Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ்
தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு!
தெரியுமா?: பார்சிலோனா போட்டியில் ஸ்ரீக்ருபா பரிசுக் குவிப்பு!
தெரியுமா?: விண்வெளியில் இந்திய உளவுக் கோள்
தெரியுமா?: நீங்களும் ஆகலாம் 'சென்னை சூப்பர் கிங்'!
தெரியுமா?: FeTNA புதிய நிர்வாகிகள்
தெரியுமா?: திருச்செல்வத்துக்கு 'ஜூன் கால்வுட்' விருது
- அ. முத்துலிங்கம்|மே 2012|
Share:
1989ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அன்று புதன்கிழமை. நாலு இளைஞர்கள் ஒரு நீல நிற ஃபோர்ட் காரில் வந்து வீட்டுக்கதவை தட்டுகிறார்கள். அவர்களில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்ததை கவனித்த வீட்டுக்காரர் 'கடைசியில் வீட்டுக்கே வந்துவிட்டார்கள்' என்று நினைத்தார். துவக்குடன் ஒருவரும் விவாதம் செய்யமுடியாது என்பது அவருக்குத் தெரியும். அவர் பின்கதவு வழியாகப் பாய்ந்து வேறு வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்டார். அவருடைய மகன் அகிலன் நடப்பது தெரியாமல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் 19வது பிறந்த நாளைக் கொண்டாடி 5 நாட்களே கடந்திருந்தன. அடுத்தநாள் நடக்கப் போகும் வேதியியல் பரீட்சைக்காக படித்துவிட்டு அதிகாலை இரண்டு மணிக்குத்தான் தூங்கப் போயிருக்கிறார். சத்தம் கேட்டு வெளியே வந்து இளைஞர்களிடம் என்னவென்று கேட்டபோது அவர்கள் அவரை பலவந்தமாக தூக்கிக் காருக்குள் திணித்துக்கொண்டு புறப்பட்டார்கள். சில நிமிடங்களில் தலையில் குண்டு துளைத்த அகிலனின் சடலம் வீதியிலே வீசப்பட்டுக் கிடந்தது.

துப்பாக்கி ஒருநாள் தன்னைத் தேடிவரும் என்பது அகிலனின் அப்பா திருச்செல்வத்துக்கு தெரியும். அந்தக் காலங்களில் யாழ்ப்பாணம் இந்திய அமைதிப் படையின் ஆட்சியின் கீழ் இயங்கியது. யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஒரே தினப்பத்திரிகையான முரசொலியின் பிரதம ஆசிரியர் திருச்செல்வம். அவரைக் கொல்வதற்கு ஏற்கனவே பல முயற்சிகள் நடந்திருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பத்திரிகை அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அவர் உயிர் தப்பினார். 82 நாட்கள் அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள். அவர் திருந்துவதாயில்லை. கடைசி முயற்சியாக மகனின் கொலை நடந்து முடிந்திருந்தது.

திருச்செல்வம் செய்த குற்றம் என்னவென்றால் நேர்மையான ஒரு பத்திரிகை நடத்தியது; சுதந்திரமான கருத்துக்களை எழுதி வெளியிட்டது. செய்திகளை வெளியிடுமுன்னர் ராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பது கட்டளை. மரண அறிவித்தல் செய்தி அல்ல, ஆகவே அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை என்பது பிரதம ஆசிரியரின் வாதம். மரண அறிவித்தல்கள் பத்திரிகையில் அன்றாடம் வெளியாகும்போது ராணுவத்தின் அன்றைய கொலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. அதிகாரத்துக்கு அது பிடிக்கவில்லை.

அன்று தொடங்கியது திருச்செல்வத்தின் ஓட்டம். அருமையான ஒரே மகனை இழந்துவிட்டு, கணவனும் மனைவியும் நண்பர்கள் வீட்டிலும், உறவினர் வீட்டிலும் நாளுக்கு ஓர் இடமாக, தலைமறைவாக, வாழ்ந்தனர். அவரை ஒழித்தால்தான் அவருடைய பத்திரிகையை ஒழிக்கலாம். ஒவ்வொரு நாள் வாழ்வதும் ஒரு சாதனையாக மாறிவிட்ட சமயம் எதிர்பாராத இடத்தில் இருந்து ஓர் உதவி வந்தது. ஆன் ரணசிங்க என்ற யூதப் பெண்மணி இவரை எப்படியோ தேடித் தொடர்புகொண்டார். லண்டன் சர்வதேச மன்னிப்புச் சபை அங்கத்தவரான அவரும் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்தார். அவர் சொன்னார், 'நீங்கள் முக்கியமான பத்திரிகை ஆசிரியர். உங்கள் உயிர் எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம். நாங்கள் கனடிய PEN அமைப்புடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் உங்களைக் கனடாவுக்கு எடுப்பித்து விடுவதாகச் சொல்கிறார்கள். தயாராக இருங்கள்.'

கனடாவின் PEN அமைப்பு பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜூன் கால்வுட் (June Callwood) மற்றும் மார்கிரட் அட்வூட் போன்ற பிரபலர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 144 நாடுகளில் கிளைகள் பரப்பியது. சர்வதேச எழுத்தாளர்கள் ஆயிரத்துக்கும் மேலே அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அமைப்பின் மேலான நோக்கம் உலகப் பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல்கொடுப்பது. எழுத்தாளர் மற்றும் பத்திரிகாசிரியர்களுடைய பாதுகாப்புக்காகப் போராடுவது. திருச்செல்வத்துக்கும் மனைவிக்கும் கடவுச்சீட்டு கிடையாது. புதிதாக எடுக்கவும் முடியாது. கனடிய அரசு அவர்களுக்கு தற்காலிகமான கனடிய கடவுச்சீட்டுகள் வழங்கி அவர்களைக் கனடாவுக்கு வரவழைத்தது. அவர்கள் கனடா வந்து இறங்கிய நிகழ்ச்சி அங்கே பிரபலமாகிவிட்டது. கனடாவின் மூத்த பத்திரிகையான ரொறொன்ரோ ஸ்டார் அவர்களுடைய நேர்காணலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பத்திரிகையில் பிரசுரித்தது.

ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர் சிறுகதை ஒன்று எழுதினார். அதிலே 19 வயது மகனைச் சிறையிலே பிடித்து அடைத்துவிட்டார்கள். அவனுடைய 50 வயது தகப்பன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக, ஒழுங்கற்ற விதமான வீரதீரச் செயல்கள் நிறைந்த வாழ்கையை வாழ்ந்தார். 'ஏன் அப்படி வாழ்கிறார்?' என்று கேட்டபோது 'நான் என் வாழ்க்கையை வாழவில்லை. சிறையில் வாடும் என் மகனுக்காக அவன் வாழ்க்கையை வாழ்கிறேன்' என்றார். அதே மாதிரிதான் திருச்செல்வம் தம்பதிகளும் ஒரு முடிவு எடுத்தனர். திருச்செல்வம் தனக்காகத் உயிரைக் கொடுத்த தன் மகனை நினைத்தார். இனி எஞ்சிய தன் வாழ்கையை அகிலனுக்காக வாழ்வது என்று தீர்மானித்து, அன்றிலிருந்து பொதுவாழ்வில் தங்களை முற்றிலுமாக இருவரும் இணைத்துக் கொண்டார்கள்.
முதல் வேலையாக 1991ல் 'தமிழர் தகவல்' என்ற மாதாந்திர இதழை அகிலனின் நினைவாக அவன் பிறந்த 5ம் தேதி வெளிவரும் விதமாக ஆரம்பித்தார். கனடாவுக்கு வந்து குடியேறும் அகதிகள், குடியுரிமை பெறாதவர்கள் ஆகியோருக்கு உபயோகமான குடிவரவுச் சட்டதிட்டங்கள், கனடா வாழ்முறைக்கான ஆலோசனைகள், சுகாதாரக் குறிப்புகள், வீட்டுப் பராமரிப்பு முறைகள், பாடசாலை விவரங்கள் போன்ற சகலவிதமான பயனுள்ள தகவல்களும் அடங்கிய இதழ் அது. அதை லட்சக்கணக்கான மக்கள் 20 வருடங்களாக படித்துப் பயன் பெற்றுள்ளனர்.

இவருடைய சேவை இத்துடன் நிற்கவில்லை. குடிவரவு சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களுக்கும் மக்களின் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். பல்வேறு விதமான தொண்டு நிறுவனங்களில் இணைந்து சேவை புரிந்தார். அகதிகள் சம்பந்தமாக இலவச ஆலோசனைகள் வழங்குவதுடன், அவர்கள் பிரச்சனைகளுக்காக அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சுமுகமான தீர்வுகளுக்கு வழிவகுத்தார். தவிர, ஒம்னி தொலைக்காட்சி, ரொறொன்றோ பொலீஸ் சேவை, ஒன்ராறியோ அகதிகள் அலுவல் வலையமைப்பு ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

இவருடைய பலதரப்பட்ட சேவைகளைப் பாராட்டி Canada Ethnic Media Award, Newcomer Champion Award போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல ஏப்ரல் 20, 2012 அன்று மாநில அரசின் மதிப்பு வாய்ந்த விருதான ஜூன் கால்வுட் முதன்மைச் சாதனை விருது ஒன்ராறியோ குடிவரவு குடியுரிமை அமைச்சரால் திரு எஸ். திருச்செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதல் தடவையாக ஒரு ஆசியருக்கு, அதுவும் தமிழருக்கு கிடைத்த விருது. இதிலே சிறப்பு என்னவென்றால் PEN கனடா அமைப்பாளர் ஜூன் கால்வுட் பெயரால் அந்த விருது வழங்கப்பட்டதுதான். 22 வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்புத்தான் அவரை நாடுவிட்டு கடத்திக் காப்பாற்றியது.

திருச்செல்வம் இந்தப் பெரிய விருது கிடைத்த பின்னரும் அமைதியாக 'இது என் மகனுக்குக் கிடைத்தது' என்கிறார். 'என் மகன் கிரிக்கெட் விளையாட்டில் அபூர்வமான திறமை கொண்டவன். வலதுகை பந்து வீச்சாளன். இடது கை துடுப்பாட்டக்காரன். இரண்டு கைகளின் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்வான். அதுபோலத்தான் நானும். என் ஆத்மாவின் முழு ஆற்றலும் வெளிப்படத் தொண்டு செய்யவேண்டும் என நினைக்கிறேன்.' திருச்செல்வமும் மனைவி ரஞ்சியும் மகனின் மீதி வாழ்க்கையை நிறைவாகவும், சிறப்பாகவும் வாழத் தென்றலின் வாழ்த்துக்கள்.

அ. முத்துலிங்கம்,
கனடா
More

தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ்
தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு!
தெரியுமா?: பார்சிலோனா போட்டியில் ஸ்ரீக்ருபா பரிசுக் குவிப்பு!
தெரியுமா?: விண்வெளியில் இந்திய உளவுக் கோள்
தெரியுமா?: நீங்களும் ஆகலாம் 'சென்னை சூப்பர் கிங்'!
தெரியுமா?: FeTNA புதிய நிர்வாகிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline