Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பிற கலாசாரங்களையும் அனுபவிக்க வேண்டும் - ரூபா ரங்கநாதன்
- வெங்கட்ராமன் சி.கே.|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeநியூயார்க்கில் உள்ள Strategic Research Institute(SRI)-ன் இனவாரி உத்தியாளரும், முதுநிலை துணைத்தலைவருமான (Ethnic Strategist and Senior Vice-President) ரூபா ரங்கநாதன் இந்தியாவின் பிரபல விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படித்தவர். இவர் சென்னை ரோடரி (சக்தி) சங்கத்தின் நிறுவனத் தலைவருமாவார். பிரபல அப்போலோ மருத்துவமனையின் மக்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் முக்கியப் பதவி வகித்தவர்.

நியூயார்க் விளம்பரக் கழகத்தின் பன்மைக் குழுவிலும், அமெரிக்க விளம்பரக் கூட்டமைப்பின் இரண்டாவது மாவட்ட விருதுக் கமிட்டியிலும் உறுப்பினராக ரூபா இருந்ததுண்டு.

பல பன்னாட்டுப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். தவிர, SRI-ன் சொந்தப் பிரசுரமான Multicultural Pathways என்பதற்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தன் தொழிலில் முன்னணியிலிருக்கும் இந்தியர், அதிலும் பெண், என்ற பெருமையைப் பெற்ற ரூபா ரங்கநாதனைத் தென்றல் சந்தித்தது. அவர் கூறியவை...

கே: உங்களுடைய இளமைக் காலம் பற்றிக் கூறுங்களேன்

ப: என் இளமைக்கால நினைவுகள் என்னைக் கொல்கத்தாவின் பாலிகஞ்ச் காளி கோயில் பகுதியில் உள்ள இனிப் பகத்தின் அருகே (Mishty shop) கொண்டு செல்கிறது. அங்கு நான் ஆறு வருடங்கள் இருந்து பின்னர் தென்முனைக்குச் சென்றேன். எனது தொடக்கநிலைக் கல்வியைப் பம்பாயின் பாந்த்ராவில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வென்டில் முடித்தேன். பின்னர் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் கற்றேன். பள்ளிக் கல்வியில் பெரும்பான்மை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தேன். பின்னர் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மக்கள் தொடர்புத் துறையில் இளங்கலை (B.A-Public Relations) படித்தேன். இந்த மூன்று ஆண்டுகளும் விசேடமானவை. பட்டப் படிப்பில் தொழில் முறைசார் கல்வித்திட்டம் அப்போதுதான் அறிமுகமானது. இந்த வகுப்புகளில் குறைந்த மாணவிகளே இருந்தனர். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. மேலும் கல்வியைக் கற்றுத் தருவதில் செயல்முறை அணுகுமுறையும் இருந்தது. விளம்பரம், எழுத்து, மக்கள் தொடர்பு, ஊடகம் போன்ற துறைகளில் அனுபவம் கொண்டோர் பல விரிவுரை நடத்தினர். நான் பட்டம் பெறும் முன்பே கிளாரியன் விளம்பர நிறுவனத்தில் மாணவப் பயிற்சியாளராகப் பணிசெய்யும் வாய்ப்பு வந்தது.

எனக்கு கிடைத்த ஆறுவார பயிற்சிக் காலத்தில் படைப்புத்திறன், காலக் கட்டுப்பாடு, ஊடகங்களின் ஆற்றல் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது.

கே: மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நுழைந்தது எவ்வாறு?

ப: பட்டம் பெற்றதும் ஹிந்துஸ்தான் தாம்ஸன் அசோஸியேட் என்ற விளம்பர நிறுவனத்தின் பிரபல பாண்ட்ஸ் (Ponds) பிரிவில் சேர்ந்தேன். பின்னர் உல்கா என்ற பெரிய நிறுவனத்தின் விளம்பரத் துறையில் மும்பையில் 12 வருடங்கள் பணியாற்றினேன்.

என்னுடைய சினேகிதி ஸ்மிதா ரெட்டியின் அழைப்பின் பேரில் அப்போலோ மருத்துவமனையின் மக்கள்தொடர்பு மற்றும் விற்பனைப் பிரிவிற்குப் பொறுப்பேற்றேன். விளம்பரத் துறையில் எனக்கிருந்த வலுவான பின்னணியின் காரணமாக அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை ஆரம்பித்த காலத்தில் சிறப்பாகப் பணி செய்தேன். இந்த மருத்துவமனையின் பன்னாட்டுப் பங்குதாரர்கள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்கள், நோயாளிகள், சமூக நிறுவனங்கள் எனப் பல்வேறு கோணங்களில் அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்கு எனக்குண்டு.

8 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் இணைவதற்காக அமெரிக்காவை அடைந்தேன்.

கே: இதே துறையில் இந்தியாவில் பணி செய்து விட்டு, அமெரிக்காவிற்கு வந்து பணி செய்வதில் உங்கள் அனுபவம் என்ன?

ப: இந்தியாவிலே அடிப்படையை உருவாக்கிக் கொண்டு, பின் இங்கு வந்து தொழிலை ஆரம்பிப்பது சிறப்பான அனுபவம். விளம்பரத் துறை, விற்பனை, மக்கள் தொடர்பு, brand building, செய்தித் தொடர்பு போன்றவற்றில் எனக்கிருந்த கல்வி, அனுபவம் மற்றும் ஆர்வத்துக்கு ஏற்ப ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

நியூயார்க் மும்பையைப் போன்ற ஓர் இடம். எனவே இந்த மாற்றம் எனக்குச் சவாலாகவோ பயமுறுத்துவதாகவோ இல்லை. உணவு, உடை போன்றவவைகளில் மாற்றம் தேவைப்பட்டது. எனது குடும்பத்தின் பக்கபலம் இந்த மாற்றங்கள் மென்மையாக நிகழ உறுதுணையாக இருந்தது. நான் அலுவலகத்துக்கு அணிய வேண்டிய உடைகள் வாங்குவது, உணவகத்தில் காய்கறி சாலட் வாங்கினால் அதில் ஆன்ச்சோவி (ஒரு வகை சிறிய மீன்) சேர்ந்து விடவில்லையே என்று கவனிப்பது, தொழில்ரீதியாக அமெரிக்க இந்திய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்வது என்று எல்லாவற்றிலும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனக்கு உதவினர். நான் இங்கு நிரந்தரமாகத் தங்கி வேலை பார்க்க இது வெகுவாக உதவியது.

கே: Strategic Research Institute-ல் உங்கள் பணி எப்படிப்பட்டது?

ப: 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள, அதிவேகமாக வளரும், பல்கலாசாரம் சார்ந்த பொருளாதாராத்தில் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் விற்பனையை எவ்வாறு உயர்த்தலாம் என்பது குறித்த மாநாடுகளை நான் Strategic Research Institute மூலம் நடத்துகிறேன். Fortune-1000 நிறுவனங்களின் போக்கைக் கவனிப்பதுடன் அவற்றின் உயர்மட்ட விற்பனை அதிகாரிகளுக்கு வர்த்தக சம்பந்தமான மக்கள் தொடர்பு, விளம்பரம், ஊடகத் தொடர்பு போன்றவற்றை ஆராய்ந்த பின்னர் அவர்களுக்கான மாநாட்டு நிகழ்ச்சி நிரல்களை அந்த நிறுவனங்களின் துணையுடன் உருவாக்குகிறேன். அவற்றின் அதிகாரிகள் மற்றும் பல்கலாசாரம் சார்ந்த சேவை வழங்குவோர் (multicultural service providers) இந்த மாநாடுகளில் பங்கேற்கிறார்கள். இதைத் தவிர நான் உடல்நலப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மாநாடுகளையும் வடிவமைக்கிறேன். நான் 1998-லிருந்து இந்த ஆய்வகத்தில் பணி செய்து வருகிறேன். இதுவரை 65 பன்னாட்டுக் கலாசார மாநாடுகளை அமைத்துள்ளேன்.

லாஸ் வேகாஸில் ·பிப்ரவரி 7-ம் தேதி ஆசிய அமெரிக்கச் சந்தை மீதான ஒரு மகாநாடு நடக்க உள்ளது. எனது வேலையின் பெரும்பகுதி லத்தீன அமெரிக்கச் சந்தையோடு தொடர்புடையது. பெயர்பெற்ற டொயோட்டாவாக இருந்தாலும் சரி அல்லது ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான மோட்டல் (motel) ஆக இருந்தாலும் சரி, பிற கலாசார அமெரிக்கர்களின் வாங்கும் திறனைப் புறக்கணிக்க முடியாது. இவர்கள் இந்திய-அமெரிக்கர்கள் போல இரட்டை உலகங்களில் ஒருசேர வாழ்கின்றனர்.

கே: தற்சமயம் நீங்கள் சமூகத்தின் எந்தப் பகுதியினரைக் குறிவைத்திருக்கிறீர்கள்? ஆசியர், ஹிஸ்பானியர் போன்ற சமூகங்களையா? அல்லது ஓரினச் சேர்க்கையாளர், புற்றுநோய் போன்ற சமுதாய வரம்புகளைத் தாண்டிய பிரிவினரையா?

ப: இந்த மாநாடுகள் பல இன, பல்கலாசார மக்களைக் கருத்தில் கொண்டுள்ளன. இதில் ஒரு முக்கியப் பிரிவு வாலிப வயதினர். இப்பருவத்தினர் இடையிலும் நகரத்தில் வாழ்பவர்களிடையே கலாசாரத் தாவுதல் அதிகம். அவர்களை ஒரே கூண்டிற்குள் அடைக்க இயலாது. 'ராப்' கலாசாரம் பாலிவுட்டுடன் இணைவதையும் நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம். இந்த கலாசாரக் கலப்பு அதிவேகமாகப் போகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், கூகிள் மற்றும் உங்களைப் போல சிலிகான் பள்ளத்தாக்கினர் தாம் இதன் உந்துவிசை. இந்தப் புதுவித போக்கைப் பற்றியும் கலாசாரம் சார்ந்த விற்பனை பற்றியும் நிறையப் புரிந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாம் விற்பது என்ன என்பதைப் பொருத்து வாங்குவோரைப் பிரித்தறிய வேண்டியதிருக்கிறது. நீங்கள் விற்பது கால்சியம் சத்துப் பொருளானால் இதை ஆசியர் மற்றும் காகேசியர்களை நோக்கிச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது. கோனியாக் (Cognac) ஆப்பிரிக்க அமெரிக்கர், லத்தினோ ஆகியவர்களை முக்கிய இலக்காகக் கொள்கிறது. கார் நிறுவனங்கள் GLBT (Gay, Lesbian, Bi-sexual and Transgender) ஆகியோரை இலக்காகக் கொண்டுள்ளன.

கே: உங்கள் பணியில் நீங்கள் வணிக உலகத்தின் தேவைகளைப் பற்றியும் அதே சமயம் பல்கலாசார உலகத்திலும் ஈடுபட வேண்டியுள்ளது. இவற்றில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

ப: முன்பே செய்துகொண்டிருந்த தொழிலின் ஒரு புதிய பகுதியில் நான் வாய்ப்பைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்.

இந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, மாடிசன் அவென்யூவால் பல்கலாசார மக்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க இயலாமல் இருந்தது. இனவாரி முகமைகளால் (ethnic agencies) ஈடுகொடுக்க முடிந்ததுடன் சிறப்பான வளர்ச்சியையும் எட்ட முடிந்தது. கடந்த பத்து வருடங்களில் பல்கலாசார மக்களின் தொகை, வாங்கும் சக்தி, அரசியல் மற்றும் சமுதாயச் செல்வாக்கு ஆகியவையும் வளர்ச்சி அடைந்ந்துள்ளன. தவிர, இத்தகைய வேலை எனக்கு மிகவும் பிடித்ததும் கூட.

கே: எப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை எட்ட அது பக்குவமடைந்துள்ளது என்பதை எப்படி அறிய முடியும்?

ப: பக்குவமடைந்துள்ளதா என்பதல்ல கேள்வி. ஒரு பொருளை முதன்முதலாக ஒரு சந்தையில் விற்பவர்களுக்குச் சில அனுகூலங்கள் உண்டு. முதல் கிரெடிட் கார்டு, முதல் வீட்டுக் காப்பீடு (home insurance), முதல் கார் ஆகியவற்றை அங்கே அறிமுகப்படுத்திய நிறுவனங்கள் விற்பனையில் பெரும்பங்கு குவித்துவிடலாம். ஆனால் அவற்றை வாங்க வலுவான சமூகப் பொருளாதார மற்றும் மனரீதியான காரணங்களும் இருக்க வேண்டும்.

நிறுவனங்களின் கவனத்தைப் பெற ஒரு சமூகம் அவர்கள் செய்யும் முதலீட்டுக்கேற்ற லாபம் தரும் என்ற நம்பிக்கையளிப்பதாக இருக்க வேண்டும். தேர்ந்த விற்பனை வல்லுநர் முன்கூட்டியே இத்தகைய சமூகங்களை அடையாளம் காண்கிறார்.

கே: உங்கள் மாநாடுகளின் உந்து விசை வணிக நிறுவனங்களா, சேவை நிறுவனங்களா?

ப: சேவை நிறுவனம் வணிக நிறுவனத்தில் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆனால் வணிக நிறுவனங்களிடம் தான் ஒரு சந்தையை வளர்க்கும் பணபலம் இருக்கிறது. ஆனால் 'தென்றல்' போன்ற ஊடகங்களும் சேவை நிறுவனங்களின் முயற்சியும் தான் வழிகாட்டுகின்றன.

கே: உங்கள் மாநாடுகளுக்கான பேச்சாளர் களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ப: சேவை மற்றும் வணிக நிறுவனங்களைப் பற்றிச் சுமார் ஏழரை ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். இனவாரி அல்லது கலாசார சமூகக் களங்களில் அவர்கள் எவ்வளவு ஆழ்ந்து, புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பதை வைத்து எங்கள் பேச்சாளர் தேர்வு நடக்கிறது. எங்கள் ஆய்வுக்குட்பட்ட நிறுவனங்களின் எதிர்வினையும் எங்களது வரப்போகும் மாநாடுகளுக்கான கருத்துக் களத்தைத் தருவதுண்டு. Fortune-1000 நிறுவனங்கள் மட்டுமே அல்லாமல் பல நடுத்தர, சிறு நிறுவனங்களும் பங்கேற்று வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

கே: உங்கள் அனுபவத்தில் ஆசிய இந்தியர் போலப் பல்கலாசாரம் வாய்ந்த வேறு சமூகத்தினரை பார்த்ததுண்டா?

ப: இல்லை. ஆசிய இந்தியர்கள்தாம் மிக அதிகப் பல்கலாசாரம் பொருந்தியவர்கள். நமக்குள்ள ஆங்கிலப் பயிற்சி நம்மைப் பெரிதும் ஒன்று சேர்க்கிறது.

கே: விற்பனைப் பொருட்களை இந்தியச் சந்தையில் கொண்டு வர இந்தியாவின் பல்கலாசாரம் ஒரு தடையா?

ப: பல மொழிகளாலும் கலாசாரத்தாலும் நிரம்பியுள்ள ஆசியாவைக் கண்டு அநேக நிறுவனங்கள் அஞ்சுவது உண்மைதான். தவறான அடி வைத்து விடுவோமோ என்ற பயமும் ஒரு காரணம். ஆனால் இந்த நுகர்வோர் (consumer) பிரிவில் மட்டும் நிறைய முதலீடு வந்திருக்கிறது. அமெரிக்க-லத்தீன் சந்தையை அடுத்துப் பெருகி வருவது ஆசிய-அமெரிக்கச் சந்தைதான். சீனா, பிலிப்பைன்ஸ் ஆகியவை பெரிதாக இருந்தாலும் தெற்காசியச் சந்தையின் மீதுதான் எல்லோருடைய பார்வையும் பதிந்துள்ளது. சிட்டி வங்கி, மெட்லை·ப், நியூயார்க் லை·ப் போன்றவை சில உதாரணங்கள்.

கே: பல்கலாசார சமூகத்தை வளப்படுத்தும் சமூக உணர்வுடைய முதலீடுகள் செய்ய நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பீர்களா?

ப: நிறுவனங்கள் என்ன செய்யவேண்டும் என்ற அறிவுரையை நான் அவர்களுக்குத் தருவதில்லை. விற்பனைச் சந்தையில் ஒரு பொருளின் விற்பனையை உயர்த்தவோ அல்லது தகர்க்கவோ கூடிய விஷயங்களைக் கண்காணித்துக் கூறுவதுதான் என் பணி. பல்கலாசார விற்பனை அந்தச் சமூகத்தை மட்டுமன்றி அதன் நுண்ணிய உணர்வுகளையும் தொடுவதாகும். சுகாதாரம், கல்வியைப் பொறுத்தவரை இது மிகவும் பொருந்தும்.

கே: இந்தப் பெரிய நிறுவனங்களைச் சிறிய சமூகங்களுக்கு உதவி செய்யும்படிக் கவர் வதற்கான வழிமுறைகள் என்ன? உதாரணத்திற்கு ஓர் உள்ளூர் தமிழ் மன்றம் அல்லது அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Fetna) போன்றவை...

ப: அடிமட்டத்திலிருந்தே நுகர்வோருடன் தொடர்பு வைத்துக்கொண்டு முதலீடு செய்ய அநேகப் பெரிய நிறுவனங்களுக்கு எண்ணம் உள்ளது. தமிழ் மன்றம் போன்றவை இந்த நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது அவர்களது மக்கள் தொடர்பு/தகவல் தொடர்பு நிறுவனங்கள் வழியாகவோ தொடர்பு கொள்ளவேண்டும்.

உதாரணத்திற்கு இந்த மன்றம் ஒரு நீரிழிவு நோய் பற்றி ஒரு மக்கள் மன்றமோ அல்லது இருதயப் பரிசோதனையோ ஏற்பாடு செய்தால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இதற்கு உதவும். தமது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாக்க நிதித் துறையில் உள்ள கழகங்களையோ அல்லது கணினியில் தேடுதல் (search engine) நிறுவனங்களையோ உதவிக்கு அணுகலாம்.

அதாவது ஒரு வங்கியில் உள்ள இந்தியருடன் தொடர்பு ஏற்படும்போது அந்த வங்கியும் நமக்கு உதவி செய்யும் நிலை வரும். இதற்கு வங்கியில் நாம் யாரை அணுக வேண்டும் என்ற நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும். பொறுமை, விடாமுயற்சி இவை வேண்டும். ஒரு வங்கி மூலம் இதை அடைய முடியவில்லை என்றால் அடுத்த வங்கிக்குச் செல்ல வேண்டும். நாம் அளிக்கும் திட்டம் புதுமையாகவும் நியாயமானதாகவும் இருப்பது மிக முக்கியம். மன்றத்துக்கு உதவி செய்வதன் மூலம் வங்கிக்கு உயர்செல்வம் கொண்ட நபர்களுடன் தொடர்பு கிடைக்குமென்றால் அவர்களுக்கும் உற்சாகமாக இருக்குமல்லவா?
Click Here Enlargeகே: மெரில் லின்ச்சில் சுபா பாரி அவர்களைப் பேட்டி கண்டபோது ஒரு சமூகத்தினரைச் சென்று அடைய, அவர்களுடன் கலந்து உறவாடி அந்த உரிமையை முதலில் ஈட்ட வேண்டும் என்று கூறினார். உங்கள் கருத்து என்ன?

ப: மிகவும் சரி. இனப்பிரிவு சார்ந்த விற்பனை என்பது ஒரு சமூகத்தில் பங்கேற்றல் அல்லது சமூக சேவை என்றோ துவங்கப்படுகிறது. ஓர் உணவகம் ஒரு குறிப்பட்ட இனத்தினரை ஒதுக்கினால் பத்திரிகைகளும் ஊடகங்களும் இதை விளம்பரப்படுத்தும். அதன் விற்பனை பாதிக்கப்படும். அந்தச் சூழ்நிலையில் எத்தகைய விற்பனை உத்தியும் பலன் தராது.

கே: உங்களுடைய இந்த மாநாடுகள் பல்கலாசார சமூகத்தைச் சென்றடைவதில் எவ்வளவு வெற்றியைப் பெற்றுத் தந்தன என்பதைச் சொல்லலாமா?

ப: சில மாநாடுகள் குறிப்பிடத்தக்கனவாக (signature events) அமையும். எங்கள் மாநாடுகள் ஓட்டல் அறை போன்றவை. ஆள் வராவிட்டால் பயனில்லை. எனவே அதற்கு பதிவுக் கட்டணம் எவ்வளவு வசூலாகிறது என்பது முதல் அடையாளம். ஆனால் முக்கியமான அளவுகோல் அந்த மாநாடு எப்படிப்பட்ட பேச்சாளர்களையும் பங்கு கொள்வோரையும் ஈர்க்கிறது என்பதே. மாநாடுகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், கடந்த மாநாடுகளில் பங்குபெற்றோர் மீண்டும் மீண்டும் புதிய தகவல் களுக்காகவும், வர்த்தகத் தொடர்புகளுக்காகவும் வருவதை எண்ணி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

கே: லாஸ் வேகாஸில் நடக்க இருக்கும் அமெரிக்க ஆசியா-பசிபிக் மாநாடு பற்றிச் சற்று கூறுங்கள்..

ப: இது ஒரு முழுநாள் மாநாடு. சீனப் புத்தாண்டை ஒட்டி வருகிறது. பெரிய நிறுவனங்களான Wells Fargo, Citibank, JCPenney, Freddie Mac, Zhen Beauty Cosmetics, KeySpan Energy போன்றவற்றின் மேல்நிலை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மற்ற பெரிய நிறுவனங்களும் இதைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. கோகோ கோலா, Gold's Gym, American Family Insurance போன்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒரு பெரிய இந்திய வலையக நிறுவனம் காலையில் தெற்கு ஆசியப் பாரம்பரிய வரவேற்பு அளிக்கிறது.

கே: பெரிய நிறுவனங்கள் பல்கலாசாரப் பிரிவினருக்குத் தமது பொருட்களை விளம் பரப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதா?

ப: பிரபலமான பெயர்கள் மட்டுமல்லாமல் திறமையான வெளிநாட்டு விளம்பரதாரர்களும் இதைச் செய்கிறார்கள். இங்குள்ள ஹிஸ்பானியர்களுக்காகவும் இந்தியர்களுக்காகவும் இந்திய மற்றும் லத்தீன் அமெரிக்கப் பண்டங்கள் உள்நாட்டுப் பண்டங்களோடு போட்டி போடுகின்றன. இந்த ஆண்டு டொயோட்டா ஒரு பல்கலாசார நிறுவனம் தயாரித்த விளம்பரத்தை சூப்பர் பௌல் (Super Bowl) சமயத்தில் வெளியிடப்போகிறது. வழக்கமான பொது விளம்பரத்தை அல்ல. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை இது சொல்கிறது.

கே: விரைந்து உலகமயமாகும் நிலை பல் கலாசார சமூகங்களின் தேவையைப் பூர்த்தி செய்யத் துவங்கியிருக்கிறதா?

ப: நிச்சயமாக.

கே: பல நிறுவனங்களுடனும் அமெரிக்கர்களுடனும் பழக வேண்டியிருக்கும் நீங்கள் ஒரு பல்கலாசார நபராகத்தான் இருக்கிறீர்களா?

ப: உலகமயமாக்கலால் அனைவருமே பல்கலாசார நபராகத்தான் இருக்க வேண்டி உள்ளது. நாம் பாசுமதி அரிசி வாங்க இந்தியப் பலசரக்கு கடைக்கு செல்ல வேண்டி இருந்தது. இன்றோ எல்லாக் கடை களிலும் பாசுமதி மட்டுமல்ல தாய்லாந்து, கொரிய அரிசி வகைகளும் உள்ளன. இவர்கள் தம் நாட்டு கலாசாரத்தைக் கொடுத்துப் பிற கலாசாரத்திலும் ஏற்கின்றனர். புது வருடத்தின்போது புளியோதரை-பாஸ்தா கலந்த விருந்தொன்றைச் சாப்பிட்டேன். சமையலில் மட்டும் அல்ல. இன்று இந்திய குர்தாக்கள் பிரபலமாகி வருகின்றன. இன்று டார்கெட் (Target) சென்றிருந்தேன். அங்கு பன்னாட்டுப் பொருட்கள் பிரிவு ஒன்று இருந்தது. பட்டினால் ஆன படுக்கை விரிப்பை 80 டாலர்களுக்கு வாங்க எந்த இந்தியரும் தயங்குவர். அவர்கள் உறவினர் மூலம் பாதி விலைக்கும் குறைவாக வாங்கமுடியும். ஆனால் ஏதாவது இந்தோனேசிய மரச்சாமானை வாங்கத் தயங்க மாட்டார்.

மற்றவர்களுடன் இருக்கும்போது என் தனித்தன்மையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமது கலாசாரத்தைப் பற்றிப் பெருமை கொள்வது நல்லதுதான். ஆனால் அதே சமயம் ஏனைய கலாசாரங்களையும் உணர்ந்து, நம்முடன் வேலை செய்பவர்களின் சம்பிரதாயமான பழக்க வழக்கங்களுக்கு மரியாதை கொடுத்தல் நல்லது. "எல்லாப் பக்கத்திலிருந்தும் அறிவு நம்மை வந்தடையட்டும்" என்று ரிக்வேதம் கூறுகிறது.

கே: பெரிய நிறுவனங்களில் தமது தொழில் புரிய எண்ணும் இளைய சமுதாயத்தினருக்கும், உங்களைப் போலத் தொழிலைத் தொடர எண்ணுபவர்களுக்கும் உங்களது அறிவுரை என்ன?

ப: நம்மை மிகத் திறமை வாய்ந்தவர்களாக, முழுமனதுடன் ஈடுபடுபவர்களாக, சாதனை யாளர்களாக நமது சமூகம் காட்டுகிறது. எந்த நகரத்திலோ, நாட்டிலோ எந்தத் தொழிலையும் செய்ய அல்லது வாழ இப்போதுள்ளவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. புதிய கதவுகளை இந்திய இளைய சமுதாயத்துக்கு உலகம் திறந்துள்ளது. பயணம், ஊடாட்டம், வாசிப்பு ஆகியவற்றின் வழியே நமது ஆளுமை மட்டும் சீலங்களை வளர்த்துக்கொள்ளுதல் மிக அவசியம்.

நிர்வாகிகளுக்கான ஞானத்தை ஊட்டும் என் போன்றோரின் செயல்பாட்டுக்கு எப்போதும் தேவையிருக்கும். பொருளாதாரச் செழிப்புள்ள நிறுவனங்கள், மேலும் பணத்தை ஈட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ள நினைக்கும் போது அவர்கள் எங்கள் மாநாடுகளுக்கு வந்து அங்கு சரியான நபர்களைச் சந்திப்பர். பொருளாதாரம் பின்னடையும் போது அந்த நிலையை எப்படிச் சமாளித்து லாபம் ஈட்டத் தொடங்க வேண்டும் என்று அறிந்து கொள்வர்.

கே: அடிக்கடி பயணமும் செய்து கொண்டு குடும்பத்தையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

ப: என்னுடைய பணியில் மிக அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியதில்லை. அதனால் என் குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது, திரைப்படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது, ஓய்வு நேரத்தில் பயணம் செய்வது எல்லாமே முடியும்.

என் அம்மா என்னுடன் தான் இருக்கிறார். என் இரண்டு சகோதரிகளில் ஒருவர் லாஸ் ஏஞ்சலஸிலும் மற்றவர் சிகாகோவிலும் இருக்கிறார். இவர்களைத் தவிர எனக்கு ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்களுடனும் மிக நன்றாகப் பொழுது போய்விடுகிறது.

என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் என்னுடைய வழிகாட்டியால் மனதளவில் மிகவும் உந்தப்பட்டேன். அவர் என்னிடம் எப்படி வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் தீர்மானமாக இருப்பது என்பதை ஒரு உருதுக் கவிஞர் எழுதியுள்ளதைக் கூறினார்: "Kar khudi ko buland itna ke khuda bande se aakar khud kahe, bete teri raza kya hai". மிகுந்த மன உறுதியுடன் நீ செய்யும் செயலில் ஈடுபட்டால், இறைவனே உன் முன் நின்று உனக்கு என்ன வேண்டும் என உன்னைக் கேட்பார்.

கே: உங்களுக்கு மிக விருப்பமானவை எவையெவை?

ப: தயிர் சாதம். மாநாடு முடிந்து அநேகமாக வீட்டிற்கு நேரம் கடந்தே செல்ல வேண்டியிருக்கும். அப்போது தயிர் சாதத்துடன் ஆவக்காய் ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடுவேன். இந்திய உணவுகளைச் சமைக்க, சாப்பிட மிகவும் பிடிக்கும். கோடைக்காலத்தில் அலுவலகத்திற்கு இந்திய உடைகளை அணிவேன். வெள்ளிக் கிழமைகளிலும் வெயில் அடிக்கும் போதும் அவற்றை உடுத்துவேன். மூன்று வருடங்களுக்கு முன்னர் கார் ஓட்டவும், நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொண்டேன். Biography Channel-ல் வரும் Law and Order, Everybody loves Raymond, Hercules Poirot நிகழ்ச்சிகள் பிடிக்கும். மாநாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள கோவில்களுக்குச் செல்வேன்.

·பிரான்க்·பர்ட்டுக்குச் சென்ற போது அங்கு குடியுரிமை பெற்ற ஈழத்தமிழரால் நடத்தப்படும் கணேசர் கோவிலுக்குச் சென்று நிறைய தென்னிந்தியக் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டது ஒரு நல்ல அனுபவம். அது ஒரு சஷ்டியப்த பூர்த்தி விழா. ஒரு நிமிடத்திற்கு நான் மந்தைவெளியில் இருப்பது போல எனக்குத் தோன்றியது!

கே: உங்கள் எண்ணங்கள் சிலவற்றைத் 'தென்றல்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

ப: நம் அனைவருக்கும் ஆழ்ந்த பல்கலாசார அனுபவம் உண்டு. எவ்வாறு பிரயாணம் செய்வது மனதை விரிவாக்குகிறதோ அதுபோல பலதரப்பட்ட மக்களுடன் கூடிப் பழகுவதும், பிற கலாசார பின்னணியும் நம்மை வளரச் செய்கின்றன. தெற்காசியர்களாக இருப்பது நமது அதிர்ஷ்டம். நாம் பின்னிப் பிணைந்த ஒரு சமூகத்தினர். நமது சமூகத்தினருடன் கலந்து இயங்கத் திரைப்படம், கலாசார மற்றும் சமயச் சார்புடைய கூட்டங்கள் போன்ற பல இடங்கள் நமக்கு உள்ளன.

நம் வயது, தொழில் அல்லது அமெரிக்கா வில் இருக்கும் காலம் இவற்றைத் தாண்டி மற்ற கலாசாரத்தையும் அவை நமக்குத் தரும் அனுபவங்களையும் உணர்ந்து அனுபவிக்க முயற்சி செய்தால் அது நமக்கு உதவியாக இருக்கும்.

இந்த அனுபவங்களின் பலனை அடைய முயலாமல் இருப்பது அழகான பல்கலாசாரக் கடலில் சூரியன் மறைவதைக் காருக்குள் இருந்தபடி, மணலில் கால் வைக்காமல், பார்ப்பதற்குச் சமம்.


சந்திப்பு: சி.கே.வெங்கட்ராமன்

தமிழாக்கம்:சரஸ்வதி தியாகராஜன், மதுரபாரதி

தொகுப்பு:மதுரபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline