Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
ரொட்டி அய்யா
வாழையிலை
கரையும் கோலங்கள்
சுத்தப் பட்டிக்காடு!
கோமேதகக் கண்கள்
- டாக்டர் ஏ. சுந்தரராஜன்|ஜூலை 2011|
Share:
"ஏண்டி என் உயிரை வாங்கறே! பேசாம இருந்து தொலை" ரகு தன் நான்கு வயது மகள் ரம்யாவிடம் கத்தினான்.

"ஏன் எதற்கும் இவள் மேல் எரிந்து விழுகிறீர்கள்?" ரகுவின் மனைவி ராதாவின் புலம்பல் இது.

"என்னைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள். ஆபிஸில் இன்று நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் லேட்டாத்தான் வர முடியும். முடிந்தால் ராதா, நாளை டிரிப்புக்குக் கொஞ்சம் தயார் பண்ணி வை" என்று கூறிக்கொண்டே தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான் ரகு.

"ஏம்மா என்னை இப்டிக் கோச்சுக்கறா அப்பா? நான்தான் சமத்தா இருக்கேனே. ஏ,பி,சி,டி கூட நன்னாச் சொல்றேனே" என்றாள் ரம்யா, ராதாவைத் தழுவிக்கொண்டு. ராதா தன் குழந்தையை வாரியணைத்து முத்தமிட்டாள். பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டப்பட்டாள். "ஆமாம் கண்ணு. நீ சமத்தாகத் தான் இருக்கே. உன்னை அடைய நாங்கள் மிகவும் பாக்யம் செய்திருக்க வேண்டும். அப்பா கோச்சிண்டா என்ன? நான் இருக்கேனே உங்கிட்ட அன்பாய் இருக்க" என்றாள்.

உண்மைதான். குழந்தை ரம்யாவிடம் வயதிற்கு மீறிய புத்திசாலித்தனம். பார்க்கவும் மிக அழகு. சொல்லப்போனால் ராதாவையும், ரகுவையும் விடப் பன்மடங்கு அழகாக இருந்தாள். நல்ல சிவப்பு. கோமேதக நிறக் கண்கள்.

"நீ அழாதேம்மா! நாளைக்கு மெட்ராஸ் போப்போறோம் இல்லையா" என்று சொல்லிக் கொண்டே ராதாவின் கண்களைத் துடைத்தது குழந்தை.

"ஆமாண்டி கண்ணே, ரயில்ல போறது உனக்கு ரொம்பப் பிடிக்குமே."

ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா. கல்யாணமானவுடன் தேனிலவுக்கு மைசூருக்குப் போயிருந்தார்கள். மங்களூரில் ரகுவுக்குக் கொஞ்சம் ஆபிஸ் விஷயமாய் வேலை இருந்ததால், அங்கு சென்று ஒரு நல்ல ஹோட்டலில் ரெண்டு நாள் தங்கிவிட்டுப் பின் பம்பாய் வந்தார்கள். தேனிலவுக்குப் பின் ராதா ‘உண்டாகி’ இருந்தாள்.

அவள் ரம்யாவைச் சுமந்து கொண்டிருந்தபோது எப்படித் தாங்கினான் ரகு. குழந்தை ரம்யா பிறந்த பின்னர்தான் இந்த மாற்றம் வந்தது ரகுவிடம். இதற்குக் காரணம் என்னவென்று கேட்டிருக்கிறாள் ராதா. ஏதாவது சாக்குச் சொல்வான். ராதாவுக்குத் தெரியும், ஏதோ ஒன்று ரகுவின் மனதை அரித்துக் கொண்டிருக்கிறதென்று.

மறுநாள் பிரயாணத்துக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் எடுத்து வைக்கத் தொடங்கினாள் ராதா. திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது, பம்பாயிலிருந்து மெட்ராஸுக்குதான் போகிறோம். அப்படியே திருச்சிக்குப் போய் ரகுவின் குலதெய்வமான சிறுவாச்சூர் மதுரகாளியம்மனையும் தரிசித்து வந்தால் என்ன என்று. ரகுவின் அம்மா சொல்லியிருக்கிறாள், மதுரகாளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளென்று. அவள் கருணையால் ரகு பழையபடி மாறினால் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் என்று எண்ணினாள். உடனே சிறுவாச்சூர் அம்மனை வந்து பார்ப்பதாக வேண்டிக் கொண்டாள். கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

பம்பாயிலிருந்து சென்னை ரயில் பயணம் நன்றாகத்தான் இருந்தது. குழந்தை ரம்யாவுக்கும் கன குஷி. ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு ஏதாவது சொல்லிக் கொண்டே வந்தாள். வழக்கம்போல் ரகுவின் சிடுசிடுப்பு குறையவே இல்லை.
சென்னை வந்து சிலநாள் கழிந்தபின் சிறுவாச்சூர் வேண்டுதலைப் பற்றி ரகுவிடம் சொன்னாள் ராதா. ரகுவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. திருச்சியில் இருக்கும் தன்னுடைய பழைய நண்பர்களைப் பார்க்கலாமே என்று தோன்றியதால், சரியென்று சொன்னான். தன் சிடுசிடுப்புக்குக் காரணம் என்னவென்று சொல்ல நினைத்தான் ரகு. ஆனால் ராதா தன்னை மிகவும் மட்டமாக நினைத்து விடுவாள் என்று தோன்றியதால் வழக்கம்போல் பேசாமல் இருந்து விட்டான்.

திருச்சியில் ஜங்ஷன் அருகே ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். ஹோட்டல் பக்கத்திலேயே பஸ் நிலையம். அங்குச் சென்று சிறுவாச்சூருக்கு எப்படி என்று விசாரித்தார்கள். ரகு, சிறுவயதில் அங்கு சென்றிருக்கிறான். அவனுக்கு அங்கு சென்றதெல்லாம் மறந்து விட்டது.

பஸ் நிலையத்தில் எண்பது வயது மதிக்கத் தகுந்த பெரியவர் ஒருவர் இவர்களிடம் வந்தார். தானும் சிறுவாச்சூர் போகிறேன் என்றும், பெரம்பலூர் செல்லும் பஸ்ஸில்தான் போக வேண்டும் என்றும் சொன்னார். பஸ் புறப்பட இன்னும் ரெண்டு மணி நேரம் இருந்தது.

"சிறுவாச்சூரில் நல்ல சாப்பாடு வசதி கிடையாது. நீங்கள் ஹோட்டலில் இருந்து கொஞ்சம் கட்டுச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போங்கள்" என்று சொன்னார் அவர்.

அவர் சொன்னது நல்ல யோசனையாகப் பட்டதால், சாப்பாடு எடுத்துவர ஹோட்டலுக்குச் சென்றான் ரகு. அவன் திரும்பி வரும்வரை அந்தப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தாள் ராதா. ரகுவின் அம்மாவழிப் பரம்பரையெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டாள்.

சிறுவாச்சூருக்கு அவர்கள் வரும்போது நடுப்பகல் ஆகி விட்டிருந்தது. ஏகத்துக்கு உஷ்ணமாய் இருந்தது. ரகு, ரம்யாவைத் தன் தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டிருக்கலாம்! ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதனால், தன்னால் முடிந்தவரை ரம்யாவைத் தூக்கிக் கொண்டு நடந்தாள் ராதா.

பூஜையெல்லாம் முடியும்போது மணி மதியம் மூன்றைக் கடந்து விட்டிருந்தது. ரம்யாவுடன் பிரகாரத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தாள் ராதா. பெரியவர் ரகுவை அழைத்தார். கோவிலை மூன்றுமுறை சுற்றி வர. அப்படிச் சுற்றி வரும்போது அவனுடன் பேசத் தொடங்கினார்.

"ஏம்பா, நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். நீ ஏன் உன் குழந்தையை இப்படி கோபித்துக் கொள்கிறாய்? இவ்வளவு அழகும் சாமர்த்தியமும் உள்ள குழந்தையைப் பெற நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்," என்றார். பின் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவரைப் போல, "ரகு, உன் குழந்தை அப்படியே உன் கொள்ளுப் பாட்டி சுந்தரியை உரித்து வைத்திருக்கிறாள். அவள் மாதிரியே சிவப்பாகவும், அழகாகவும் இருக்கிறாள். சுந்தரிப் பாட்டியை நான் என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். கொங்கணி தேசப் பூர்வீகம் அவளுக்கு. அந்த தேசத்துக்கே உரித்தான சிவப்பு நிறமும், கோமேதகக் கண்களும்...."

திடீரென்று தன் மனதில் கவிந்திருந்த பனித்திரை மறைவதை உணர்ந்தான் ரகு. இவ்வளவு மட்டமான சந்தேகத்திற்கு உள்ளானதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டான். அவன் கண்களின் வரம்பை மீறி நீர் ததும்பியது. எதுவும் பேசத் தோன்றாமல், பேசவும் முடியாமல் ஒரு மூலையில் ரம்யாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்த ராதாவிடம் ஓடினான். ராதாவின் கன்னத்தில் அன்புடன் லேசாகத் தட்டிவிட்டு ரம்யாவைத் தூக்கியணைத்து அப்படியே விடாமல் முத்தமிட ஆரம்பித்தான்.

டாக்டர் ஏ. சுந்தரராஜன்,
நார்மன், ஓக்லஹாமா
More

நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
ரொட்டி அய்யா
வாழையிலை
கரையும் கோலங்கள்
சுத்தப் பட்டிக்காடு!
Share: 




© Copyright 2020 Tamilonline