களில் எதிரலைகளை எழுப்பியிருக்கின்றன. இவையும், உலகமயமாக்கல் தொடர்பான கலாசாரப் போர்கள்தாம். இதற்குக் கருத்துச் சுதந்திரம், பெண்ணிய விடுதலை என்ற மேற்பூச்சுகளைப் பூசுவது தவறு. சல்மன் ருஷ்டி, வை.கோ., பழ.நெடுமாறன் போன்றோர் இந்தியாவின் கருத்துச் சுதந்திரத்தின் போலித்தன்மையை அம்பலப் படுத்தியாயிற்று. நாம் ஒப்புக்கொள்ளும் கருத்துகளுக்குச் சுதந்திரம் வேண்டும், நமக்குப் பிடிக்காத கருத்துகள் தடைசெய்யப் படவேண்டும் என்ற போலித்தனம் இனி மேல் செல்லாது. |
|
தமிழ்ப் பெண்களும் தங்கள் காம இச்சை களை வெளிப்படுவதில் முன்னேறத் தொடங்கியுள்ளார்கள் என்று மகிழ்கிறார் நடிகை குஷ்பூ. ஆண்களைப் போலவே பப், டிஸ்கோ செல்வதைப் பெண் விடுதலைக்கு அடையாளமாகக் காண்கிறார் இவர். திருமணத்துக்கு முன்னரே உடலுறவு கொள்வதைப் பாராட்டிப் பேசும் இவர், "வாரந்தோறும் பாய் ·ப்ரெண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று நழுவிக் கொள்கிறார். பதின்ம வயதினரைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள், அந்த வயதில், அப்படித்தான் தோன்றும் என்று தெரிந்த வர்கள். அதனால்தான், மனக்கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாட்டைப் பண்பட்ட சமுதாயங்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றன. இந்தப் பழம்பெரும் பண்பாட்டைக் காப்பதாக நினைத்துப் போராட்டம் செய்பவர்களும், தாங்கள் எதிர்ப்பது ஒரு பிழையான கருத்தைத்தான், கருத்தைச் சொன்னவரை அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. இல்லையேல், எதை எதிர்க் கிறார்களோ, அதுவே ஆழமாக வேரூன்ற தம்மை அறியாமல் இவர்களே வழி வகுப்பார்கள். முன்னாள் இந்திய அதிபர் கே.ஆர். நாராயணன் மறைந்தார். வாஷிங்டனில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது இந்திய அமெரிக்கர்களோடு நெருங்கிப் பழகி நம் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இந்தியாவின் பழம்பெருங்குடிகளில் ஒன்றில் தோன்றிய இவர், தீண்டாமைக் கொடுமையை அனுபவித்திருந்தாலும், சுதந்திர இந்தியாவில் தன் திறமையாலும், நேரு குடும்பத்தின் ஆதரவாலும் மேன்மேலும் உயர்ந்து இந்தியாவின் தலைமகனாகப் பதவி வகித்தார். அடிமைகளாகவும், இரண்டாம் தரக் குடிகளாகவும் மேலை நாடுகளில் நடத்தப்படும் மக்கள் இன்றும் உரிமைகளுக்குப் போராடிக் கொண்டிருக் கும் போது, அதிபர் நாராயணனின் சாதனையும், இந்தியாவின் முதிர்ச்சியும் பாராட்டத்தக்கவை. அவர் குடும்பத்தின ருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் தமிழகம் சுனாமியின் தாக்குதலால் வாடியது. இந்த ஆண்டோ தொடர்மழை வெள்ளத்தால் வாடிக் கொண்டிருக்கிறது. தென்றலின் சென்னைக் குடும்பத்தினரும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள். நவம்பர் மாத இதழ் காலம் தாழ்த்தி வந்ததற்குச் சென்னை வெள்ளம் முக்கியக் காரணம். பொறுத்துக் கொண்ட வாசகர்களுக்கு எங்கள் நன்றிகள். அனைவருக்கும் எங்கள் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|