Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2013|
Share:
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூருக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருப்பட்டூர். பிரம்மனின் சாபம் விமோசனமான விசேஷ திருத்தலம் திருப்பட்டூர். பிரம்ம சாபத்தை நீக்கியதால் இறைவன் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், இறைவி ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி. குருவுக்கு அதிதேவதையான பிரம்மாவின் சாபம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இத்தலம் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம், ஷண்முக நதி. தலவிருட்சம்: மகிழ மரம்.

ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், அடுத்து ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி. இந்த மண்டபத்தின் பெயர் வேத மண்டபம். அடுத்து சப்தஸ்வரத் தூண்களுடன் அமைந்துள்ள நாத மண்டபம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால், துவார பாலகர்களை வணங்கி பிரம்மபுரீஸ்வரரைத் தரிசிக்கலாம். கிழக்கு பார்த்த சன்னதியில் சுயம்புவாக ஈசன் எழுந்தருளியுள்ளார். மேலே தாரா பாத்திரம், நாகாபரணத்துடன் சதுர ஆவுடை கூடிய திருமேனி. தனிச் சன்னதியில் அன்னை ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி எழுந்தருளியுள்ளாள். பிரம்ம தேவன் அன்னையை வழிபட்டுத் தன்னுடைய 'தேஜஸை' திரும்பப் பெற்றதால் அன்னை ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி ஆகிறாள்.

ஆலயத்தின் வடபுறத்தில் நான்கு படித்துறைகள் கொண்ட தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தால் பிரம்மா ஈசனை 12 முறை வணங்கி அபிஷேகம் செய்து வழிபட்டதால் இது 'பிரம்ம தீர்த்தம்' எனப்படுகிறது. ஆலயத்தின் வெளியே வடகிழக்கு மூலையில் பகுள தீர்த்தம் உள்ளது. ஷண்முக நதி ஆலயத்தின் கிழக்கே 500 மீட்டர் தொலைவில் வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது. இது கங்கைக்குச் சமமான நதியாகப் போற்றப்படுகிறது. காரணம், கங்கை மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் நதியாகும். தல விருட்சமான மகிழ மரம் மிகவும் பழமை வாய்ந்தது. இது அம்மன் சன்னதியின் வடபுறம் அமைந்துள்ளது. இத்தலம் சித்தர்கள் போற்றித் தவமிருந்து வழிபாடு செய்த தலமாகும். அதற்குச் சான்றாக சித்தர்கள் வாழ்ந்த இடத்திலெல்லாம் அமைந்திருக்கும் 'பாதாளேஸ்வரர்' இங்கும் தனிச்சன்னதியில், தனி விமானத்துடன் எழுந்தருளியுள்ளார்.

ஆலயத்தின் சிறப்பு மூர்த்தியாக விளங்குபவர் பிரம்மா. இவர் கிழக்கு நோக்கிய தனிச் சன்னதியில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் கனகம்பீரமாகக் காட்சி தருகிறார். இவர் சன்னதிக்குத் தென்புறம் பதஞ்சலி முனிவர் காட்சி தருகிறார். இவர் 'நித்ய கைங்கர்யான்' என அழைக்கப்படுகிறார். இங்கமர்ந்து பக்தர்கள் தியானம் செய்கின்றனர். அருகே சப்தமாதாக்கள் சன்னதி, பிரம்மன் சன்னதிக்கு அருகே தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி சன்னதிகள் காணப்படுகின்றன.
பிரம்மனுக்கு ஆதிகாலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் செருக்குற்ற அவர், ஈசனுக்கும் ஐந்து தலை, எனக்கும் ஐந்து தலை என ஈசனை மதிக்காது அகங்காரத்துடன் இருந்தார். சினம் கொண்ட ஈசன், பிரம்மனின் தலையில் ஒன்றைக் கொய்ததுடன், 'தேஜஸ் இழக்கக் கடவாய்' என்று சாபமுமிட்டார். பிரம்மனும் சிவ சாபத்தால் படைப்பாற்றலை இழந்தார். தனக்குச் சாபவிமோசனம் திருப்பட்டூரில்தான் என்பதை உணர்ந்த பிரம்மா, இங்கு வந்து 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பல்லாண்டு காலம் வழிபட்டார். அதனால் மனமகிழ்ந்த ஈசன் அவரது படைப்பாற்றலைத் திரும்ப வழங்கியதுடன் கூடுதலாக ஒரு வரமும் தந்தருளினார். “எல்லோருடைய தலையெழுத்தையும் எழுதும் உன் தலையெழுத்தை இத்தலம் மாற்றியது போல், இங்கு வந்து உள்ளன்போடு வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர்களுடைய தலையெழுத்தை நீ மாற்றி அருள்வாயாக” என்றும், ”விதி இருப்பின் விதி கூட்டி அருள்க” என்றும் வரமருளினார்.

அதன்படி இத்தலம் சர்வதோஷ நிவாரணத் தலமாக விளங்குகிறது. திங்கள், வியாழக் கிழமைகளிலும் திருவாதிரை, சதயம், புனர்பூசம் மற்றும் நம்முடைய ஜென்ம நக்ஷத்திரத்திலும் இங்கே வழிபாடு செய்தல் சிறப்பு. இத்தலத்திற்கு வந்து ஈசன், அம்பிகை, பிரம்மா ஆகியோரை தரிசித்து 36 தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும். பிரம்மாவை நேருக்கு நேர் நின்று தரிசித்தாலே போதும் ரோகங்களும், தோஷங்களும் விலகி நன்மை ஏற்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் நந்தவனத்தில் தனித்தனிச் சன்னதிகளில் அமைந்துள்ளன. அவற்றை வழிபடுதல் மேலும் சிறப்புத் தரும். பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. பூர நக்ஷத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனியில் மூன்று நாட்கள் சூரிய பகவான் நேரடியாக ஈசனை வழிபடும் காட்சி காணக்கிடைக்காதது. திருப்பட்டூர் தரிசனம் திருப்பம் தரும் என்பது நிதர்சனமான உண்மை.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline