|
|
|
|
இதுவரை.... ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம், விற்பதா-வளர்ப்பதா, ஆராய்வதா-ஆரம்பிப்பதா, விமர்சகர்களின் முக்கியத்துவம் என்பவற்றைப் பற்றிப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்!
*****
கேள்வி: நான் எனது நிறுவனத்தைச் சமீபத்தில் ஆரம்பித்துள்ளேன். தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து வருகிறது. ஆனால் என் ஆலோசகர்களும், தனிமூலதனத்தாரும் வணிகரீதியைப் (business model) பற்றி குடைந்து எடுக்கிறார்கள்! அதைப்பற்றி நான் இப்போதே கவலைப்படுவானேன்? என் தொழில்நுட்பம் இன்னும் முன்னேறி அதை விற்பொருளாக்கும் தருணத்தில் அதையெல்லாம் பற்றி யோசித்தால் போதாதா? என்னைக் குடையும் அன்பர்களை நான் மறுதலித்துவிட்டு நிம்மதியாகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முழுமையாக முனைவது எப்படி? கதிரவனின் பதில்:இந்தக் கேள்வியை நான் அடிக்கடி சந்திக்கத்தான் நேர்கிறது! ஆரம்பநிலை நிறுவனர்களில் பலர் ஆரம்ப காலத்தில் தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும், வணிகரீதியைப் பற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறார்கள். மூலதனத்தாரிடம் கூடத் தங்கள் தொழில்நுட்பம் எத்தனை கவர்ச்சிகரமாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளத்தான் முனைகிறார்களே ஒழிய, நிறுவனத்துக்கு வருமானம் எங்கிருந்து எவ்வளவு கிடைக்கும் என்ற திட்டத்தை மருந்துக்குக்கூடக் கலந்தாலோசிக்க முனைவதில்லை! (எல்லாரும் அப்படி என்று கூறவில்லை, பொதுவாக அப்படி என்று வைத்துக் கொள்வோமே)
வணிக சிந்தனையின் முக்கியத்துவம் எவ்வளவு என்பது உங்கள் நிறுவனத்தின் துறையைச் சார்ந்தது. நுகர்வோர் இணையதளங்களுக்கு இது சற்று காலம் பொறுத்துக் கருதப்படுகிறது. அதில் எவ்வளவு பயனர்கள் அந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள என்பதற்கே ஆரம்பகாலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், நிறுவன (enterprise) மென்பொருள், மென்பொருள் சேவை அல்லது அத்தகைய நிறுவனங்களின் தகவல்மையம் அல்லது மின்வலையைச் சார்ந்த நிறுவனம் ஆகியவற்றுக்கு முதலிலேயே வணிகரீதிச் சிந்தனை தேவைப்படுகிறது. முதலீட்டு நிறுவனங்களிலிருந்து பெருந்தொகை (சில மில்லியன் டாலர்) பெற வேண்டுமானால், இது அத்தியாவசியமாகிறது. ஆனால் ஒன்று சொல்வேன். எந்த நிறுவனமானாலும், வணிகரீதிச் சிந்தனை என்பது முன்பின் முரணான முந்திரிக்கொட்டையாகாது. அதிசீக்கிரம் சிந்தித்து விட்டோமே என்ற கவலைக்கே இடமில்லை. எவ்வளவு சீக்கிரம் சிந்தித்தாலும் அதற்கு ஓரளவாவது பலனுள்ளது. தொழில்நுட்பத்தை எந்தத் திக்கில் வளர்க்க வேண்டும் என்பதற்கும் உதவக்கூடும்.
எந்த ஆரம்பநிலை நிறுவனமானாலும், வருமானம் எப்படி வரும், எவ்வாறு பெருகி எப்போது வளர்ச்சி நிலையடைந்து முதலீட்டாருக்கு லாபமளிக்கும் வகையில் வெளியேற (exit) முடியும் என்று எப்போதாவது அறிந்தே தீர வேண்டியதுதானே! 2000-ஆம் வருட ஆரம்பத்தில் இணையதளங்களுக்கு இந்த குறிக்கோள் இல்லைதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சமீபத்தில் லின்க்ட்-இன் தவிர மற்ற இணையதளங்கள் பொதுப் பங்குச்சந்தையில் சரியாக விற்காததால் அத்தகு நிறுவனங்களின் வணிக வருமானப் பரிசோதனையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. (ஃபேஸ்புக் உட்பட – இப்போது வருமான வெற்றியால் ஃபேஸ்புக் பங்கு விலை தேறி வருகிறது என்பதும் லின்க்ட்-இன் பங்கு விலை நன்கு உயர்ந்துள்ளது என்பதும் நம் கருத்தோடுதானே ஒத்துப்போகிறது). |
|
நிறுவனங்களுக்கு விற்கும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு எப்போதுமே வணிக வருமான ரீதியான சிந்தனை முதலிலிருந்தே தேவைதான். முன்பு அது மிகத்தெளிவாக இருந்தது. பொருளை விற்பார்கள், பிறகு அதற்கேற்ற விலையை வாங்கிக் கொள்வார்கள். திருப்திகரமாக, மேலும் மேலும் இன்னும் பல நிறுவனங்களுக்கு அதே பொருளை விற்று அல்லது இன்னும் அதே நிறுவனங்களுக்கு மீண்டும் அதே பொருளையோ, சார்புடைய வேறு பொருட்களையோ விற்று வளர்ச்சி பெறுவார்கள். ஆனால் இப்போதோ இன்னும் பலப்பல விதமான வருமான வழிகள் வந்துவிட்டன.
மென்பொருளை ஒரே முறையாக விற்கலாம். அல்லது மாதத் தவணை முறையில் விற்கலாம். அல்லது தங்கள் தகவல் மையத்திலிருந்து சேவையாக அளித்து சந்தா பெறலாம். அல்லது மின்மேகத்தில் மென்பொருளை வைத்துச் சேவையளிக்கலாம். இதெல்லாம் சேர்ந்த கலவையாகவும் இருக்கலாம். இதைப்பற்றியெல்லாம் இம்முறை விவரிக்க இடமில்லை. அடுத்த பகுதியில் விவரிக்கிறேன். இப்போதைக்கு, நிறுவனங்களுக்கு விற்க முற்படும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு விற்பொருள் உருவாக்கினால் மட்டும் போதாது, வருமானத் திட்டம் பற்றியும் ஓரளவுக்காவது யோசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டால் போதும். திட்டத்தின் ஆழ்ந்த விவரங்களை விற்பதற்குச் சற்றுமுன் விவரித்துக்கொள்ளலாம்.
ஆனால் முன்பு கூறியபடி, நுகர்வோர் நிறுவனங்களுக்கு வருமான ரீதித் திட்டங்களை உடனே யோசிப்பது நூறு சதவிகிதம் அவசியமில்லை என்றாலும் ஆரம்பத்திலேயே அதைப்பற்றி யோசிப்பது சற்று நல்லதுதான். இந்த மாதிரி நிறுவனங்கள் நெட்ஃப்ளிக்ஸ் போன்று நுகர்வோருக்குச் சந்தாமுறை சேவையளிப்பதா, அல்லது கூகிள், யாஹூ, ஃபேஸ்புக் போன்று விலையின்றிச் சேவையளித்து விளம்பரதாரரிடமிருந்து வருமானம் திரட்டுவதா என்று யோசிப்பது நல்லது. அல்லது இரண்டுக்கும் இடையில் பொதுவாக சந்தாவற்ற சேவையளித்து, அதற்குமேல் பொருள்விற்பனை, அல்லது விளையாட்டுக்கள் இதுபோன்று வருமானம் திரட்டலாம். ஃபேஸ்புக் கூட ஸிங்கா (zynga) நிறுவனத்தின் விளையாட்டுக்களைத் தன் பயனர்களுக்கு விளையாடவிட்டு ஸிங்காவிடமிருந்து வருமானம் திரட்டியது. இப்போது அதைத் தவிர்த்து முழுக்கவும் விளம்பர ரீதியாகவும் நண்பர்களுக்குப் பரிசு விற்பனையிலும் இறங்கிவிட்டது. இந்த மாற்றம், நமது அடுத்த விஷயத்துக்கு முன்காட்டி!
அந்த முக்கியமான விஷயம்: முதலிலேயே வருமானம் மற்றும் லாபநஷ்டத் திட்டங்களை யோசித்து வைத்தால், சிறிது சிறிதாக மாற்றிப் பரிசோதனை செய்து பார்த்து சரியான திட்டத்தை அடையக்கூடும். நெட்ஃப்ளிக்ஸை இதற்குக்கூட உதாரணமாகச் சொல்ல முடியும். முதலில் திரைத்தட்டுக்களை மட்டும் வாடகைக்கு அனுப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சிறிது சிறிதாக மாற்றி இப்போது அதே சந்தாதாரர்களுக்கு பெரும்பாலாக மின்வலை மூலம் மின்னருவியாக அனுப்பும் வணிகரீதிக்கு மாறியுள்ளது. அதற்கும் மேல் தானே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்தளிக்க ஆரம்பித்து HBO நிறுவனத்துடன் போட்டியில் இறங்கியுள்ளது. அந்த ரீதிக்குப் போட்டியிடும் அமேஸான் நிறுவனம் புத்தகங்களை மின்வலைமூலம் விற்பதில் முதலிலேயே ஆரம்பித்து வருமானத்தை வளர்த்தது தெரிந்தே அல்லவா?
மேற்கூறிய விவரங்களிலிருந்து எந்த வகை ஆரம்பநிலை நிறுவனமாயிருப்பினும், ஆரம்பத்திலிருந்தே வருமானத் திட்டத்தை யோசிப்பது நல்லதுதான் என்பது புரிந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பகுதியில் சற்றுமுன்பு குறிப்பிட்டுள்ளபடி வெவ்வேறு வகையான வருமான மற்றும் லாப நஷ்டத் திட்டங்களைப் பற்றி விவரிக்கலாம். அதையடுத்து வேறொரு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பார்ப்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|