Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeபாகம் 5

சமீப காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் இணைந்துள்ளன (merged) அல்லது வாங்கப்பட்டுள்ளன (acquired). சந்தையில் பங்கு விற்பனைக்கு வரும் (Going Public or Initial Public Offering - IPO) நிறுவனங்கள் மிகவும் சிலவே. நன்கு வளர்ந்து வரும் ஆரம்பநிலை நிறுவனங்கள், என்றைக்காவது இரண்டு வழிகளில் ஒன்றில் வெளியேற்றம் (exit) அடைந்தால்தான் அவற்றில் மூலதனமிட்டவர்களுக்கு முதலீட்டின் பேரில் வருமானம் (return on investment) கிடைக்கும். இந்த நிறுவனங்களுக்கான இரண்டு வழிகளைப் பற்றி என்னிடம் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவற்றுக்கான விடைகள் இங்கே.

இப்போது தீடீரென மென்பொருள் (software) துறையிலும் மின்வலை மற்றும் மின்வலைப் பாதுகாப்பு (networking and network security) துறைகளிலும் பல நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன அல்லது இணைந்துள்ளனவே ஏன்?

(தொடர்கிறது)

இது வரை கண்டது: Geoffrey Moore-இன் 'பெரும்பிளவைத் தாண்டுதல்' (Crossing the Chasm) புத்தகத்தில் கூறியுள்ள கோட்பாடுகளின் படி ஒரு நிறுவனம் வளர்ச்சி பெற்று பெரும் நிறுவனமாக வேண்டுமானால், அதற்குத் தேவையான பல முக்கியமான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்; முதன்முறை பங்கு வெளியிடுவதற்கு முன் பல இடர்களைச் சந்தித்து அபாயங்களை சமாளித்து பங்குதாரர்களுக்குப் பலன் தருவது மிகக் கடினமாகி வருகிறது. பொதுப்பங்கு நிறுவனமான பின்னும், தொடரும் இடர்களைத் தவிர்த்து பங்குதாரர் பலனைப் பெருக்குவது பிரம்மப் பிரயத்தனமாகி வருகிறது. பெரும் நிறுவனங்கள் புதுமைப் படைப்பாளர் சங்கடம் (innovator's dilemma) என்னும் கோட்பாட்டுக்கேற்ற முறையிலும், இன்னும் பல நிதித்துறை மற்றும் வணிகக் காரணங்களாலும் தாங்களே புது தொழில்நுட்பங்களைப் படைக்காமல் ஏற்கனவே படைத்து விட்ட நிறுவனங்களை வாங்குவதில் குறியாகிவிடுகிறார்கள். அதனால்தான் கம்ப்யூட்டர் துறைகளில் பல நிறுவனங்கள் தங்களை விடப் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து வருகின்றன.

இப்போது மேற்கண்டு ஆராய்வோம்:

கே: நான் வேலை செய்யும் நிறுவனம் வாங்கப்பட்டுவிடும் போலிருக்கிறதே. என் கதி என்ன ஆகும்?

இது மிக நல்ல கேள்வி. நிறுவனங்கள் விற்கப் படுவது ஏன் சர்வ சகஜமாகிவிட்டது என்று இதுவரை விவரித்தோம். இந்த நிலையில் உங்கள் நிறுவனம் வாங்கப்படுமானால், உங்கள் நிலை என்னவாகும் என்பதை நன்கு உணர்ந்து அதற்குத் தயாராக இருப்பது நல்லதுதான்.

வெவ்வேறு நிறுவனங்கள் இணைப்புக்களை வெவ்வேறு மாதிரி அணுகுகின்றன. இணைப்புக் களில் மிக அனுபவம் பெற்ற இரு நிறுவனங்கள் Cisco மற்றும் 'பழைய' Computer Associates (இனிமேல் oldCA எனக் குறிப்பிடப்படும்) நேர் எதிர் துருவங்கள் எனலாம். (ஏன் 'பழைய' என்று குறிப்பிடுகிறேன் என்றால், புது நிர்வாகத்தில் CA என்னும் புலி தன் தோல்வரிகளை மாற்றிக் கொண்டு kinder, gentler 'புதிய' CA ஆகிவிட்டது! புது-CA சமீபத்தில் Concord மற்றும் Netegrity நிறுவனங்கள் வாங்கியதில் வெகு வித்தியாசமாக நடந்துள்ளது. புது-CA இணைப்புகள் விஷயத்தில் Cisco ரகம் என்றே கூறலாம்!)

Cisco பெரும்பாலும் ஒரு நிறுவனத்தை வாங்கும் போது யாரையும் வேலை நீக்கம் செய்வதில்லை. OldCA-வோ, லாபத்துக்காக மட்டும் வாங்கி குறைந்தபட்ச அளவில் தக்க வைத்துக் கொண்டு பலரையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் slash and burn எனப்படும் கெட்ட பெயர் பெற்றிருந்தது. (அது நியாயமானதா இல்லை அநியாயமான பழியா என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது, கேள்விப் பட்டதைக் கூறுகிறேன்!) மற்ற நிறுவனங்கள் இந்த துருவங்களுக்கு இடையில் எங்காவது இடம் பெறுகின்றன.

நியாயமாகப் பார்க்கப் போனால், எந்த இணைவிலும் வேலை நீக்கமே இருக்கக் கூடாது என்பது புத்திசாலித்தனம் என்று கூற முடியாது. வாங்கப்படும் நிறுவனத்திலும் வாங்கும் நிறுவனத்திலும் பல வேலைகள் ஒரே மாதிரி இருக்கும். அதனால் வணிகரீதியிலும், நிதி ரீதியிலும் ஒரே வேலைக்கு இரண்டு பேரை வைத்துக் கொள்வதென்பது மிகக் கடினம்; நிறுவனத்துக்கு நிதி இழப்பையும், அம்மாதிரி வேலையில் உள்ளவர்களுக்கு ஜவ்வு மாதிரி இழுக்கப்படும் மனத்துன்பத்தையுமே விளைவிக்கக் கூடும்.

அதனால் பெரும்பாலான இணைவுகளில் பல பேர் வேலை இழக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வேலை நீக்கம் செய்யும் போது ராட்சஸத்தனமாக செய்கிறார்களா, அல்லது மனிதாபிமானத்துடன் கண்ணியமாக நடத்தி, சலுகைகள் தந்து, வேலை இழப்பின் தாக்கத்தைத் தணிக்க முயற்சி எடுக்கிறார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
கே: இணைவுகளில் எந்த மாதிரி வேலைகள் நீக்கப்படுவது சகஜம், யார் பொதுவாக வேலை இழப்பதில்லை?

நாம் ஆராய்ந்து வரும் உயர் தொழில் நுட்பத் துறைகளில், பொதுவாகத் தொழில் நுட்ப வல்லுனர்கள் வேலை இழப்பதில்லை. பெரும்பாலான இணைப்புக்கள் விற்பொருள் சேர்க்கவும், தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதற்காகவுமே நடப்பதால் வாங்கும் நிறுவனங்கள் பொறியியலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பெரும் முயற்சி செய்கின்றன.

விற்பொருளை உருவாக்கும் நிபுணர்கள் மட்டுமல்லாமல், அதை விற்பதற்கு உதவ வேண்டிய விற்பனைப் பொறியியலாளர்களையும் (sales or systems engineers) தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். தக்க வைத்துக் கொள்ளும் இன்னொரு குழு, வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் உதவிக் குழு. இந்த மூன்று தொழில்நுட்பம் சார்புள்ள குழுக்களைத் தவிர மற்ற யாவருக்கும் வேலை இழப்பு வாய்ப்பு அதிகம் என்றே கூறலாம்.

வாங்கப்பட்ட நிறுவனத்தின் சில பதவிகள் தேவையற்றவை ஆகிவிடுகின்றன. உதாரணமாக நிதித் துறையைக் குறிப்பிடலாம். வாங்கும் நிறுவனத்தில் ஏற்கனவே மிக ஊன்றிப் போன நிதித்துறை நிர்வாகிகள் இருப்பதால், பெரும்பாலாக வாங்கப்பட்ட நிறுவனத்தின் நிதி நிர்வாகிகள் விலக்கப்படுவது சகஜம். பொதுவாக, வாங்கப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (CEO) போன்ற முதுநிலை மேலாளர்களும் தொடர்வதில்லை. மேல்நிலையில் இடம் குறைவல்லவா?! ("There is less room at the top"!) விற்பதற்காக வாய்ப்புக்களைத் தேடும் Sales Lead Developers குழு ஏற்கனவே வாங்கும் நிறுவனத்தில் இருப்பதால் அவர்களையும் விலக்கப் பெரும் வாய்ப்புள்ளது.

இந்தப் பொது விதிகளுக்குச் சில விலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

தொழில்நுட்பப் பொறியியலாளர்கள் வேலை இழக்கப் பின்வரும் காரணங்கள் உள்ளன:

இணையும் இரு நிறுவனங்களிலும் இரண்டு வெவ்வேறு project-கள் ஒரே மாதிரி இருந்தால், அதில் ஒன்று நிறுத்தப்பட்டு, அதில் வேலை செய்யும் தொழில் நுட்பக்காரர்கள் வேலை இழக்கக் கூடும். அல்லது, வாங்கும் நிறுவனம் வாங்கப்பட்ட நிறுவனத்தின் சில விற்பொருட்களையோ, தொழில் நுட்பங்களையோ தேவையில்லை என்று தள்ளி விடக்கூடும். உதாரணமாக, ஒரு மென்பொருள் நிறுவனம், hardware சம்பந்தப்பட்டவற்றை மூடலாம். அல்லது system விற்கும் நிறுவனம் chip தயாரிக்கும் project-ஐ நிறுத்தி விடக்கூடும்.

வாங்கப்பட்டது முழு விற்பொருளுக்குப் பதிலாக, தொழில்நுட்பக் கருவே என்றால், ஒரு சில தொழில்நுட்ப வல்லுனர்களை மற்றும் வைத்துக் கொண்டு மீதி பொறியியலாளர்கள் வேலை நீக்கம் செய்யக் கூடும்.

அதற்கு நேர் எதிராக, யாருமே வேலை இழக்காமல் நடக்கும் இணைவுகளும் உள்ளன. அவ்வாறான நல்ல விளைவு ஏற்படுவதற்குக் காரணங்கள் பின்வருமாறு:

வாங்கும் நிறுவனம், ஒரு புது வணிகத் துறைக்குள் நுழையும் முயற்சிக்காக வாங்க முற்படுமானால், பொதுவாக அவர்களுக்கு அந்தத் துறையில் பலமான அனுபவம் இருப்பதில்லை. அதனால், வாங்கப்படும் நிறுவனத்தில் உள்ள அத்தனை அனுபவஸ்தர்களும் அவர்களுக்குத் தேவைப்படுவதால், அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக முன்படுவார்கள். வாங்கப்படும் நிறுவனத்தி லிருந்து சிலர் தாமே வெளியேறி விடுவது சகஜந்தான், ஆனால் அது விலக்கப்படுவதால் அல்ல, வாங்குபவர்களின் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி தோல்வியடைவதால் என்பதுதான் முக்கியம். Juniper நிறுவனம் NetScreen மற்றும் Peribit நிறுவனங்களை வாங்கியதையும் Citrix நிறுவனம் NetScaler-ஐ வாங்கியதையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். NetScreen மேலாளர்கள் பலர் Juniper-இலிருந்து வெகு சீக்கிரமே விலகிவிட்டனர். ஆனால் Peribit-ஐச் சார்ந்தோரை வெற்றிகரமாக இதுவரை Juniper தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே போல் Citrix வெகு தீவிரமாக முயன்று NetScaler வல்லுனர்கள் அனைவரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது! (இன்னும் பலமாகச் சொல்லப் போனால், இந்த மாதிரியான உதாரணங்களில், வல்லுனர்களுக்குச் சலுகைகள் கொடுத்தும், சட்டப் படியான பல விதக் கட்டுப்பாடுகள் (contract) போட்டும் அவர்கள் விலகுவதையே மிகக் கடினமாக்கி விடுகிறார்கள்!)

அனுபவஸ்தர்களும் வல்லுனர்களும் மொத்தமாகத் தேவைப்படாவிட்டாலும், வாங்கும் நிறுவனம் போதிய அளவுக்குப் பெரிதாகுமானலோ வாங்கப்படும் நிறுவனம் மிகச் சிறியதானாலோ, அனைத்து வேலையாளர்களும் வாங்கும் நிறுவனத்தின் பலப்பல துறைகளிலும், குழுக்களிலும் உள்ள காலிப் பதவிகளுக்குப் பொருத்தமாகி, தங்கிவிடுகிறார்கள். இணைவுகளின் அத்தகைய விளைவை, பலவித வேலையாளர்களை தனித் தனியாகத் தேடாமல், ஒட்டு மொத்தமாகக் கிடைக்கும் போனஸாகக் கருதலாம்!

எவ்வளவு வேலையாளர்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும் எவ்வளவு பேரை விலக்க வேண்டியிருக்கும் என்பது இணைவுகளின் மிக முக்கியமான நிதித்துறைக் கணிப்பாகிறது. இணைவுக்கப்புறம் எவ்வளவு வருமானம் வரும், எவ்வளவு லாபம் பெறமுடியும், அல்லது எவ்வளவு நஷ்டத்தைச் சகித்துக் கொள்ளமுடியும் என்பதைப் பொறுத்துத் தக்கவைத்தல் அல்லது வேலை நீக்கங்களை முடிவு செய்கிறார்கள்.

கே: நான் வேலை செய்யும் நிறுவனம் வாங்கப்பட்டால் நான் வேலை இழக்காமலிருக்க என்ன செய்ய முடியும்?

ப: அற்புதமான கேள்வி!

ஆனால், இதற்கு பதில் முழுவதாகக் கூற வேண்டுமானால் ஒரு முழுக் கட்டுரையே தேவைப் படும். ஓ! கொஞ்சம் இருங்கள்... பார்க்கப் போனால், அந்த மாதிரிக் கட்டுரை தென்றல் பத்திரிகையிலேயே ஏற்கனவே வந்து விட்டதே! 2001-ஆம் வருடம், டிசம்பர் மாதம் "வேலையைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேறுவது எப்படி" என்ற தலைப்பில் இதே "கதிரவனைக் கேளுங்கள்" பகுதியில் கிட்டத்தட்ட இதே கேள்விக்குப் பதிலளித்தேன். அதை முழுவதும் திரும்பக் கூறுவதற்குப் பதிலாக, அதன் சுருக்கத்தை இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாகும்படிச் சிறிதே மாற்றி அளிக்கிறேன்.

இப்படிச் செய்தால் வேலையைத் தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று உறுதியளிக்க முடியாவிட்டாலும், தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளவும் ஒரு சில பொதுவான அணுகுமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த வழிமுறைகளை, ஒரு அடிப்படை விதியாகச் சுருக்கிக் கூறி விடலாம்:

வாங்கும் நிறுவனம், உங்களை ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக, இழக்க முடியாத ரத்தினமாகக் கருத வேண்டும்.

நிறுவனத்துக்கு உங்கள் மதிப்பு (worth) எவ்வளவு என்பதை நான்கு தன்மைகளை (attributes) வைத்து எடை போடுவார்கள்:

1.தவிர்ப்பின்மை (criticality): வாங்கும் நிறுவனத்தின் அத்தியாவசியமான, அவசரமான project-க்கு நீங்கள் எத்தனை தேவைப்படுகிறீர்கள்? பொதுவாக வாங்கப்பட்ட நிறுவனத்தின் விற்பொருளை மாற்றவோ, மற்றொரு விற்பொருளுடன் கோர்க்கவோ (integration), அல்லது விற்கவோ, பராமரிக்கவோ நீங்கள் தவிர்க்க முடியாத தேவையாக இருக்க வேண்டும்.

2.திறமை (competence): கடந்த காலத் தில் நீங்கள் எவ்வளவு திறமை காட்டி, ஒரு நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்?

3.பல்கலை வல்லமை (versatility): நீங்கள் அமோகத் திறமைசாலி ஆனாலும், ஒரு துறையில் மட்டும்தானா, அல்லது இந்த நிதித் தட்டுப்பாட்டுக் காலத்தில், பலவிதங்களில் வாங்கும் நிறுவனத்துக்கு உதவ முடியுமா?

4. வருங்கால பயன் (future potential): உங்களின் கடந்த காலத் திறமை, பல்கலை வல்லமை இரண்டும் எதிர்காலத்தில் வாங்கும் நிறுவனத்துக்கு எவ்வாறு, எவ்வளவு உதவக் கூடும்?

அத்தகைய நற்றன்மைகளைப் பலமாகப் பெற்ற வல்லுனர்களை வேலை நீக்கம் செய்யாதது மட்டுமல்லாமல், அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வாங்கும் நிறுவனங்கள் அவர்களூக்கு தங்கும் போனஸ் (Retention Bonus), பங்கு வாய்ப்புக்கள் (stock options) போன்ற பல ஊக்குவிக்கும் சாதனங்களின் (retention incentives) மூலம் பெரும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

கே: வாங்கப்பட்ட நிறுவனத்தில் நான் ரத்தினமாகத்தான் திகழ்ந்தேன். ஆனாலும் நிறுவன இணைவால் வேலை இழந்து விட்டேன். அது ஏன்? நான் என்ன செய்ய முடியும்?

ப: அத்தனை நற்தன்மைகள் பெற்றிருப்பினும் சில சமயம் உங்கள் திறமை வாங்கும் நிறுவனத்துக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். அது ஏன் என்று இதே இதழில் முன்னொரு கேள்விக்கான பதிலில் கூறியுள்ளேன். அதனால், முடிவு உங்கள் கையில் இல்லாமல் நீங்கள் வேலை இழந்துவிடக் கூடும். அப்படிப்பட்ட விளைவை முன்கூட்டியே எதிர்பார்த்து மனத்துக்குள் தயாராக இருப்பதே நல்லது.

பொருளாதார ரீதியிலும் தயாராக இருக்க வேண்டும். வாங்கும் நிறுவனங்கள் பொது வாக நீக்க போனஸ் (severance bonus) அளிக்கிறார்கள். வாங்கப்பட்ட நிறுவனத்தில் நீங்கள் எவ்வளவு காலம் வேலை பார்த்தீர்கள் என்பதைப் பொறுத்து அந்த போனஸ் ஒரு நல்ல அளவுக்கே இருக்கக் கூடும். அடுத்த வேலை பெறும்வரை அது ஓரளவுக்கு உதவக் கூடும். ஆனால் அதையே மொத்த அளவுக்கு நம்பியிருப்பது நல்லதல்ல. இன்னொரு வேலை தேடும் இடைவெளி யில் தீவிர பண நெருக்கடி ஏற்பட்டு விடாமல் இருக்க கையில் மூன்று மாதங்களுக்கான ரொக்கம் (cash) வைத்திருப்பது நல்லது.

வேலை நீக்கம் எப்போதுமே தீமையானது என்றும் சொல்ல முடியாது. சில சமயம் அதுவே நல்ல வாய்ப்பாகவும் அமைந்து விடக் கூடும்! நல்ல அளவுக்கு நீக்க போனஸ் (severance) கிடைத்து வெளியேறிய சில நாட்களுக்குள்ளேயே இன்னொரு நிறுவனம் உங்களை வாரியணைத்து இன்னொரு நல்ல வேலையளிக்கக் கூடும்! முன்கூறிய நற்தன்மைகள் படைத்த ரத்தினம் நீங்க ளென்றால் உங்களுக்கு வேலையளிக்க பல நிறுவனங்கள் போட்டியிட்டு முன்வரலாம்!

மேலும் நீங்களே வேலை மாற்றத்துக்கு ஏங்கியிருந்திருக்கலாம். ஆனால் இருக்கும் வேலையை விட்டு இன்னொன்றுக்குப் போகத் தயங்கியிருக்கலாம். இந்த இழப்பு உங்கள் மனத்துக்குப் பிடித்த மாதிரியான அந்த இன்னொரு வேலையைத் தேடிக் கொள்ளும் அரிய வாய்ப்பைத் தருவதாக அமையலாமே! அந்தத் திக்கில் யோசித்துப் பாருங்கள்.

வேலை இழந்து விட்டால் எல்லாமே பிரமாதமாக நல்ல விளைவாகத்தான் முடியும் என்று நான் கூற வரவில்லை. ஆனால், கொஞ்சம் திட்டத்துடன் தயாராக இருந்தால் வேலை இழப்பைச் சமாளித்து மீண்டும் முன்னேற முடியக் கூடும் என்றுதான் கூறுகிறேன்.

கே: என் நிறுவனம் வாங்கப் பட்ட பின் நான் வேலை இழக்கவில்லை! புது நிறுவனத்தில் சேர்ந்த பிறகு வேலையில் வளர்ச்சி பெற முடியுமா? வெற்றிகரமாக வளர என்ன செய்ய வேண்டும்?

ப: இன்னொரு அற்புதமான கேள்வி! இந்தக் கேள்விக்கும் இன்னும் ஓரிரு கேள்விகளுக்கும் பதில்களை இந்தத் தலைப்பின் தொடரின் இறுதிப் பாகமாக, அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline