|
|
'பத்துக் கட்டளைகள்' (Ten Commandments) என்று ஒரு பழைய ஹாலிவுட் படம். அதில் தீர்க்கதரிசி மோசஸ், மன்னன் ராம்சேஸிடம் "நீ அடிமைகளாக வைத்திருக்கும் எம் மக்களை விடுதலை செய்! இல்லாவிட்டால் எல்லாம் வல்ல இறைவன் உன் நாட்டை நாசம் செய்வார்" என்று எச்சரிப்பார். இந்த மந்திர வித்தைக்கெல்லாம் நாங்கள் மசிய மாட்டோம் என்று ராம்சேஸ், மோசஸின் எச்சரிக்கையைப் புறக்கணிப்பார். ஒன்றன் பின் ஒன்றாக, பத்து சாபக்கேடுகள் வந்து மன்னனின் நாட்டைத் தாக்கும்.
ஆறு, கிணறு, குளம் எல்லாம் ரத்தமாகும்; தவளைகள், பேன்கள், ஈக்கள் கடலெனத் திரண்டுவரும்; ஆடுமாடுகள் தொற்று நோயால் மடியும்; மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத அம்மை நோய் வந்து தாக்கும்; ஆலங்கட்டி மழை, நெருப்பு மழை பெய்து பயிர்களை அழிக்கும்; வெட்டுக் கிளிகள் புயலென வந்து எஞ்சியிருக்கும் பயிர்களையும் தீர்த்து விடும்; போதாதற்கு மூன்று நாட்களுக்குச் சூரியனே மறைந்து போய் வானம் இருண்டுவிடும். ஒவ்வொரு கேடு விளையும்போதும் "நிறுத்து, நிறுத்து" என்று கெஞ்சிக் கூத்தாடுவார்கள் மக்கள்; ஆனால், சாபக்கேடு அடங்கிய பின்னர் அது நடந்ததையே மறந்துவிடுவார்கள். படத்தைப் பார்க்கும் நமக்கோ, தங்கள் ஆற்றலை மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணராத இந்த மக்களுக்கு மூளையே இல்லையா என்று தோன்றும்.
இதெல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டுக்கதை என்று சிலர் நினைக்கலாம். பாமியன் புத்தர் சிலை தகர்ப்பு, செப்டம்பர் 11, சுனாமி, மும்பையில் பேய்மழை, காட்ரீனா-ரீட்டா-வில்மா சூறாவளிகள், நியூ ஆர்லியன்ஸ் நகரத்தைக் கடல் கொள்ளுதல், காஷ்மீர் நிலநடுக்கம், பறவைக் காய்ச்சல், ஆர்க்டிக் பனிநிலங்கள் உருகுதல், இவை யெல்லாம் நமக்கு வந்திருக்கும் புதிய சாபக்கேடுகள். வானத்திலும், பூமியிலும், கடலிலும் எவ்வளவு குப்பை வேண்டு மானாலும் கொட்டலாம், இதற்குப் பின் விளைவுகளே இல்லை என்று கொட்ட மடித்து வந்திருக்கிறோம். நம்முடைய ஆதாயத்துக்காக மற்ற மனிதர்களையும், மனங்களையும் மிதித்து வந்திருக்கிறோம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் வெட்டிப் பழமொழி என்று இறுமாப்புக் கொண்டிருந்தோம்.அறுவடைக் காலம் வந்து விட்டதோ?
தனித்தனியாகப் பகுத்துப் பார்த்தால், இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள். நில நடுக்கங்களும், சுனாமிகளும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் நகர்ந்து வந்து என்றாவது ஒரு நாள் வெடிப்பவை. பறவைக் காய்ச்சலும் அறுபது ஆண்டுக்கு ஒரு முறை பரவும் நோய்தான், சற்றுக் காலம் தாழ்த்தி வந்திருக்கிறது என்கிறார்கள் சிலர். பெரும் சூறாவளிகளும் இதே போல் அடிக்கடி வருபவைதான் என்றும் அடித்துச் சொல்கிறார்கள் சில அறிஞர்கள். ஆர்க்டிக் பனிநிலங்கள் உருகுவதற்கும் மனிதர்கள் மாசுக்கட்டுப் பாட்டின்மைக்கும் தொடர்பில்லை என் கிறார்கள் தொழிலதிபர்கள்.
உலகம் அழியப் போகிறது என்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே மக்கள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஆனாலும், இது போன்ற பேரிடர்கள் நாடுகளை, ஏன் நாகரீகங்களையே சீரழித்திருக்கின்றன. நாம் மட்டுமென்ன விதிவிலக்கா?
ஒரு விதத்தில் பார்த்தால், முன்னெப் போதும் இல்லாத ஒரு வல்லமை நமக்கு இப்போது இருக்கிறது. இது தகவல் தொடர்பு யுகம். சுனாமி, காட்ரீனா இரண்டிலும் நமது முட்டாள்தனத்தினால் தான் பலர் இறக்க வேண்டியிருந்தது. முன்னதில் ஏழை நாடுகளுக்குப் பணக்கார நாடுகள் எச்சரிக்கை அளித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். பின்னதில், பணக்கார அரசு ஏழை மக்களைக் காப்பாற்றியிருந்தால் பலரைக் காப்பாற்றியிருக்க முடியும். பறவைக் காய்ச்சலைப் பற்றி உலகம் எச்சரிக்கையாய் இருக்கிறது. 2000-ம் ஆண்டு (Y2K) உருண்டு வந்த போது நடந்திருக்கக் கூடிய சேதங் களை வெற்றிகரமாகத் தடுத்ததால்தான் ஒய்2கே ஒரு புரட்டு என்று சிலர் கூறு கிறார்கள். பறவைக் காய்ச்சல் பரவுதலையும் கட்டுப்படுத்தும் வல்லமை நமக்கு இப்போது உள்ளது.
போலியோ, அம்மை நோய் இவற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம். எய்ட்ஸைக் கட்டுக்குள் கொண்டு வரத்தடை புரிவது சில நிறுவனங்களின் பேராசைதான். பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து தயாரிப்பதிலும் முதலாளித்துவ அமைப்புகள் பேராசை கொண்டால் எல்லோருக்குமே நஷ்டம்தான். உலகமயமாக்கலின் கலாசாரப் பக்க விளைவுகள் தமிழ்நாட்டிலும் கலாசாரப் போர்களுக்கு வித்திடத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவில் பழமைவாத 50களைத் தொடர்ந்து 60களின் ஹிப்பி கலாசாரம் வெடித்தாலும், இன்றும் அந்தக் கலாசாரப் போர்கள் தொடர்கின்றன. அமெரிக்கா விலும் உரிமைகளுக்கு வரம்புகள் விதிக்கப் படுகின்றன. திரைப்படங்கள், தொலைக் காட்சி, இசைத்தட்டுகள், ஏன் வீடியோ கேளிக்கைகளுக்கும் வயது வந்தவர் களுக்கும், பதின்மர்களுக்கும், குழந்தை களுக்கும் உள்ளவை எவை என முத்திரை பதிப்பது இன்று வாடிக்கையாய் இருந் தாலும், இவற்றின் தொடக்கம், பழமைவாத 80களில்தான். கண்டதை, கண்ட நேரத்தில் காட்டுவது எங்கள் அடிப்படை உரிமை என்று வாதிட்ட நிறுவனங்கள், விளம்பர தாரர்களை வாடிக்கையாளர்கள் புறக் கணிக்கத் தொடங்கியதும் வழிக்கு வந்தார்கள். |
|
தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளுக்கு வரம்புகள் ஏதும் இருப்பதாகத் தெரிய வில்லை. பெரும்பாலான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வயது வந்தவர்களுக்காகத் தயாரிக்கப் பட்டவை; ஆனால், குழந்தைகள் பார்க்கும் நேரத்தில் காட்டப் படுகின்றன. வயது வந்தவர் களுக்கான நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் பார்ப்பதற்கு ஓரளவுக்குப் பெற்றோர்களைக் குறைசொல்ல வேண்டியதுதான். ஆனால், தொலைக்காட்சி நிறுவனங்களும், ஊடகங் களும் சமுதாயப் பொறுப்பில்லாமல் லாபமே குறியாக வியாபாரம் செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு சிலராவது கவலைப் படத் தொடங்கி இருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் இன்ன உடைகள்தாம் அணியலாம் என்று வரம்புகள் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கப்படி நாட்டுப் புறத்தினரும் பழமைவிரும்பிகளும் வரம்பு களை வரவேற்கிறார்கள்; மேலை நாட்டு நாகரீகத்தில் ஊறியவர்கள், முற்போக்கு வாதிகள் வரம்புகளைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் எல்லோருக்குமே என்றாலும், "பாதிக்கப் படுவது" மாணவிகள்தாம் என்கிறது எதிரணி. பொறியியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாகவே சீருடை விதிமுறைகள் இருந்திருக்கின்றன. பட்டறைகளில், சோதனைச்சாலையில், என்ன உடுப்பு உடுத்த வேண்டும், என்ன காலணிகள் அணிய வேண்டும் என்பதெல்லாம் பழைய விதிமுறைகள். வேட்டிகள், சேலைகள் சோதனைச்சாலையிலும், பட்டறையிலும், விபத்து ஏற்படுத்தக் கூடிய ஆடைகள் என்பதால் தடை செய்யப் பட்டவை. தொழில்முறைக் கல்லூரிகள் தங்கள் மாணவர்கள் தொழில்முறை ஆடைகள் அணிய வேண்டும் என்று கட்டுப்படுத்து வதில் தவறேதும் இல்லை. இந்த இதழுடன் தென்றலுக்கு ஐந்தாவது ஆண்டு நிறைவாகிறது. தென்றலுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் படைப் பாளிகள், வாசகர்கள், விளம்பரதாரர் களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். வாசகர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|
|