Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
அ. முத்துலிங்கம்
டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2013||(1 Comment)
Share:
டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆய்வு, பயிற்றல், கருத்தரங்கு எனப் பல வேலைகளில் இடையின்றி ஈடுபட்டிருப்பவரைத் தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...

கே: வரலாற்றுத் துறையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
ப: நான் பிறந்து வளர்ந்தது சிதம்பரத்தில். அது பாரம்பரியப் பெருமை மிக்க நகரம். கலை, நாட்டியம், சிற்பம் எனப் பலதுறை ஆர்வலர்கள் பல நாடுகளிலிருந்து அங்கு வருவார்கள். சிறுவயதிலேயே அது எனக்கும் தொற்றிக் கொண்டது. பள்ளியில் படித்துக் கொண்டே வேத பாடசாலையில் படித்தேன். படிப்பை முடித்த பின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. ஃபிசிக்ஸ் படித்தேன். அப்போது சர்.சி.பி. ராமசாமி ஐயர் துணைவேந்தராக இருந்தார். அவர் "நீ வேதம் படித்திருக்கிறாயே, சம்ஸ்கிருதம் படி" என்றார். அதன்படி எம்.ஏ. சமஸ்கிருதம் படித்தேன். உதவிநிதி கிடைத்தது. தொடர்ந்து 'தர்மத்தின் பரிணாம வளர்ச்சி' என்ற தலைப்பில் பிஹெச்.டி முடித்தேன். 1970ல் இந்தியத் தொல்லியல் துறையில் கியூரேட்டர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். டெல்லியில் இரண்டு வருடம் பயிற்சி. அப்போது கிருஷ்ண ஜன்மஸ்தானமான மதுரா உட்படப் பல இடங்களுக்கும் சென்று நிறையத் தெரிந்து கொண்டேன். பின் ஹளேபீடில் ஆராய்ச்சிக்கு நியமிக்கப்பட்டேன். அங்கு அரும்பொருளகம் இருக்கவில்லை. நாங்கள் அகழாய்வு செய்து பல சிற்பங்களைக் கண்டெடுத்தோம். அவற்றைத் திறந்தவெளி மியூசியமாக வைத்துப் பராமரித்த நிலையில் மீண்டும் டெல்லிக்குப் பணி மாறுதல். அங்கே செங்கோட்டை மியூசியத்தில் பணி. அதோடு புராணா கிலாவை (முன்னாள் இந்திரபிரஸ்தம்) மியூசியமாக மாற்றும் வேலையில் ஈடுபட்டேன். பின் தலைமையகத்தில் பதிப்புத்துறைக்கு மாற்றல் ஆனது. அப்போது நிறைய ஜர்னல்கள், பேப்பர்களை தொகுத்து வெளியிட்டேன்.

கே: அதன்பின்...
ப: 1980ல் எனக்குப் பதவி உயர்வோடு பரோடா வட்டத்தில் பணியாற்றும் பொறுப்பு கிடைத்தது. அந்தக் காலத்தில் அது ஒரு முக்கியமான சர்க்கிள். ராஜஸ்தானம், குஜராத் இரண்டும் சேர்ந்தது அது. அங்கு எஸ்.ஆர். ராவிடம் பணி புரிந்தேன். அவர் மிகச் சிறந்த ஆர்க்கியாலஜிஸ்ட். நீரடி ஆய்வுகள் நிறையச் செய்தவர் (அண்மையில் அவர் காலமானார்). அங்கு பாரம்பரியம், கலாசாரம், கட்டடக் கலை எனப் பல நல்ல அனுபவங்கள் கிடைத்தன. லோதால் அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பேற்று ஆரம்பப் பணிகளைச் செய்தேன். பின்னர் கேரளத்தில் பணியாற்றினேன். நடுவில் 1988ல் இந்தோ-அமெரிக்கத் துணைக் கமிஷனில் கலாசார உதவியாளராக அமெரிக்கா சென்று வந்தேன். அங்கு பல மியூசியங்களுக்குச் சென்று செயல்பாடுகள், பணிகள், பெயர்ப்பலகைகள் போன்றவற்றை நுணுகிக் கவனித்து அறிந்தேன்.

பின்னர் கேரள மாநில தொல்பொருள் துறையின் இயக்குனர் ஆனேன். அங்கு முழுமையான ஆய்வு எதுவும் நடக்காத நிலையில் நான் பல ஆய்வுகளை மேற்கொண்டேன். கொல்லம் அருகே இருக்கும் மாங்காடு பகுதியில் ஆய்வு செய்தோம். கி.மு. 1000 என்பது அதன் காலம் என்பதைக் கண்டறிந்தோம். முசிறி என்னும் சேரர்களின் துறைமுகம் பெரியாற்றின் அருகே இருந்ததென்று சொல்வது உண்மையா என்று ஆய்ந்தோம். இந்தியப் புவி அளக்கைத் துறையின் (Geological Survey of India) உதவியோடு பெரியாற்றை ஸ்கேன் செய்தோம். நாங்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் அந்த நதி நேரே கடலில் சென்று கலக்கவில்லை என்பதுதான். நடுவே ஒரு அகழி ஒன்றில் விழுந்து பின்னர் கடலில் கலக்கிறது. இப்படிப் பல கண்டுபிடிப்புகளைச் செய்தேன். பின்னர் சென்னை, புவனேஸ்வரம் என்று பல இடங்களில் பணியாற்றி, ஆதிச்சநல்லூர் உட்படப் பல இடங்களில் ஆய்வுகள் செய்து ஓய்வு பெற்றேன்.

கே: ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் ஒரு முக்கியமான இடம். மொகஞ்சதாரோ, ஹரப்பா மாதிரி எதேச்சையாகத்தான் இதையும் கண்டு பிடித்தார்கள். ரயில்வே லைனுக்காகத் தோண்டும்போது மொகஞ்சதாரோ, ஹரப்பா பற்றித் தெரியவந்தது. அதுபோல திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில்வே லைன் போடும்போது இதைக் கண்டு பிடித்தார்கள். 1860லேயே அதைக் கண்டுபிடித்தாலும், 1904-05ல் அலெக்சாண்டர் ரியா என்பவர் முதலில் அங்கு விரிவான அகழாய்வுப் பணிகள் செய்தார். அதற்கு முன்னால் ஃப்ரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் சிறு சிறு ஆய்வுகள் செய்திருக்கின்றனர். ஜெர்மானியரின் நோக்கம் அங்கு கிடைத்த எலும்புக் கூடுகளை வைத்து மனித இனம்சார் வேறுபாடுகளைக் கண்டறிவதாக இருந்தது. 1864-70ல் 24 எலும்புக்கூடுகளை எடுத்துக் கொண்டு போனார்கள். இன்னமும் திரும்பித் தரவில்லை.

ஆதிச்சநல்லூரில் தொடங்கி, கொற்கைவரை இதுபோல 38 இடங்கள் இருப்பதாக அலெக்சாண்டர் ரியா சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் எந்த இடத்தில் அகழாய்வு செய்தார் என்ற குறிப்பு இல்லை. கலவையாகப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. 'இது மிகப் பழமையான, மிகப் பெரிய களங்களில் ஒன்று' என்று அவர் குறிப்பில் எழுதியிருக்கிறார். பின்னர் எழுதியவர்கள் 'மிகப்பெரிய புதைகுழி' என்று எழுதினார்களே தவிர, அம்மக்கள் யார், எப்படி வாழ்ந்தனர், நாகரிகம் என்ன, எங்கெல்லாம் பரவியிருந்தனர், உழவு, இரும்பு, கருவிகள் என எவற்றை அறிந்திருந்தார்கள் போன்றவற்றை ஆய்ந்து எழுதி வைக்கவில்லை. 2004ல் அதாவது அலெக்சாண்டர் ஆய்வு செய்து 100 ஆண்டுளுக்குப் பிறகு நான் அங்கு அகழாய்வு மேற்கொண்டேன்.

கே: உங்கள் ஆய்வில் தெரிய வந்தது என்ன?
ப: அலெக்சாண்டர் ரியா ஆய்வு செய்த இடம் தெரியாததால், சில இடங்களில் 60x60 மீட்டரில் ஆய்வு மேற்கொண்டோம். கீழ், மேல், நடு என மூன்று அடுக்குகளில் மொத்தம் 185 தாழிகள் கிடைத்தன. ஆயிரம் வருடங்களுக்கு முன் உபயோகப்படுத்தியவை என்பதை அறிய முடிந்தது. ஆனால் அலெக்சாண்டர் குறிப்பிட்ட நுட்பமான சிற்பங்கள் கிடைக்கவில்லை. முதுமக்கள் தாழிகள்தாம் கிடைத்தன. அடுத்த வருடம் வேறிடத்தில், ஒரு பானை கிடைத்தது. அது வெளியே சிவப்பாகவும் உள்ளே கருப்பாகவும் இருந்தது. மிகவும் மெலிதாக இருந்தது. இப்போது நினைத்தால் கூட அம்மாதிரிச் செய்ய முடியாது. அவர்கள் அக்காலத்தில் எப்படிச் செய்தார்கள், மூன்றடி, நான்கடி உயரமுள்ள அந்தப் பானைகளுக்குள் அந்த உடல்களை எப்படி வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

முதுமக்கள் தாழிகளில், இது அடியிலே குழிந்து, வித்தியாசமானதாக இருந்தது. இதுதவிர அவர்கள் விளைவித்த தண்ணீர்த் தாவரம் ஒன்றன் விதை கிடைத்தது. செப்பு வளையம், செப்பு வளையல்கள், இரும்புக் கருவிகள் எல்லாம் கிடைத்தன. வேலக்ஸி என்னும் ஜெர்மன் ஆராய்ச்சியாளர் மட்பாண்டங்கள் பற்றி மட்டும் ஆய்ந்து, இந்தக் கலாசாரம் மகாராஷ்டிரம் வரை சென்றிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். பின் அங்கு கிடைத்த எலும்புகளை ஆராய்ச்சி செய்தோம். உடற்கூறு மானிடவியல் வித்தகர் இந்தியாவில் குறைவு. சமூக மானுடவியலாளர் இருப்பார்கள். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த டாக்டர் பி. பத்மநாப ராகவன் ஆஸ்திரேலியாவில் வசித்தார். அவர் வந்து கிட்டத்தட்ட 24 எலும்புக்கூடுகளுக்கு மேல் ஆராய்ந்து அறிக்கை தந்தார். மூன்று வகைக் கலப்பின மக்ககள் அங்கு வாழ்ந்திருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதாவது வெவ்வேறு இனக்குழு மக்கள் அங்கு தங்கி வாழ்ந்திருக்கலாம் என்பது அவரது முடிவு. அது ஒரு பெருநகரம் போல அதனால்தான் விதவிதமான மக்கள் எலும்புகளை அங்கு காணமுடிகிறது. அது ஒரு துறைமுக நகரம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். சாதாரண மனிதர்களுடையதைவிட அங்கு கிடைத்த மண்டையோட்டின் கனம் அதிகமாக உள்ளது. மாறுபாடுகள் உள்ளன. இதுபற்றிய முழுமையான ஆய்வறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.

கே: அப்படியானால் ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்திற்கு முற்பட்டது ஆதிச்சநல்லூர் என்று சொல்லலாமா?
ப: சமகாலத்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கார்டியா என்பவர் இங்கு கிடைத்த பானையைக் கொண்டுபோய் ஆய்வுகள் செய்தார். அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இவை கி.மு. 2600ஐச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் விரிவான நவீன காலக்கணிப்பு முறைகளைப் பயன்படுத்தினால் பல உண்மைகள் தெரியவரும். வட இந்தியாவில் ஆதிகால மக்கள் முதலில் தாமிரத்தைத்தான் பயன்படுத்தினார்கள். பின்னர்தான் இரும்பு. ஆனால் தமிழகத்தில் அகழாய்வு செய்த இடங்களில் தாமிரம், இரும்பு இரண்டுமே சேர்ந்துதான் கிடைக்கிறது. முறையான ஆய்வு செய்தால் யார் முதலில் இரும்பைப் பயன்படுத்தினார்கள், யார் காலத்தால் முந்தியவர்கள் என்பவை தெரியவரும். ஏனென்றால் இரும்பு அறிமுகமான பின்னர்தான் பல கருவிகள் செய்யப்பட்டன. நாகரிகம் வளரத் துவங்கியது. இரும்புக் கருவிகளால்தான் கல்லில் செதுக்கியிருக்க முடியும். நம்மிடம் நிறையப் பழங்கால பிராமி எழுத்துருக் கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. எனவே இந்த ஆய்வு முக்கியமானது.

கே: மகாபலிபுரத்தில் மிக முக்கியமான ஆய்வை நிகழ்த்தியிருக்கிறீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்..
ப: மூன்றாம் குலோத்துங்க சோழன் அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு நிதி அளித்தது பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைத்தது. ஆனால் கோயிலைப்பற்றி ஏதும் தெரியவில்லை. ஆனால் சுனாமி வந்த பிறகு கடல்நீர் உள்வாங்கியதில் மற்றுமொரு கல்வெட்டு வெளிவந்தது. அது கி.பி. 960ம் ஆண்டைச் சேர்ந்தது. ராஷ்டிரகூட அரசன் மூன்றாவது கிருஷ்ணா என்பவனுடைய கல்வெட்டு. அவன் இருமுறை அங்கு வந்திருக்கிறான். அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு நிதி உதவி செய்திருக்கிறான். தனது 21வது ஆட்சி வருடத்தில் ஒருமுறையும், 26ம் வருடத்தில் ஒருமுறையும் வந்திருக்கிறான். அந்தக் கல்வெட்டுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆலயத்தைத் தேட ஆரம்பித்தோம். அகழாய்வில் இரண்டு மீட்டரிலேயே முதலில் பல்லவர் காலக் கோயில் இருந்த ஆதாரத் தூண்கள் கிடைத்தன. கி.பி. 720-60 காலத்தில் ஆண்ட நந்திவர்மன், தந்திவர்மன் இருவரும் அந்த ஆலயத்தைக் கட்டியது பற்றிய குறிப்புகள் கிடைத்தன. பின்னர் ஒரு செங்கல் கட்டடம் கிடைத்தது. அதாவது பல்லவர் காலத்திற்கு முன்பே செங்கல்லால் ஆன ஒரு கோயில் இருந்திருக்கிறது. அந்தக் கோயில் விழுந்து விடவே, பல்லவர்கள் கற்களைக் கொண்டு அதைச் செப்பனிட்டு மேலே எடுத்துக் கட்டியிருக்கின்றனர். பேரலை தாக்குதலால் மறுபடியும் விழுந்துவிடவே குலோத்துங்கன் அதை எடுத்துக் கட்டியிருக்கிறான். குலோத்துங்கனுக்குப் பிறகு மீண்டும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆலயம் மண்ணுக்குள் போய்விட்டது. பல்லவர் காலத்துக்கு முந்தைய கோவில் முதன்முறையாக நமக்குக் கிடைத்தது மகாபலிபுரத்தில்தான். அதன் கட்டமைப்பு காவிரிப்பூம்பட்டினத்தில் கிடைத்தது போலவே இருக்கிறது.

ஆழிப் பேரலைகள் கடலுக்கடியில் இருக்கும் பல உயிர்பொருட்களைச் சேர்த்தே மேலே கொண்டு வரும். அவை வெளியே, கடலுக்கு அருகே உள்ள தொல்பொருள் கட்டடம் போன்றவற்றால் தடுத்து நிறுத்தப்படும். அப்படிச் சில பொருட்கள் தமிழகத்தின் சுனாமிக்குப் பிறகு கிடைத்தன. டாக்டர் பத்ரிநாராயணன் தலைவராக இருந்த ஜியலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா மூலம் அவற்றை காலக்கணிப்பு செய்தபோது, அவை கி.பி. 350-80 காலத்தவையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரமுடிந்தது. அதாவது பல்லவர் காலத்திற்கு முந்தைய ஆலயம் சுனாமியால் தரைமட்டமாகியிருக்கிறது. அதுபோல கிருஷ்ணா-3 கல்வெட்டின் மூலம் அவன் கோயில் தூண்களை எழுப்ப ஒருமுறையும், மேலேயிருந்த கோவிலைச் சீரமைக்க ஒருமுறையும் நிதி உதவியிருப்பது தெரிந்தது. அவன் வந்த 21-26ம் ஆண்டு ஆட்சியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுனாமி தாக்கிக் கோயில் சிதைந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது. அங்கு குரவைக் கூத்து கிடைத்தது, முருகனின் வாகனமான யானை ஆகியவை கிடைத்தன. இந்த ஆலயம் சங்ககாலம் அல்லது அதற்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று நம்ப இடம் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் மரத்தாலோ சுதைச் சிற்பமாகவோதான் சிலைகளைச் செய்திருக்கின்றனர். அவை காலப்போக்கில் அழிந்திருக்கும். அதனால் பிற சிலைகள் கிடைக்கவில்லை. கிடைத்த சிலைகளை ஒரு மண்டபத்தில் வைத்திருக்கிறோம்.
கே: காஞ்சி மஹா பெரியவருடனான உங்கள் அனுபவங்கள்...
ப: சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, "நீ என்ன வேலை பார்க்கிறாய்?" என்று கேட்டார். அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன். "நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?" என்று கேட்டார். நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன். "அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, "பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?" என்று கேட்டேன். "இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!" என்றார். மறுமுறை போனபோது, "கடிகாரம் பார்த்தாயா?" என்று கேட்டார். "இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை" என்றேன். "அர்ஜுனன் தவம் பார்த்தியா?" என்று கேட்டார். "பார்த்தேன்" என்றேன். "அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் 'பல்லவ கடிகாரம்' என்று சொன்னேன்" என்று பெரியவர் சொன்னார். பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. இப்படிப் பல அனுபவங்கள்.

கே: நீங்கள் தலைவராக இருக்கும் REACH Foundation பற்றி...
ப: நான் பணி ஓய்வு பெற்ற பிறகு ஆதிச்சநல்லூர் மற்றும் பிற ஆய்வுகள், கிடைத்த விஷயங்கள் பற்றி எல்லாம் நிறைய எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அப்போது சில இளைஞர்கள் என்னை அணுகினார்கள். எஞ்சினியர்கள், கணினித்துறை என்று பலதரப்பினர். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆலயம் தூய்மைசெய்தல், நலிந்த ஆலயங்களைச் சீர் செய்தல், பாதுகாப்பது, மக்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது போன்ற நற்பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஓய்வு பெற்ற மறுநாளே என்னைச் சந்தித்து "நீங்கள் வழிகாட்டினால் விரிவான களத்தில் ஊக்கத்தோடு பணி செய்யலாம்" என்று கேட்டனர். நான் முதலில் தயங்கினேன். ஆனால் வீக்கெண்டில் பார்ட்டிகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மத்தியில் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த இளைஞர்கள் நினைப்பது என் மனதைத் தொட்டது. எழுதுவதைவிட இது உயர்ந்தது என்று நினைத்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் Rural Education and Conservation of Heritage எனப்படும் REACH Foundation. இன்று தமிழ்நாடெங்கும் 800 இளைஞர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். (இணையதளம்: conserveheritage.org)

கே: ரீச் அறக்கட்டளை மூலம் என்னென்ன பணிகள் செய்கிறீர்கள்?
ப: தற்போது கல்வெட்டியல் பயிற்சி அளித்து வருகிறோம். ஏதோ தொழில்முறையாளர் போல் அல்ல. சுய ஆர்வத்தில், பணம் கட்டிப் படிக்கின்றனர். நாங்களும் முழுமையாகச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆலயங்களைச் சீரமைக்கிறோம். கல்லூரிகளில் இதுபற்றிய கருத்தரங்குகள் நடத்துகிறோம். ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் மேத்யூஸ் அவர்களுடன் இணைந்து உத்திரமேருரில் இருக்கும் பழமையான கைலாசநாதர் கோவிலில் சீரமைப்புப் பணிகளைச் செய்தோம். அந்தப் பல்லவர் காலக் கோவிலைச் சோழர்கள் விரிவாக்கிக் கட்டினார்கள். கல்லாலான அடித்தளத்தில் செங்கல் வைத்துக் கட்டியிருக்கிறார்கள். மூன்று பக்கமும் மூன்றடிக்கு மேல் பிளந்து விட்டது. அருகே செல்லவே பயந்தனர். பின்னர் எங்களிடம் வந்தார்கள். பேரா. மேத்யூஸுடன் இணைந்து அதைச் செப்பனிட்டோம். அங்கே கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது.

பல பல்கலைக்கழகங்கள் எங்களிடம் பாரம்பரியம் பேணுதல் கல்வியைத் தொடங்கும்படிக் கேட்கிறார்கள். அடிப்படை வசதி இல்லாததால் ஆரம்பிக்க முடியவில்லை. சமீபத்தில்தான் கோவையில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு கோர்ஸ் ஆரம்பித்திருக்கிறார்கள். கோவில்கள், அவற்றின் பாரம்பரியம், வடிவம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பத்தால் கோவில்களில் என்ன செய்யலாம் என்று எல்லாமே சொல்லித் தரப்படுகிறது. மற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களும் அழைப்பு விடுத்திருக்கின்றனர். அதற்கு ஒரு பாடத்திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நன்றாக நடக்கிறது. கோவில்கள் பற்றிய மக்களின் அறிவில் இது ஒரு திருப்புமுனை ஆகிவிடும்.

கே: ஆலயங்களைச் சீர் செய்கையில் 'மணல் வீச்சு முறை' போன்றவை குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: நாம் பண்டைக் காலத்தில் கோயில் கட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினோம். தற்போது கான்க்ரீட்டைப் பயன்படுத்துகின்றனர். அவர்களே பெயிண்ட் அடிக்கிறார்கள், பின்னர் அவர்களே sand blasting மூலம் பெயிண்டை நீக்குகிறார்கள். கற்சிலை அல்லது கற்சுவருக்கு இது நல்லதல்ல. மணலை உயர்வேகத்தில் அடிக்கும்போது ஒரு உளியைப் போல அது செதுக்குகிறது. கல்லைவிட மணலின் சிலிகா அதிகக் கடினத் தன்மை கொண்டது. இதனால் நமது சிற்பங்கள் சேதமாகி விட்டன. பழமையான ஓவியங்கள் அழிந்துவிட்டன. அவற்றின் அருமை தெரியாமல் அழித்துவிட்டு அதன்மேல் புதிதாக ஓவியங்களை வரைகிறார்கள். இப்படிச் செய்யக்கூடாது என்று சொன்னால் அதற்கு பொறுப்பாக பதில் சொல்ல யாரும் முன்வருவதில்லை. பொறுப்பில் இருக்கும் பலருக்கு தொல்லியல் அல்லது பாரம்பரியம் குறித்த அறிவு இல்லை. பொதுப்பணித்துறை எஞ்சினியருக்கு இவை பற்றிக் கற்பிக்கப்படுவதும் இல்லை. நவீன வீடு கட்டுவதுபோல கோவிலையும் கட்டுவதுதான் அவர்களுக்குத் தெரிந்தது. அதனால் பாதிக்கப்படுவது நமது பாரம்பரியமான ஆலயங்களும், வரலாற்றுக் கூறுகளும்தான்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் கோவில் பராமரிப்பை ஆதரிப்பார் இருக்கவில்லை. பணமும் ஆர்வமும் இருக்காது; புரிதலும் இருக்காது. அதனால் நிறையப் பாழ்பட்டன. ஆனால் இன்றைக்கோ 'சரிசெய்கிறேன்' என்று நவீன கருவிகளால் செய்வது மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. படையெடுத்து வந்தவர்கள் செய்ததைவிட நமது பராமரிப்பவர்கள் அதிகம் பாழ்படுத்துகின்றனர். இதன் விளைவு 40, 50 வருடம் கழித்துத் தெரியும். நம் முன்னோர்கள் வைத்த ஒரு கல்லில் கீறல் விழுந்தால் அதை எடுத்துவிட்டு வேறு போடலாம். அப்படி எளிதாக அவர்கள் வைத்தார்கள். நவீன முறையில் கட்டினால், அவ்வளவு எளிதாக எதையும் சீர் செய்ய முடியாது.

கே: பழமை மாறாமல் ஆலயத்தைப் பாதுகாப்பது என்றால் அதைத் தொல்பொருள் துறையால்தான் முடியும், அல்லவா?
ப: தொல்பொருள் துறையில் அந்த அளவு ஆள்பலம் இல்லை. எந்த அரசுமே பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அதிகம் தருவதில்லை. அதிலும் தமிழ் கலாசாரம் என்றால் இலக்கியத்திற்கே எல்லா நிதி ஒதுக்கீடும் போய்விடும். யோசித்துப் பாருங்கள், பாரதத்தின் பண்பாட்டையும், கலாசாரத் தொன்மையையும் பாதுகாத்துவரும் தொல்லியலுக்கு ஒரு விருதுகூடக் கிடையாது. இலக்கியத்திற்கு எத்தனையோ விருதுகள், கௌரவங்கள், பட்டங்கள், நிதி உதவிகள். ஒரு பழங்காலக் கோயிலைக் கண்டுபிடித்து, அதன் பழமை மாறாமல் புதுப்பித்துக் கொடுத்தால் அதற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காது. சிலர் அதைப் பார்த்துவிட்டு, "என்ன செஞ்சீங்க, அப்படியே பழசு மாதிரியே இருக்கு!" என்கிறார்கள். பழசு மாதிரிதான் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படைகூட அவர்களுக்குப் புரிவதில்லை. இதுதான் இன்றையநிலை.

கே: இதை எப்படி மக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்வது?
ப: நாங்கள் கிராம மக்களை நேரடியாகச் சந்திக்கிறோம். ஒவ்வொரு கிராமமும், அங்குள்ள பழங்காலக் கோயில்களும், சின்னங்களும் வரலாற்று ரீதியாக மிக முக்கியமானவை என்பதை எடுத்துச் சொல்கிறோம். தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் மகாபலிபுரத்தையும், தஞ்சாவூரையும் மட்டுமே வெளிச்சம் போடுவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் 600, 700 அல்லது 1000 வருடம் பழமையான கோயில் ஒன்றிரண்டு இருக்கும். அவற்றைப் பழமை மாறாமல் பாதுகாத்தால் அதுவே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். கேரளாவில் இப்படித்தான் செய்கிறார்கள். சூழல் மாறாமல் பாதுகாப்பதால் அங்கே அதிகப் பயணிகள் செல்கிறார்கள்.

முன்னைவிட இன்றைய மக்களிடையே நிறைய விழிப்புணர்ச்சி இருக்கிறது. ஆர்வமும் இருக்கிறது. ஆனால் பணம் பெரிய பிரச்சனை. அப்படியே சிலருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தாலும், அவர்கள் சுண்ணாம்பு, பெயிண்ட் அடித்துக் கும்பாபிஷேகம் செய்தால் போதும் என்று நினைக்கின்றனர். தொல்பொருள் துறை இதுகுறித்துச் சில நெறிமுறிகளை வகுத்துத் தர வேண்டும். அப்போதுதான் பழங்கால ஓவியங்களையும் சுதைச் சிற்பங்களையும் நாம் பாதுகாக்க முடியும்.

கே: தொல்லியல் துறையின் எதிர்காலப் பணி என்ன?
ப: தமிழ்நாட்டில் அகழாய்வு செய்ய வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. ஆனால் போதிய ஆய்வுப் பணியாளர்கள் இல்லை. ஆர்க்கியாலஜி என்று ஒரு சிறிய துறை சென்னைப் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இரண்டு பேராசிரியர்கள் இருக்கின்றனர். அதுவும் முழுநேரமல்ல. நான் கடந்த மாதம் அலஹாபாத் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அதன் தொல்லியல் துறையில் 2000க்கு மேலான மாணவர்கள் படிக்கின்றனர். 50 ஆசிரியர்களுக்கு மேல் இருக்கிறார்கள். அங்கு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகம் என எல்லா மாநிலங்களிலும் நிறையப் பல்கலைக்கழகங்களில் தொல்பொருள் துறை இருக்கிறது தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் தவிர வேறெங்கும் கிடையாது. நான் தமிழகத்தின் பிற பல்கலைக் கழகங்களில் பேசிப் பார்த்தேன். "அதில் எத்தனை மாணவர்கள் சேருவார்கள், எவ்வளவு ஃபீஸ் கிடைக்கும்?" என்று கேட்கிறார்களே தவிர, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு சேவையாகச் செய்ய யாரும் முன்வரவில்லை.

கே: இப்போது மேற்கொண்டு வரும் பணிகள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையகம் கேட்டுக்கொண்டதன் பேரில், செய்யப்பட்டுள்ள தவறுகளைக் கண்டறிவதில் முனைப்பாக இருக்கிறேன்.
ரீச் அறக்கட்டளை மூலம் பல களங்களை அடையாளம் கண்டிருக்கிறோம். 250 தொல்லியல் களங்களில் பத்தில் ஒரு பங்குதான் பாதுகாக்கப் பட்டுள்ளன. இவற்றை ஆவணப்படுத்தவும் பயிற்சி அளித்து வருகிறோம்.

"ஒரு தொல்லியல் பாடப்பிரிவு ஆரம்பித்திருக்கிறோம், அதற்கு நிறைய உரைகள் தயாரிக்க வேண்டியிருக்கிறது. நிறையப் பயணம் போக வேண்டியிருக்கிறது" என்கிறார் புன்சிரிப்பு மாறாமல். பணி ஓய்வு என்பது இவர் போன்றோருக்கு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அரிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


யாருக்கு அதிகச் சம்பளம்?
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் எண்ணாயிரம் என்ற ஊரைப் பற்றிக் கேட்டார். அது விழுப்புரத்தில் இருந்து 20-25 கி.மீ. தூரத்தில் உள்ளது. காளமேகப் புலவரின் சொந்த ஊர் என்று சொல்லப்படுவது. புகழ்பெற்ற விஷ்ணு ஸ்தலம். ஒரு காலத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறது. நிறைய சாஸ்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பெரியவர் அது பற்றி நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார். எந்தெந்த சாஸ்திரங்கள் எல்லாம் வேதத்தில் இருந்தது என்றெல்லாம் சொன்னார். அதை எழுதிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவற்றில் பல இப்போது இல்லை. என்னுடைய முன்னோடி டி.எஸ். ராமன் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் அங்கே கல்வெட்டுகளைப் படித்துப் பதிந்தார். அவற்றைப் பின்னால் வெளியிட்டோம். அங்கே கல்வெட்டில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம், மாணவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் இருக்கிறது. அந்தக் கல்வெட்டு இன்றும் உள்ளது.

அந்தக் கல்வெட்டைப் பார்த்த பிறகு ஒருநாள் பெரியவரைச் சந்தித்தேன். பெரியவர், "யார் அப்போ முக்கியமான ஆசிரியர் என்று தெரிய வந்ததா? அப்போ எந்தப் பாடம் ரொம்ப முக்கியமானதா இருந்ததுன்னு தெரியுமா?" என்று கேட்டார். "யாருக்கு எவ்ளோ கொடுத்தார்கள் என்று குறித்துக் கொண்டுவா, தெரியும்." என்றார்.

அப்படிச் செய்து பார்த்தபோது, வியாகரண பண்டிதருக்கு (இலக்கண ஆசிரியருக்கு) மிக அதிக ஊதியம். ஒரு பட்சத்துக்கு ஒரு பவுன். கூடவே சில கலம் நெல். இலக்கணம் சொல்லிக் கொடுப்பதும், படிப்பதும் கஷ்டம். அதை உயர்வாக மதித்ததால் அதற்கு அதிக ஊதியம். இப்படியே சம்பளம் படிப்படியாக ஒவ்வொரு பிரிவிற்கேற்ப குறைந்து கொண்டே வருகிறது. குறைவான சம்பளம் வேதம், வேதாந்தம் சொல்லிக் கொடுப்பவருக்குத்தான்.

பெரியவர் அதைக் கேட்டுவிட்டு, "சரிதான். வேதம் சொல்லிக் கொடுப்பவர்களை என்னை மாதிரி நினைத்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது" என்று சொல்லிச் சிரித்தார்.

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி

*****


மகாபலிபுரம் ஒரு பரிசோதனைக் கூடம்
மகாபலிபுரச் சிற்பங்கள் எல்லாமே முழுமை அடையாதவை என்று சொல்ல முடியாது. கடற்கரைக் கோவில்களை முழுமையாகச் செய்து முடித்திருக்கிறார்கள். ஆழிப் பேரலையில் அவை பாதி கடலுக்குள் போய் விட்டன. அதனால் பூஜை நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற சிற்பங்களைப் பரிசோதனை முயற்சியாகவே பல்லவர்கள் செய்திருக்கிறார்கள், குறிப்பாக மகேந்திரவர்ம பல்லவன். கல்லைக் குடைவது, அதை மண்டபமாக்குவது, அதில் சிற்பங்கள் செதுக்குவது, ஆலயம் கட்டுவது என்று சோதனை செய்தான். நம்மிடம் நான்கு வகை சிற்பக் கட்டிட வகைமைகள் உள்ளன. குடைவரை எனப்படும் குகைக் கோவில்கள்; ரதக் கோவில்கள்; புடைப்புச் சிற்பங்கள்; கற்கட்டிடங்கள். மகாபலிபுரத்தின் தனிச்சிறப்பு இந்த நான்கு வகைமைகளும் ஒரே இடத்தில் இருப்பதுதான். பஞ்ச பாண்டவர் ரதத்தைப் பார்த்தால் அதில் எல்லா மாதிரிகளையும் பார்க்கலாம். சதுரம், வட்டம், எண்கோணம் என்று மூன்றுவகைகளில் கோவில் கட்டமைப்பு இருக்கும். திரௌபதி ரதம் சதுரம். மற்றொன்று தூமணி மாடமாக அதாவது கஜபிருஷ்ட அமைப்பில் இருக்கும். பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி சிற்பம் போன்றவை எல்லாம் பூர்த்தியானவைதான்.

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி

*****


வேப்பத்தூர் அற்புதம்
"அலஹாபாத் கல்வியில் சிறந்திருந்தது போலத் தமிழகத்தில் கல்விக்குச் சிறந்து திகழ்ந்தது வேப்பத்தூர்" என்று மஹா பெரியவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். தெய்வத்தின் குரலிலும் (பக்: 302-303) அதுபற்றிக் காணப்படுகிறது. அந்த ஊர் கும்பகோணம் அருகே பழைய பூம்புகார் சாலையில் இருக்கிறது. ரீச் ஃபவுண்டேஷன் மூலம் அங்கு சென்று ஆராய்ந்தபோது சுவையான பல தகவல்கள் கிடைத்தன. மூன்றுநிலை கட்டுமானம் கொண்ட மிகப்பெரிய கோயில் அது. பல்லவர் காலத்துக்கு முற்பட்டது. முழுக்கச் செங்கலால் ஆனது. பின்னால் பல்லவர்கள், நாயக்கர்கள் திருப்பணி செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஆலயம் பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. காரணம், அது மண்ணுக்குள் புதைந்துவிட்டது. சுண்ணாம்புச் சுதையாலான பெருமாள் சிற்பம் (அமர்ந்த திருக்கோலம்) ஆரம்பத்தில் அங்கே இருந்திருக்கிறது. பின்னால் அது பின்னமானதால் நாயக்கர்கள் கல்லால் கட்டியிருக்கின்றனர். கோயில் சிதலமடைந்ததால் அந்தக் கற்சிலையை எடுத்து வேறிடத்தில் சிறிய ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்த ஏற்பாடு செய்தார் மஹா பெரியவர். இப்போது கோயில் மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. நாங்கள் அதைச் சீர் செய்வதில் ஈடுபட்டிருக்கிறோம். அகழாய்வில் மேலும் விவரங்கள் தெரிய வரலாம். உள்ளே பல்லவர், சோழர், நாயக்கர் கால ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

சோழ மண்டலத்தில் கிடைத்த முழுக்கச் செங்கல்லால் கட்டப்பட்ட பல்லவர்காலக் கோயில் இதுதான். சோழர்கள் எல்லாச் செங்கல், சுதைக் கோயில்களையும் பின்னால் கற்றளிகளாக மாற்றிவிட்டனர். இதுமட்டும் அப்படியே இருக்கிறது. கல்வெட்டின் மூலம் இவ்வூருக்கு வேம்பத்தூர், சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களும் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

செங்கல் கோயில் என்பதனாலும், மிகச் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாலும் மிகக் கவனமாகச் செப்பனிடும் பணிகளைச் செய்கிறோம். இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. மஹா மண்டபம், பலிபீடம், கருடாசனம் போன்றவை வெளிக் கொணரப்பட்டுள்ளன. 1500 ஆண்டுகளைக் கடந்தும் இதன் கட்டுமானம் குலையாமல் இருப்பது ஆச்சரியம்தான். நமது முன்னோரின் அறிவுத் திறனை, வேலைப்பாடுகளைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்தத் தொழில்நுணுக்கத்தை வருங்கால சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நமது கடமை.

வேப்பத்தூர் ஆலயச் சீரமைப்பு பற்றிய படங்களைக் காண:
புகைப்பட தொகுப்பு #1
புகைப்பட தொகுப்பு #2
புகைப்பட தொகுப்பு #3
புகைப்பட தொகுப்பு #4

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி
மேலும் படங்களுக்கு
More

அ. முத்துலிங்கம்
Share: 
© Copyright 2020 Tamilonline