|
|
|
பெருங்காட்டை ஒரு நொடியில் அழிக்க வல்ல அக்கினிக்குஞ்சை நாம் தினசரித் தேவைகளுக்கு உபயோகித்தாலும், நெருப்பைக் கையாளுவதில் அதிக கவனம் தேவை. கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கக்கூடிய தீ விபத்தைத் தவிர்ப்பது நல்லது. சரியான தவிர்ப்பு முறைகளைக் கையாள வேண்டும். அதையும் மீறித் தீ விபத்து ஏற்பட்டால் உடனடி முதலுதவியும், மருத்துவ உதவியும் மிகவும் அவசியம். தீ விபத்தைத் தவிர்ப்பது பற்றியும், தீப்புண் பாதுகாப்பு பற்றியும் பார்க்கலாமா?
தீப்புண்ணின் வகைகள் அவற்றின் தீவிரத்தைப் பொறுத்துத் தீப்புண் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
முதல் டிகிரி: இது தோலின் மேற்பகுதியான புறத்தோல் (Epidermis) பகுதியில் ஏற்படுவது. இந்தவகைப் புண்கள் பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் ஆறிவிடும். மேல்தோல் சிவந்து, வலியோடு இருக்கலாம். இது கொதிநீர் அல்லது நெருப்புச் சூடு மூலம் ஏற்படும். ஒரு சிலருக்குக் கொதிக்கும் சூரியக் கதிர்களாலும் ஏற்படலாம். குறிப்பாக கோடைக்காலத்தில் 'sun screen' போடாமல் சூரியக்கதிர் பட நேர்ந்தால் இது ஏற்படும். வெள்ளைத் தோலுடையவர்களுக்கு இந்தவகைப் புண் எளிதில் ஏற்படும். பழுப்பு அல்லது கருப்பு தோலுடைய ஆசியர்களுக்கு இது அவ்வளவாக ஏற்படாத போதும், இதற்கான சாத்தியக்கூறு உண்டு. இதை வெப்பப் புண் (sun burn) என்று சொல்வதுண்டு.
இரண்டாவது டிகிரி இந்த வகை புறத்தோலையும், அதையடுத்த உட்தோலையும் (Dermis) பாதிக்கிறது. இந்தவகைப் புண் அதிக வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்தும். எரிச்சல் அதிகமாகவும், தோல்பகுதி முற்றிலும் உரிந்து கொப்பளமும் ஏற்படும். கொப்புளங்கள் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு உருவாகும். அதன் தோற்றம் மோசமாக சில நாட்கள் ஆகும். இதற்கு மருத்துவ உதவி அவசியம். இவை தாமாக ஆறாது. அந்தக் கொப்புளங்களை வீட்டில் உடைப்பது கூடாது.
மூன்றாவது டிகிரி இந்த வகை மேற்கூறிய இரண்டு பகுதிகளையும் தாண்டி அதற்குக் கீழிருக்கும் கொழுப்புப் பகுதிவரை பாதிக்கப்படுவதால் ஏற்படுவது. தீவிரம் அதிகமாகி வலியும் அதிகம் இருக்கும். ஒரு சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி குறையவும் வாய்ப்புண்டு. நமைச்சல் அல்லது குடைச்சல் ஏற்படலாம். தசைகளும் நரம்புகளும் பாதிக்கப்படலாம். இவற்றுக்குக் கண்டிப்பாக மருத்துவ உதவி அவசியம்.
நான்காவது டிகிரி இது தோலை முற்றிலுமாக பாதித்துவிடும். நரம்புகள், தசை கருகித் தோல்பகுதி கருப்பாகி விடும். வலி இருக்காது. உணர்ச்சி அறவே போய்விடும். பெரும்பாலும் ரசாயன வகைத் தீப்புண்கள் இந்த வகையைச் சேரும். இதற்கு ஒட்டறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) தேவைப்படும். தோல் பதித்தல் (Skin Graft) அல்லது மீட்டுருவாக்கம் (Reconstruction) தேவைப்படும்.
உடலில் எந்தப் பகுதியில், எந்த அளவுக்கு, எவ்வளவு தீவிரமான தீக்காயம் என்பதைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். அவரவர் உள்ளங்கை அளவு காயத்தை ஒரு சதவிகிதம் என அளவுகொள்வர். அதிக சதவிகிதம் காயங்கள் இருந்தால், முகம், கழுத்து, மார்புப் பகுதிகளில் காயங்கள் இருந்தால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிவரும். |
|
பின்விளைவுகள் அதிகப் பகுதி தீப்புண்ணால் பாதிக்கப்பட்டால் நீர் குறைந்து திசுவறட்சி (dehydration) ஏற்படலாம். உடலின் தட்பவெப்பம் மாறி வெப்பக்குறைவு (hypothermia) ஏற்படலாம். தோலில் நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கலாம் அதனால் சீழ் பிடிக்கலாம். தோல் நன்றாக ஆறும்வரை அதைப் பாதுகாக்க வேண்டும். சேதம் அதிகமாக இருந்தால் நல்ல தோல் பகுதியை எடுத்துப் பதிக்கும் அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும்.
முதலுதவி தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியைக் குளிர்ந்த நீரில் காட்ட வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடும் நீரில் காட்டுவது நல்லது. கூடுமானவரை ஐஸ் வைப்பதைத் தவிர்க்கவும். தீப்புண்ணின் தீவிரம் தெரியாதபோது ஐஸ் இரத்த ஓட்டத்தைத் குறைக்க வல்லது. தீவிரம் குறைவாக இருந்தால், நுண்ணுயிர்க்கொல்லி (antibioitc) களிம்பு அல்லது கற்றாழை (Aloe) கிரீம் தடவலாம். பேண்டேஜ் துணியால் அந்தப் பகுதியை லேசாக மூடி வைக்கலாம். அதிக அழுத்தம் கூடாது. கொப்புளங்களை உடைக்கக் கூடாது. முகம், கழுத்து, மார்புப்பகுதி, பாதிக்கப்பட்டால் மூச்சு தடைப்படும் அபாயம் உள்ளது. கை, தொடை போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டால் மருத்துவரை நாடவேண்டும். சில நேரங்களில் நெருப்பு உடனடியாக அணைக்கப்பட்டாலும், புகையினால் சில பாதிப்புகள் ஏற்படும். இருமல், மூச்சு வாங்குதல் ஏற்படலாம். கார்பன் மோனாக்ஸைடு அதிகமானால் மனக்குழப்பம், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இவற்றுக்கும் உடனடி மருத்துவ உதவி அவசியம்.
தீர்வுகள் Silver Sulfadiazine என்ற கிரீம் தீப்புண்களுக்கு வழங்கப்படும். இதைத் தடவிக் கட்டுப் போடவேண்டும். தீவிரம் அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை நிபுணர் புண்களுக்குச் சிகிச்சை வழங்குவார். இறந்த தோலை உரித்துப் புதுத்தோல் உருவாக உதவுவார். சில சமயம் மாற்றுத் தோல் அறுவை சிகிச்சை (skin grafting) தேவைப்படும். புண் ஆறினாலும் தசைகள் இறுகி அதனால் வேலை செய்வது கடினமாகலாம். அல்லது மூட்டு வேலை செய்ய சில நாட்கள் ஆகலாம்.
தவிர்ப்பது எப்படி? 1. அடுப்பில் வேலை செய்யும்போது முழு கவனம் அதிலேயே இருக்கவேண்டும். கொதிக்கும் நீரை அல்லது பாத்திரத்தைக் கையாளும் போது கவனம் தேவை. அவன் அல்லது நுண்ணலை அடுப்புப் (Microwave) பாத்திரங்களைக் கையாளும் போதும் கவனம் அவசியம். 2. சிறு குழந்தைகளைக் கண்காணிக்கும் போது கூடுதல் கவனம் தேவை. குழந்தையை இடுப்பில் வைத்தபடி அடுப்பில் வேலை செய்வதைத் தவிர்க்கவும். 3. துணிகளை இஸ்திரி செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். மின்சார வேலைகளிலும் அதிக கவனம் அவசியம். குறிப்பாக ஈரம் சேராமல் கவனிக்கவும். மின்சார அல்லது ரசாயன விபத்துகள் உயிருக்கு ஆபத்தாக முடியலாம். 4. நெருப்பு இருப்பதை உணர்த்தும் அலாரம் சரியாக வேலை செய்கிறதா என்று கவனிக்கவும். நாம் தாளிக்கும் போதெல்லாம் அவை சத்தம் போடுகிறது என்பதற்காக பேட்டரியைக் கழற்றி வைக்கும் மூடத்தனம் வேண்டாம். நம்மைக் கண்காணிக்கத்தான் அந்த அலாரம் என்பதைக் கருத்தில் கொள்ளவும். 5. நெருப்பைப் பற்றிய பாதுகாப்பு உணர்வைச் சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுத்துங்கள். அதையும் மீறித் தீப்புண் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|