Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சிரிப்பானந்தா
அருணாசலம் முருகானந்தம்
- அரவிந்த், ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்|ஜூன் 2014||(3 Comments)
Share:
ஹார்வார்ட் பல்கலையின் சொற்பொழிவு அரங்கு. மாணவர்கள் பேராசிரியர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றுகிறார். பேச்சு முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். ஐ.ஐ.டி. கருத்தரங்கில் அவர் பேசியதும் மாணவர்களின் கரகோஷம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இப்படி பல சர்வதேசக் கருத்தரங்குகளிலும், கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அவர் பேசப்பேச வரவேற்பு. உற்சாகம். கைதட்டல். இத்தனைக்கும் அவர் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலோ, ஐ.ஐ.டி.யிலோ ஐ.ஐ.எம்.மிலோ படித்தவரல்ல. பள்ளியிறுதி வகுப்பைக்கூட முடிக்காதவர். ஆனால் அவரை புகழ்பெற்ற டைம் இதழ் 2014ன் உலகின் செல்வாக்குமிக்க நூறு பேர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்ததுடன், 'சுகாதாரப் போராளி' என்ற பட்டமும் கொடுத்து கௌரவித்தது. அவருடைய சந்திப்பிற்காக ஹிந்துஸ்தான் யூனிலீவர் தொடங்கிப் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் நேரம் ஒதுக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரிந்த அருணாசலம் முருகானந்தம்? அவர் என்ன செய்து விட்டார்?

அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா ஒரு விவசாயக் கூலி. விவசாயம் பொய்த்தபோது இட்டலி சுட்டு விற்பார். அவர்களுக்கு மகனாகப் பிறந்து குடும்பச் சூழலால் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பட்டறையில் உதவியாளராகப் பணியாற்றியவரை, இன்றைக்கு உலகமே கொண்டாடுகிறது. காரணம், அவரது கண்டுபிடிப்பு. கிராமப்புறங்களில் வாழும் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம், சர்வதேசத் தரத்தில் பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்ததுதான் இவரது மிக முக்கியச் சாதனை. வடிவமைத்தது மட்டுமல்ல; பணம் சம்பாதிப்பதற்காக அதைப் பெரிய வணிக நிறுவனங்களிடம் கொடுத்து விடாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து, கிராமப்புறப் பெண்களிடம் கொண்டு சேர்த்தவர். இந்தியா மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் இந்த இயந்திரம் இன்று பயன்பாட்டில் உள்ளது.

இந்தச் சாதனைக்குத் தூண்டுகோலாக இருந்தது எது, அதற்காகச் சந்தித்த சவால்கள் என்ன என்பதைத் தென்றலுடன் பகிர்ந்து கொள்கிறார், அருணாசலம் முருகானந்தம். வாருங்கள் கேட்கலாம்.

*****


கே: உங்களது இந்த முயற்சி ஆரம்பித்தது எப்போது, எப்படி, ஏன்?
ப: இந்தக் கதை துவங்கியது கோவையருகே பாப்பநாயக்கன்புதூர் என்ற பின்தங்கிய குக்கிராமம் ஒன்றில். எங்கள் குடும்பம் ஒரு நெசவாளர் குடும்பம். அப்பா இளம் வயதிலேயே இறந்து விட்டதால் நான் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனேன். ஒரு வொர்க்‌ஷாப்பில் ஹெல்பராகப் பணியாற்றினேன். பின்னர் திருமணம் ஆனது. ஒருநாள் நான் மதிய உணவு நேரத்தில் என் மனைவி எதையோ மறைத்து எடுத்துக்கொண்டு போனார். அப்படி என்ன ரகசியம் என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்' என்றார். நான் ஏதோ விளையாடுகிறார் என்று நினைத்தேன். பார்த்தால், அது ஒரு வேஸ்ட் துணி. நான் எனது டூவீலர் போன்றவற்றைத் துடைக்க உபயோகிக்கும் பழந்துணி. இது எதற்கு என்று கேட்டால் மாதவிலக்கு சமயத்தில் பயன்படுத்த என்று தயக்கமாகச் சொன்னார். ஏன் நல்ல நாப்கினை வாங்க வேண்டியதுதானே என்று நான் கேட்டதற்கு, நாங்க அதெல்லாம் வாங்க ஆரம்பித்தால் வீட்டில் பால் வாங்க முடியாது என்றார். ஓர் எளிய சமாசாரம் எவ்வளவு விலைகூடியதாக இருக்கிறது என்று யோசித்தேன். நாமே ஏன் நாப்கின் தயாரிக்கக் கூடாது என்று மனதில் தோன்றியது. அதுதான் ஆரம்பம்.



கே: அதன் பின்....?
ப: நான் கடைக்குச் சென்று ஒரு நாப்கின் வாங்கினேன். கடைக்காரர் அதை எடுத்து ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி, இடது பக்கமும், வலது பக்கமும் மடித்து ஏதோ கடத்தல் பொருளைக் கொடுப்பதுபோல பக்காவாக பேக் செய்து ஒரு கவரில் போட்டு மறைத்துக் கொடுத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றுகூடத் தோன்றலாம். ஆனால் இந்தியாவில் அதுதான் மிக முக்கியமான பிரச்சனை. ஒரு சுகாதரமான நாப்கினை வாங்க முடியாத அளவுக்கு கிராமப்புறங்களில் வறுமை! நம் நாட்டில் 90 விழுக்காடு பெண்கள், நாப்கின்கள் உபயோகப்படுத்தவில்லை என்கிறது ஓர் ஆய்வு. என் மனைவியைப் போல எத்தனையோ சகோதரிகள் இந்தப் பிரச்சனையால் அவதிப்படுவார்கள் என்பது எனக்கு உரைத்தது.

அடிப்படையில் நான் ஒரு வொர்க்‌ஷாப் லேபர் என்பதால் அந்த நாப்கினைப் பிரித்துப் பார்த்தேன். அதில் பஞ்சு பத்து பைசா பெறுமானம் பஞ்சு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மற்ற பொருட்கள் எல்லாம் சேர்த்தால் மொத்தம் ஆறு ரூபாய்க்குள் ஆகும். அதைப்போலப் பலமடங்கு விலைக்கு அது விற்பனை செய்யப்பட்டது. ஒரு மலிவு விலை நாப்கினைத் தயாரிக்க முடிவுசெய்து, தீவிரமாக உழைத்தேன்.

கோயமுத்தூரில் பஞ்சாலைகள் அதிகம். பஞ்சுக்கு அங்கே பஞ்சமே இல்லை. முதலில் பஞ்சு வாங்கினேன். சட்டை காலருக்குப் பின்னால் வைத்துத் தைக்கும் அந்தக் காட்டன் துணியை வாங்கினேன். இப்படி நாப்கின் தயாரிக்கத் தேவையான பொருட்களை, பேடுகளை வாங்கி ஒரு நாப்கினைத் தயாரித்தேன். சரி, நாப்கின் தயாரித்தாகி விட்டது. எப்படி அதை பரிசோதனை செய்வது? என் மனைவியிடமே கேட்டேன். நான் தயாரித்து பேக் செய்த இரண்டு பேடுகளை அவரிடம் கொடுத்தேன். அதைப் பிரித்துப் பார்த்த அவருக்கு ஒரே அதிர்ச்சி. அதை அவர் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார். அதை உபயோகப்படுத்திப் பார்த்து விட்டுச் சொல்லு என்றேன். சில நாட்களுக்குப் பின், "நீங்க கொடுத்த நாப்கினுக்குப் பதிலா அந்தப் பழைய துணியையே யூஸ் பண்ணி இருக்கலாம். ரொம்ப நாஸ்தி ஆகி விட்டது' என்றார். எனக்கு அதிர்ச்சி. இத்தனைக்கும் அதை உயர்தரப் பஞ்சில் தயாரித்திருந்தேன். ஆனால் அதில் ஏதோ சரியில்லை என்பது தெரிந்தது. அன்று மட்டும் என் மனைவி நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருந்தால் என் ரிசர்ச் அன்றோடே முடிந்து போயிருக்கும்.

கே: ஊக்கம் இழந்துவிட்டீர்களா?
ப: இல்லை. அதன்பிறகு என் முயற்சிகளை தீவிரப்படுத்தினேன். நான் நாப்கின் தயாரிப்பதும் மனைவியிடம் ஃபீட் பேக் கேட்பதுமாக இருந்தது. இது சாக்லேட் சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கு என்று கேட்பது போலல்ல. தங்கள் மாதாந்திரப் பிரச்சனைகளை சக பெண்களிடம் பகிர்ந்து கொள்வதற்குத் தயங்கும் நாடு இது. ஒரு மனைவி கணவனிடமும், தாய் மகளிடமும் பேசத் தயங்கும் விஷயம். இந்தியா மட்டுமில்ல. பல நாடுகளில் கூட இதுதான் நிலைமை என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. இப்படியே என் சோதனைகள் தொடர்ந்தன. ஆனால், அதில் ஏகப்பட்ட ஏமாற்றம். ஏன் சரியாகவில்லை என்று ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். கோயமுத்தூரில் கிடைக்கும் உயர்ரகப் பஞ்சை வாங்கித்தான் செய்தேன். வேறு பஞ்சு வேண்டுமென்றால் நான் மும்பைக்குப் போக வேண்டும். ஆனாலும் சளைக்காமல் முயன்றேன். என் மனைவிக்கு மிகவும் கோபம் வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கள் என்று சொல்லிக் கண்டபடி திட்டிவிட்டார். ஆனால் நான் நிறுத்தவில்லை. வீட்டில் செய்யாமல், வொர்க் ஷாப்பில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.

நான் அப்படித் தயாரித்த நாப்கின்களை பிட்ஸ் பிலானி, ஐ.ஐ.டி. உட்பட பல நிறுவனங்களுக்கு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தேன். பதில் எதுவும் சாதகமாக இல்லை. நல்லவேளை, நான் அதிகம் படித்தவனல்ல என்பதால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இன்னும் சிறப்பாகத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒருவேளை படித்திருந்தால், அந்த பதில்களைப் பார்த்து நான் முயற்சியைக் கைவிட்டிருக்கலாம். மனைவி ஒத்துழைக்காததால் மற்றப் பெண்களின் ஒத்துழைப்பை நாடினேன். அதுவும் அவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை. பல பெண்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்துத் திட்டினார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

கே: என்ன அந்த யோசனை?
ப: ஒருநாள் டீக்கடைக்குச் சென்று டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அந்த யோசனை வந்தது. அதைச் செயல்படுத்தினேன். நான் செயற்கையாக ஒரு கருப்பையைத் தயாரித்தேன். ஒரு ஃபுட்பால் பிளாடரை வாங்கி வந்தேன். அதில் மட்டன் கடையில் வாங்கி வந்திருந்த ரத்தத்தை ஊற்றினேன். அதை பெல்ட்டோடு இணைத்து என் இடுப்பில் மறைத்துக் கட்டிக்கொண்டேன். நான் தயாரித்த நாப்கினை அணிந்து கொண்டேன். பிளாடரை அழுத்தினால் ரத்தம் நாப்கினில் விழும். சமயங்களில் எனது வேட்டி, பேண்ட் எல்லாம் ரத்தமாகி விடும். மிருக ரத்தம் என்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசும். அதனால் சுடுகாடு, குளக்கரை என்று மனித நடமாட்டம் அதிகமில்லாத பகுதிக்குச் சென்று செய்துவந்தேன். இது யாருக்கும் தெரியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அது ஒரு சின்னக் கிராமம். விரைவிலேயே எல்லாருக்கும் தெரிந்துபோய் விட்டது. வீட்டுக்கும் தெரிந்துவிட்டது.

இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று நினைத்த என் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விட்டார். சில நாட்களில் சமாதானமாகி வந்து விடுவார் என்று நான் நினைத்தேன். அவர் வரவில்லை. அப்படிச் செய்தால் நான் முயற்சியை விட்டு விடுவேன் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்துச் செய்திருக்கிறார். பரவாயில்லை, முயற்சியில் வெற்றியடைந்த பிறகு அவரைக் கூப்பிடுவோம் என்று நானும் விட்டுவிட்டேன். என் அம்மா என்னுடன் இருந்ததால் வீட்டில் சாப்பாட்டுப் பிரச்சனை வரவில்லை. ஆனால் மிருக ரத்தத்தைக் கொண்டு ஆராய்ச்சி செய்வது பிரச்சனையாக இருந்தது. ஆகவே நான் இந்த விஷயத்தில் உதவி வேண்டி அருகிலுள்ள மெடிகல் காலேஜ் பெண்களை அணுகினேன்.



கே: ஓ.... அவர்கள் ஒப்புக் கொண்டார்களா?
ப: இல்லை. டாக்டருக்குப் படிக்கும் பெண்கள் கூட இதுபற்றிப் பேசத் தயாராக இல்லை. இருந்தாலும் நான் என் ஆராய்ச்சி பற்றி விரிவாகச் சொல்லி உதவி கேட்டேன். ஆரம்பத்தில் ஒத்துழைக்கவில்லை. நான் சளைக்காமல் வருவதைப் பார்த்து விட்டு, என் உண்மையான நோக்கம் புரிந்து சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் அதுவும் முழுமையானதாக இல்லை. ஏனென்றால் வீட்டுப் பெண்களே ஆண்களிடம் பேசத் தயங்கும் விஷயம் இது. அந்நியப் பெண்கள் எப்படிப் பேசுவர்? நான் முதல் வாரம் சென்று சாம்பிள்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு வருவேன். மறுவாரம் சென்று கேட்கும்போது மணிரத்னம் படத்தில் வருவது மாதிரி ’ஆமா’, ‘இல்லை’ என்பதாகவே பதில் கிடைத்தது. அது எனக்கு போதுமானதாக இல்லை. ஆகவே நான் என் கேள்விகளை ஒரு தாளில் எழுதி அதை நாப்கினோடு கொடுத்து, அடுத்த முறை நான் வரும்போது எனக்கு பதில் தாருங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அதுவும் வெற்றிகரமாக இல்லை. மறுவாரம் ஹாஸ்டலுக்குப் போனேன். எல்லோரும் உட்கார்ந்து அவசர அவசரமாக அந்தத் தாளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் வாராவாரம் அலுக்காமல் வருகிறேனே என்று இரக்கப்பட்டு தவறான விடைகளைத் தந்திருந்தார்கள். அதனால் அந்த முயற்சியும் எனக்கு நல்ல பலனைத் தரவில்லை.

கே: பின் என்ன ஆனது?
ப: நான் அடுத்ததாக ஒரு முயற்சியைச் செய்தேன். அவர்களிடம், 'நீங்கள் நாப்கினை யூஸ் செய்துவிட்டு வெளியில் எங்கும் போட வேண்டாம். நான் வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட கூடையில் போடுங்கள். நான் அதை எடுத்துக் கொள்கிறேன்' என்று சொன்னேன். அந்தப் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். நாப்கினை நாமே ஆராய்ந்து பார்த்து அதன் பயனைத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர்கள் பயந்து விட்டார்கள். அவர்களில் ஒரு சிலரை நான் கன்வின்ஸ் செய்து அதை ஒப்புக்கொள்ளச் செய்தேன். யார், யாரிடம் என்ன நாப்கினைக் கொடுத்தோம் என்பதற்காக அவற்றில் மார்க் செய்து வைத்திருந்தேன். நாப்கின்களை சேகரித்து, வீட்டுக்கு வந்து என் அறையில் அவற்றைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென என் அம்மா வந்துவிட்டார். அவருக்கு ஒரே அதிர்ச்சி. யாரோ என் மகனுக்கு ஏதோ செய்து விட்டார்கள். இவன் பைத்தியம் ஆகி விட்டான் என்று முடிவு கட்டிவிட்டார். பெண்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை ஒரு சிலர் சேகரித்து வைப்பர். அது ஒரு மேனியா. நான் அப்படி ஒரு ‘சைக்கோ’ ஆகி விட்டேன் என்று நினைத்து விட்டார். என் ஆடைகளில் ரத்தத்தைக் கண்ட சிலர் எனக்கு ஏதோ பால்வினை நோய் என்று முடிவு செய்துவிட்டனர். இப்படி எல்லாம் சேர்ந்து பிரச்சனை ஆகி, ஊர் முழுக்கப் பரவி, ஒன்று நான் இதை எல்லாம் நிறுத்த வேண்டும். இல்லா விட்டால் ஊரை விட்டே வெளியேற வேண்டும் என்று சொல்லி விட்டனர். நானும் என் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, உறவுகளைவிட்டு வெளியேறினேன்.

கே: கேட்கக் கதை போல இருக்கிறது. ஆனால் மிகவும் துன்பமானதாக இருக்கிறதே....?
ப; ஆமாம். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. கோவையில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு என் முயற்சியைத் தொடர்ந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருட உழைப்புக்குப் பின் என் தயாரிப்பில் என்ன பிரச்சனை என்பதைக் கண்டறிந்தேன். அதை எப்படிச் சரி செய்வது என்பதையும் கண்டுபிடித்தேன். அது சரியாவதற்கு ஒரு மெஷினை உருவாக்க வேண்டியிருந்ததால், அதற்காக ஒரு நாலரை ஆண்டுக் காலம் உழைத்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுக்கால உழைப்பில் சர்வதேசத் தரத்தில் நாப்கின் ஒன்றை உருவாக்கினேன்.

அதை ஒரு மெடிகல் காலேஜ் மாணவியிடம் கொடுத்து அவரது கருத்திற்காகக் காத்திருந்தேன். அவரை நான் மறுபடி சந்தித்தபோது, "அண்ணா, நான் உங்க நாப்கினைத்தான் யூஸ் பண்ணுகிறேன் என்பதே எனக்கு மறந்தே போய்விட்டது' என்றார். அதாவது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் நாப்கினுக்கும் இதற்கும் எந்த வேறுபாட்டையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை! 'இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு' என்றார். அந்த நாள் என் வாழ்க்கையின் முக்கியமான நாள். எனது பல்லாண்டு உழைப்புக்கு வெற்றி கிடைத்த நாள்.
கே: கேட்கவே மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது. உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது எப்படி?
ப: முயற்சி வெற்றியானபின் ஐ.ஐ.டி. மெட்ராஸில் அதை டெமோ செய்து காட்டச் சென்றேன். எனது மெஷின் இங்கேயே கிடைக்கும் எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதைப் பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம். இதைக் கொண்டு நாப்கின் தயாரித்து இவன் பன்னாட்டுக் கம்பெனிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்று ஆச்சரியப்பட்டனர். அது 2009ம் ஆண்டு. இப்போது பேசுமளவுக்கு எனக்கு அப்போது ஆங்கிலம் பேச வராது. ஆனாலும் என் மனதில் அதற்கு பதில் இருந்தது. எனது நோக்கம் வியாபார நிறுவனங்களோடு போட்டி போடுவதல்ல. எங்கள் ஊரில் 426 மில்கள் இருந்தன. ஆனாலும் என் அப்பா 3000 ரூபாயில் தயாரித்த ஒரு கைத்தறி நெசவு எந்திரத்தை வைத்துத்தான் எங்கள் குடும்பமே வாழ்ந்தது. அப்படி இருக்கும்போது இதன்மூலம் என்னாலும் அப்படிச் செய்ய முடியும் என்று நினைத்தேன். இந்திய அளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் கலந்து கொண்டேன். வந்திருந்த 37843 கண்டுபிடிப்புகளில் இதுதான் செலக்ட் ஆனது. என்னுடைய முயற்சிக்காக இந்தியாவின் சிறந்த புதுமைப் புனைவு (India’s Best Innovation Award) விருது கிடைத்தது.

கே: இந்த இயந்திர விற்பனையை எப்படி நீங்கள் முறைப்படுத்துகிறீர்கள்?
ப: பெண்களுக்கான இந்தப் ப்ராடக்டை யாரையும் சாராமல் பெண்களே தயாரித்து பெண்களே விற்பனை செய்வதுதான் எனது நோக்கம் (women to women model). நான் பல ஊர்களுக்கும் சென்று, அங்குள்ள மகளிர் குழுக்களை அணுகிச் செய்து காட்டினேன். இதற்காக இந்தியாவின் பல இடங்களுக்கும் பயணம் செய்தேன். நேபாளம் போகும் வழியில் இருக்கும் மதுப்பேட் என்ற ஊருக்குச் சென்று இந்த எந்திரத்தை டெமோ செய்து காட்டினேன். அப்புறம் உத்தராகண்ட், சத்தீஸ்கர் என்று பல இடங்களுக்குச் சென்று இந்த மிஷின் தயாரிப்பு பற்றி விளக்கினேன். இப்படியே இது ஊர் ஊராகப் பரவியது. இன்றைக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் 846 இடங்களில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.


.
கே: உங்கள் இயந்திரத்தின் வடிவமைப்பு, உற்பத்தி பற்றி...
ப: இது மிக எளிமையானது. குறைந்த இடவசதி போதும். யார் வேண்டுமானாலும் இயக்கலாம். குறிப்பாக படிக்காதவர்களாக இருந்தால் ரொம்ப நல்லது. அவர்களுக்குத்தான் இந்த அறிவுசார் குழப்பங்கள் வராது. இதன் அடக்கவிலை 1 நாப்கின் 1 ரூ. இந்த நாப்கின் கடையில் கிடைக்காது. நாப்கினைத் தயாரிப்பவர்கள் ஒரு வீட்டில் கொடுப்பார்கள். அந்த வீட்டுப் பெண்தான் resident dealer. எப்படி வீட்டில் காபித்தூள் தீர்ந்துவிட்டால் அல்லது கறிகாய் இல்லையென்றால் மற்ற பெண்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறர்களோ, அப்படிப் பெண்களே தேவை ஏற்படும்போது மற்றொரு பெண்ணை நாடிப் பெற்றுக் கொள்வார்கள். இப்போது எனது மாடல் 11 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இன்னும் 70 நாடுகளில் இது விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

(முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு பற்றிய சித்ரா ஜெயராமின் குறும்படத்தை இங்கே பார்க்கலாம்)



கே: ஒருகாலத்தில் உங்களது முயற்சிகளுக்காக உங்களைத் தூற்றியவர்கள் இன்று போற்றும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ப: ஒன்றும் நினைக்கவில்லை. அது மனித இயல்புதானே. I am very neutral. நான் மனதின் சமநிலை கொண்டவன். அதனால் அதையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. நினைப்பதுமில்லை.

கே: உலகின் செல்வாக்கு மிக்க நூறு பேர்களில் நீங்களும் ஒருவர் என ‘டைம்’ இதழ் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது பற்றி...
ப: இன்றைக்கு எதையுமே பட்டியலிடுவது வழக்கமாக உள்ளது. உங்களை அதற்கு செலக்ட் செய்திருக்கிறோம், இதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம், ஜெனிவாவுக்கு வாருங்கள், இங்கே வாருங்கள் என்று அடிக்கடி மெயில்கள் வரும். இறுதியில் அதில் கலந்து கொள்வதற்காக நீங்கள் இத்தனை பணம் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று இருக்கும். அப்படித்தான் இதையும் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அதற்கப்புறம் தொடர்ச்சியாக நிறைய மெயில் வந்தது. டைம் இதழிலிருந்தும் ஃபோன் வந்தது. அதன் பிறகுதான் நான் நம்பினேன்.

இதில் எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால் என் மூலமாக அவர்கள் இந்தியாவைப் பார்த்தார்கள்; முருகானந்தத்தை அல்ல. அதுதான் எனக்கு மன நிறைவைத் தந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். மோதி, கெஜ்ரிவால் என்று எல்லோரும் பல கேள்விகள். ஏன் இந்தியாவில் மாடலிங் பிரபலமாக இல்லை என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். மோதி பிரதமராவதைப் பற்றி, இலங்கைப் பிரச்சனை பற்றி என்று பல கேள்விகள். மறுநாள் காலையில் எல்லாம் பத்திரிகையில் வந்திருந்தது.

இந்த விருதுகள் எல்லாம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைவிட பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதுதான் எனக்கு நிறைவைத் தருகிறது. என்னுடைய கதையைக் கேட்கும்போது, 'ஒண்ணும் படிக்காத இவனே செஞ்சிருக்கான், நாம செய்ய முடியாதா என்ன' என்று சிலருக்குத் தோன்றலாம். அதன் மூலம் அவர்கள் பல புதிய பயனுள்ள முயற்சிகளில் ஈடுபடலாம். அந்த வகையில் இதை வரவேற்கிறேன். மற்றபடி இதில் சாதனை என்று எதுவுமில்லை. எல்லாரிடமுமே ஆற்றல் இருக்கிறது. எல்லாம் நமக்குள் இருக்கிறது. ஆனால் அதை switch on பண்ணத் தெரியவில்லை அல்லது அந்த விசை எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. அதுதான் நமது பிரச்சனை. அதைத் தெரிந்து கொண்டுவிட்டால் எல்லோரும் எதையும் சாதிக்கலாம்.



கே: இன்னும் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
ப: ஒரு காலத்தில் உலகம் தங்கத்தின் பின்னால் அலைந்து கொண்டிருந்தது. தற்போது பணத்தின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் தண்ணீரின் பின்னாலும், உணவின் பின்னாலும் அலைந்து கொண்டிருக்கும் நிலைமை வரும். எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாகத் தண்ணீரும் உணவும்தான் இருக்கப் போகிறது. ஆகவே, தண்ணீர் இல்லாமல், மண் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும், உணவு உற்பத்தி செய்வதுதான் என் எதிர்காலத் திட்டம். அது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருக்கும். அதற்கான ஆராய்ச்சிகளைத் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். ஒருநாள் செய்து காட்டுவேன்.

நம்பிக்கையோடு பேசுகிறார் முருகானந்தம். மனைவி சாந்தி, மகள் ஜெயஸ்ரீ மற்றும் தன் தாயுடன் கோவையில் வசித்து வருகிறார். மகளின் பெயரில்தான் நிறுவனத்தை நடத்தி வருகிறார். (newinventions.in)

அவரிடம் பேசும்போது,

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்


என்ற குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப் பாடல் நினைவிற்கு வருகிறது. ஃபெட்னா தமிழ் விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற இருக்கும் அவருக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த்
படங்கள்: ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்

*****


இந்தியாவில் நாப்கின்
நாப்கின் தயாரிப்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரு ரகசியமாக இருந்தது. கொள்ளை கொள்ளையாய் லாபம் ஈட்டுவதாக அது இருந்திருக்கிறது. நான் அதில் இறங்கிய பின்புதான் எனக்கு இந்த உண்மை புரிகிறது.
இனி எந்த இந்தியச் சகோதரியும் மாதவிலக்கு காலத்தில் அழுக்குத் துணியை பயன்படுத்தக் கூடாது. 5% மட்டுமே கிராமப்புறங்களில் இதனை உபயோகித்துக் கொண்டிருப்பவர்களை 100% உபயோகிப்பவர்களாக மாற்ற வேண்டும். பெண்களுக்கு இது வேலை வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அது நிறைவேறி வருகிறது.

*****


நாப்கின் அணிந்து பார்த்த உலகின் ஒரே ஆண்
உலகிலேயே நாப்கின் அணிந்த, பெண்களின் பிரச்சனைகளைப் புரிந்த ஒரே ஆண் நான்தான். சில நாட்கள் மட்டும்தான் அதை நான் அணிந்து பழகியிருந்தாலும் அந்த உதிரப் போக்கை, வேதனையை, எரிச்சலை, இறுக்கமான மனதை உணர்ந்திருக்கிறேன். பெண்கள், மாதவிலக்கு நிற்கும்வரை எப்படி பொறுமையாக இதனைச் சமாளிக்கிறார்கள் என்பதை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நமது சமூகத்தில் எந்த ஒரு ஆணாலும் இந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப் பார்த்தால் நாப்கின் அணிந்து நடமாடிய உலகின் ஒரே ஆண் நான்தான். இதை நான் எந்தப் பெருங்கூட்டத்திலும் சொல்வேன்.

*****


எனது ஆங்கிலம்
இன்றைக்குப் பல நிறுவனங்கள், கார்ப்பரேட்கள் என்னைப் பேச அழைக்கின்றன. நான் பள்ளிக் கல்வியே முடிக்காதவன். கல்வியை வைத்து ஒருவரது பேசும் திறனை எடைபோடக் கூடாது. நன்கு கற்றிருந்தும் சரியாகப் பேச வராதவர்களும் இருக்கலாம். அதிகம் கற்காமல் நன்கு பேசுபவர்களும் இருக்கலாம். பெரிய பெரிய பேச்சாளர்கள் பேசுவதை மறந்து விடுவார்கள். ஆனால் முருகானந்தம் பேசுவதை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் எனது ஆங்கிலம் அப்படி. உங்களை மறக்க முடியாததாக்கிவிடும். Because, I am not able to speak a word correct in English.
More

சிரிப்பானந்தா
Share: 




© Copyright 2020 Tamilonline