|
|
|
|
ஒருநாள் அரண்மனைப் பூங்காவில் மன்னர் கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனும் மாலை உலாச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காகம் ஒன்று மன்னர்மீது எச்சம் இட்டுவிட்டுப் பறந்து சென்றது. அதைப் பார்த்த தெனாலிராமன் சிரித்தான். உடனே கடும் கோபம் கொண்டார் மன்னர். "ராமா, நான் இந்த நாட்டின் மன்னன் என்பது தெரிந்தும் நீ சிரித்து என்னை அவமானப்படுத்தி விட்டாய். நாளைக் காலைக்குள் என்மீது எச்சம் இட்ட காக்கையை நீ பிடித்துக் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்ல; இந்த நாட்டில் எத்தனை காகங்கள் உள்ளன என்றும் நீ சரியாக எண்ணிச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உனக்கு சிறைத் தண்டனைதான்" என்று கூறிவிட்டு மன்னர் சென்றுவிட்டார்.
தெனாலிராமன் திகைத்துப் போனான். கணவன் வாடிய முகத்துடன் வருவதைப் பார்த்த அவன் மனைவி காரணம் கேட்டாள். ராமனும் நடந்ததைச் சொன்னான். உடனே அவன் மனைவி, "இதற்காகவா கவலைப்படுகிறீர்கள். நம் வீட்டிற்குப் பின்னால் சில காட்டுவாசிகள் தங்கியுள்ளனர். அவர்களிடம் நரி, காடை, கொக்கு, கௌதாரி எல்லாம் இருக்கின்றன. ஒரு காகத்தைப் பிடித்துத் தரச் சொன்னால் தந்து விடுவார்கள். அதை வாங்கிக் கொண்டு காலை அரண்மனைக்குச் செல்லுங்கள். அங்கே நான் சொல்கிறபடி நடந்து கொள்ளுங்கள்" என்று சொல்லி ராமனிடம் சில விஷயங்களைச் சொன்னாள்.
மறுநாள் காலை. காட்டுவாசிகள் பிடித்துத் தந்த ஒரு காகத்தையும், ஒரு ஓலைச் சுவடியையும் எடுத்துக்கொண்டு அரண்மனைக்குப் போனான் தெனாலிராமன். மன்னர் சபையினில் அமர்ந்திருந்தார். கையில் காகத்துடன் ராமனைப் பார்த்த அவர் மேலும் கோபத்துடன், "ராமா, காகத்தைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டாயா? நல்லது. இதுதான் அந்தச் செயலைச் செய்த காகம் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய், எப்படி மெய்ப்பிப்பாய்?" என்றார் கிண்டலுடன்.
உடனே ராமன், "மன்னா, மிகவும் கஷ்டப்பட்டுத் தேடி இந்தக் காகத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இது அந்தக் காகம் இல்லை என்பதை நீங்கள் உறுதியாகச் சொல்ல முடியுமா? ஏனென்றால் நீங்கள்தான் பாதிக்கப்பட்டவர். நீங்கள்தானே இதுபற்றிச் சரியாகச் சொல்ல முடியும்!" என்றான் பணிவாக. |
|
"எல்லா காகமும் ஒரே நிறத்தில் இருக்கும். எப்படி என்மீது எச்சமிட்ட காகம் இது என்று உறுதியாகச் சொல்ல முடியும்" என்று யோசித்த மன்னர், "சரி ராமா, இதை விட்டுத் தள்ளு. மொத்தம் நம் நாட்டில் தற்போது எத்தனை காகங்கள் இருக்கின்றன என்று சொல்லு. நீ சொல்லும் எண்ணிக்கையை நான் நம் காவலர்களை விட்டு எண்ணச் செய்து சரி பார்ப்பேன். எண்ணிக்கை சரியாக இல்லை என்றால் நிச்சயம் உனக்குச் சிறைதான்" என்றார்.
அதற்கு ராமன், "மன்னா, நம் நாட்டில் தற்போது ஒரு லட்சத்தி முப்பதாயிரத்து முன்னூற்றி நான்கு காகங்கள் இருக்கின்றன" என்றான்.
"சரி, அப்படியானால் அதை வீரர்களை விட்டு எண்ணி சரி பார்க்கச் சொல்கிறேன். எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் நீ தொலைந்தாய்" என்றார் மன்னர்.
உடனே ராமன், "உத்தரவு மன்னா. ஆனால் ஒரு விஷயம். நான் விடியற்காலையில் எழுந்து எண்ணியது இந்தத் தொகை. காகங்கள் அங்கும் இங்கும் இரைதேடிப் பறந்து திரிபவை. சில காகங்கள் உணவுக்காக வெளியூர் சென்றிருக்கலாம். சில காகங்கள் வெளியூரிலிருந்து உணவு தேடி நம் நாட்டிற்கும் வந்திருக்கலாம். ஆகவே நான் சொன்னதை விட எண்ணிக்கை குறைவாக இருந்தால், நம் நாட்டுக் காகங்கள் வெளியூர் சென்றிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுபோல நான் சொன்னதைவிட எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வெளியூர்க் காகங்கள் உணவு தேடி நம் நாட்டிற்கு வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றபடி நீங்கள் தாராளமாக நம் வீரர்களை விட்டு எண்ணிக்கையைச் சரிபார்க்கச் சொல்லலாம்" என்றான்.
ராமனின் சாமர்த்தியமான பதிலில் உண்மையும், நியாயமும் இருப்பதையும் இயல்பான ஒரு நிகழ்விற்குத் தான் கோபப்பட்டது சரியன்று என்பதையும் உணர்ந்தார் மன்னர். "ராமா, இந்த முறையும் நீ ஜெயித்து விட்டாய்! சரி வா, நாம் காலாற சற்று நடந்து விட்டு வரலாம்" என்று சொல்லிக் கிளம்பினார் மன்னர் தெனாலிராமனுடன்.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|