Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
கோமேதகக் கண்கள்
ரொட்டி அய்யா
வாழையிலை
கரையும் கோலங்கள்
சுத்தப் பட்டிக்காடு!
நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
- டி.எம். ராஜகோபாலன்|ஜூலை 2011|
Share:
சென்னை தி.நகர் நடேசன் பூங்கா பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதன் மராமத்து வேலைகள் சென்ற வருடம் நடந்தபோது நாங்கள் மிகவும் திண்டாடிப் போனோம். நாங்கள் என்று நான் குறிப்பிடுவதில் என்னுடன் தொலைபேசியில் பணியாற்றிய சந்துரு, கஸ்டம்ஸ் பாலு, அட்வகேட் தாமு, இன்கம்டாக்ஸ் சுந்தரம் ஆகியோர் அடக்கம். எங்கள் எல்லோருக்கும் மாலை நேரப் புகலிடம் இந்தப் பூங்காதான். மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை பொழுது போவதே தெரியாது. செய்திகள், டயாபிடீஸுக்கு ஆயுர்வேத மருந்து, மன்மோகன் சிங் சரியான தேர்வுதானா, சென்சஸில் சாதியைச் சேர்க்கலாமா கூடாதா, ஆ.ராசாவுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று எல்லா விவாதங்களும் அங்கு அரங்கேறும். புதன்கிழமையன்று பூங்கா அருகே T.T.D.க்கு அருகே புதிதாகத் திறந்திருக்கும் சரவணபவனில் ரவா தோசையும் காபியும் சுகமாக உள்ளே இறங்கும்.

தொடர்ந்து நான்கு நாள் யாராவது பூங்காவிற்கு வராமல் இருந்தால் பாலு கேட்பான், "என்னடா சுந்தரம் சாரைக் காணவில்லை? ஹிந்து ஆபிச்சுவரி பார்த்தீங்களா" என்று. அதிலும் இல்லையென்றால் வராத நபரின் வீட்டிற்கு எல்லோரும் ஒரு விசிட் அடித்து குசலம் விசாரிப்பது உண்டு.

கடந்த ஒரு மாதமாக எங்களது ஹாட் டாபிக் உயில் எழுதுவது பற்றித்தான். அட்வகேட் தாமுதான் எங்களது வழிகாட்டி. உயில் எப்படி எழுதுவது, probate என்றால் என்ன என்றெல்லாம் விவரமாகச் சொல்வான். போனஸாக அவ்வப்போது குட்டிக் கதைகள் வேறு.

எங்களில் இன்கம்டாக்ஸ் சுந்தரம்தான் எல்லோருக்கும் சீனியர். 77 வயது. உயில் பற்றி அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பது அவன்தான். சுந்தரம் இன்கம்டாக்ஸ் வேலை செய்திருந்தாலும் பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் சொல்ல வேண்டும். சி.ஐ.டி. நகரில் ஒரு கிரவுண்ட் வாங்கி ரொம்பச் சிரமப்பட்டுச் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டான். வேலை நடக்கும் போது தலையில் கட்டிய முண்டாசுடன் அவனும் அவன் மனைவி விசாலமும் மேஸ்திரி, கொத்தனார் என எல்லோரிடமும் பேசி வேலை வாங்குவது வேடிக்கையாக இருக்கும்.


சுந்தரத்தின் ஒரே பையன் கிரிதர் பி.ஈ. முடித்து அமெரிக்காவில் வேலை செய்கிறான். அவன் மேல்படிப்புக்காகச் சுந்தரம் வீட்டின் பேரில் கடன் வாங்கியிருந்தான். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் கூடக் கடன் பாக்கியிருந்தது. 65 வயதில்தான் கடன் அடைபட்டுப் பத்திரங்கள் கைக்கு வந்தன.

கிரிதர் அமெரிக்காவிலேயே ஒரு குஜராத்திப் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டுவிட்டான். அமெரிக்காவில் பதிவுத் திருமணமும், மும்பையில் குஜராத்தி பாணி விவாகமும் நடந்தது. சுந்தரம் நண்பர்கள் எல்லோரையும் மும்பைக்கு அழைத்துச் சென்றான். பஃபே டின்னரும், மெஹந்தி, தாண்டியா டான்ஸூமாகக் கல்யாணம் நடந்தது. ஆனாலும் விசாலத்துக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. மாப்பிள்ளை அழைப்பும், ஊஞ்சலும், நலங்கும், கட்டுச்சாதக் கூடையும் இல்லாதது முழுமையான கல்யாணமாக விசாலத்துக்குப் படவில்லை. மிகவும் குறைப்பட்டுக் கொண்டாள். மருமகளுக்குத் தமிழ் தெரியாது. விசாலத்திற்கு அவ்வளவு சரளமாக ஆங்கிலம் வராது. மாமியார் மருமகள் நடுவே அதிகமாகப் பேச்சுவார்த்தை இல்லை. திருமணம் முடிந்து 15 நாட்களில் கிரிதர் மனைவியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா பறந்துவிட்டான்.

அமெரிக்காவிலிருந்து வாராவாரம் சனிக்கிழமைகளில் கிரிதர் அப்பா, அம்மாவிடம் பேசி வந்தான். படிப்படியாக அது குறைந்தது. மருமகளும் வேலைக்குப் போக ஆரம்பித்ததும் பேசுவது அடியோடு நின்று போயிற்று.

கிரிதருக்கு முதல் குழந்தை பிறந்தபோது விசாலம் அமெரிக்கா செல்லவில்லை. ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதது மட்டுமல்ல; மருமகளிடம் அதிக ஒட்டுதல் இல்லாததும் காரணமாக அமைந்தது. தனிமையின் ஏக்கமும் வாழ்க்கையின் ஏமாற்றமும் விசாலத்தைப் படுக்கையில் தள்ளின. தலைசுற்றல், மயக்கம் என்று ஆரம்பித்து ஒருநாள் விசாலம் சுந்தரத்தைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தாள். கிரிதரால் உடனே புறப்பட்டு வர முடியவில்லை. லீவில் ஒருவாரம் வந்து இருந்து காரியங்களை முடித்து சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினான். அமெரிக்க வாழ்க்கை சுந்தரத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மடி, ஆசாரம் என்றில்லாமல் இருந்தாலும் ஃப்ரிட்ஜில் வைத்த உணவை ஒருவாரம் சாப்பிடுவது அவனுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. கிரிதரும், மருமகளும் அலுவலகத்துக்கும் குழந்தை டே-கேருக்கும் சென்றபின் நாள் முழுவதும் வீட்டில் தனியாக இருப்பது ஒரு சிறைத் தண்டனையாக இருந்தது. வெறுத்துப் போன அப்பாவை கிரிதர், நல்ல துணை ஒன்று கிடைக்க அவர்களுடன் சென்னைக்கு அனுப்பி வைத்தான்.

உயில் பற்றிய விவரங்களை நன்கு தெரிந்துகொண்ட சுந்தரம் தாமுவின் உதவியுடன் தன்னுடைய சொத்துக்கள் பற்றி உயில் ஒன்றைத் தயார் செய்தான். தான் உயிரோடு இருக்கும்வரை யாரும் அந்த வீட்டை விற்க முடியாது என்றும், அதற்குப் பிறகு கிரிதருக்கு அது சேரும் என்றும் எழுதினான். தனியே இருக்கும் தனக்குத் துணையாக மாடியில் ஒரு ரூமை வாடகைக்கு விடலாம் என்று முடிவு செய்தான். அதை கிரிதருக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தான்.
சில நாட்களுக்குப் பிறகு கிரிதர் சில முடிவுகள் எடுத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு திடீரென்று சென்னை வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாக நீங்கள் தனியாக இருக்கக் கூடாது என்று நானும் உங்கள் மருமகளும் நினைக்கிறோம் என்றான். அதற்கு சுந்தரம், "எனக்கு இந்த வீடுதான் எல்லாமே, இதில்தான் எனக்கு வேண்டியது, வேண்டாதது, துக்கம், சந்தோஷம் அத்தனையும் நடந்தது. இந்த வீட்டை நீங்கள் கல்லாக, மண்ணாக, சிமிண்டாகப் பார்க்கிறீர்கள். ஆனால் நான் இந்த வீட்டையும் என்னுடைய நண்பனாகப் பார்க்கிறேன். வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் இந்தவீடுதான் எனக்கு ஊக்கம் அளித்தது. இது என் வாழ்க்கையின் ஒரு அம்சம்" என்றார். அதற்கு கிரிதர், "நீங்கள் ரொம்ப எமோஷனல் டைப். உயில் எல்லாம் தேவையில்லை அப்பா. உனக்குப் பிறகு அதை ப்ரொபேட் செய்ய வேண்டும். அதற்கு எனக்கு நேரம் கிடையாது. நீங்கள் இருக்கும்போதே இந்த வீட்டை விற்றுவிட்டால் நல்லது. அது சுலபமும் கூட" என்றான். சுந்தரம் தன் தலையில் கல் விழுந்தது போல் உணர்ந்தார். வீடு கட்டும்போது கொட்டியிருந்த மணலில் அவரும் விசாலமும் கை விரல்களால் பிளான் போட்டுப் போட்டு அழித்ததையும், இரவு, பகலாக மேஸ்திரி, கொத்தனார், தச்சர் என்று எல்லோரிடமும் நின்று வேலை வாங்கியதையும் கிரகப் பிரவேசத்தின் போது கிரிதரை அழைத்துக்கொண்டு அவரும் விசாலமும் பசுமாடு முன்னே செல்ல வீட்டின்முன் போட்டிருந்த பெரிய மாக்கோலத்தைத் தாண்டி உள்ளே சென்றதையும் நினைத்துக் கொண்டார்.

பின் மெதுவான குரலில், "எனக்கும் வயதாகிறது. ஒத்துக் கொள்கிறேன். எனக்குப் பிறகு இந்த வீட்டை என்னவாவது செய்து கொள்ளேன்" என்றார்.

"எனக்கு அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டு வருவது முடியாது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை அப்படி அனாதையாக விட்டுவிடப் போவதும் இல்லை. வீடு விற்ற பணத்திலிருந்து ஒரு பெரிய தொகையை உன் பெயரில் பேங்கில் போட்டுவிடப் போகிறேன். அமெரிக்காவில் இருக்கும்போதே சிங்கப்பெருமாள் கோவிலில் இருக்கும் முதியோர் இல்லத் தலைவரிடம் பேசினேன். நல்ல வசதியான இடம். பாதுகாப்பும் அதிகம். அமெரிக்காவிலிருந்து ஒரு லேப்டாப்பும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். நீ தினமும் அதில் எங்களுடன் பேசலாம். உனக்கு ஒரு கவலையும் இல்லை. உன்னைப் பற்றி நாங்களும் கவலைப்பட வேண்டாம்" என்றான்.

கிரிதர் அதோடு நின்றுவிடவில்லை. தன் நண்பர்களை அழைத்து விருந்து ஒன்று கொடுத்தான். பிறகு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சிங்கப் பெருமாள் கோவில் சென்று சுந்தரத்தை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான். இல்லம் நல்ல வசதியாக இருந்தது. கிரிதர், "அப்பா... நீ ரெண்டு நாள் இங்கேயே இரு. நான் சனிக்கிழமை பேப்பரில் வீடு விற்பதற்கான விளம்பரம் கொடுத்திருக்கிறேன். பிறகு வந்து உன்னைப் பார்க்கிறேன். எனக்கு லீவு முடியப் போகிறது" என்றான்.

விளம்பரம் பார்த்து வீடு வாங்க நிறையப் பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து விலை பேசி முடிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு நாட்களாக அப்பாவைச் சென்று பார்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்டான் கிரிதர். வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். வசதியே இல்லாத இந்த வீட்டில் அப்பாவும், அம்மாவும் எப்படிக் குடித்தனம் செய்தார்கள் என்று நினைக்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வசதி என்பது அப்பா சொல்வதைப் போல மனதைப் பொறுத்தது தானோ என்னவோ என்று நினைத்துக் கொண்டான்.

நிறைய வேலைகள் பாக்கியிருந்தன. ஒரே அலைச்சல். பத்திரம் தயார் செய்து கொண்டு அப்பாவிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று நினைக்கும்போது அவனுடைய கைபேசி ஒலித்தது. "முதியோர் இல்லத்திலிருந்து பேசுகிறோம். மிஸ்டர் கிரிதர், உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. உங்கள் தந்தை சுந்தரம் மாரடைப்பால் காலமானார். டாக்டர் வந்து பார்த்தும் பயனில்லை" என்று சொன்னார்கள்.

கிரிதருக்கு தலை சுற்றியது. அப்பா என்ன நினைத்தாரோ அவருடைய ஆயுள் காலத்திலேயே வீட்டை விற்க அவர் மனம் ஒப்பவில்லையோ அல்லது அவரது மரணத்துக்காக நான் மறுபடியும் ஒருமுறை லீவு எடுத்துக் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் எனக்கு வேண்டாம் என்று நினைத்தாரோ என்றுகூட எண்ணினான். வேதனையுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு முதியோர் இல்லத்துக்கு விரைந்தான்.

சென்னை தி.நகர் நடேசன் பூங்கா சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அரட்டை அடிக்கத்தான் அங்கே சுந்தரம் இல்லை.

டி.எம்.ராஜகோபாலன்
More

கோமேதகக் கண்கள்
ரொட்டி அய்யா
வாழையிலை
கரையும் கோலங்கள்
சுத்தப் பட்டிக்காடு!
Share: 
© Copyright 2020 Tamilonline