|
தென்றல் பேசுகிறது... |
|
- |மார்ச் 2012||(1 Comment) |
|
|
|
|
|
ரஜினிகாந்த் பட ரிலீஸ் கொண்டாட்டத்துக்கு இணையாக டெக்னாலஜி உலகில் ஒன்றைச் சொல்வதென்றால் அது ஆப்பிள் ஐபேட் பரபரப்பைத்தான் சொல்ல வேண்டும். மார்ச் 7, 2012 அன்று ஐபேட் 3 சான் ஃபிரான்சிஸ்கோவில் வெளியிடப்படப் போகிறதென்ற செய்தி ஆர்வலர்கள் மத்தியில் காட்டுத் தீயாகப் பிடித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அழைப்பிதழ் சொல்வதைவிட சொல்லாமல் விட்டதே அதிகம் என்று பேசிக்கொள்கிறார்கள், வரப்போகும் ஐபேடில் அத்தனை மாய மந்திரங்கள் அடங்கியிருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு! குவாட்-கோர் ப்ராசஸர் இதில் இருக்கும், அலாவுதீன் பூதத்தின் வேகத்தில் வேலைகளைச் செய்யும் என்ற கிசுகிசுச் செய்திகள் வேறு. 2011 கிறிஸ்துமஸ்-புத்தாண்டு சீஸனில் மிக அதிகம் விற்றது ஐபேட் தானாம். இதுவரையில் 55 மில்லியன் இந்தக் கையடக்கக் கருவிகளை விற்று 34.5 பில்லியன் டாலரை ஈட்டிக் குவித்திருக்கிறது ஆப்பிள். கூகிளின் ஆண்ட்ராயிடு இயங்குதளக் கருவிகளுக்கு இது பெரிய சவால்தான். நல்லவேளை, ஏழாம் தேதி வெகுதூரம் இல்லை. ஐபேட் 3 நம் கைபேட் ஆகிவிடும். அதுவரைதான் இதயம் படபடக்கும்.
*****
சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்த பூமியின் பெருமளவு வெப்பத் தேவையை சூரியனே நிறைவு செய்தாலும், இன்னமும் கேஸலீன் விலை நம் பொருளாதாரத் தலைவிதியை நிர்ணயிப்பது உண்மை. அமெரிக்காவைப் பொருத்தவரை, கேஸ் பயன்பாடு குறைந்து, கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிடவே, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கேஸ் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. கேஸ் பயன்பாடு குறைந்ததற்குக் காரணம் கச்சா எண்ணெயின் விலை உயர்வு என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட முடியாது. இரான் அணு ஆயுதம் தயாரிக்கிறதா என்னும் சர்ச்சையில் சிக்கி, தனது எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியது விலையேற்றத்துக்கு ஒரு காரணம். தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள மெய்நிகர் (virtual) கூடுமிடங்கள் மக்களின் சமூக/தொழில்முறை பயணங்களுக்கான அவசியத்தைக் குறைத்துவிடவே, எரிபொருள் நுகர்வு குறைந்திருக்கலாம். வேலை வாய்ப்பு, வருமானம் அதிகரித்தும், நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்தும் கேஸ் நுகர்வு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. கேஸைக் குடிக்கும் தகரடப்பா கார்களை மக்கள் ஒதுக்கிவிட்டு, புதிய எரிபொருள் சிக்கனமுள்ள கார்களை மக்கள் வாங்குவது நல்ல அறிகுறிதான். எப்படி ஆனாலும், எரிபொருள் விலைக்கும் நாட்டின் பொருளாதார உறுதிநிலைக்கும் தொடர்பு உண்டு. ஏப்ரல்/மே 2011ல் எரிபொருள் விலையேற்றத்தை ஒட்டியே பொருளாதாரச் சரிவு விரைவானது. எனவே, பொறுப்புள்ள குடிமக்களாக, எரிபொருள் விலையேற்றத்தைத் தடுக்க நம்மால் ஆனதைச் செய்வது நம் கடமை.
அதுமட்டுமல்ல, மார்ச் 31 அன்று 'Earth Hour' இரவு 8:30 மணிக்கு, ஒரு மணி நேரம் மின்சார விளைக்குகளை அணைத்து வைப்போம். "இருப்பது ஒரே உலகம், அதை நாம் காக்கத் துணிவோம்" என உறுதி கொள்வோம்.
***** |
|
உலகிலேயே மிக அதிக IQ உடையவர் ஒரு தமிழர், அதிலும் சிறு பெண் என்பது 'மகளிர் தினம்' கொண்டாடும் மாதத்தில் நாம் வாசகர்களுக்குக் கொண்டுவரும் மகிழ்ச்சியான செய்தி. பதினோரு வயது விசாலினி அந்தச் சிறப்புக்குரியவர். சென்ற இதழில் 'பனித்துளி' பற்றிய செய்திக்குறிப்பில் இளம்பாடகி என நாம் அறிமுகப்படுத்திய பிரகதி குருப்ரசாத் இந்த இதழின் மற்றொரு இளம் சாதனையாளர். ஜெயா டி.வி.யில் தனது இசைப்பயணம் மூலம் எண்ணற்றோர் இதயங்களைக் கவர்ந்த சாருலதா மணியின் நேர்காணலும் உங்கள் செவிகளில் தேனாகப் பாய்வது நிச்சயம். அதுமட்டுமா, ஓர் அரிய கல்விச் சாதனை படைத்து அதன்மூலம் எளியமக்களும் ஐவிலீக் சட்ட/மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அருண் அழகப்பனின் நேர்காணல் இந்த இதழில் நிறைவடைகிறது. அமெரிக்காவின் சமத்துவக் கனவுகள் நிறைவேறுவதில் இவர் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. உங்கள் மனதைத் தொடும் சிறுகதைகள், குறுநாவல், ஹரிமொழி, குறுக்கெழுத்துப் புதர் எல்லாம் நவரத்தினங்களாய் அணி செய்கின்றன மார்ச் இதழை. புரட்டுங்கள் பக்கங்களை.....
வாசகர்களுக்கு 'பன்னாட்டு மகளிர் தின' வாழ்த்துக்கள்!
மார்ச் 2012 |
|
|
|
|
|
|
|