|
|
|
|
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.
வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் மடடுமல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவ பூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் உங்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.
இப்போது ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!
*****
கேள்வி: என்னமோ குழு, குழுன்னு ஆரம்பநிலை மூலதனக்காரங்க அடிச்சுக்கறாங்களே, ஏன் அப்படி? என் புது யோசனை எவ்வளவு பிரமாதம்?! இருந்தாலும் கண்டுக்காம, நல்ல குழு வேணும்னு ரொம்பவே கேக்கறாங்களே? எங்கயாவது போய் முட்டிக்கலாம் போல இருக்கு! இந்த குழு ரகசியந்தான் என்ன, கொஞ்சம் விளக்குங்களேன்?
கதிரவன்: ஆஹா! இது ரொம்பவே முக்கியமான விஷயம். நிறுவனங்களை ஆரம்பிக்கும் முதன்முறை தொழில்முனைவோர் (first time entrepreneur) பெரும்பாலானோர், தங்கள் யோசனை மிக அபாரமானது, அதைப் போல் உலகில் யாருமே யோசித்திருக்க முடியாது, இந்த யோசனையை மட்டுமே தொழில்நுட்ப வழிமுறைக்குக் கொணர்ந்து வணிகரீதியாக்கி விட்டால் வானளாவிய வெற்றி கண்டு விடலாம் என்று மனப்பால் குடிப்பது சகஜம்! ஆனால் நடைமுறையில் நடப்பதோ முற்றிலும் வேறு! ஆரம்ப யோசனையை விட நிறுவனர் குழு (founding team), வணிகச்சந்தையின் மாற்றங்களைத் தொடர்ந்து கூர்ந்து ஆராய்ந்து வேண்டிய மாற்றங்களைச் செய்து, வெற்றிக்கான நிறுவனப் பண்பாட்டை வளர்த்து, வணிகரீதியாகவும் திறம்படச் செயல்பட்டால் தான் வெற்றி தேவதையின் கையால் மாலை சூட முடியும்!
<>
நிறுவனம் ஆரம்பிக்கும் போது அது வகுத்த வணிகத் திட்டம் (business plan) அது வளர்ந்து வெற்றிகரமாக வெளியேறும் (successful exit) வரை மாறாமல் இருப்பதென்பது மிக மிக அரிது. பெரும்பாலும், ஏதாவது எதிர்பாராத இடையூறு ஏற்படக்கூடும்; அல்லது வணிகரீதியாக தீடீர் மாறுதல் ஏற்படலாம்; அல்லது தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு நடைமுறையில் பலனளிக்காமல் போய், மாற்றங்கள் தேவைப்படலாம். இவ்வாறு வேறுபட்ட நிலைகளுக்கேற்பத் திட்டத்தை மாற்றாமல் பெரும் வெற்றிகண்ட நிறுவனமே இல்லை என்றுதான் கூற வேண்டும். அத்தகைய மாற்றங்கள் நிறுவனத்தின் பல அம்சங்களையும் பாதிக்கும். அதனால் நிறுவனத்தின் குழு திறம்பட செயலாற்றினால்தான் தேவையான மாற்றங்களை வெற்றிகரமாக கொண்டுவர முடியும். வணிகரீதியாக என்னென்ன மாற்றம் தேவை என்பதைச் சரியான தருணத்தில் கண்டறிவதே நிறுவன மேலாண்மைக் குழு ஒன்றுபட்டுச் செயல்பட்டால்தான் முடியும். |
|
தனிமரம் தோப்பாகாது என்பது மிகச் சரியான பழமொழி. ஒரு நிறுவனரால் மட்டுமே வென்றுவிட இயலாது. பல வெற்றிகரமான நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு வணிகரீதி தீர்க்கதரிசியும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் சேர்ந்த நிறுவனக் குழுவாவது இருந்துள்ளது. மைக்ரோஸாஃப்டின் கேட்ஸ்-ஆலன், ஆப்பிளின் ஜாப்ஸ்-வாஸ்னியாக் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றாலும், சற்றாவது வளர்ந்து வெற்றியடைந்த பலப்பல நிறுவனங்களும் நல்ல குழு முயற்சிகளே.
அது மட்டுமல்ல. ஒரு நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் பல கடினமான தருணங்களைச் சந்திக்க நேரும். முதன்முறையாக நிதி திரட்டு முன்பு மாதச் சம்பளம் கூட இல்லாமல் இயங்க வேண்டியிருக்கும். முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்கு முன் பல இடையூறுகள் உண்டாகக் கூடும். நிறுவனர்களின் குடும்ப நிலையிலும் இன்னல்கள் ஏற்படலாம். இவற்றையெல்லாம் சமாளித்து முன்னேற வேண்டுமெனில் மேலாண்மைக் குழு ஒருவருக்கொருவர் தூண்களாக, நண்பர்களாக உதவிக் கொண்டால்தான் முடியும். ஒரே ஒரு நிறுவனர் இருந்தாலோ, அல்லது குழுவினர் நன்கு சேர்ந்து செயல்படாவிட்டாலோ அத்தகைய இன்னல்களிலிருந்து மீள்வது கடினம். ஏன், நிறுவனமே முழுகிவிடக் கூடிய நிலைமை உண்டாகிவிடக் கூடும்.
பல ஆரம்பநிலை நிறுவனங்களின் நிறுவனர் குழுவில் உள்ளவர்கள் முன்பே ஒரே நிறுவனத்திலோ, விற்பனை-வாடிக்கையாளர் உறவுடனோ அல்லது தொழில் கூட்டாளி நிறுவனங்களிலோ ஒன்று சேர்ந்து பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அல்லது குடும்ப நண்பர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு ஒன்று சேர்ந்து இடையூறுகளைச் சமாளிக்கப் பழகியிருப்பார்கள். அதுவும், முன்பே ஓரிரு முறை நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி கண்டிருந்தால், அத்தகைய குழு இன்னும் திறம்படச் செயலாற்ற முடியும்.
அதனால்தான் ஆரம்பநிலை முதலீட்டார், ஆரம்பநிலை யோசனை மற்றும் திட்டத்தை விட நிறுவனத் தலைமைக் குழுவின் மீது பணயம் வைக்கின்றனர்.
ஆரம்பநிலை முதலீட்டார் முதலிலேயே நிறுவனம் ஆரம்பித்த அனுபவம், அல்லது நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே மேலாண்மைக் குழுவில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் மீது பணயம் வைத்து முதலிடவே மிகவும் விரும்புவர். அத்தகைய குழுவினர் வெற்றிகரமான அனுபவம் பெற்றிருப்பின் அது மிகவும் நல்லதுதானே! ஆனால், வெற்றியில்லை என்றாலும், முந்தைய தோல்வியிலிருந்து அவர்கள் நல்ல பாடத்தைக் கற்றிருக்கிறார்கள் என்று அவர்களால் காட்ட முடிந்தால் அதுவும் முதலீட்டுக்குரிய குழுவாக இருக்கும். குறிப்பாக அத்தகைய தோல்வி 2001 அல்லது 2008ம் வருடம் போன்ற பொருளாதாரச் சீர்குலைவாலோ அல்லது அவர்களின் கைமீறிய வணிகரீதியான மாற்றங்களாலோ இருப்பின் இரண்டாம் வாய்ப்பளிக்க முதலீட்டார் சம்மதிப்பார்கள்.
இன்னொரு முக்கியமான குறிப்பு: நிறுவனக் குழு என்பது நிறுவனர்கள் மற்றும் மேலாண்மைக் குழுவினர் மட்டுமல்ல. நிறுவனத்தில் சேரும் முதல் பத்து பேர்கள் நிறுவனத்தின் DNA-வை அதாவது நிறுவனத்தின் ஆதாரப் பண்பாட்டையே நிர்ணயிக்கிறார்கள். அதனால் நிறுவனத்தில் முதலில் சேர்த்துக்கொள்ளும் தொழில்நுட்ப ஊழியர்களையும் மிக மிக கவனம் செலுத்தி அவர்களின் திறன் மட்டுமல்லாமல், மனோதிடம் மற்றும் குழுவுடன் ஒன்றுசேர்த்து பணி புரியக்கூடிய மனோபாவம் எல்லாவற்றையும் நன்கு கணித்துச் சேர்த்துக்கொள்வது முக்கியமாகிறது.
மேலே குறிப்பிட்டவற்றில் இருந்து ஆரம்பநிலை நிறுவனங்களுக்குக் குழு என்பது ஏன் மிக முக்கியம் என்பது புரிந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்து வேறு யுக்தி ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|