கல்யாண ஆல்பம் ஓரு கடிதத்தின் விலை! இரு கோடுகள்
|
|
குறையொன்றுமில்லை |
|
- மோகன்|ஜூன் 2012| |
|
|
|
|
|
சுட்டெரிக்கும் வெயிலில் கூடாரத்தின் நடுவில் ராசாத்தி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் புடவை, வெள்ளை ஜாக்கெட், கொட்டும் வியர்வை, அந்த வியர்வையால் கலைந்து போன குங்குமம், குரலில் ஓர் ஆதங்கம். "போராடுவோம்! போராடுவோம். இறுதிவரை போராடுவோம்!" ராசாத்தியைச் சுற்றி மஞ்சள் புடவைப் பெண்கள் கூட்டம், கோட்டை வாசலில் ஒவ்வொரு வாகனம் நுழையும்போதும் பலமாகக் கோஷம் போட, தூரத்திலிருந்து சுப்புராஜின் வயிற்றில் இனம் தெரியாத கலக்கம். சுப்புராஜ், ராசாத்தியின் தந்தை. இரண்டு காலும் ஊனம். எம்.ஜி.ஆர். புண்ணியத்தில் கிடைத்த கைச்சக்கர வண்டியில்தான் பெரும்பாலும் வாசம். கொத்தவால் சாவடியின் அழுக்கான பழக்கடையில் பணம் சேகரிக்கும் வேலை. ஆனாலும் அவனுடைய மிகப்பெரிய பெருமை தாயில்லாப் பெண் ராசாத்தியை வக்கீலாக உருவாக்கியது. அதற்காக அவன் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
கோட்டையில் வெள்ளை வேட்டி, சட்டை அரசியல்வாதிகளின் கூட்டம் அதிகமாய்ச் சேரச்சேர ராசாத்தி தலைமையிலான கூட்டம் அதிகமாக எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. ராசாத்திக்கு எழுந்து நிற்க வேண்டும் போலிருந்தாலும் இடது கால் ஒத்துழைக்கவில்லை. சுப்புராஜின் ஊனம் கடவுளால் கொடுக்கப்பட்டது என்றால் ராசாத்தியின் ஊனம் மனிதனால் உண்டாக்கப்பட்டது. ஒரு மாலைப் பொழுதில் கடை வீதியிலிருந்து மூன்று வயது ராசாத்தியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுப்புராஜின் மனைவி சாந்தியைக் காவு வாங்கியதோடு அல்லாமல் ராசாத்தியின் இடதுகாலைப் பதம் பார்த்துவிட்டு ஓடியது அரசியல் கட்சியின் தேர்தல் பிரசார வேன்; மாற்றாக சுப்புராஜுக்குக் கொடுத்தது இரண்டாயிரம் ரூபாய் பணம். இருந்த ஒரே துணையை இழந்துவிட்ட சுப்புராஜ் அன்று முடிவெடுத்தான், ராசாத்தியை வக்கீலாக்கியே தீரவேண்டுமென்று. தெரியாது அவனுக்கு ஏழையின் ஆசை ஒரு எல்லைவரைதான் என்று.
*****
மனைவி கொடுத்த அருகம்புல் சாறை அருந்தி விட்டுத் துண்டால் வாயைத் துடைத்துக் கொண்ட சிவனாண்டிப் பெருமாள் காரியதரிசியைப் பார்த்துக் கேட்டார். "எல்லாம் சரியா நடக்குதாய்யா?"
"எல்லாம் கரெக்டா நடக்குதுங்க. ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க."
"ஹூம்! இந்தத் தடவை சோடை போகாதீங்க. அப்புறம் நம்ம கதி அதோகதிதான்"
சிங்காரவேலு என்ற பெயரை சிவனாண்டிப் பெருமாள் என்று மாற்றிக்கொள்ளக் காரணம், நாத்திகம் பேசும் அரசியல்வாதிகளுக்கு நடுவே ஆத்திகம் பேசுபவராய் நடமாட வேண்டுமென்பதே! அதில் சிவனாண்டிப் பெருமாளுக்கு ரொம்பப் பெருமை. அதுவும் சிவனையும் பெருமாளையும் சேர்த்துப் பெயர் வைத்துக் கொண்டதுதான் எதிர்க்கட்சித் தலைவரானதற்கே காரணம் என்பது அவர் எண்ணம். கோட்டையில் அன்று நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும். இல்லையென்றால் வரவிருக்கும் தேர்தலில் அவரது கட்சி பின்னுக்குத் தள்ளப்படும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கு வேண்டி அவர் உருவாக்கியதுதான் ராசாத்தி தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம். ஒரு ஊனமுற்ற பெண்ணை, அதுவும் வக்கீல் பெண்ணை இளைஞர் அணித் தலைவியாக்கி போராட்டம் நடத்துவது அவரது அரசியல் சாணக்கியத்தனம். ராசாத்தி அவரிடம் வந்து சேர்ந்ததே தனிக்கதை.
சாந்தியை விபத்தில் இழந்த பிறகு அண்டை, அசல் உதவியுடன் ஆஸ்பத்திரியின் வாசலில் தவங்கிடந்து ராசாத்தியை ஓரளவுக்குத் தேற்றி பள்ளிக் கூடத்தில் சேர்க்கும்வரை சுப்புராஜ் படாதபாடு பட்டுவிட்டான். ஆனாலும் முயற்சியை விடவில்லை. அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பை முடித்தபின் அரசுக்கல்லூரியில் பி.ஏ. முடித்தாள் ராசாத்தி. பலவிதமான சட்டக் கல்லூரிகளில் ஏறி இறங்கி பலவிதமான ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகி நொந்துபோன ராசாத்தி, சட்டம் படித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடு முயற்சித்தபோதுதான் சிவனாண்டிப் பெருமாள் பெயரைக் கேள்விப்பட்டாள். அவருடைய சட்டக் கல்லூரியில் சில இடங்கள் காலியிருப்பதாகக் கேள்விப்பட்டு சுப்புராஜின் முதலாளி உதவியுடன் அவரைச் சந்தித்தாள்.
ராசாத்தியின் பேச்சுத் திறமையும், உடல் குறைபாடும் சிவனாண்டிப் பெருமாளை வேறு ஒரு கணக்கைப் போடச் செய்தது. அவரது கட்சிக்கு இளைஞர் அணித் தலைவி உடனடித் தேவை. தமிழ்நாட்டின் அரசியல் வாரிசுகள் பெரும்பாலும் உருவாவது சட்டக் கல்லூரிகளில்தான். சட்டம் படிக்க மட்டுமல்ல; ராசாத்தியின் இழப்புகள், சுப்புராஜின் கோபம் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அவர் போட்ட திட்டம் பிரமாதம். சட்டக் கல்லூரி முதல் வருடத்திலிருந்தே ராசாத்தி கல்லூரியின் பிரதான பேச்சாளியாகவும், கடைசி இரண்டு வருடங்களில் மாணவர் தலைவியாகவும் வளர்ந்து சிவனாண்டிப் பெருமாள் சொன்னால் சிவனே சொன்ன மாதிரி என்று தன்னைக் கட்சிப் பணிக்கு அர்ப்பணம் செய்துகொள்ள, சில வருடங்களே தேவையாக இருந்தது. கட்சி ஊர்வலத்தின் முதல் வண்டியில் ராசாத்தி, உண்ணாவிரதமென்றால் ராசாத்தி என்று தன்னையறியாமலே கட்சிப் பணியில் மூழ்கிப் போனாள். ஒருவகையில் சுப்பராஜ் நன்றிக் கடன் பட்டிருந்தாலும் சில சமயங்களில் அவள் போகும் வழி சரிதானா என்று சலனப்பட்டதுண்டு.
சிவனாண்டிப் பெருமாளின் வெள்ளைக்கலர் பென்ஸ் கார் கூடாரத்தை நெருங்கும்போது சத்தம் வலுத்தது. "உடல் மண்ணுக்கு! உயிர் எங்கள் கட்சிக்கு... ஆளும் கட்சியே நீ போடும் கையெழுத்து எங்கள் உயிருக்குப் பேசும் விலைதானே! குளிப்போம், குளிப்போம், தீக்குளிப்போம்!"
சிவனாண்டிப் பெருமாள் கூடாரத்துக்குள் நுழைய பெண்கள் அவர் கால்களில் விழுந்தனர். மெதுவாகப் புன்னகைத்து ராசாத்தியின் அருகே வந்தார். தட்டுத் தடுமாறி எழப் புறப்பட்ட ராசாத்தியின் தலையில் கை வைத்து "கோவிந்தா... காப்பாற்றப்பா..." என்றபடி அவளை அமரச் செய்தார். தூரத்திலிருந்த சுப்புராஜ் கைகூப்ப, புன்னகைத்தார். சடாலென்று திரும்பி நடந்து காரில் ஏற, பென்ஸ் மெதுவாகக் கூட்டத்தை விட்டு நகர்ந்தது. தலைக்கு மேலிருந்து சுவிட்சைத் தட்ட மிதமான குளிர்காற்று வியர்வையைக் கரைத்தது. |
|
கூட்டத்தை விட்டுச் சற்று விலகி வந்தபின் காரை நிறுத்தச் செய்தார் சிவனாண்டிப் பெருமாள். சன்னலை இறக்கிவிட்டுக் கூடாரத்தைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். எல்லாம் சரியாய் இருப்பதாய் மனதில் பட சைகையால் காரை கிளப்பச் செய்தார். வெள்ளை பென்ஸ் கார் செங்கல்பட்டை நோக்கி விரைந்தது. அவர் தோட்ட பங்களாவை நோக்கி விரைந்த அதே சமயத்தில் சுப்புராஜ் கைவண்டியில் மெதுவாகக் கூடாரத்தை நோக்கி நகர்ந்தான். ராசாத்தி என்னதான் உண்ணாவிரதம் என்று வெறியோடு போராடினாலும் அவளுக்குப் பசி தாங்காது. எப்படியாவது கையில் வைத்திருந்த இட்டிலியை சாப்பிடச் செய்ய வேண்டும். வெள்ளைக் கார் தாம்பரத்தைத் தாண்டி சீறிப்பாய கூடாரத்தின் அருகில் வந்து நின்ற பழைய வேனிலிருந்து நான்கு பேர் சத்தமில்லாமல் இறங்கினார்கள். கையிலிருந்த வாட்டர் கேன்களில் இருந்த பெட்ரோல் சில நொடிகளில் கூடாரத்தைச் சுற்றிப் பரவலாகத் தெளிக்கப்பட்டதை போராளிகள் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
முதலைமச்சரின் வாகனம் மெதுவாகக் கோட்டைக்குள் நுழைவதைப் பார்த்த கூடாரம் ‘ஒழிக’ கோஷத்தால் அதிர்ந்தது. மஞ்சள் புடவைப் பெண்கள் புடவையை வரிந்து கட்டிக் கொண்டு வளையல்களை உடைத்துக் கொள்வதும், செருப்பினால் தலையில் அடித்துக் கொள்வதுமாக ஒரு வெறித்தனம் உருவாக எங்கிருந்தோ சரமாரியாக கற்கள் கூடாரத்தை நோக்கி வர கூரான ஒன்று ராசாத்தியின் முன் நெற்றியில் பட்டுக் கோடு கிழித்தது. என்ன ஏது என்று புரியாமல் பெண்கள் தடுமாற, கலவரப்பட, அமைதியாக வேனில் ஏறிய நால்வரும், புன்சிரிப்புடன் நகருவதை சுப்புராஜ் பதட்டத்துடன் பார்த்தான். நகருகின்ற வேனிலிருந்து ஒரு துளி தீப்பிழம்பு மட்டும் கூடாரத்தை நோக்கி வருவதை கவனிக்க அவனுக்குச் சமயமில்லை.
"குளிப்போம்.. குளிப்போம்... தீக்குளிப்போம்" என்று கோஷமிட்ட பெண்கள் உண்மையிலேயே தீக்குளித்தார்கள், தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள். பெண்கள் பலவித திசைகளிலும் ஓட நாற்காலியிலிருந்து எழ முயன்ற ராசாத்தி கீழே விழுந்து பலரால் மிதிக்கப்பட்டு, நெருப்பால் கவ்வப்பட்டுச் சருகானாள்.
"உனக்கு எந்தக் குறையும் கிடையாது என் செல்லமே! வா வா என் பெண்ணே!" என்று சாந்தியின் முகம் கண்ணில் தோன்ற, "உனக்கும், ஒம் பொண்ணுக்கும் உள்ள லட்சணத்துக்கு சட்டப்படிப்பு வேற கேடா!" என்று எடுத்தெறிந்த சட்டக் கல்லூரி முதல்வரிலிருந்து எப்போதும் கவலை தோய்ந்த சுப்புராஜின் முகம், சிவனாண்டிப் பெருமாளின் நெற்றி நாமம் என்று ஒரு நிமிடம் வாழ்க்கை பின்னோக்கி ஓட ராசாத்தியின் உயிர் பிரிந்தது.
செஙகல்பட்டின் அருகில் வந்து விட்ட சிவனாண்டிப் பெருமாளுக்கு கைபேசியில் செய்தி சொல்லப்பட்டது. தீயணைக்கும் வண்டி சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபடத் துவங்கிய பதினைந்து நிமிடங்களில் வானொலிப் பெட்டியிலும் தொலைக்காட்சியிலும் விவரங்கள் அலசப்பட்டன. ஆளும் கட்சி செய்த சதி என்று எதிர்கட்சிகளும், எதிர்கட்சி நடத்திய நாடகம் என்று ஆளும் கட்சியும் அறிக்கைகள் விட, தனது ஓய்வு பங்களாவிற்குச் சென்று அடைந்து பெரிதான அறிக்கை விட சிவனாண்டிப் பெருமாள் தயாரானார்.
தீர்மானம் நிறைவேறிய மகிழ்ச்சியில் ஆளும்கட்சி ஆட்டம் போட, முப்பது பேர்களின் பிணத்தின் மேல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்று எதிர்கட்சிகள் ஆர்ப்பரிக்க, என்ன நடக்கிறது என்று தெரியாமல் சுப்புராஜ் மண்ணில் விழுந்து கிடந்தான்.
முன்சீட்டில் உட்கார்ந்திருந்த காரியதரிசியைப் பார்த்து சிவனாண்டிப் பெருமாள் "யோவ், அந்த நொண்டி சுப்புராஜ், எந்தத் தொந்தரவும் கொடுக்காமப் பார்த்துக்க. அதே சமயம் ’நம்ம கட்சி இளைஞர் அணித் தலைவியைப் பழி வாங்கிய எதிர்கட்சி’ என்று அறிக்கை விட்டு அந்தப் பெண்ணுக்காக ஒரு விழா ஏற்பாடு பண்ணு. அந்த ஆளையும் மேடைக்குக் கொண்டு வா!" என்று சொல்லி விட்டு நிம்மதியாகச் சாய்ந்து கொண்டார்.
செங்கல்பட்டு பிரதான சாலையில் அமைந்திருந்த பிராந்திக் கடை பெஞ்சில் நான்காவது கிளாஸ் விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து முடித்தான் பல்தேவ் சிங். மெதுவாகத் தள்ளாடி எழுந்து லாரி டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்ப லாரி உறுமியது. நான்கு மணிக்குள் சரக்குகளை சென்னை சேர்க்க வேண்டும். கியரை மாற்றி ஆக்ஸிலேட்டரை அழுத்த லாரி பறந்தது. இன்னும் சில நிமிடங்களில் வெள்ளை நிற பென்ஸ் காரையும், அதிலிருக்கும் மூன்று பேரையும் நசுக்கப் போகும் மகிழ்ச்சியோ என்னவோ லாரி விரையும் சத்தம் அது சந்தோஷத்தில் விசிலடிப்பது போல் இருந்தது. லாரியின் பின்னால் இந்தியில் "குடி குடியைக் கெடுக்கும்" என்ற வாசகம் வெயிலில் மின்னியது.
வானொலியில் செய்திகளைக் கேட்டுக் களைத்துப் போன சிவனாண்டிப் பெருமாள், பின் சீட்டிலிருந்த குளிர் பானத்தை உறிஞ்சியபடியே எம்பி இரண்டு பட்டன்களைத் தட்ட, காரின் மியூசிக் சிஸ்டம் உயிர் பெற்றது. எதிரே சில கி.மீ. தூரத்தில் எண்பது கி.மீ. வேகத்தில் குடிகாரன் வடிவில் எமன் வருவதை அறியாமல், அடுத்த நாளின் கட்சி மீட்டிங் பற்றியும் இன்று நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த வருடத் தேர்தலுக்கு எப்படிச் சாதகமாக்கிக் கொள்வது என்பதைப் பற்றியும், எதற்கும் அசராத தன் அரசியல் சாணக்கியத்தைப் பற்றியும் பெருமைப்பட்டுக் கொண்டே கண்மூடிச் சாய, மியூசிக் பெட்டியிலிருந்து அருமையான குரல் மிதமாகத் தவழ்ந்தது.
"குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா.. குறையொன்றுமில்லை கண்ணா.. குறையொன்றுமில்லை கோவிந்தா..."
மோகன், ஹூஸ்டன், டெக்சாஸ் |
|
|
More
கல்யாண ஆல்பம் ஓரு கடிதத்தின் விலை! இரு கோடுகள்
|
|
|
|
|
|
|