Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டாலஸ்: நூறாயிரம் டாலர் நிதி திரட்டிய 'வள்ளியின் காதல்'
அரங்கேற்றம்: ஷ்வேதா ஐயர்
பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்'
அரங்கேற்றம்: திவ்யா லக்ஷ்மணன்
அரங்கேற்றம்: அஹல்யா பிரபாகரன்
அரங்கேற்றம்: நடனமணிகள் ஐவர்
அரங்கேற்றம்: ஷில்பா நாராயணன்
அரங்கேற்றம்: திவ்யா ராமன், ஸ்ருதி ரெட்டி
அரங்கேற்றம்: அஷ்மிதா, ஹர்ஷினி
அரங்கேற்றம்: ஷிவானி அனந்த்
அரங்கேற்றம்: ராதிகா பாலேராவ்
அரங்கேற்றம்: சிவு பழனியப்பன், சாமு பழனியப்பன்
வாஷிங்டனில் புறநானூறு மாநாடு
- சுபாகர் சபாபதி|அக்டோபர் 2013|
Share:
அமெரிக்கத் தலைநகரின் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பல அரிய பணிகளைச் செய்து வருகின்றது. இதன் 'இலக்கிய வட்டம்' இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடியும், பல்வழித் தொலைபேசியிலும் (Conference call) திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைப் படிக்க வழி செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களில் விநாடி-வினா நடத்துகிறார்கள். தமிழிசை நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகின்றனர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, இந்த வருடம் ஆகஸ்ட் 31-செப்டம்பர் 1 தேதிகளில் 'புறநானூறு: பன்னாட்டு மாநாடு' ஒன்றை வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து நடத்தியது. மேரிலாந்து மாநிலத்தில் சில்வர் ஸ்ப்ரிங் என்ற ஊரில் நடந்த இந்த மாநாடு புறநானூற்றை அலசி, ஆராய்ந்து, ரசிக்க ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது. அமெரிக்கா தவிரக் கனடாவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சுமார் 350க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டிற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள்: செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரும், ஒப்பிலக்கிய ஆய்வாளருமான பேரா. மருதநாயகம், திரைப்பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, தமிழிலக்கிய ஆய்வாளர் பேரா. முருகரத்தினம், சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் திருமதி. வைதேகி ஹெர்பர்ட், பண்டைத் தமிழிலக்கிய ஆய்வாளர் முனைவர் அறிவு நம்பி, கவிமாமணி இலந்தை இராமசாமி. தவிர, அமெரிக்காவில் வசிக்கும் சிலரும் புறநானூறு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கவும், உரையாற்றவும் அழைக்கப்பட்டிருந்தனர்.புறநானூற்றுப் பாடல் ஒப்பிக்கும் நிகழ்ச்சியுடன் கலக்கலாகத் தொடங்கியது மாநாடு. ஆறிலிருந்து பன்னிரண்டு வயதுக்குள்ளான சிறார் ஒவ்வொருவரும் சுமார் பத்துப் புறநானூற்றுப் பாடல்களை ஒப்பித்தது அபாரம். இன்னொரு நிகழ்வில், செய்யுளைச் சொல்லி விளக்கமும் இளந்தமிழில் கொடுத்தனர். முதல் நாளின் "பண்ணிசைப் போட்டியி"லும், இரண்டாவது நாளின் "தமிழிசையில் புறநானூறு" நிகழ்ச்சியிலும் மாணவ-மணவியர்கள் தம் இன்குரலில் "உண்டாலம்ம இவ்வுலகம்", "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" போன்ற எளிய, ஆழமான கருத்துக்கொண்ட புறநானூற்றுப் பாடல்களைக் கர்நாடக இசையில் பாடி அழகூட்டினர். இவர்களுக்கான விநாடி-வினா நிகழ்ச்சியில், "தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் எதைப்பற்றியது?", "விறலி என்றால் பொருள் என்ன?", "புறநானூற்றை முதலில் பதிப்பித்தவர் யார்?", "பாணர் எனப்படுபவர் யார்?", "தன் முரசு கட்டிலில் படுத்துறங்கிய மோசி கீரனாருக்கு விசிறி வீசிய சேரமன்னனின் செயல் காட்டும் பொருள் என்ன?" என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கூறினர். புறநானூற்றின் எண்ணிக்கையைக் கேட்டபோது ஒரு மாணவி "மொத்தம் 400 பாடல்கள்; ஆனால் 398தான் முழுமையாகக் கிடைத்துள்ளன" என்று கூறி அசர வைத்தார்!

புறநானூறு குறித்த கட்டுரை வாசிப்புகளும், உரைகளும் எல்லோரையும் கவர்ந்தன. "புறநானூற்று காலத்தில் சாதிகள் இருந்தனவா?" என்ற தலைப்பில் திரு. சொர்ணம் சங்கர் வழங்கிய கட்டுரை சிறப்பாக இருந்தது. "மேலோட்டமாகப் பார்த்தால் சாதிகள் சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றன என்று எண்ண வைக்கும்; ஆனால் பாடல்களின் சொற்பிரயோகங்களை வைத்து மனிதன் பிறப்பால் பாகுபடுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது" என்பதை ஆராய்ந்து விளக்கினார் டெக்சாஸைச் சேர்ந்த தமிழறிஞர் திரு. பழனியப்பன். புறநானூற்றின் காலத்தைத் துல்லியமாக ஆராயும் அகழாய்வுகள் பற்றி, குறிப்பாக, அண்மையில் ஏற்பட்டிருக்கும் அறிவியல் வழிகளில் ஆராயும் திரு. ராஜ் முத்தரசனின் கட்டுரை ஒரு புதிய கோணத்தைக் காண்பித்தது. "சமீபத்திய ஆய்வுகள்படி, புறநானூற்றில் சுமார் 26 பாடல்களில் குறிப்பிடப்படும் குறுநில மன்னன் நெடுமானஞ்சியின் காலம் கி.மு.490" என்கிறார் இவர்.

நீர்வளம் பெருக்குதல், எளிமையாக வாழ்தல், வரி வாங்குவதில் கடினம் கொள்ளாமை போன்றன இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் காணக் கிடைப்பதைத் திருமதி. மேகலா ராமமூர்த்தி எடுத்துக்காட்டினார். புறநானூற்றின் வாழ்த்து முறைகள், அஞ்சாமைப் பண்புகள், சமூக விழிப்புணர்வு, வாழ்வியல் கோட்பாடுகள், உவமைச் சிறப்புக்கள் மற்றும் கவிதையியல் ஆகியவை பற்றிக் கவிஞர். இலந்தை இராமசாமி, திரு. நாகலிங்கம் சிவயோகன், திருமதி. சரோஜா இளங்கோவன், முனைவர். முருகரத்தினம், பேரா. வாசு ரங்கநாதன் ஆகியோர் பேசினர்.
'2000 ஆண்டுகளுக்கு முந்தைய நூலை இப்போது கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன?" என்ற கேள்விக்கு, மையக் கருத்துரை வழங்கிய முனை. மருதநாயகம் தன் உரையில் பதிலளித்தார். "தன் சரித்திரத்தைத் தெரியாதவன், தவறுகளை மீண்டும் செய்யக்கூடியவன்" என்றும், "ஒவ்வொரு தலைமுறையும் பழைய இலக்கியங்களை மீண்டும் தன் போக்கில் மறுவிளக்கம் செய்ய வேண்டும்" என்றும் அறிஞர்கள் சொல்வதைக் குறிப்பிட்டார் அவர். இன்னொரு உரையில், தூதுப்பாடல்கள், இரங்கற்பாக்கள், பள்ளியெழுச்சிப் பாடல்கள், மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிக்கும், ஆண்டாளின் திருப்பாவைக்கும் தூண்டுகோலாகப் புறநானூறு அமைந்தது என்றார். "புறநானூற்றுச் சமுதாயம் முற்றிலும் ஏற்றத்தாழ்வுகளற்ற ஓர் இலட்சிய சமுதாயம் (a perfect, absolute egalitarian society) என்று சொல்ல முடியாது; ஆனால் அக்கால கிரேக்க, ரோம மற்றும் யூத சமுதாயங்களுடன் ஒப்பிட்டால் ஏற்றத்தாழ்வுகள் புறநானூற்றுச் சமுதாயத்தில் மிகக்குறைவு" என்றார். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" போன்ற உலகத்தாரோடு நட்புப் பாராட்டும் ஓர் உயர்ந்த, பரந்த மனப்பாங்கை வேறெந்த உலக இலக்கியத்திலும் காணமுடிவதில்லை" என்று திரு. ஜார்ஜ் ஹார்ட் (கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்) குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டினார்..

"புறநானூறு பெரும்பாலும் வீரம் பற்றியும் மன்னர்கள் குறித்தும் பாடப்பட்டது" என்ற பரவலான கருத்தை மறுத்தார் முனைவர்.அறிவு நம்பி. ஆதாரமாக, "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" போன்ற வரிகளைச் சுட்டும் அவர், "அவனைப் பற்றி அவர் பாடியது" என்று கொடுக்கும் அரசனை 'அவன்' என்றும், கவிஞனை 'அவர்' என்றும் வழங்கிய சங்ககால வழக்கை நினைவூட்டி, கவிஞர்களுக்கு அக்காலத்தில் வழங்கிய மதிப்பையும் கோடிட்டுக்காட்டினார்.

புறநானூற்றின் சிறப்புக்களை மட்டுமன்றி, அதில் காணப்படும் இக்காலத்துக்கு ஒவ்வாத சில வழக்கங்களையும் சுட்டிக்காட்டினர் முனை. பிரபாகரனும் திருமதி. சரோஜா இளங்கோவனும். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம், ஔவையார், மன்னன் அதியமான் தன்னோடு கள் பகிர்ந்துண்டதைச் சொல்வது, அடிக்கடி அரசர்களிடையே நடந்த போர்கள் ஆகியவை பற்றிச் சொல்லும் பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டார்கள்.

புறநானூற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்துவரும் பிரபாகரன், வைதேகி ஹெர்பெர்ட் ஆகியோரின் தமிழ்ச்சேவையை அறிமுகப் படுத்துவதாகவும் இந்த மாநாடு அமைந்தது. இருவருமே புறநானூற்றுப் பாடல்களின் எளிய விளக்கங்களைப் புத்தக வடிவில் கொண்டுவந்திருக்கிறார்கள்; வைதேகி ஹெர்பெர்ட்டின் புத்தகம் ஆங்கிலத்திலும் விளக்கம் சொல்கிறது. கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகம் இவரது மொழிபெயர்ப்புகளுக்காக இவரைக் கௌரவித்திருக்கிறது. 'தமிழ் இலக்கியங்கள் ஒரு சாதாரணக் குடும்பத் தலைவியான தன்னை எப்படிப் பரவசப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டுசெல்லத் தூண்டியது' என்பதை விளக்கினார். "எனக்கு மேடைப் பேச்செல்லாம் வராது; ஆனால் என்னுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தால் உங்களுக்கும் இலக்கிய ஆர்வம் தொற்றிக்கொள்ளும்; குறைந்தது இரண்டு புறநானூற்றுப் பாடல்களை நீங்கள் ரசிக்கும்படிச் செய்துவிடுவேன்" என்று இவர் சொன்னபோது அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.மாநாட்டின் மற்றொரு அம்சம், சுமார் 48 பேர் பங்கேற்ற புறநானூற்று விநாடி-வினா நிகழ்ச்சி. இதனைத் திரு. பீட்டர் யெரேணிமூஸ் மற்றும் திரு. குழந்தைவேல் இராமசாமி சிறப்பாக வடிவமைத்திருந்தனர்.

மாநாட்டுக்கு முன்னரே புறநானூறு ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளுக்கு முதல் பரிசாக 1000 டாலர், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளாக முறையே 500, 250 டாலர் வழங்கப்பட்டன. புறநானூற்றுக் காட்சிகளை வடிக்கும் ஓவியப் போட்டியும் நடந்தது. மாநாட்டுக்கு வண்ணம் தெளித்தாற்போல், 'முத்தமிழ் முழக்கம்', 'வீரம்' மற்றும் 'சிவகாமியின் சபதம்' என்ற நாட்டிய நாடகங்கள் நடந்தேறின. செல்வி. பாரதி மலர்ச்செல்வன் பாடிய 11 புறநானூற்றுப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. புறநானூற்றுச் சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய 'மாநாட்டு மலர்', முனை. பிரபாகரன் மற்றும் திருமதி. வைதேகி ஹெர்பெர்ட் எழுதிய புறநானூற்று விளக்கவுரை நூல்கள் ஆகியனவும் வெளியிடப்பட்டன.

கருத்தாய்வை நெறிப்படுத்திய கவிஞர் அறிவுமதி, அமெரிக்கத் தலைநகரில் தெரியும் தமிழார்வத்தில் ஒரு சிறிதளவாவது தமிழகத்தில் இருந்தால் தமிழ் எவ்வளவு சிறப்புப்பெறும் என்று வியக்கிறார். மாநாட்டுப் புரவலர் திரு. பாலகன் ஆறுமுகசாமி "புறநானூற்றுக்கு மட்டும் உலக அளவில் மாநாடு நடத்தினால் போதாது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கும் மாநாடு நடத்த வேண்டும்; அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, நம் கடமையும் ஆகும்" எனக் கூறினார்.

வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜான் பெனடிக்ட் பேசுகையில், "புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களை ஆவணப் படங்களாகத் தாயாரிக்க வேண்டும், தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கண்டிப்பாகத் தமிழ் படிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று சொன்னார். மேரிலாந்து மாநில வெளியுறவுத்துறைத் துணைச் செயலர் முனை. இராசன் நடராசன், மாநில ஆளுநர் மாண்புமிகு. மார்ட்டின் ஓ'மாலி அவர்களின் வாழ்த்துரையை வழங்கி, "இந்த வாரம், புறநானூற்று வாரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது" என்று புளகாங்கிதம் அடைந்தார்.

சங்கச் செயலாளர் திருமதி. கல்பனா மெய்யப்பன் கூறிய நன்றியுரையுடன் முடிவுற்ற இந்தப் புறநானூற்று மாநாடு, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்திய சங்ககாலப் புலவர்களுடன் உலாவந்த இனிய உணர்வை வழங்கியது. அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் அரிய வாய்ப்பாகவும் அமைந்தது.

சுபாகர் சபாபதி,
வாஷிங்டன் மற்றும் செந்தில் முருகன், மேரிலாந்து
More

டாலஸ்: நூறாயிரம் டாலர் நிதி திரட்டிய 'வள்ளியின் காதல்'
அரங்கேற்றம்: ஷ்வேதா ஐயர்
பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்'
அரங்கேற்றம்: திவ்யா லக்ஷ்மணன்
அரங்கேற்றம்: அஹல்யா பிரபாகரன்
அரங்கேற்றம்: நடனமணிகள் ஐவர்
அரங்கேற்றம்: ஷில்பா நாராயணன்
அரங்கேற்றம்: திவ்யா ராமன், ஸ்ருதி ரெட்டி
அரங்கேற்றம்: அஷ்மிதா, ஹர்ஷினி
அரங்கேற்றம்: ஷிவானி அனந்த்
அரங்கேற்றம்: ராதிகா பாலேராவ்
அரங்கேற்றம்: சிவு பழனியப்பன், சாமு பழனியப்பன்
Share: 
© Copyright 2020 Tamilonline