Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சாருலதா மணி
அருண் அழகப்பன் (பகுதி-2)
- காந்தி சுந்தர், சி.கே. வெங்கட்ராமன், மதுரபாரதி|மார்ச் 2012|
Share:
கல்லூரிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் Advantage Testing என்ற நிறுவனத்தைத் தொடங்கிய, மாறுபட்ட கல்வியாளரான அருண் அழகப்பன் அவர்களுடன் நேர்காணல் சென்ற இதழில் தொடங்கியது. எப்படிப் பின்தங்கிய மாணவர்களும் ஹார்வார்டு போன்ற ஐவி லீக் கல்லூரிகளில் நுழைய அவர் ஏற்படுத்திய AT Foundation நடத்திய TRIALS திட்டம் உதவியது, அவருடைய தந்தையார் திரு. அழகப்பா அழகப்பன் அவர்களின் சுவையான குணாதிசயங்கள் என்று பல அரிய தகவல்களைத் தருகிறது இந்த இதழின் தொடர்ச்சி. இதோ படியுங்கள்....

*****


கே: சவாலான சில கணங்களை நினைவு கூரலாமா?
ப: என் வருங்கால மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குப் போயிருந்தேன். அதுவும் முதல் முதலாக. நானே ரொம்பப் பாரம்பரியமான நபர். டேடிங் எல்லாம் ரொம்பச் செய்பவன் அல்ல. அவளை அழைத்துப் போன இடத்தில் என் ஹார்வார்டு வகுப்புத் தோழன் (நான் ட்யூட்டரிங் நிறுவனம் தொடங்கியதைக் கேட்டு) என் முகத்துக்கு நேரே கிண்டலாகச் சிரித்தான். அது மிகவும் சங்கடமான, சவாலான தருணம் எனக்கு.

இருபத்தைந்து ஆண்டுக்கு முன்னால், நான் ட்யூட்டரிங் செய்யத் தொடங்கிய நேரம். மார்வின் என்பவர் என்னை அணுகினார். அவர் அதற்கு முன்னால் 25 ஆண்டுகளாக ட்யூட்டரிங் செய்து வருகிறார்! அவருக்கும் நிறைய மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர். சிலரை என்னிடம் அனுப்புகிறேன் என்று கூறினார். நான் அப்போது அட்வான்டேஜ் டெஸ்டிங் தொடங்கியிருக்கவில்லை. சரி, அனுப்புங்கள் என்றேன். என்னுடைய கட்டணம் ஒரு மணிக்கு 55 டாலர் என்றேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் அவர் வாங்கிக்கொண்டிருந்த கட்டணம் அது. "நான் எவ்வளவு கட்டணம் வாங்குகிறேனோ, அவ்வளவே நீயும் கேட்கிறாயா?" என்றார். "ஆமாம் மார்வின். உங்கள் கட்டணத்தில் பாதியளவே நான் கேட்பேன் என்னும் தப்பான அபிப்பிராயத்தில் நீங்கள் அனுப்பியிருந்தால், என்னை மன்னிக்க வேண்டும். இதையே நான் என் தொழிலாக மேற்கொள்ளப் போகிறேன். இதில் எனக்கு அனுபவம் இருக்கிறது. கட்டணத்தைக் குறைக்க முடியாது" என்று பணிவாக, திடமாக கூறினேன். அது மற்றொரு சவாலான கணம் என்று சொல்லலாம்.

இன்னொரு சவால் எது தெரியுமா? நான் முன்பு கூறினேனே, பிற ட்யூட்டரிங் கம்பெனிகளின் உளவு பார்க்கும் வேலை. எங்களது பாடக் கையேடுகளை எப்படியாவது தட்டிச் செல்ல வேண்டும் என்று முயன்று கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்படித் தோன்றவே தோன்றாது. ஆரம்ப காலத்தில் சட்டென்று நம்பிவிடுவேன். நிறுவனத்தில் பணி செய்ய வருபவர்களை எந்த ஒப்பந்தமும் இல்லாமல் சேர்த்துக்கொள்வேன். இத்தனைக்கும் நான் ஒரு வழக்கறிஞர். நாளாக ஆக, அனுபவம் என்னை மாற்றியது. ஒரு ஒப்பந்தம் போடுவது ஒன்றும் அவமதிப்புச் செயலல்ல. ஒருவர்மீது மற்றவரின் நம்பிக்கையை எழுத்தில் வடிக்கும் செயல், அவ்வளவுதான் என்பது புரிந்தது. ஒப்பந்தத்தின் மொழியை மரியாதை மிக்கதாக அமைத்துவிட்டேன்.

இன்னும் சவால்கள் உண்டு. அதில் முதன்மையானது என்னவென்றால், உயர்ந்த கட்டணம். அதைப்பற்றி ஆழமான அவநம்பிக்கைகள் உண்டு. இந்த நாட்டில் பெரும்பாலும் பெண்களே ஆசிரியத் தொழில் செய்வார்கள். திடீரென்று ஆண்கள் இதில் நுழைந்து, அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று ஒரு அபிப்பிராயம் மக்களிடையே தோன்றியது. அது ஒரு பெரிய சவால். இந்தத் துறையைத் தொழில்ரீதியாக்குவது அவசியமாயிற்று. இன்னொன்றும் சொல்ல வேண்டும். அட்வான்டேஜ் டெஸ்டிங்கின் சில இணை இயக்குனர்கள் பெண்கள்தாம். அவர்கள் அங்கே இருப்பது அவர்கள் பெண்கள் என்பதனால் அல்ல, மிகத் திறமையானவர்கள் என்பதால். என் நியூ யார்க் அலுவலகத்தில் உயர்பதவியில் இருக்கும் சிலரும் பெண்கள்தாம். ஒருவர் ஆணா, பெண்ணா, வெள்ளையா, கருப்பா என்பதை நான் பார்ப்பதில்லை. சிறந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமிதம் உண்டு.

கே: உங்கள் மனைவி இதில் உங்களோடு இருக்கிறாரா?
ப: என் மனைவி ஃப்ரான்ஸீன் விளம்பரத் துறையில் இருந்தார். இப்போது என்னோடு நிறுவனத்தில் இருக்கிறார். எங்கள் 25வது ஆண்டுவிழா கொண்டாடியதைச் சொன்னேன். அதில் பங்கேற்க 300 பேர் நாடெங்கிலுமிருந்து வந்தனர். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் ஃப்ரான்ஸீன்தான். வந்திருந்த எல்லோருமே நேர்த்தியான ஏற்பாடுகளைக் குறித்துப் பாராட்டினர்.

என்னால் பாடம் சொல்லித் தரமுடியும். ஆனால் எனக்குக் கலையோ அழகியலோ தெரியாது. ரசிக்க முடியும், படைக்க முடியாது. என் மனைவியின் பெற்றோர் இருவருமே கலைஞர்கள். என் மனைவியின் கலையழகு கொண்ட கைவண்ணத்தை அந்த விழா ஏற்பாடுகளில் பார்க்க முடிந்தது. என் பெற்றோரும், அவரது பெற்றோரும் வந்திருந்தது அந்த விழாவின் சிறப்பை இன்னும் அதிகரித்தது. தமது பேரக்குழந்தைகளோடு அங்கே அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அப்படி அது ஒரு தொழில்ரீதியான விழாவாக மட்டுமல்லாமல், ஒரு குடும்ப விழாவாகவும் இருந்தது.

கே: விளம்பரத் துறையில் உங்கள் மனைவி என்னவாக இருந்தார்?
ப: எங்கள் திருமணம்வரை ஒரு பன்னாட்டு விளம்பர நிறுவனத்தில் வைஸ்-பிரசிடென்ட் ஆக இருந்தார். அவர் கருவுற்றதும், "குழந்தையைப் பார்த்துக்கொள்ள இரண்டாண்டு விடுப்பு தருகிறோம்" என்று கூறினார்கள். ஃப்ரான்ஸீன் திரும்பி வரவேண்டுமென்பது அவர்கள் விருப்பம். "உன் விருப்பப்படி செய், நான் உடன் நிற்கிறேன்" என்று நான் கூறினேன். ஆனால் விசாலா பிறந்ததும் அவளுக்குக் குழந்தையை விட்டுப் பிரியவே மனமில்லை என்று நினைக்கிறேன். அடுத்து இரண்டிரண்டு ஆண்டுகள் இடைவெளியில் எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவள் முழுநேர இல்லத்தரசியானாள். முக்கியமான நேரங்களில் என் நிறுவனத்துக்கும் நிறைய உதவி செய்கிறாள். நான் விரும்பியபடியே என் மூன்று பெண்களும் வளர்கிறார்கள் என்றால் அதில் எண்பது சதவிகிதப் பங்கு என் மனைவியினுடையதுதான்.

கே: முதல் பெண்ணின் பெயர் விசாலா; மற்றவர்கள்...?
ப: அடுத்தவள் ஸரீனா. மூன்றாமவள் கெய்யா. எங்கள் திருமணத்தின் போது நான் மனைவிக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். "நமக்குப் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு என் தாயின் பெயரை வைக்க வேண்டும். மற்றக் குழந்தைகளுக்கு நீ விரும்பும் எந்தப் பெயரும் வைக்கலாம்" என்பதுதான் அது. அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள். மற்றப்படி ஸரீனா, கெய்யா எல்லாமே எனக்குப் பிடித்த பெயர்கள்தாம்.
கே: ஓர் ஐவி லீக் கல்வி நிறுவனத்தில் படித்தவர் நீங்கள். அவற்றில் சேருவது பற்றிய சில மாயா பிம்பங்களைச் சொல்லுங்கள். அங்கே சேர இளைஞர்களை நீங்கள் எப்படி ஊக்குவிக்கிறீர்கள்?
ப: அவை டெஸ்ட் ஸ்கோர் மற்றும் கிரேடுகளை மட்டுமே மதிக்கின்றன என்று நினைப்பது முதல் மாயை. அப்படியிருந்தால் ஒரே தரத்தில் உள்ள மாணவர்களை வைத்து வகுப்பறைகளை நிரப்பிக்கொண்டுவிட முடியும். ஆனால், ஒரே அளவு கிரேடுகள் பெற்ற 80 சதவிகித மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. உயர்ந்த டெஸ்ட் ஸ்கோர், கிரேடு இவை முக்கியம். அதைத் தவிரப் பரிசுகள், இன்டெல் சயன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் என்று மற்றச் சிறப்புகளும் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட Academic Distinctions இருப்பது மிக முக்கியம்.

இன்னொன்று, மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற, பாடம் சாராச் செயல்கள் (extracurricular activities). இந்தியக் குழந்தைகள் பலருக்கு இது தெரிவதில்லை. நான் சந்திக்கும் வெகு புத்திசாலியான பல குழந்தைகளிடம் இந்தத் தேர்ச்சி இருப்பதில்லை. அதிலும் அவர்கள் பல ஆண்டுகள் ஈடுபாடு கொண்டிருத்தல் வேண்டும். நீ என்னவெல்லாம் செய்கிறாய் என்பதை விட எவ்வளவு நன்றாகச் செய்கிறாய் என்பது இங்கே மிகவும் முக்கியம். ஒரு உதாரணம் சொல்கிறேன். செஸ் கிளப் உறுப்பினராக இருந்ததைவிட, உயர்நிலைப்பள்ளிச் செய்தித் தாளின் முதன்மை ஆசிரியர் (Editor-in-Chief) ஆக இருந்தது பல ஐவி லீக் பள்ளிகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மூன்றாவதாக, தலைமைப் பண்புகள். பத்து சங்கங்களில் உறுப்பினராக இருப்பதைவிட, ஒன்றிரண்டிலாவது தலைமைப் பதவி வகித்திருக்க வேண்டும். அதிலும் அறநெறி கொண்ட தலைவனாக இருக்க வேண்டும். சமூக சேவை, தன் சமுதாயத்துக்குச் சேவை, சக மாணவர்களுக்குச் சேவை, பள்ளியில் சேவைப்பணி, பின் தங்கியோருக்குச் சேவை - இவ்வாறு, தான் ஒரு நல்ல மானுடன் என்று அவனால் செயல்பாட்டில் காண்பித்திருக்க வேண்டும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட இன்றைக்கு ஒரு ஐவி லீக் கல்லூரியில் சேருவது கடினம். அந்த அளவுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்துவிட்டன.

கே: பணக்காரர்கள் மட்டுமே இந்தக் கல்லூரிகளில் சேர முடியும் என்று கருதப்படுகிறதே.....
ப: அதைப்பற்றியும் நான் சொல்ல வேண்டும். தென் கரோலினாவிலிருந்து ஒரு இந்தியக் குடும்பம் என்னைச் சந்தித்தது. அந்தப் பையன் மிக கெட்டிக்காரன். ஒரு வரலாற்று ஜர்னல், ஒரு மெடிகல் ஜர்னல் இவற்றிலெல்லாம் அவனுடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருந்தன. ஒரு நகைச்சுவைப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தான். எல்லா வகையிலும் புத்திசாலிதான். நல்ல குடும்பம். எனக்கு அவனை மிகவும் பிடித்துப் போயிற்று. அவர்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தேன். கடைசியில் நான் அவர்களிடம் கட்டணம்கூட வசூலிக்கவில்லை. ஏன் தெரியுமா? ஐவி லீக் கல்லூரிக்கு அவன் விண்ணப்பிப்பதைப் பெற்றோர் விரும்பவில்லை. தமக்குப் பணவசதி போதாது என்று கூறினர். என்ன பைத்தியக்காரத்தனம் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

"நீங்கள் பிரின்ஸ்டனுக்கு அனுப்பினால், அதனால் கடனாளி ஆக மாட்டீர்கள். ஏனென்றால், அங்கே வரும் 60 சதவிகித மாணவர்களுக்கு நிதி உதவி தரப்படுகிறது. கடனாக அல்ல, உதவித்தொகையாக. சராசரி பிரின்ஸ்டன் மாணவர் ஓராண்டுக்குப் பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் டாலர் வரை கட்டணம் செலுத்துவார். இது பல மாநிலக் கல்லூரிகளை விடக் குறைந்த கட்டணம். ஐவி லீக் நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி அறக்கட்டளைகள் இருப்பதால் அவை பணக்கார நிறுவனங்களாக உள்ளன. எனவே அங்கே போகும் மாணவன் பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை" என்று நான் அவர்களிடம் கூறினேன்.

கே: என் (காந்தி சுந்தர்) மகள் பிரின்ஸ்டனில் இண்டர்வியூ செய்யப்பட்டாள். "மிக நன்றாகச் செய்திருக்கிறேன், பேட்டி கண்டவர் என்னைப் பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார்" என்று சொன்னாள். ஆனால், கடைசியில் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.
ப: நானும் பிரின்ஸ்டனுக்காக நேர்காணல் செய்கிறேன். நான் ஒரு மாணவர் பிரமாதமானவர் என்று நினைக்கலாம், ஆனால் பிரின்ஸ்டன் அவரை நிராகரிக்கலாம். காரணம் போட்டி. பிரின்ஸ்டன் எந்தப் பாகுபாடும் இல்லாமல் நியாயமாகத்தான் தேர்வு செய்கிறது. ஆனால், உங்கள் மகள் ஆசியப் பின்புலம் கொண்டவர் என்று இனங்காணப் படுவார். இந்த நாட்டில் சுமார் 4 சதவிகிதம் பேர் ஆசியப் பின்புலம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், பிரின்ஸ்டனுக்கு வரும் 30 சதவிகித விண்ணப்பங்கள் ஆசியர்களுடையது. எல்லாத் தகுதிகளும் பெற்றிருந்தும் இடம் கிடைக்காத மாணவர்களுக்காக நான் வருத்தப்படுவேன். ஆனால், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பேன். அவர்கள் எல்லோரும் நன்கு முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்.

கே: ஒரு மாணவரின் ஆர்வம் மற்றும் தகுதிக்கேற்ற கல்லூரிகளை அடையாளம் காண எப்படி உதவுகிறீர்கள்?
ப: பொதுவாகக் கல்லூரியின் பிரபலத்தை வைத்துத் தீர்மானிப்பார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. அவர் ஓர் ஆசியராக இருக்கும் பட்சத்தில் ஸ்கோர் மற்றும் கிரேடுகளை முதலில் பார்க்கிறேன். பொதுவாக ஆசியர்கள் நல்ல உயர்தர கிரேடுகள் பெற்றிருப்பார்கள்.

இரண்டாவதாக, அவர் எந்த மாதிரி இடத்தில் படிக்க விரும்புகிறார். அதாவது மிகக் குளிர்ப் பிரதேசமா, என்ன தட்ப வெப்ப நிலை. மூன்றாவதாக, கிராமமா, நகரமா என்பது.

இவற்றைத் தீர்மானித்த பின்னர், அவரை அந்த இடங்களுக்குப் போய்ப் பார்க்கச் சொல்வேன். அடுத்த நாலு வருடங்களுக்கு அவர் அங்கே இருக்கப் போகிறார், அந்த இடம் அவர் மனதுக்குப் பிடிக்க வேண்டும். ஹார்வார்டு என்பதற்காகச் சேர்ந்தபின், "ஓ எனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை" என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் படிப்பில் கவனம் போகாது. அதைவிட, மனதுக்குப் பிடித்த ஓர் இடத்தில் சென்று சேர்ந்து நன்றாகப் படிப்பது நல்லது. When you are enjoying yourself, you do better and your career is better.

எனக்கு யேல், ஸ்டான்ஃபோர்டு ஆகியவற்றிலும் இடம் கிடைத்தது. அவையும் பிரின்ஸ்டனுக்கு சமமானவைதாம். ஆனால் பிரின்ஸ்டன் வளாகத்தில் நடந்தபோது எனக்கு மிக நெருக்கமான உணர்வு உண்டாயிற்று. நம்முடைய உடலும் உணர்வுகளும் சொல்பவற்றை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்று நான் நம்புகிறேன்.

கே: உங்கள் AT Foundation பற்றி முன்னர் கூறினீர்கள். ஒரு மாணவர் அல்லது சமூகத்துக்கு அது எப்படி உதவியது என்று ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?
ப: மூணு வருஷத்துக்கு முன்னால TRIALS (Training And Recruitment Initiative for Admission to leading Law Schools) என்று ஒரு திட்டம் தொடங்கினோம். ஹார்வார்டு மற்றும் நியூ யார்க் சட்டக் கல்லூரிகளில் இவை தொடங்கப்பட்டன. சமூக, பொருளாதார நிலையில் பின் தங்கிய, வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மாணவர்களுக்கு இதன் மூலம் உதவுகிறோம். பள்ளிக் கல்வியில் நல்ல கிரேடு வாங்கியிருக்க வேண்டும், அவர்களுக்கு வழிக்கறிஞராக விருப்பம் இருக்க வேண்டும். தலைமைப் பண்பு, சமூகப் பணியில் நாட்டம் என்று பிற தகுதிகளும் இருந்தாலும், அவர்களால் சட்டக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வை அவர்களால் நன்றாகச் செய்ய முடியாமல் இருக்க வேண்டும்.

நான் ஹார்வார்டு சட்டக் கல்லூரியின் அப்போதைய டீன் (Dean) ஆன எலீனா கேகன் அவர்களை அணுகினேன். இப்போது அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருக்கிறார். கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் அவர் என்னோடு பயின்றவர். அவரிடம், "இங்கே சட்டத்துறை வெள்ளை அமெரிக்கரால் நிரம்பியிருக்கிறது. வழக்கறிஞர்களின் பணக்கார வாரிசுகளே வழக்கறிஞர் ஆகிறார்கள். சமுதாயத்தின் பிற பகுதியினருக்கு அதில் இடமே இல்லை. அவர்களும் சட்டம் படிக்க வேண்டும்" என்று கூறினேன்.

அதற்காக அங்கே TRIALS தொடங்க அவர் ஒப்புக்கொண்டார். ஹார்வார்டு ஆண்டொன்றுக்கு நூறாயிரம் டாலர் தொகை வழங்க, என் அறக்கட்டளை அதைப் போல இரண்டு பங்கு தொகையை உள்ளிட்டது. ஹார்வார்டு பேராசிரியர்களும் இந்த முயற்சியில் கைகோத்தனர்.

முதலில் இதற்கான விண்ணப்பங்களைக் கோரியபோது, கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கன் வந்திருந்தார். வீடில்லாமல் வளர்ந்தவர். பெற்றோர், 2 சகோதரர்கள் மொத்தம் ஐந்து பேரும் ஒரு காரில் வசித்தனர். முன் சீட்டில் பெற்றோர்களும், பின் சீட்டில் மூன்று சகோதரர்களும் உறங்குவார்கள். தெருவிளக்கில்தான் படித்தார். இரவு ஒன்பது மணிக்குத் தெருவிளக்கு அணைக்கப்படும் என்பதால் அதற்குள் படித்தாக வேண்டும். நாங்கள் பேட்டி கண்டபோது இவற்றை எங்களுக்குச் சொன்னார். அது உண்மை என்பதையும் நாங்கள் உறுதி செய்துகொண்டோம்.

அவருடைய பெயர் ஜேம்ஸ் பேக்கர். அவருக்கு நானே இலவசமாகக் கோச்சிங் சொல்லிக் கொடுத்தேன். இன்றைக்கு அவர் ஹார்வார்டு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். நான் அவரைக் குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். AT Foundation என்ன செய்திருக்கிறது, என்ன செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். தொடங்கிய மூன்று ஆண்டுகளில் எங்கள் உதவியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் நாட்டின் சிறந்த 10 சட்டக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒவ்வொருவருமே வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்தவர்கள்தாம்.

நாங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த நிகழ்ச்சியைச் செய்கிறோம் என்று புரிந்து கொண்டதால், ஹார்வார்டு சட்டக் கல்லூரியின் டீன், நியூ யார்க் பல்கலைக் கழகத்தின் தலைவர் ஆகியோர் எமது அறக்கட்டளையின் உபதலைவர்களாக இருக்கிறார்கள். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் எலீனா கேகனும், ஹார்வார்டின் டீனாக இருந்த காலத்தில் அறக்கட்டளை உபதலைவராக இருந்திருக்கிறார்.

கே: உங்களை வடிவமைத்ததில் உங்கள் தந்தையாரின் பங்கு எவ்வளவு?
ப: எல்லாமே அவர்தான். என் வீட்டின் மையப்புள்ளியாக இருந்த என் அம்மாவை நான் மிக நேசிக்கிறேன். என் கல்வி மற்றும் தொழிலுக்கு உள் உந்துதல் என் அப்பாதான். அவர் கண்டிப்பானவர். சற்று வளர்ந்த பிறகு அவருடைய கண்டிப்பைப் பொருட்படுத்தாமல் அவரை நேசித்தேன், வியந்தேன்.

பலருக்கு என் அப்பாவின் கல்வி பற்றித் தெரிய வாய்ப்பில்லை. ஒரு இளங்கலை, இரண்டு முதுகலைப் பட்டங்கள், சட்டத்தில் டிகிரி, தவிர பிஎச்.டி. எல்லாம் பெற்றவர் அவர். ஐக்கிய நாடுகள் சபையில் முழுநேரப் பணி செய்தபடியே இவற்றை அவர் பெற்றிருக்கிறார். அது தவிரக் கோவில்கள் கட்டுவதிலும் முழுமையாக ஈடுபட்டிருந்தார். நம்பமுடியாத அளவுக்குக் கடின உழைப்பாளி. நாற்பது வயதிலும் சரி, இன்றைக்கு 86 வயதிலும் சரி, அவர் வீட்டில் ஒரு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தபடி, கையில் ஒரு நோட்பேடில் எதையோ எழுதியபடி இருப்பார். அவருடைய மனம் வெகு சுறுசுறுப்பானது. அதைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும்.

சுமார் 96 உலக நாடுகளைப் பார்த்தவர் அவர். ஒரு லட்சியவாதி. ஆனால் செயல்முறை யதார்த்தம் கொண்டவர். குழந்தைகளுக்கு ஊட்டம், உடல்நலம், கல்வி, ஊனமுற்றோருக்கு உதவுதல், பிற்பட்டோர் முன்னேற்றம், மக்களுக்கு ஆன்மீக மையங்கள் அமைத்தல் என்று இவற்றையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்.

என் சிறுவயதை நினைத்துப் பார்க்கிறேன். நியூ யார்க்கின் நடுத்தர வர்க்கக் குடும்பம் எங்களுடையது. இரண்டு சகோதரர்களுடன் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஆனாலும், வாழ்க்கையில் ஏதோ ஒன்றைத் தவறவிட்டதாக எனக்கு எண்ணம் தோன்றியதே கிடையாது. வசதியாக வளர்ந்த இளமை என்றுதான் உணர்கிறேன்.

கே: நடுத்தர வர்க்கக் குடும்பம் என்கிறீர்கள், ஆனால் பிரின்ஸ்டன், ஹார்வார்டு என்று படித்திருக்கிறீர்களே?
ப: எப்படி என்று சொல்கிறேன். எனக்கு சிகாகோ சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தேசிய அளவில் அது ஐந்தாவதாக இருந்தது. என்னுடைய LSAT மற்றும் GPA மதிப்பெண்கள் காரணமாக அங்கே படிக்க முழு உதவித்தொகை கிடைத்தது. "என் படிப்புக்கு நீங்கள் செலவு செய்யவே வேண்டாம் அப்பா" என்று நான் கூறினேன். அப்போது, என் அண்ணன் மருத்துவக் கல்லூரியிலும், என் தம்பி இளங்கலைப் பட்டமும், என் தங்கை கார்னெலிலும் படித்துக் கொண்டிருந்தனர். ஆகவே, என் அப்பா அம்மா இருவரின் சம்பளத்தைவிட எங்களுடைய படிப்புச் செலவு அதிகமாக இருந்தது. என் சட்டப் படிப்புக்குச் செலவு இல்லை என்பதில் எனக்கு ஒரே சந்தோஷம்.

"இல்லை, நீ ஹார்வார்டு சட்டக் கல்லூரிக்குத்தான் போகவேண்டும்" என்று அப்பா உறுதியாகக் கூறிவிட்டார். என் கல்வியைப் பொருத்தவரை சமரசத்துக்கே இடமில்லை. ஒரு தொகையைக் கடனாக வாங்கினேன். கணித ட்யூஷன் கொடுத்தேன். நாங்கள் சமாளித்துவிட்டோம். எங்கே படிப்பது என்பதைப் பொருளாதார நிலை தீர்மானிக்கக் கூடாது என்பது அவரது எண்ணம். மனதின் ஆழத்திலிருந்து நான் அவரை மதிக்கிறேன், அவர் என்னுடைய அப்பா என்பதால் மட்டுமல்ல.

லட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஒரு சரியான சமநிலை கொண்டவர் என்றால் அது அவர்தான். "என்ன கோவில் கட்டறதா? எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லும்போது, அவர் "இதோ பிடி 51 டாலருக்கு செக்" என்று கொடுப்பார். கோவிலின் வங்கிக் கணக்கில் அதைச் செலுத்துவார். ஒரு விருந்து கொடுப்பார். எல்லோரிடமும் பேசுவோம். அடுத்த இருபது வருடங்களுக்கு (நன்கொடை கேட்டுக் கடிதங்களை) நாவால் நக்கிக் கவரை ஒட்டிக்கொண்டிருப்போம். (சிரிக்கிறார்).

கே: நடிகை பத்மினி உங்கள் அப்பாவைப் பற்றி நிறையக் கூறியிருக்கிறார். "அவர் இங்க கோயில் கட்டணும், அதற்காக நீங்க நாட்டியம் ஆடமுடியுமா?" என்று பத்மினியிடம் கேட்பாராம். அவுங்களும் ஆடுவாங்களாம். "அதுதான் என் வாழ்க்கையில ஒரு சிறப்பான நேரம்" அப்படின்னு என்கிட்ட சொன்னதுண்டு.
ப: கேட்க சந்தோஷமா இருக்கு. அவங்கதான் முதல் அறக்கட்டளை உறுப்பினர். எங்க வீட்டில ஆறு மாசம் இருந்ததா அவங்களே என்கிட்ட சொல்லியிருக்காங்க. மிக நல்லவர் அவர்.

ஆங்கிலத்தில் அவர் பேசுவது கவிதையாகக் காதில் பாய்கிறது. அதற்குப் பின்னே இருக்கும் நல்ல மனமும், நல்லவன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்கிற உறுதியான கருத்தும் நமக்குப் புலப்படுகின்றன. தென்றல் வழியே வாசகர்களுடன் பேச அவர் கட்டணம் கேட்கவில்லை, ஆனாலும் மிகச் சிறந்த, வாழ்க்கைக்கு அவசியமான பல பாடங்களை அவரது உரையாடல் நமக்குத் தந்திருக்கிறது என்று சிந்தித்தவாறே, அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

முற்றும்

ஆங்கில உரையாடல்: காந்தி சுந்தர், சி.கே. வெங்கட்ராமன்
தமிழ் வடிவம்: மதுரபாரதி

*****


ஹெக்டர் ரேமோஸின் கதை
இன்னொரு கதையும் சொல்கிறேன் கேளுங்கள். அவர் லாஸ் ஏஞ்சலஸ் அருகே இருக்கும் சான்டா ஆனாவில் இருந்து வந்தவர். அவருடைய விண்ணப்பத்தில் இப்படி இருந்தது:
- என் தந்தையை நான் பார்த்ததில்லை.
- என்னைக் கருவில் சுமந்திருந்த போது அவர் என் தாயை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
- என் அண்ணன் சிறையில் இருக்கிறார்.
- என் தம்பி போதை மருந்துக்கு அடிமை.
- என் அத்தையைப் பொலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது.

இப்படி முதல் பத்தியிலேயே பதினைந்து இருபது கொடூரமான விஷயங்கள்! ஆனால், அதற்குப் பிறகு, இரண்டாம் பத்தி "இது ஒரு கண்ணீர்க் கதையல்ல. வெற்றிக் கதை" என்று தொடங்கி, அவர் சமுதாயத்துக்குச் செய்யும் பணிகளைப் பற்றிய நெஞ்சைத் தொடும் விஷயங்களால் நிரம்பியிருந்தது. முதியோர் இல்லம், ஆடிஸம் (Autism) கொண்ட குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள் என்று இவர்களுக்கான மையங்களுக்குச் சென்று அவர் தொண்டு செய்கிறார்.

ஹெக்டர் ரேமோஸ் என்ற பெயர் கொண்ட அந்த ஏழை ஹிஸ்பானிய இளைஞர் மக்டோனல்ட்ஸ், பர்கர் கிங் போன்ற 20 இடங்களில் வேலை செய்திருக்கிறார். அந்த வருமானத்தை வைத்து, பஸ் பிடித்துப் போய்த் தன்னார்வத் தொண்டு செய்து வந்திருக்கிறார். அவருடைய உள்ளம் கருணையால் நிரம்பி இருப்பதைப் பார்த்தோம். அவர் இப்போது ஹார்வார்டில் இரண்டாமாண்டு மாணவர்.

இவர் சமுதாயக் கல்லூரியில் படித்தார். உடன் படித்தவர்கள் தவறான வழியில் போய்ச் சிறைச் சாலையை அடைகிறார்கள். ஆனால் இவரோ தன் பார்வையை ஒழுக்கப் பாதையில் நிலைநிறுத்தி, தொண்டு ஆற்றுகிறார். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவது எனக்குப் பெரிய மன நிறைவைத் தருகிறது.

அருண் அழகப்பன்

*****


நுழைவுத் தேர்வு
நுழைவுத் தேர்வு என்பது நீங்கள் எவ்வளவு கெட்டிக்காரர் என்பதைத் தீர்மானிப்பதற்காக அல்ல. ஏனென்றால் உங்கள் அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறீர்கள், கல்வியின் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிப்பதுதான் இந்தத் தேர்வுகளின் நோக்கம் என்று என் மாணவர்களுக்கு நான் சொல்வதுண்டு.

வளர்கின்ற காலத்தில் எனக்கு இந்தத் தேர்வுகள் மிகவும் பிடிக்கும். ஒல்லிக்குச்சியாக இருந்த நான் ஒரு கால்பந்து வீரனாகியிருக்க முடியாது. தேர்வுகள்தாம் எனக்குப் பிடித்த விளையாட்டு.

அருண் அழகப்பன்

*****


அட்வான்டேஜ் டெஸ்டிங் தினம்
அருண் அழகப்பன் வித்திட்டு வளர்த்து விருட்சமாகி நிற்கும் அட்வான்டேஜ் டெஸ்டிங் தனது 25வது ஆண்டு விழா கொண்டாடியதை ஒட்டி, மேதகு நியூ யார்க் நகர மேயர் மைக்கல் ஆர். புளூம்பர்க் அவர்கள், 2011 டிசம்பர் 10ம் நாளை அட்வான்டேஜ் டெஸ்டிங் தினமாக அறிவித்து கௌரவித்தார். "கால் நூற்றாண்டு காலமாக அட்வான்டேஜ் டெஸ்டிங், கல்விக் களத்தில் சமவாய்ப்புக்காகக் குரலுயர்த்தி வந்துள்ளது. தமது அறக்கட்டளை வழியே எண்ணற்ற கல்வி நிறுவனங்களோடு இணைந்து பின்தங்கிய மாணவர்கள் அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் சேருவதற்கு உதவும் வகையில் படிப்புச் சொல்லிக் கொடுத்துள்ளது" என அவர்களது அறிக்கை பாராட்டிப் பேசுகிறது. "வெற்றிக்குக் குறுக்கு வழியில்லை என்கிற புரிதலை அட்வான்டேஜ் டெஸ்டிங் வழியே இந்த மாணவர்கள் அறிந்துள்ளனர்" என்றும் இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.
மேலும் படங்களுக்கு
More

சாருலதா மணி
Share: 




© Copyright 2020 Tamilonline