|
ஆனந்த பாண்டியன்: 'மிச்சம் மீதி' |
|
- மதுரபாரதி|நவம்பர் 2012| |
|
|
|
|
|
"என் சரித்திரத்தை நீ எப்ப எழுதப் போற?" என்று கேட்டவருக்கு நூறு வயதாகச் சில ஆண்டுகளே பாக்கி. கேள்வியை எழுப்பியவர் எம்.பி. மாரியப்பன். அவர் கேட்டது தன் பேரன் ஆனந்த் பாண்டியனிடம். ஆனந்த், "இளம் மானுடவியல் ஆய்வாளன்." அது மட்டுமல்ல, "அவனது தமிழறிவு கொஞ்சம்தான்." காரணம் ஆனந்த் நியூ யார்க்கில் பிறந்து, லாஸ் ஏஞ்சலஸில் வளர்ந்து, பெர்க்கலியில் பிஎச்.டி. வாங்கி, தற்போது ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் மானுடவியல் துறையில் இணைப் பேராசிரியர். பால்டிமோரில் வாழ்கிறார்.
மொழித்தடை, காலப்பிளவு என்று எல்லாவற்றையும் தாண்டிச் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை ஒரு சாதாரண மனிதரின் அசாதாரணக் கதை. படிக்கும்போது "இதான் எனக்குத் தெரியுமே" என்று சொல்லத் தோன்றும் ஆனால் சொல்ல முடியாமல் வியப்பில் தவிப்போம். கதை என்று சொல்லி அந்த நிகழ்வுகளின் உக்கிரமான தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், இது 'அய்யா' என்று பேரனால் அன்போடு அழைக்கப்படும் எம்.பி. மாரியப்பன் என்ற மனிதர் வாழ்ந்தபடியே அசைபோடுகிற நூறாண்டு காலச் சம்பவங்களின் தொகுப்பு.
"எனக்குப் பிறந்த ஊரும் தெரியாது, தேதியும் தெரியாது" என்று சொல்லும் அய்யா, "1919ஆம் வருஷம் பிறந்திருப்பேன். பர்மாவில் என்னுடைய அய்யா சின்ன வியாபாரம் செய்து வந்த காலம்" என்ற குறிப்பை மட்டும் தருகிறார். இன்றைய நாள்போல பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் ஒருவர் உயிரோடு இருப்பதையே அங்கீகரிக்க முடியாத சிரமம் அப்போதெல்லாம் இருக்கவில்லை.
உறியிலிருந்த வேப்பெண்ணெயை நெய் என்று சோறில் பிசைந்து தின்று உமிழ்ந்த சிறுவன், சேட்டைக்காரப் பையன், பேய்க்கு அஞ்சாமல் அதிகாலையில் கொடுக்காப்புளி எடுக்கப் போனவன், மூன்றாம் வகுப்புப் படிக்கையிலேயே தாயை இழந்தவன், தாய் இழந்தபோது சொந்தக்காரர்கள் கொடுத்த துணிக்குச் சந்தோஷப்பட்டவன், கணக்கில் புலி என்று சுவையாகத் தொடங்குகிறது கதை, அவன் பள்ளிக்கட்டணம் கட்டமுடியாமல் பள்ளியிலிருந்து வெளியேற்றப் படும்போது தனிநபர் துயரத்தின் கண்ணீர்க் கறையை முதலில் பார்க்கிறோம். இப்படி வளர்ந்த பையன் தன் சிற்றூரை விட்டுக் கிளம்பி முறையே குதிரை வண்டி, பஸ், ரயில், கப்பல் என்று ஏறி "துணியில் முடிச்சிக் கொண்டுவந்த (காரமான) சாம்பார் சாதம், புளிசாதம்" போன்றவற்றைச் சாப்பிட்டபடியே தன் அப்பாவின் கடை இருக்கும் பர்மாவைப் போய் அடைகிறான்.
நூறு வீசை சர்க்கரை (சுமார் 140 கிலோ) 50 ரூபாய்க்கு விற்ற காலத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். கணக்கில் அவனுக்கிருந்த அதே சாமர்த்தியம் வணிகத்திலும் இருந்தது. எந்தப் பொருளை எவ்வளவு வாங்கலாம், நிலைமைக்கேற்ப யாருக்கு என்ன விலைக்கு விற்கலாம் என்பவற்றில் மாரியப்பன் மிகச் சுட்டி. பலசரக்கு தொடங்கி, தங்க நிப்பு போட்ட பைலட் பேனா ("மூணு, மூணரை ரூபாய்") வரைக்கும் விற்ற அந்த இளைஞருக்குச் சில நெறிகள் இருந்தன, "பர்மிய பெண்கள் வந்து என்கிட்ட பேசுவாங்க. நல்லா நெருங்குவாங்க. நான் விலகிடுவேன். பர்மாவுல ஒரு பொண்ண சேத்துக்கறது எல்லாம் சகஜமா இருந்தாலும் நான் அப்படிப் பண்ணலை."
ஓரளவு நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கைக் கப்பலைக் கவிழ்க்கவென்றே உலகப் பெரும்போர் வந்துவிடுகிறது. பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறார் மாரியப்பன். பர்மாவிலிருந்து இந்தியா திரும்பிய கதையைப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 'திரும்புவது' என்ற ஒரு வார்த்தை எத்தனை சவால்களை, துயரங்களை, மனப் போராட்டங்களை அடக்கியது என்று தெரியவேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும். தண்ணீர்கூடக் கிடைக்காத காட்டு வழியே, பாதையின் இரண்டு புறமும் இறந்துவிட்ட, இறந்துகொண்டிருக்கிற பிணங்களைக் கண்டும் காணாதது போல நடந்து வருகிற காட்சியைப் படித்தவர் தமது வாழ்நாளில் மறக்க முடியாது. உதாரணத்துக்கு, "சில பேரு சாகப்போற தறுவாயில பாதையில ரெண்டு பக்கமும் டப்பா வச்சுகிட்டு, அய்யா, தண்ணி, தண்ணின்னு வண்டிகள்ல போறவுங்க கிட்டக் கெஞ்சிக் கேப்பாங்க. அவங்களுக்கு யாரும் உதவி பண்றது கெடையாது. நம்மகிட்ட இருக்கிற தண்ணிய உதவி பண்ணக் குடுத்திட்டம்னா கடைசில நமக்கும் இந்த நிலைமைதான் வரும், அப்படின்னு அதயெல்லாம் பாக்கிறதில்லை. நேரா போயிடறது." நகரத்தின் குஷியான கட்டிடத்தில் உட்கார்ந்துகொண்டு 'மனிதாபிமானம்' பற்றிப் பேசுவது வேறு, இந்த மரணப் பெருவெளியில் உயிர்பிழைக்கும் தீர்மானம் என்பது வேறு! |
|
|
ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்த அய்யா கடைகளில் வேலை பார்த்து, சொந்தமாகக் கடை வைத்து, திருமணம் முடித்து, குழந்தைகள் பெற்று.... என்று வளர்கிறது இந்த வரலாறு. "ஆறு பிள்ளைகள், மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகளிற் பலர்; இவர்கள் அனைவராலும் சூழப்பட்டிருக்கிறார் அய்யா. அவர்கள் எல்லாரும் மதுரை, சென்னை, பெங்களூர், லாஸ் ஏஞ்சலஸ், சன்னிவேல், கொலம்பஸ், வான்கூவர் ஆகிய ஊர்களிலிருந்து வந்திருக்கிறார்கள். அய்யா பேசுகிறபோது அவர்கள் அனைவரும் அமைதியாக நெருக்கமாக, நேசமாகக் கூர்ந்து கேட்கிறார்கள்" - இந்தக் காட்சி 2005ல். நடக்கும் இடம் தாஜ் மலபார் ஹோட்டல். இதைப் படிக்கும் போதே வறுமை, மரணம் என்று இவற்றால் சூழப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இவற்றைத் தாண்டி வசதி, சுகம், அன்பான சுற்றம் என்கிறவற்றையும் அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அய்யா சொல்பவற்றைப் பேச்சுத் தமிழிலும், ஆனந்த் பாண்டியன் சொல்பவற்றை எழுத்துத் தமிழிலும் சொல்லும் உத்தி நூலுக்குச் சுவை கூட்டுகிறது. ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதிய இந்த நூலை எழுத்தாளர் கமலாலயன் நல்ல வண்ணம் தமிழாக்கியிருக்கிறார். முன்னவர் பால்டிமோரில், பின்னவர் திண்டுக்கல்லில் என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் மீறித்தான் 'மிச்சம் மீதி' உருப்பெற்றிருக்கிறது.
ஆனந்த் பாண்டியனின் நண்பரும் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தனது முன்னுரையில் கூறியுள்ளபடி "இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்க நேர்ந்ததுகூட ஒரு தற்செயலாக இருக்கலாம். ஆனால், படித்தபின் உங்களின் முன்னோர்களின் கதைகளைக் கேட்க நீங்கள் உந்தப்படுவீர்கள்" என்பது உண்மைதான். வயதானவர்கள் செல்லாக் காசுகள், ஏதோ முதியோர் இல்லத்தில் கொண்டு தள்ளப்பட வேண்டியவர்கள் என்று அசட்டை செய்யாமல், இடுங்கிய கண்களுக்கும், சுருங்கிய தோலுக்கும், சிறுநீர் வாசமடிக்கும் வேட்டி புடவைகளுக்கும், திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகளுக்கும் அடியே ஒளிந்து கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பான அஸ்திவாரத்தை நம்மால் பார்க்க முடிந்தால் நாமும் சற்றே நேரம் ஒதுக்கி அவர்களின் வாழ்க்கையைக் கேட்போம்; நூலாக எழுத முடியாவிட்டாலும் தூக்கி எறியப்படக் காத்துக்கொண்டிருக்கிற மரபெஞ்ச்சாக அவர்களைக் கருதுவதை நிறுத்துவோம். அந்த வகையில் 'மிச்சம் மீதி' மூலம் ஆனந்த் பாண்டியன், அய்யாவுக்குச் செய்திருக்கும் மரியாதையை மிகப் பெரிதாக மதிப்பது அவசியம்.
நூலை ஆன்லைனில் வாங்க: www.nhm.in
நூலாசிரியர் ஆனந்த் பாண்டியனின் பெற்றோர் டாக்டர். கணேச பாண்டியனும் லலிதா பாண்டியனும் 1972லேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். தற்போது லாஸ் ஏஞ்சலஸில் வாழும் கணேச பாண்டியன் ஓர் இதயவியல் நிபுணர். ஆனந்த் இந்த நூலைத் தனது மகன் கருணுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். "வரும் தலைமுறைகள் தமது முன்னோர்கள் மீது கவனம் செலுத்தட்டும் என்றே இப்படிச் செய்திருக்கிறேன்" என்கிறார் ஆனந்த். அவரது மனைவி சஞ்சிதா பாலச்சந்திரன் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மனிதவியல் அருங்காட்சியத்தின் கியுரேட்டர் மற்றும் கன்சர்வேட்டர்.
('மிச்சம் மீதி-ஓர் அனுபவக் கணக்கு' - எம்.பி. மாரியப்பன், ஆனந்த் பாண்டியன்; தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கமலாலயன்; வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்; விலை: ரூ. 190)
மதுரபாரதி |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|
|