|
|
|
|
காவிரிக்கரையில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் முக்கியமானவை ஐந்து. ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், அப்பால ரங்கம் (கோயிலடி), மத்திய ரங்கம் (கும்பகோணம்), பரிமள ரங்கம் (திருவிந்தளூர் என்னும் திரு இந்தளூர்). நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருத்தலம் திருவிந்தளூர். இதனைத் திருவழுந்தூர் என்றும் கூறுவர். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாளை இங்கே தரிசிக்கலாம். தாயாரின் திருநாமம் ஸ்ரீ பரிமளரங்க நாயகி, ஸ்ரீ சுகந்தவன நாயகி. ஸ்ரீ புண்டரீகவல்லி, ஸ்ரீ சந்திர சாப விமோசனவல்லி என்றும் பெயர்கள் உண்டு. தாயார் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். ஸ்ரீ பரிமள ரங்கநாதர் நான்கு திருக்கரங்களுடன் வீரசயனக் கோலத்தில் பச்சைநிறத் திருமேனியுடன் காட்சி தருகிறார். ரங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனும், பாதத்தில் சந்திரனும், நாபிக்கமலத்தில் பிரம்மனும் பூஜிக்கின்றனர். தென்புறத்தே கங்கையும், வடபுறத்தில் காவிரித்தாயும் காட்சி தருகின்றனர். அம்பரீஷன் பெருமாளின் திருவடியை ஆராதிக்கின்றார். நறுமணம் வீசும் மலர்க்காடான இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளியதால் ஸ்ரீ சுகந்தவன நாதர் என்ற பெயரும் உண்டு.
உற்சவர், உபய நாச்சியாருடன் சிம்மாசனத்தில் காட்சி தருவது சிறப்பு. அருகே சந்தான கோபாலன் அழகுறக் காட்சி தருகிறார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று மது, கைடபர்களை அழித்து, அவர்கள் அபகரித்துச் சென்ற வேதங்களை மீட்டு அவற்றிற்கு (புனிதம்) பரிமளம் அளித்ததால் எம்பெருமானுக்கு ஸ்ரீ பரிமள ரங்கநாதர் எனப் பெயர். க்ஷயரோகத்துக்கு ஆளான சந்திரன் இத்தலத்தில் தவம் இருந்து பெருமாளின் அருளால் விமோசனம் அடைந்ததால் இத்தலத்திற்கு இந்துபுரி என்றும் பெயர் உண்டு. நாளடைவில் இது 'இந்தளூர்' ஆயிற்று. சந்திரன் நீராடிய திருக்குளம் 'இந்து புஷ்கரணி'. இதில் நீராடிப் பரிமள ரங்கநாதரை வழிபட சந்திரதோஷம் நீங்கும் என்பர். சந்திரன் தனது வழிபாட்டை பங்குனி மாத பிரம்மோற்சவ காலத்தில் செய்ததால் இன்றும் பங்குனியில் இவ்வாலயத்தில் பிரம்மோற்சவம் நடக்கிறது. காவிரியில் நீராடினால் கங்கையில் நீராடியதைவிட அதிகப் பலன் கிடைக்கும் என தல வரலாறு கூறுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 'சந்தான கோபாலன்' சிறிய விக்கிரகத்தை மடியில் வைத்து பிரார்த்தித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தை எழுப்பியது அம்பரீஷன். கருவறை விமானம் வேதாமோத விமானமாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். திருமங்கை ஆழ்வார் இக்கோயிலுக்கு வந்தபோது சன்னதியின் கதவுகள் திறக்கவில்லை. வருந்திய ஆழ்வார், “அடியாருக்காகத்தானே நீ கோயில் கொண்டுள்ளாய்? அப்படியிருக்கக் காட்சி தராமல் இருப்பது நியாயமா? நீயே உனது அழகைக் கண்டு வாழ்த்திக் கொள்” என்று பாடினார். இதை “நிந்தாஸ்துதி” என்பர். இதன் பின்னரே பெருமாள் திருமங்கை ஆழ்வாருக்குக் காட்சி அளித்தாராம். |
|
ஆசை வழுவா தேத்தும் எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத் தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு, காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான் வாசி வல்லீர் இந்தளூரீர்! வாழ்ந்தே போம்நீரே! (பெரியதிருமொழி-1331)
ஆலயத்தின் மகாசம்ப்ரோஷணத்திற்கு முன்னதாகத் திருப்பணி நடைபெற்றபோது பரிமள ரங்கநாதரின் மூர்த்திக்குத் தைலக்காப்பு நீக்கும்போதுதான் மூலவர் பச்சை மரகதக் கல்லால் ஆனவர் என்பது தெரியவந்ததாம். அதன்பின் மாதந்தோறும் உத்திரத்தன்று மூலவரின் திருமேனிக்குச் சந்தனாதித் தைலமும், திருமுகத்துக்கு புனுகு, ஜவ்வாதும் சாற்றப்பட்டு வருகிறது. பெருமாள், தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டுவரும் சாம்பிராணித் தைலம் ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தின் போது சாற்றப்படுகிறது
சித்திரை மாதப் பிறப்பின்போது பெருமாள் வீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சி. ஆடிப்பூரம், ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி பூஜை, விஜயதசமி, ஐப்பசித் தேர், மாசிமகம், பங்குனி பிரம்மோற்சவம், தீர்த்தவாரித் திருவிழா, வைகுண்ட ஏகாதசி என வருடந்தோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடந்து வருகின்றன. மக்கள் திரளாக வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|