Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
சேப்புக்குரங்கு கறி
எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ்
- பார்வதி|ஜூலை 2011||(2 Comments)
Share:
Click Here Enlargeநான் படித்த பெங்களூரு கமலாபாய் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் எங்கள் ஆங்கில டீச்சர் 'ஒரு நாணயத்தின் கதை' அல்லது 'ஒரு நதியின் கதை' என்று இவற்றைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார். இதில் பிறப்பு, வாழ்க்கை, மறைவு எனக் கட்டுரையை வகைப்படுத்தி எழுதுவோம். அமெரிக்காவில் ஒரு ஃப்ரிட்ஜின் உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பற்றி எழுதுவேன் என அப்போது நான் கனவில்கூட நினைத்ததில்லை.

எங்கள் வீட்டு ப்ரிட்ஜில் இந்த 90 டிகிரி வெயிலில் ஜில்லென்று குடிக்கத் தண்ணீர் பாட்டில் வைக்கக்கூட முடியாத அளவுக்கு ஹவுஸ் ஃபுல். பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்கு இருக்க தனித்தனி இடம் இருக்குமோ என்னவோ? எங்கள் வீட்டு ப்ரிட்ஜில் இவர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்கின்றனர். புதிதாகச் சமைத்தது-பிரம்மா. ஒரு வாரத்துக்கு முன் சமைத்தது விஷ்ணு. மூன்று அல்லது நான்கு வாரங்களாகச் சாப்பிடப்படாமல் தவம் இருப்பவர் சிவன்.

மூன்று தலைமுறைகள் வாழும் வீடு எங்களுடையது. நான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்த ஐங்காயப் பொடி, போஜனக் கொறடா, வேப்பிலைக் கட்டி, மாகாளி, மாவடு, ரசப்பொடி, சாம்பார்ப் பொடி சுண்ணாம்பு டப்பா இவற்றை வைத்திருப்பேன். என் பெண்ணுக்கு நிறைய ஐட்டங்கள் செய்து சாப்பிடப் பிடிக்கும். அதனால் அவள் சமைக்கும் தினுசு தினுசான சமையல் வகைகள் ஃப்ரிட்ஜுக்கள் குடியிருக்கும். என் மாப்பிள்ளைக்கு பாஸ்டா, இடாலியன் சமையல் செய்து சாப்பிடப் பிடிக்குமாதலால் அதற்கான டப்பாக்கள், சமையல் பொருட்கள், பாட்டில் பாட்டிலாக சாஸ் வகைகள். பேரப்பிள்ளைகள் விரும்பும் பீட்ஸா, சிப்போடில் வகைகள், இதைத் தவிர நான் வாங்கும் புதிய கறிகாய், பழ வகைகள், என் பெண் வாங்கும் உறைந்த காய்கறி, மாப்பிள்ளை வாங்கும் டிரேடர் ஜோன்ஸ் பீன்ஸ், சப்பாத்தி வகைகள், கேக், கோக், புட்டிங், ஜூஸ் வகைகள் என்று எல்லாம் கலந்துகட்டிக் குடும்ப சகிதமாக எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் வாசம் செய்கின்றன.

மேலும் 1% பால், ஆர்கானிக் 2% பால், விட்டமின் டி-பால், மோர், தயிர், யோகர்ட் எனவும் வெண்ணை, சீஸ், சோயா சீஸ் போன்றவையும் இருக்கும். அதுபோக திரேதாயுக, துவாபர யுக, கலியுகத் தின்பண்டங்களும் இருக்கும்.

எப்படி என்கிறீர்களா?

இரண்டு வருடங்களுக்கு முன் கிராண்ட் ஸ்வீட்ஸில் வாங்கிய அதிரசம், திருப்பதி லட்டு, என் பெண் வாங்கிப் பூரிக்கும் குலோப்ஜாமூன், ஜாங்கிரி, பிஸ்தா கேக்ஸ், என் பேரன் வாங்கிய சாக்லேட் வகைகளும் கொலு வீற்றிருக்கும். இது தவிர துணைக்கு இட்லி மாவு, தோசை மாவு, அடை மாவு, சப்பாத்தி செய்யப் பிசைந்து வைத்திருக்கும் மாவும் இருக்கும்.

வாரம் இரண்டு நாட்களுக்குச் சமைத்து மற்ற 5 நாட்களுக்கு வேறு வேலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்து பல வகையான ஐட்டங்களை விதவிதமாக என் பெண் செய்வாள். குழந்தைகளோ, "இந்தியன் சமையலா? சுத்த போர்" என்பார்கள். உடனே குடும்ப சகிதமாய் ஆலிவ் கார்டன், சாம் பவன் அல்லது வியட்நாம் வெஜிடேரியன் ஹவுஸூக்குப் போய்விடுவார்கள். சமைத்து வைத்த அனைத்தும்-வேறு எங்கு-ஃப்ரிட்ஜூக்குள்தான் அடைக்கலமாகும்.

அமெரிக்கா வந்த புதிதில் என் பெண் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த திரேதாயுகத்தின் சீஸ் பால்ஸை ஆசை ஆசையாகச் சாப்பிட, இரண்டு மணி நேரத்தில் வயிற்றுப் போக்கு. சிறுநீரகக் குழாய் இன்ஃபெக்‌ஷன் வந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு இரவு 2.00 மணிக்குப் போய் செத்தோம், பிழைத்தோம் என்று குற்றுயிரும் குலையுயிருமாக வந்ததிலிருந்து, நான் தினமும் எனக்கே எனக்காக என்று புதிதாக, கொஞ்சமாகச் சமைத்துச் சாப்பிடுகிறேன். இதில் மிகுந்ததைச் சின்னச் சின்ன டப்பாக்களில் வைத்து விடுவேன்.
என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்காதான். இந்தியாவில் உள்ள ஃப்ரிட்ஜில் இங்கே வைப்பதில் எட்டிலொரு பங்குதான் அடைக்க முடியும். அதுவும் இரண்டு வருடத்திலேயே பரலோகப் பிராப்தி ஆகி விடும். ஆனால் இந்த அமெரிக்க ஃப்ரிட்ஜூக்கள் இருக்கிறதே, இவற்றுக்கு ஆயுசு கெட்டி. வசதியும் அதிகம். எங்கள் வீட்டில் ரசம் 1, ரசம் 2, ரசம் 3 என்று வகைவாரியாக நம்பர் கொடுத்து அடுக்கலாம். இதேமாதிரிதான் மற்றக் கறிகாய்களுக்கும். ஆனால் இதற்கெல்லாம் யார் மெனக்கெடுவது என்று விட்டு விடுவோம். எக்ஸ்பிரேஷன் டேட் போடலாம். ஸ்டிக்கரைப் பார்த்தால் பேனா கிடைக்காது. பேனா கிடைத்தால் ஸ்டிக்கர் எங்கோ மாயமாய் மறைந்திருக்கும். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது மாதிரிதான். சரி என்று அந்த முயற்சியை விட்டுவிட்டு விக்கிரமாதித்தன் போல் மனம் தளராமல் மேலும் மேலும் அது மேலேயே ஐட்டங்களை அடுக்கிவிடுவோம்.

சென்னையில் ஒரு உபன்யாசகர், "இந்தியாவில் வாழும் ஏழையும் பணக்காரன். அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய பணக்கார இந்தியனும் ஏழை" என்றார். அவர் சொன்னது சரிதான். எப்படி என்கிறீர்களா? இந்தியாவில் அன்றன்றைக்குச் சமைத்துச் சாப்பிடுகின்றனர். அமெரிக்காவில் எப்போதும் பழையதைத்தான் சாப்பிடுகின்றனர். என் தந்தை ஒரு ஆயுர்வேத வைத்தியர். அவர் சொல்வார், "சமைத்த அரை மணிக்குள் சாப்பிட்டால் நூறு சதவிகிதச் சத்தும் கிடைக்கும், சமைத்த நான்கு மணி நேரத்திற்குப் பின் சாப்பிட்டால் எல்லாச் சத்தும் போய்விடும்" என்பார். ஒருவேளை ஃப்ரிட்ஜ் இல்லாத காலத்தில் வாழ்ந்ததால் இப்படிச் சொன்னாரோ என்னவோ. ஆனால், மிக மிகப் பழையதைச் சாப்பிடும் இவர்களது தேக ஆரோக்கியம் இன்னும் 15, 20 வருடங்களில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. காலம்தான் சொல்ல வேண்டும்.

உலகமயமாக்கல் என்று சதா புலம்புகிறோம். அமெரிக்காவில் அனைத்து தேசத்தின் உணவு வகைகளும் சாப்பிடப்பட்டு, சமைக்கப்பட்டு, எல்லா உணவுகளும் தங்களுக்குள் எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் ஃப்ரிட்ஜூக்குள் தள்ளப்பட்டு ஒற்றுமையாக வாசம் செய்வதைப் பார்க்கும்போது, உண்மையான குளோபலைசேஷன் எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜுக்குள்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். 'வந்ததெல்லாம் கொள்ளும் மகராஜன் கப்பல்' எங்கம்மா சொல்வதுண்டு. இத்தனைக்கும் அவர் இந்த ஃப்ரிட்ஜைப் பார்த்ததே கிடையாது!

(ஜூன் 14, 2011 நியூயார்க் டைம்ஸில் லூயிஸ்வில் என்ற இடத்தில் வசிக்கும் எல்லோருமே ஓவர்வெயிட் என்ற செய்தியைப் படித்ததும் இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது)

பார்வதி,
கூபர்டினோ
More

சேப்புக்குரங்கு கறி
Share: 
© Copyright 2020 Tamilonline