Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
துணிவே துணை
சுமை
நீதான் காரணம்
பொருத்தம்
- எல்லே சுவாமிநாதன்|ஜூலை 2012||(1 Comment)
Share:
கமலா சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் சினேகிதி பார்வதியைக் கண்டாள். "என்ன கமலா, வீட்ல பார்ட்டியா? பர்ச்சேஸ் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள் பார்வதி.

"பார்ட்டி ஒண்ணும் இல்ல பார்வதி. சனிக்கிழமை விருந்தாளி வராங்க. அதான்."

"உன் பெண் வனஜாவுக்கு வேலை கிடச்சிட்டதாமே. கங்கிராட்ஸ். அடுத்துக் கல்யாணம் பண்ண வேண்டியதுதானே. வரன் பார்க்கறியா?"

"இல்லம்மா. உனக்கு தெரியாததா. இந்தியால வளர்ந்த பொண்ணுங்க சமர்த்தா டக்குனு கல்யாணம் பண்ணி செட்டிலாயிடுதுங்க. இங்க வளர்ந்ததுங்க நானே பார்த்துக்கிறேன்னு வாயில அடிச்சிடறது. இதுங்க கேக்கறமாதிரி பசங்களும் லேசில கிடைக்கிறதில்ல."

"கவலப்படாதே கமலா. திருமண மையம்னு ஒரு வெப்சைட் இருக்கு. அதில தேடினா கிடைக்கும். வனஜா பத்தி தகவல் போட்டு ஒரு ஃபோட்டோவும் போடு. ஏகப்பட்ட வரன் கிடைக்கும். ஜானகி பெண்ணுக்கு அப்படித்தான் ஒரே மாசத்தில வரன் அமைஞ்சிது"

"சொல்லிப் பாக்கிறேன். கடவுள் விட்ட வழி. அவ தலையெழுத்து எப்படியோ!"

வீட்டுக்குப் போனதும் கமலா முதல் வேலையாக வனஜாவிடம் பேசினாள். "வனஜா..உனக்கு இப்ப வேலை கிடச்சிடுத்து. டக்குனு கல்யாணத்தை முடிச்சா நல்லது. எங்களுக்கும் வயசாயிண்டு போறது. நீ ஓகே சொன்னா ஒரு பையனைத் தேடி கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்."

"ஒனக்கு வேற வேலை இல்ல. எனக்குப் பிடிச்ச பையனை நான் மீட் பண்ணினா கல்யாணம் பண்ணிப்பேன். எப்ப யாரைப் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும். நீ இதில தலையிடாதே."

"எப்ப எங்க போய் மீட் பண்ணப்போற. என்னை உங்க தாத்தா பாட்டிதான் வந்து பார்த்து உங்கப்பாக்கு நிச்சயம் பண்ணினா. உங்க அப்பாவைக் கல்யாணத்திலதான் நேரில பாத்தேன். நாங்க என்ன குறைஞ்சு போயிட்டோம்?"

"உங்க டைம் வேறம்மா. அதெல்லாம் இப்ப நடக்காது. நானே நேரில பார்த்து, பேசி, பழகி பிடிச்சாதான் பண்ணிப்பேன்"

"திருமண மையம்னு ஒரு வெப்சைட் இருக்காம். அதுல உன் ஃபோட்டோ விவரமெல்லாம் போடலாமா?"

"நோ நோ. என் போட்டோ எல்லாம் யாருக்கும் குடுக்க மாட்டேன்."

"கல்யாணம் பண்ணிக்கற பையன் பொண்ணு எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட மாட்டானா? அவன் எப்படி இருப்பான்னு உனக்குத் தெரிய வாணாமா?"

"என்னம்மா பேத்தலா இருக்கு. போட்டோவைப் பார்க்கறதா. போட்டோ நல்லா இல்லன்னு ஒரு பெண்ணைத் தள்ளிடறதா?"

இறுதியில் பார்வதியின் தொந்தரவு தாங்காமல் வனஜா அரை மனதுடன் சம்மதித்தாள். "சரிம்மா. உன் சந்தோஷத்துக்குத் திருமண மையத்தில பதிவு பண்ணறேன். என் ஃபோட்டோ போட மாட்டேன். பேரும் போட மாட்டேன். ஈமெயில்லதான் பேசுவேன். பிடிச்சாதான் மேற்கொண்டு..."

கமலா சந்தோஷத்துடன் சம்மதித்தாள்.

வனஜா தன் தகுதிகளை எழுதி, தன் எதிர்காலக் கணவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பட்டியலிட்டாள். தன் பெயரைக் குறிப்பிடாமல் "வனா25" என்ற புனைபெயரில் எழுதினாள். தொடர்பு ஈமெயிலில்தான் தொடங்கும் என்பதைக் குறிப்பிட்டுத் தனியாக ஒரு ஈமெயில் விலாசம் தொடங்கி திருமண மையத்துக்கு அனுப்பினாள்.
சில நாட்களில் வனஜாவுக்கு ஈமெயில்கள் வரலாயின.

"அன்புள்ள வனா25, நீங்கள் ஒரு அமெரிக்கப் பிரஜை என்பது அறிந்து மகிழ்ச்சி. நான் இந்தியாவில் படித்தவன். அட்லாண்டாவில் ஒர்க் பெர்மிட்டில் இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்து கொண்டால் எனக்கு எளிதாக அமெரிக்க கிரீன் கார்டு கிடைக்கும். தற்போது இந்தியாவில் இருக்கும் என் மனைவியை இங்கு அழைத்து வந்தவுடன் உங்களை டைவர்ஸ் பண்ணிவிடுகிறேன். இதற்கு உங்களுக்கு ஐயாயிரம் டாலர் வரை தருகிறேன்."

"கெட் லாஸ்ட் #%@**" என்று அவனுக்கு பதிலளித்தாள்.

"வனா25? (வனாம்பாளா? வனலக்ஷ்மியா?) உன் ஃபோட்டோ போடாததால் நீ கருப்பாக இருப்பாயோ என்று தோன்றுகிறது. என் தம்பிக்கு 39 வயசாகிறது. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கிறான். எதுக்கும் உன் ஃபோட்டோவை அனுப்பினால் அவனுக்கு அனுப்புகிறேன். அவனுக்குக் கைநிறைய சம்பளம். கிளீவ்லாண்டில் வீடும் வாங்கியிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன்."

"உங்க தம்பிக்கு எழுதத் தெரியாதா? கையில்லயா? கம்ப்யூட்டர் கண்டா பயமா? அவனே நேரடியா எனக்கு ஈமெயில் ஏன் போடலை? 39 வயசுப் பையனுக்கு நீங்கள் கல்யாணத் தரகு செய்ய வேண்டியது அனாவசியம். கல்யாணம் வேண்டாம் என்கிறவனை நீங்கள் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்" என்று வனஜா பதில் போட்டாள்.

கம்பெனிகளின் கடிதங்களும் வந்தன.

"உங்கள் ஜாதகத்தை கணித்ததில் களத்திர காரகன் செவ்வாயோடு சம்பந்தப் பட்டதாலும் களத்திர ஸ்தானத்தில் சனி அமர்ந்ததாலும் நல்ல பலன் இருக்காது. எங்கள் மகாலக்ஷ்மி ரட்சை டாலரை வாங்கி அணிந்து கொண்டால் ஒரு மண்டலத்தில் கல்யாணம் அமையும். ஜூலைக்குள் அணுகினால் சலுகை விலையில் ரூபாய் 10000 மட்டுமே. தபால் செலவு தனி."

பிள்ளைக்கு வரன் தேடும் பெற்றோர்கள், சகோதரனுக்கு வரன் தேடும் சகோதரியர் மெயில்களை தாட்சணியம் இல்லாமல் டெலீட் செய்தாள்.

அப்பொழுதுதான் அந்த மெயில் VAT69 என்ற புனைபெயரில் வந்தது: "டியர் வனா25, உன் விளம்பரம் என்னைக் கவர்ந்தது. ஈமெயிலில் வசவச என்று எழுதிக் குவிக்க எனக்கு இஷ்டம் இல்லை. நேரில் ஸ்டார்பக்ஸில் சந்தித்து ஒரு கப் காப்பி குடித்துக் கொண்டே பேசுவது நல்லது. நீ இடம், நேரம் சொல்லு. நான் நேரில் சந்திக்க வருகிறேன்."

அப்பாடா. கடைசியில் ஒரு தைரியமுள்ள ஆண். நேரில பேச வருகிறான்.

சனிக்கிழமை காலை ஒன்பது மணி. 3வது மெயின் தெரு கிராசில் உள்ள ஸ்டார்பக்ஸில் பார்க்கலாம் என்று எழுதினாள்.

சனிக்கிழமை காலை ஸ்டார்பக்ஸ் போனாள். அருகில் கார் ரிப்பேர் கடை இருந்தது. அவள் காருக்கு பிரேக் வேலை இருந்தது. ரிப்பேர் கடையில் காரை விட்டாள். ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னார்கள். நடந்து காப்பிக் கடைக்குப் போனாள்.

ஒரு காப்பி வாங்கிக் கொண்டு அமர்ந்தாள். கடையில் அதிகம் ஆட்கள் இல்லை.

ஐந்து நிமிடம் கழித்து ஒரு பெரியவர் வந்தார். நெற்றியில் விபூதி, குங்கும பொட்டு. கண்ணில் சோடா பாட்டில் கண்ணாடி. கையில் ஒரு கோப்பு. அவளருகில் வந்தார்.

"ஆர் யு வனா25" என்றார். அவள் கோபத்துடன் தலையசைத்தாள்.

எதிரே அமர்ந்தார். "ஒன் யங்மேன் வில் ஜாயின் அஸ் ஸூன்" என்றார்.

போச்சுடா. அப்பாவை நோட்டம் பார்க்க முதலில் அனுப்பிவிட்டு பிள்ளை பின்னால் வரானா?

"திருமண மையத்தில வனா25ன்னு பார்த்தேன். முழுப்பெயர் வனசுந்தரியா?"

‘சரித்தான் சார். உங்ககிட்ட பேச எனக்கு இஷ்டமில்ல’ என்று சொல்லிவிட்டு எழுந்து போக நினைத்தாள். ஆனால் கார் ரெடியா இருக்காது. சரி இந்த ஆளை வெறுப்பேத்தி அனுப்பிடலாம் என்று நினைத்தாள்.

"என் திருமண விஷயமா நான் பையனோட அப்பா அம்மா உறவினர்கள்கிட்ட பேசக்கூடாதுன்னு கொள்கையில திவீரமா இருக்கேன் சார்."

பெரியவர் அதை லட்சியம் செய்யவில்லை. "வெரி குட். நல்ல கொள்கை. சரி, நீ என்ன படிச்சிருக்க? என்ன வேலை செய்யறம்மா?"

பேசமாட்டேன்னா புரியலயா? இந்தக் கிழவருக்கு புத்தி புகட்டணும். என்ன வேலை செஞ்சா இவருக்கு என்னவாம்? மருமகள் சம்பாதிச்சுப் போடுவான்னு பார்க்கிறதோ? எடக்கு மடக்காவே பதில் சொல்லிடலாம்.

"பி.ஏ. படிப்பு பாதில விட்டாச்சு. வேலை கிடையாது வீட்லதான் இருக்கேன்."

"சமையல் தெரியுமா? சவுத் இந்தியன், குஜராத்தி, பஞ்சாபி டிஷ்..."

ஓகோ. நாக்குக்கு ருசியா சமைப்பா மருமகள்னு ஆசையோ.

"சமைக்கவே தெரியாது. சூப்பு, ஸாலட், பிஸ்கெட்னு கையில் கெடச்சதைச் சாப்பிடுவேன்."

"உனக்கு சினேகிதர்கள், சொந்தக்காரா..."

பாய் ஃபிரண்ட் இருக்கானான்னு செக் பண்றாரா? கொழுப்புதான்.

"ஒரு பாய் ஃபிரண்ட் உண்டு சார்."

"கல்யாணம் எப்படி நடக்கணும்.... கிராண்டாவா இல்ல சிம்பிளாவா?"

புத்தி போகாதே. செலவழிக்க வசதி இருக்கானு செக் பண்றாரோ?

"எங்கிட்ட பைசா இல்ல சார். பையனே கைக்காசைச் செலவழிச்சுதான் பண்ணிக்கணும்."

"குழந்தைகள் பெத்துக்க..."

சீ! வெட்கமில்லாம இதெல்லாமா கேட்பாங்க? பேரன் பேத்தியைக் கொஞ்சலாம்னு கணக்கு போடறாரா?

"சார். எனக்கு குழந்தையே பிடிக்காது. நான் குழந்தை பெத்துக்கறதாவே இல்லை."

"ஓக்கே வனா....எனக்கு உன்னைப் பிடிச்சிடுத்து."

"பொறுங்க சார். நீங்களே முடிவெடுக்கறதா? வேர் ஈஸ் யுவர் யங் மேன்? அவரும் வரட்டும். நான் அவர்கிட்ட பார்த்துப் பேச வாணாமா?"

"ஓகே வனா" என்ற கிழவர் வாசலைப் பார்த்தார். "யெஸ் ஹி ஹேஸ் கம்" என்று சொல்லி, "பாபு ஐ ஆம் ஹியர்" என்று கையைத் தூக்க ஓர் இளைஞன் அவர்களோடு வந்து அமர்ந்தான்.

பாபுவிடம் "நீங்கதானே VAT69?" என்றாள் வனா மிகுந்த கோபத்துடன்.

"நோ, மேடம், "ஐ ஆம் பாபு" என்றான் பாபு.

"வாட்? யு ஆர் நாட் வாட்69 ? ஹூ ஆர் யு? இவர்தான் உங்க அப்பாவா?"

"நான்தான் VAT69. VAT ஃபார் வேலூர் ஏ தணிகாசலம்" என்றார் பெரியவர் சிரிப்புடன்.

தூக்கிவாரிப் போட்டது வனஜாவுக்கு. "விளையாடுறீங்களா? கல்யாணம் யாருக்கு சார்?"

"எனக்குதான் வனா..." என்றார் பெரியவர்.

"சார்...ஐ ஆம் ஷாக்டு... என் வயசென்ன..உங்க வயசென்ன. உங்களுக்கு வெக்கமா இல்லை?"

"ஐ ஆம் ஒன்லி 69 வனா. நீதானே மணமகன் வயசு 26லிருந்து 72 வரைக்கும் ஓக்கேனு போட்டிருக்கே."

அவளுடைய திருமண மைய விளம்பரத்தின் அச்சுப் பிரதியைக் கோப்பிலிருந்து எடுத்து நீட்டினார்.

அதில் வருங்கால மணமகன் வயது 26லிருந்து 72க்குள்" என்று அச்சாகியிருந்தது.

வயது 26லிருந்து 27வரை என்றுதானே கொடுத்தேன்? திருமண மையத்தின் அச்சுப் பிழையா, அல்லது நானே தப்பாகப் போட்டுவிட்டேனா? குழம்பினாள்.

"சார் தப்பு நடந்து போச்சு. வயது 26-27க்குள்தான் சரி. தப்பா வந்துடுச்சு போல."

"வனா... நான் என்னைப்பத்தி இன்னும் முழுசா சொல்லலையே. எனக்குக் கணிசமா பென்ஷன் வரது. பெரிசா ஹெல்த் பிராப்ளம் எதும் இல்ல. கொஞ்சம் மூட்டு வலி இருக்கு அதான். ஆகாரமும் சூப்பு மாதிரிதான் சாப்பிடறேன். இல்லாட்டி கேஸ் டிரபிள் வருது. அதுனால உனக்கு சமைக்கிற வேலை இருக்காது. குழந்தைகள் பத்தி கவலைப்படாதே. என் பொண்ணு, பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து படிச்சு கல்யாணமாகி செட்டிலாயிட்டா. என் அப்பா, அம்மா, மனைவி எல்லாம் செத்துப் போயிட்டா. உனக்கு மாமியார், மாமனார் சக்களத்தி, பிக்கல் பிடுங்கல் இருக்காது. சிம்பிளா ரெஜிஸ்டர் மேரேஜ் வெச்சிக்கலாம். லாஸ் வேகாஸ்ல 49 டாலருக்குக் கல்யாணம் பண்ணிக்க ஒரு கூப்பான் கூட இருக்கு."

"நைஸ் ட்ரை தாத்தா. குட் பை" என்று எழுந்தாள் வனஜா.

பாபு அவசரமாய்க் கையை உயர்த்தினான்.

"ஒன் மினிட் மிஸ். சார் என்னோட அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்லதான் இருக்கார். உங்க திருமண மைய விளம்பரத்தை எங்கிட்ட காட்டினார். அப்பவே நினைச்சேன் ஏதோ தப்பு இருக்குன்னு. உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா நாம இரண்டு பேரும் இங்கியே இன்னொரு டேபிளுக்குப் போய் தனியாப் பேசலாம். ஐ லைக் யூ. நமக்குள்ள ஒரு கெமிஸ்டிரி இருக்கான்னு பார்க்கலாமே. இன்னிக்கு இல்லன்னா இன்னொரு நாள்கூட மீட் பண்ணலாம். ஆனா ஒரு வாரத்துக்குள்ள பண்ணணும். இல்லன்னா எனக்கு வயசு 28 ஆயிடும். மணமகனுக்கு உங்க கட் ஆஃப் வயசு 27 அல்லவா. அடுத்த சனிக்கிழமை எனக்கு பர்த் டே."

வனா சிரிப்புடன் "ஒய் நாட். அங்க போகலாம்" என்று ஒரு டேபிளைச் சுட்ட அதை நோக்கி இருவரும் நடந்தார்கள்.

"என் உண்மையான வயசு 68தான் வனா. ஸ்கூல்ல தப்பா கொடுத்ததுனால 69னு ஆயிடுச்சு. வேணுன்னா புதிசா பிறந்தநாள் சான்றிதழுக்கு மனுப்போட்டு கேட்டு வாங்கித் தரேன்" என்று பெரியவர் முனகியது அவள் காதில் விழவில்லை.

எல்லே சுவாமிநாதன்
More

துணிவே துணை
சுமை
நீதான் காரணம்
Share: 
© Copyright 2020 Tamilonline