|
தமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) |
|
- திவாகர்|ஆகஸ்டு 2012| |
|
|
|
|
|
சிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வோர் அனுபவமும் ஒரு சிறுகதைக்கு வித்தாகும். அனுபவம் வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியானாலும் சரி, அது ஒரு பாடம்தானே. இந்தப் பாடத்தைச் சுவைபட எழுத்தில் விவரிக்கும்போது படிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாகக் கிடைக்கிறது. வாசகர்கள் மனதில் இந்தப் பாடங்கள் பல சமயங்களில் நீங்கா இடம் பிடித்து விடும். ஆகா, நமக்கும் அது நடந்ததுதான், அல்லது நடக்க இருந்ததுதானே, அல்லது ஒருவேளை நாளை நம் வாழ்க்கையில் நடக்க நேர்ந்தால், என வாசகன் பல கோணங்களில் ஆலோசிக்கத் தொடங்குவான். எந்த எழுத்தாளர் இப்படி வாசகனைச் சிந்திக்க வைக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவர் ஆகிறார்.
தமிழ்த்தேனீயின் 'வெற்றிச் சக்கரம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் இந்த வகையைச் சேர்ந்தது. ஐம்பத்திரண்டு கதைகள்; ஐம்பத்திரண்டு விதமான அனுபவப் பாடங்கள்.
வீட்டில் நடக்கும் சாதாரண விஷயங்களே கதைகளுக்கு வித்தாகின்றன. உறவுகளும் உணர்வுகளும் அவற்றுக்கு உரம் போட்டு வளர்க்கின்றன. தமிழ்த்தேனீ தன் கதைகளில் இப்படிச் சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொண்டு லாகவமாகக் கையாண்டிருக்கிறார். தந்தையின் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் மகள் (வெந்து தணியும் காடு), அண்ணன் மனைவியிடம் ஒருகாலத்தில் அவஸ்தைப் பட்டாலும் தன் நல்ல செயல்களால் அந்தப் பெண்மணியின் தவறுகளை உணரவைக்கும் மனைவி (சரஸ்வதி), குடிகாரக் கணவனாக மட்டும் இல்லாமல் குடித்துவிட்டு மனைவியைச் சந்தேகப்படும் சாக்கடை மனம் படைத்தவர்கள், எதையும் பதட்டத்தோடு செய்யும் பெண் (மாற்றுச்சாவி), என்ன இருந்தாலும் சொந்த ஊர் சொந்த ஊர்தான் எனப் பெருமைப்படும் கணவன் மனைவி (கர்ப்பவாசம்), ரத்தம் கொடுத்து பந்தத்தை உருவாக்கிடும் வளர்ப்பு மகன் (சொந்த ரத்தம்) இப்படி ஏராளமான உணர்ச்சிகளின் நடுவே கதைகளை நகர்த்திக் கொண்டே செல்கிறார் தமிழ்த்தேனீ.
'யாருக்கும் தெரியாது' என ஒரு கதை. வயதான அம்மா ஒருத்தி, பெற்றெடுத்த மகன்களுக்கும் மேலாக ஒருவனை நம்பித் தன் ஈமச் சடங்குக்காக வெகுகாலம் சேமித்து வைத்த பணத்தை அவனிடம் தருகிறாள். கொஞ்சம் பெரிய அளவில் பணத்தைப் பார்த்ததும் அவன் மனம் சலனப்படுகிறது. மனச்சாட்சியும் மௌனமாகிவிடுகிறது. இங்கே அவனது மனப் போராட்டத்தையும் அவன் எளிதில் விழுந்ததையும் அழகாகச் சொல்லி இருக்கிறார் தமிழ்த்தேனீ. கடைசியில் இறந்துபோன அந்த அம்மாவைத் தூக்கும்போது அவன் அந்த மாயையிலிருந்து விடுபடுவதைக் கதாசிரியர் காட்டி நம்மை நிம்மதிகொள்ளச் செய்கிறார். இருந்தாலும் பணம் என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதையும் நயமாகக் காட்டிவிடுகிறார். |
|
இன்னொரு கதை, பெண் பார்க்கும் படலத்தில் எழுகின்ற ஒரு சின்ன சலசலப்பு. கர்ப்பவாசம் கதையில் பிள்ளை பார்த்துப் பார்த்துப் பழகிப்போன நடுத்தர நிலைக் குடும்பத்துப் பெண் கடைசியில் ஒருவன் தன்னைப் பார்க்கவரும்போது தன் தங்கையைப் பார்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். தனியே அவனைக் கூப்பிட்டு அவனுக்குத் தன் தங்கையைப் பிடித்தால் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறாள். ஆனால் இவளின் திறந்த மனம் அவனுக்குப் பிடித்துவிட அவளையே கரம்பிடிக்கிறான். திறந்தவெளி எனும் இந்தக் கதையில் கன்னிப் பெண்களின் உள்ளத்தையும், அதே சமயத்தில் பெண்மைக்கே உரிய சில உயரிய குணங்களையும் சித்திரிப்பதில் தமிழ்த்தேனீ வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழ்த்தேனீ விவாகரத்துகளைக் கண்டித்து நயமாகக் கதைகள் எழுதி இருக்கிறார். அதிலும் ஒன்று அதிர்ச்சி வைத்தியமாக வருவதில் கதாசிரியரின் சமூகப் பொறுப்பு நன்றாகவே வெளிப்படுகிறது. இன்னொன்றோ விவாக ரத்து வாங்கியபின் பேசித் தீர்த்து இணைவதில் முடித்து வைக்கிறார். “நான் நானாகத்தான் இருப்பேன், நீ நீயாகவே இரு, இப்போ சகிச்சுக்கப் பழகணும்” என்பதும், “காதல் வேறு, கல்யாணம் வேறு, இதைச் சரியாகப் புரிஞ்சுக்கணும்” என்று விளக்கம் கொடுப்பதும் சரியாகத்தான் பட்டிருக்கிறது.
ஒரு வக்கீல், கடவுள் நம்பிக்கையே இல்லாதவர், தான் எடுக்கும் ஒவ்வொரு தவறானவரின் வழக்கையும் வெற்றிகரமாக முடிப்பார். அதே வக்கீல் ஒரு நல்ல காரியம் செய்யப்போக அது சிரமத்தில் கொண்டுவிடுகிறது. அவர் வேறு வழி காணாது இறைவனைத் துணைக்குக் கூப்பிடுவதை 'பம்பரம்' கதையில் நன்றாகவே சுழலவிட்டிருக்கிறார்.
சில கதைகளில் முதலில் சொன்னதையே மறுபடியும் எடுத்துச் சொல்வது சற்றே நெருடினாலும் வாசகர் மனதில் நல்ல விஷயங்கள் பதியவேண்டுமே என்ற கவலை கதாசிரியருக்கு இருப்பதையே காட்டுகிறது. பண்பாடு விலகக் கூடாது என்பதில் கவனம், விரசம் இல்லாத நடை, பெண்களை மதிக்கும் தன்மை, சமூகம் பாழாகி விடக்கூடாது என்கிற அக்கறை - இவற்றையெல்லாம் சிறுகதைகள் மூலம் அழகாகச் சொல்லி இருப்பது தமிழ்த்தேனீயின் சிறப்புதான்.
கவிஞர், நடிகர், பரிசுகள் வென்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட தமிழ்த்தேனீயாரின் சிறுகதைத் திறன் வெற்றிச்சக்கரத்தில் பளிச்சிடுகிறது.
(பதிப்பித்தோர்: தென்றல் நிலையம், 12-பி, மேல சன்னதி, சிதம்பரம் 608 001, விலை ரூ. 75)
திவாகர், விசாகப்பட்டினம் |
|
|
|
|
|
|
|