பொருத்தம் துணிவே துணை சுமை
|
|
|
|
|
போர்டு மீட்டிங்கை பார்க் ஷெரடனில் முடித்துவிட்டு மத்தியானத்துக்கு மேல் அலுவலகத்தில் நுழையும்போது சேல்ஸ் டிவிஷனில் அசந்தர்ப்பமாய் கும்பல் கூடியிருந்தது. டெஸ்பாட்ச் தனபால்தான் முதலில் என்னைப் பார்த்தான். "ஏ… சாருக்கு மொதல்ல சொல்லணும்பா. பையன் சாரோட ரெகமெண்டேஷன்ல வந்தவன்" என்று பீடிகை போட்டவாறே, "சார் நீங்க மூணு மாசம் மின்ன சேல்ஸ்ல சேத்தீங்களே குமார்னு ஒரு பையன்..."
அதற்குமேல் பொறுக்கவில்லை எனக்கு, "இழுக்காத விஷயத்தைச் சொல்லுய்யா. அந்தப் பையனுக்கு என்ன ஆச்சு?"
"சிஎஸ்ஓ கலெக்ஷனுக்கு இன்னிக்கி காலைல போயிட்டு பைக்ல ஆபீஸ் வரசொல்ல, பூந்தமல்லி ஹைரோடுல மண் லாரி அடிச்சு பையன் ஆன் த ஸ்பாட் காலி சார். மண்டைல பலமா அடிபட்டு, அம்மாம் ரத்தம்" என்று விவரிக்கத் தொடங்கினான். எனக்கு தனபால் சொன்னது உறைக்கவே ஒரு நிமிடம் ஆனது. சுதாரித்துக் கொண்டாலும், நம்ப முடியவில்லை. தனபால் மெகாசீரியல் மனோபாவம் கொண்டவன். எல்லாவற்றையும் ஒன்றுக்குப் பத்தாக விவரிப்பான்.
அருகிலிருந்த சேல்ஸ் குணசேகரனைக் கேட்டேன். "என்னப்பா குணா, நீங்க ஒண்ணாதானே ஏரியா கலெக்ஷனுக்கு போவீங்க. என்னாச்சு குமாருக்கு?"
"ஆமா சார். வழக்கம்போல அசோக் பில்லர்கிட்ட காலைல டிபன் சாப்டுட்டு, கலெக்ஷனுக்கு கெளம்பினோம். குமார் கீல்பாக்ல ஒன்பது மணிக்கு இருக்கணும்னு போகற அவசரத்துல ஹெல்மெட்டை விட்டுட்டுப் போயிட்டான்." "இர்ரெஸ்பான்ஸிபில் ஃபூல்." "இல்ல சார், இன்னிக்கு கலெக்ஷன் டெட்லைன். அவசரத்துல மறந்துட்டான். ஹெல்மெட்டை ஆபீசுக்கு எடுத்துட்டு வான்னு கடைசியா எனக்குத்தான் போன் பண்ணினான் சார். பதினொரு மணிக்கு ஆபீசுக்கு ஆக்ஸிடென்டுனு போன் வந்தது. இப்ப ஜிஹெச் போயிட்டுதான் வரேன் சார். ஸ்பாட்லயே போயிட்டான். ஹெல்மெட் போட்டிருந்தா பொழச்சிருப்பான். தலைல அடிபட்டு நிறைய ரத்தம் போயிடுச்சு." "வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சா?" "ஹெச்.ஆர். பாலா அவங்க வீட்டுக்கு போயிருக்காரு சார். இன்னேரம் சொல்லியிருக்கணும். நல்ல பையன் சார். துடியா வேலை பார்த்தான். அநியாயம் சார்."
அநியாயம்தான்.அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. முதலில் அந்தப் பையன் குமார்மேல் கோபம் வந்தது. ஹெல்மெட் போடாம அப்படி என்ன அவசரம். எவ்வளவு ஆக்ஸிடென்ட் நடந்தாலும் இந்தப் பசங்களுக்கு ஏன் புத்தி வரமாட்டேன் என்கிறது. பிறகு என்மேல் கோபம் வந்தது. எங்கேயோ டெல்லியில் சுத்திக் கொண்டிருந்தவனை, நன்றிக்கடன் கழிக்கிறேன் பேர்வழி என்று இப்படி ஒரு பாவத்தைப் பண்ணிவிட்டேனே. என் கம்பெனியில் சேர்த்துவிட்டு, பைக்கையும் கொடுத்து இப்படிச் சென்னை நடுத்தெருவில் அடிபட்டு சாகக் காரணமாகி விட்டேனே. சுந்தர்ராஜன் முகத்தில் எப்படி விழிப்பேன்! ஒரே பையனை இழந்து எப்படிக் கதறிக் கொண்டிருக்கிறாரோ.
என் கேபினுக்குள் போனதும் இன்டர்காமில் "மாலதி, சேல்ஸ்ல அந்தப் பையன் குமார் ஆக்ஸிடென்ட்ல போயிட்டான், உடனே வாம்மா" என்றேன். வந்ததும் மளமளவென்று உத்தரவு பிறப்பித்தேன். குமாருக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் ஒழுங்கா இருக்கான்னு அக்கவுண்ட்ஸ்ல கொஞ்சம் பாத்துட்டு உடனடியா க்ளெய்ம் பண்ணச் சொல்லு. நாளைக்கு ஹிண்டு, மாலைமலர்ல ஆபிச்சுவரி போட ஏற்பாடு பண்ணு. கிரீவன்ஸ் தொகையா ஒரு லட்சத்துக்கு செக் போட்டு இமீடியட்டா அவங்க குடும்பத்துக்கு குடுக்கச் சொல்லு. இன்னும் ரெண்டு நாளைக்கு என் எல்லா அப்பாயிண்ட்மெண்ட்ஸையும் கான்ஸல் பண்ணிடு. நான் இப்ப கெளம்பறேன்.
தலை விண்விண் என்று வலித்தது. இந்தச் செயல் எதுவும் மனசை அமைதிப் படுத்தவில்லை. வீட்டுக்குப் போகும்போது சுந்தர்ராஜனையும், குமாரையும் பற்றி யோசனைகள் தோன்றின. |
|
நான்கு மாதம் முன்பு என் மனைவி லலிதா நச்சரிப்புத் தாங்காமல், பக்கத்தில் புதிதாகத் திறந்த எலக்ட்ரானிக் ஷோரூம் போயிருந்தேன். ஆடி தள்ளுபடி கூப்பனுக்கு முண்டித் தள்ளிய கும்பலை விட்டு ஒதுங்கி நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் போதுதான் அந்தப் பெரியவரை கவனித்தேன். கடைக்கு வெளியே தக்காளிக்கு பேரம் பேசிக்கொண்டிருந்தார். சலவை காணாத சாதாரண வேஷ்டி, ஜிப்பா, சலவைக்குப் போட்டு எடுத்த மாதிரி தலை. வெளியில் தெரிந்த சதையெங்கும் காலம் போட்டுவைத்த கோடுகளாய் சுருக்கங்கள். கையில் ஒரு பை, கண்களுக்கு கீழே இரண்டு பைகள். இத்தனையும் மீறி ஒரு நொடியில் அந்த பளபளக்கும் முழியிலும், சாயலிலும் அடையாளம் கண்டுகொண்டேன்.
"சுந்தர்ராஜன் சார்."
குரல் வந்த திசை நோக்கி நிதானமாகத் தலைதூக்கிக் கூர்மையாகப் பார்த்தார். கண்களில் அதே தீட்சண்யம். அவரேதான்.
"நீங்க. சுந்தர்ராஜன் சார்தானே. சந்தானம் அண்டு சீனிவாசன்ல மேனேஜரா…"
"ஆமா. நான் சுந்தர்ராஜன்தான். நீங்க யாருன்னு தெரியலையே. சாரி."
"சார். நான் உங்க ராம்ஜி. ராமச்சந்திரன். இப்ப தெரியுதா?" கண்ணாடியை இப்போது மாட்டிக்கொண்டு கிட்டத்தில் பார்த்தார்.
"ராம்ஜி. ஓ! அடையாளமே தெரியலை. சாரி. ரொம்ப வருஷமாச்சில்ல. நல்லாயிருக்கியா. வைஃப், பசங்கள்ளாம் வந்துருக்காங்களா?" கரிசனத்தோடும் ஆர்வத்தோடும் தேடினார்.
"வைஃப் வந்திருக்கா. உள்ளே இருக்கா. பசங்க...." என்று நான் இழுத்ததிலேயே புரிந்துகொண்டு, உறுத்தாமல் அடுத்த கேள்விக்குத் தாவினார். "இங்கதான் இருக்கியா. எங்க வேலை பாக்கற?"
"நான் இப்ப என்.பி.எஃப்.ல ஃபினான்ஸ் டிரக்டரா இருக்கேன். எல்லாம் உங்க ஆசீர்வாதம்."
"ரொம்பப் பெருமையா இருக்குப்பா. இன்னும் ஒசந்த நிலைக்கு வருவே," நிஜமான சந்தோஷத்தோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்த்தினார். "இங்க தணிகாசலம் தெருல, அனுக்ரஹா அபார்ட்மெண்ட்ஸ், டி-3ல இருக்கேன். ஆண்டவன் புண்ணியத்துல ஓடுதுப்பா. இங்க நான், வைஃப், பொண் உமாதான் இருக்கோம். பையன் குமார் டெல்லில சேல்ஸ் ரெப்பா இருக்கான்," குரலில் ஒரு ஆயாசம் தெரிந்தாலும், "முடிஞ்சபோது நீயும் வீட்டுப் பக்கம் வா" என்று தலையில் கை வைத்து ஆசீர்வதித்து விட்டுக் கிளம்பினார்.
இன்று நான் நல்ல நிலமைக்கு வர ஆரம்பப் படி எடுத்துக் கொடுத்தவர் சுந்தர்ராஜன். மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து மான்ஷனில் தங்கிக் கொண்டு, ஒரு ஆடிட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே, சி.ஏ. வும் படித்துக் கொண்டிருந்த காலம் அது. புதிய ஊர், புது வேலை, புது மனிதர்கள். எதுவும் புரிபடவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல இருந்தது. சுந்தர்ராஜன் அங்கு மேனேஜர் என்று பேர், ஆனால் ஆல் இன் ஆல் அவர்தான். சி.ஏ. படிக்கவில்லையே தவிர, ஒரு ஆடிட்டருக்குத் தெரிய வேண்டிய எல்லாம் அவருக்கு அத்துப்படி. "ராம்ஜி, ராம்ஜி" என்று என்னை அன்பாகக் கூப்பிட்டு, எல்லா வேலைகளையும், இன்கம் டாக்ஸ், ஆடிட்டிங், புக் கீப்பிங் என்று பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். என்னைவிட பதினைந்து, இருபது வயது பெரியவராக இருந்தாலும், ஒரு நல்ல நண்பன் போலப் பழகினார். தப்புப் பண்ணினால் கூட மனம் புண்படுகிற மாதிரி, அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார். ஆடிட் கம்பெனி வேலை தவிர, சாயங்காலம் பக்கத்து ஓட்டல்களில் கணக்கு எழுதப் போவார். அப்போது என்னையும் கூட்டிக்கொண்டு போய் அவர் கணக்கில் டிஃபன் வாங்கித் தருவார்.
அவர் அப்படி என்னை அரவணைத்து எல்லாம் சொல்லித்தராவிட்டால், நான் என்றோ படிப்புமாச்சு ஒண்ணுமாச்சு என்று ஊருக்கு ஓடியிருப்பேன். நான் சி.ஏ. முடித்து, பெங்களூரில் வேலைக்குப் போய், எம்.பி.ஏ.வும் முடித்து, சென்னைக்கு மறுபடி வேலைக்கு வர இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சுந்தர்ராஜனோடு தொடர்பு அறுந்து போனது.
அவரைச் சந்தித்த இரண்டு வாரம் கழித்து ஒருநாள் அவர் வீட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போனேன். பெயிண்ட் வாசனை கண்டு பத்து வருஷமாயிருக்கும், தீப்பெட்டி அடுக்கினாற்போல் இடுங்கி இருந்த அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து கதவைத் தட்டினேன். அவர் மனைவியும் பெண்ணும்தான் இருந்தார்கள். வீட்டுக்குள்ளேயும் வறுமை கலந்த எளிமை. ஒரு நொடியில் அவர்கள் குடும்ப நிலைமை புரிந்தது. காபியோடு குடும்பக் கஷ்டத்தையும் அந்த அம்மாள் என்னிடம் பட்டவர்த்தனமாகக் கலந்து கொடுத்தாள். டெல்லியில் சேல்ஸ் ரெப்பாக இருக்கும் பையனின் சொற்ப சம்பளத்தில்தான் வண்டி ஓடுகிறது. இரண்டு குடித்தனம் என்பதால் கஷ்ட ஜீவனம்தான். பண உதவி செய்தால் சுந்தர்ராஜன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தெரியும். அந்தப் பையனுக்கு நல்ல சம்பளத்தில் சென்னையில் என் கம்பெனியிலேயே வேலை வாங்கித்தர முடிவு செய்தேன்.
வேலை வாங்கிக்கொடுத்த அடுத்தவாரம் பெரிய பழத்தட்டோடு, குடும்பத்தோடு என் வீட்டுக்கு வந்தார்கள். சுந்தர்ராஜன் கண்கள் பனிக்க "என் பையனை என்கிட்ட கொண்டுவந்து சேத்து, நல்ல வேலையும் பாத்து குடுத்துட்ட. இன்னிக்கு நாங்க நிம்மதியா இருக்கோம்னா அதுக்கு நீதான் காரணம்" என்று நன்றி சொன்னார்.
ஒரு மாதம் முன்பு சேல்ஸ் டைரக்டர் செல்லப்பா "எங்கிருந்து புடிச்சப்பா அந்த பையனை. ஜெம். எம்.எஸ்.ஓ. ஏரியால முக்கால்வாசி வரவேண்டிய பாக்கி சௌகார்பேட்லதான். ரெண்டு வருஷமா நானும், குணாவும் தலையால தண்ணி குடிச்சும் வராத பாக்கியெல்லாம் அனாயசமா ஹிந்திலயே பேசி அள்ளிட்டு வந்துட்டான். டார்கெட்டெல்லாம் தூள் பண்ணிட்டான். தேங்க் யூ. எல்லாத்துக்கும் நீதான் காரணம்" என்றபோது இன்னும் பெருமையாக இருந்தது. சுந்தர்ராஜனுக்கு நான் பட்ட நெடுநாள் கடனைத் தீர்த்துவிட்ட நிம்மதி எழுந்தது. இன்று எல்லாம் பாழ்.
ராத்திரியெல்லாம் தூக்கம் வரவில்லை. சுந்தர்ராஜன் முகத்தில் எப்படி விழிப்பேன். ‘ஏண்டா பாவி நல்லது பண்றேனு என் ஒரே பையனை இப்படி காவு வாங்கிட்டியேடா’ என்று அவர் பளார் பளார் என்று அறைவதுபோல பிரமை. எல்லாத்துக்கும் நீதான் காரணம் அப்ப இதுக்கும் நீதான் காரணம் என்று மனசாட்சி உலுக்கியது. ஓரளவு படித்த பகவத் கீதையோ, மத்வாச்சாரியார் பாஷ்யங்களோ இந்த நேரத்துக்கு அமைதி தரவில்லை. காலையில் ஹிண்டுவில் பத்து சென்டிமீட்டர் சதுரத்தில் குமார் சிரித்துக்கொண்டே அடங்கிப் போயிருந்தான். காரைத் தெருமுனையிலேயே நிறுத்திவிட்டு அந்த இழவு வீட்டை நோக்கி மனைவி லலிதாவோடும், ரோஜா மாலையோடும் நடந்தேன். வயிற்றைப் பிசைந்தது. தெரிந்த நாலைந்து ஆபீஸ் முகங்களையும், மூங்கில், ஓலைப்பாடையையும் கடந்து இயந்திரகதியில் படியேறினேன். நேற்றுவரை முகத்தில் சிரிப்போடு சுற்றிக் கொண்டிருந்த குமார் முகமே தெரியாதவாறு மூட்டையாகக் கட்டி நடுகூடத்தில் கிடத்தப்பட்டிருந்தான். தலைமாட்டில் ஊதுவத்தி, லக்ஷ்மி விளக்கு. சுற்றி பெண்கள் தலைவிரிகோல அழுகைக்கு மத்தியில் மாலையைப் போட்டு அஞ்சலி செலுத்தினேன். சாரைசாரையாகத் தெரிந்தவர், உறவினர் வரவர, ஓய்ந்திருந்த அழுகை மேலேமேலே போனது. கிளம்பும் நேரம் வந்தது. சுந்தர்ராஜனைக் கண்கள் தேடின.
பாவமன்னிப்பு நேரம் வந்துவிட்டது. அழுது வீங்கிய கண்களோடு உமா "அப்பா உள்ளே படுத்திருக்கார். போஸ்ட்மார்டம் முடிஞ்சு பாடி ராத்திரி ரொம்ப லேட்டாதான் கெடச்சுது. அப்பா தூங்கவேயில்லை" என்றாள். தைரியம் வரவழைத்துக் கொண்டு உள்ளே போய், படுத்திருந்த சுந்தர்ராஜனின் தோளில் கைவைத்து எழுப்பினேன்.
"ஐ ஆம் வெரி சாரி சார். எப்படி உங்களுக்கு ஆறுதல் சொல்றதுன்னே தெரியலை."
சுதாரித்து எழுந்து உட்கார்ந்தவர், போஸ்ட் மார்டம் ரிப்போர்டைக் காட்டினார். "ராம்ஜி, அவன் முகத்தைக்கூட பாக்கமுடியாத அளவு பாவம் பண்ணியிருக்கேன். நிமிஷத்துல சொல்லிக்காம போயிட்டான்," என்றார்.
"இதெல்லாம் நான் பண்ணின பாவம் சார். நான் வேலை வாங்கித் தந்திருக்காட்டி, குமார் இப்படி இந்தச் சென்னையில ஆக்ஸிடென்ட்ல போயிருக்கமாட்டானே. நல்லது பண்றதா நெனச்சு உங்களுக்குப் பெரும் பாவத்தை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சார்," புத்திர சோகத்தில் இருந்த அந்த வயோதிக தந்தையிடம் பாவமன்னிப்பு கேட்டேன்.
சோகம் கொப்பளிக்கும் கண்களால் என்னை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்து, என் தோளைத் தொட்டுச் சொன்னார் "ராம்ஜி… டெல்லில இருக்கும்போது அவன் மனசுல எப்பவும் ஒரு கொறை. இங்க எங்களையெல்லாம் விட்டுட்டு தனியா இருக்கோமேனு. எப்பவும் சொல்லுவான், இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும், நாம எல்லாரும் சேந்து இருக்கலாம்னு. நீ இந்த வேலை வாங்கி குடுத்ததால மூணு மாசமா ரொம்ப சந்தோஷமா இருந்தான். அவன் அம்மா கையால அவனுக்குப் பிடிச்ச சாப்பாடு, அவன் தங்கையோட அரட்டை, என்கூட வாக்கிங் இப்படி எல்லாம் ரசிச்சு அனுபவிச்சான். அவன் விதி இது. அவன் டெல்லில இருந்தாலும் போயிருப்பான். நீ பண்ணினதுலயே பெரிய புண்ணியம் அவன் போறதுக்கு முன்னாடி இந்த மூணு மாசம் சந்தோஷமா இருக்க வெச்சது. இது நடக்காம அவன் போயிருந்தா இந்தக் கட்டை சத்தியமா வெந்துருக்காது. இப்ப உன் புண்ணியத்துல இந்தக் கட்டை வேகப்போறது. அவன் ஆத்மா சாந்தியடையப் போறது. அதுக்கு நீதான் காரணம்."
சந்திரமௌலி, ஹூஸ்டன் |
|
|
More
பொருத்தம் துணிவே துணை சுமை
|
|
|
|
|
|
|
|