Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2011|
Share:
பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். ராமாயணமும் பாரதமும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மக்களிடையே நின்று நிலவி, பரவி, மண்ணோடு மண்ணாக ஊறிப் போயிருக்கும் கதைக் களங்கள்.

அப்படி, கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட ஒரு கதை என்றால், கவிஞனுக்கு அதை மேலும் நேர்த்தியாக்கி, தன் கவிதையின் ஆழமும், கல்வியின் பயிற்சியும் வெளிப்பட்டுத் தோன்றும்படி எழுதிவிட்டால் போதும். கதைக்களம் இன்னது என்று அனைவருக்குமே தெரிந்திருக்கிறபடியால், கவியோட்டத்தையும், நாடகப் பாங்கையும், கவிஞன் செய்யும் நகாசு வேலைகளையும் மட்டுமே கருத்தில் கொண்டு, தேர்ந்த சிற்பியின் கை வேலைப்பாட்டை ரசிப்பது போல் வாசகனால் கவிஞனுடைய உயரிய வீச்சையும் ஆற்றலையும் எளிதில் கிரகித்துக் கொள்ளலாகும். ஆனால் குயில் பாட்டு அப்படிப்பட்டதா? அதுவே ஒரிஜினல் வொர்க் என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட ஒரு முதனிலைப் பாடுபொருள். அதில் வெளிப்பட்டிருக்கிற கவிதாவேசமோ, அதி வேகமாகவும் பயங்கரமான வீச்சுகளுடன் கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நெடுங்கவிதையைப் படிக்கும்போதே, (பாரதிதாசன் பாரதியை முதன்முறையாகச் சந்தித்தபோது, பாரதியின் கவிதை நோட்டுப் புத்தகத்தை பாரதி அறியாமல் மெல்ல எடுத்துக்கொண்டு, அப்பால் சென்றமர்ந்து தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல்) 'பிரித்தேன்; படித்தேன்; வசமிழந்தேன்' என்று ஒவ்வொரு வாசகனையும் சொல்ல வைக்கிறது. ஆகவே, குயில்பாட்டின் கதைக்களமும் அதன் மர்ம முடிச்சுகளும் பல வாசகர்களின் கண்ணுக்குப் புலனாவதே இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், புதுவையில் ஒரு மாந்தோப்பில் ஓர் இளைஞன் ஒரு குயில் கூவுவதைக் கேட்கிறான். தொடக்கத்திலேயே நாம் கருத்தில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவென்றால், அந்த இளைஞனை பாரதியாகவே பலரும் நினைக்கிறார்கள்; குயில் பாட்டுக்கு படம் வரைபவர்களும் பாரதியே அப்படியொரு இளைஞனாககக் காட்சியளிப்பதாய் வரைகிறார்கள். இந்த இளைஞனை பாரதியாகக் கொள்ளவேண்டும் என்ற குறி்ப்பு, பாடல் நெடுகிலும் எங்கிலும் இல்லை; இளைஞன் வர்ணிக்கப்படும் விதமும், (சேரமான், வாளோடு திரிபவன், 'அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் / சிந்தக் கருதி யுடைவாளில் கைசேர்த்தேன்' என்பது போலெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் விவரங்கள், அந்த இளைஞனுக்குத் தாய் ஒருத்தி இருந்தாள் என்ற குறிப்பு..) எதுவுமே பாரதியை நேரடியாகக் குறிப்பதாக இல்லை. இது ஒரு கண்விழித்துக் கண்ட கனவின் விளைவு; அந்தக் கனவில் ஓர் இளைஞன் உலா வருகிறான். அவன் குயிலின் பாடலில் மனதைப் பறிகொடுக்கிறான். 'தொக்க பொருளெல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே' என்று அந்தக் குயிலின் பாடலுக்குத் தான் கண்ட பொருளாக அவன் விவரிக்கும் பத்துக் கண்ணிகளும் கவிதையையே மையக் கருத்தாகக் கொண்டனவாக, கவிதையின் பற்பல அம்சங்களில் தோய்வனவாக வெளிப்படுகின்றன. இந்தக் குயிலின் பாடல், நான்கு முறை வெவ்வேறிடங்களில் ஒலிக்கிறது.

அடுத்ததாக, குயில் சோகமுற்று இருப்பதை இளைஞன் காண்கிறான். 'ஏழுலகும் இன்பத்தீ ஏற்றும் திறனுடையாய், பீழையுனக்கு எய்தியதேன், பேசாய்' என்று கேட்கிறான். குயிலோ, 'காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்' என்று தன்னுடைய நீண்ட பேச்சை முடிக்கிறது. மனிதர்களுடைய மொழி தனக்கு விளங்குவதும், தன்னால் மானுடவர்போல் பேச முடிவதுவும் (கூடவே குயிலின் குரலில் பாடவும் முடிகிறது இதனால்!) மானுடப் பெண்கள் மனமுருகப் பாடும் பற்பல இசைகளிலெல்லாம் நெஞ்சம் பறிகொடுத்தேன் பாவியேன் என்றும் குயில் கூறுகிறது. அப்போதும் இளைஞனுக்குக் குயில் தன்னைத்தான் காதலிக்கிறது என்பது விளங்கவில்லை. 'காதலர்நீ எய்துகிலா காரணந்தான் யாதென்றேன்' அப்போது குயில் 'மஞ்சரே என்றன் மனநிகழ்ச்சி காணீரோ' என்று, நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்குகிறாயே, உனக்கு என் உள்ளம் புரியவில்லையா என்று கேட்கும்போதுதான் இளைஞன், குயில் தன்னைக் காதலிப்பதாக உணர்கிறான்.

இது என்ன விசித்திரக் காதல் பறவைக்கும் மனிதனுக்கும்! புதிர் இப்போதுதான் தொடங்குகிறது. இருவருக்கும் காதல் அரும்பும் அந்தச் சமயத்தில் சோலைப் பறவையெல்லாம் ஒன்றாகத் தோன்றி ஆர்க்கத் தொடங்குகின்றன. குயிலோடு தொடர்ந்து பேச முடியாமல் போகிறது. 'அல்லல் அற, நும்மோடு அளவளாய் நான் காணும் இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே' என்று வருந்தி, குயில் இளைஞனை நான்குநாள் கழித்து வரச் சொல்கிறது. இளைஞனுடைய உள்ளத்தைக் காதல் தீ பற்றிக்கொள்கிறது. மயங்கி, கிறங்கி, உலகையே மறந்து, தன்னைத் தான் மறந்து, வசமிழந்து, எல்லாக் காதலர்களையும் போலவே இவனும் பித்தேறி வீடு திரும்புகிறான். நான்குநாள் கழித்துதான் குயில் தன்னை வரச்சொல்லியிருக்கிறது என்றாலும், ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மறுநாளே தோப்புக்குப் போகிறான். அதிர்ச்சி. அங்கே, குயில் ஒரு குரங்கோடு, இந்த இளைஞனிடம் பேசியதைப் போலவே காதல்மொழி பேசிக்கொண்டிருக்கிறது. பாரதியின் நகைச்சுவை வல்லமைக்கு இந்தப் பகுதி அருமையான எடுத்துக்காட்டு. மனிதர்களைப் பழித்து, 'மீசையையும் தாடியையும் விந்தை செய்தே வானரர்தம் ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும், ஆடிக் குதித்திடினும், வானரர் போல் ஆவாரோ? வாலுக்குப் போவதெங்கே' என்று குயில் கேட்பது குரங்கைச் செய்யும் புகழ்ச்சியா அல்லது மனிதர்களைச் செய்யும் நையாண்டியா என்பது விளங்காத அளவுக்கு இந்த வர்ணனை வளர்கிறது. இளைஞனுக்குக் கோபம் மேலிடுகிறது. அப்போதே அதையும் குரங்கினையும் சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்.....' குரங்கு எப்படியோ தப்பித்து ஓடிவிட்டது; குயில் மறைந்துவிட்டது. அதே கணத்தில் சோலைப் பறவையெல்லாம் மீண்டும் வந்து ஆர்க்கத் தொடங்குகின்றன. இளைஞன் மனச்சோர்வுடன் வீடு திரும்புகிறான்.
மூன்றாவது நாள். மனம் புழுங்கிய இளைஞன், வேண்டா வெறுப்பாக, ஆனால் ஆவலை அடக்க முடியாமல் மறுபடியும் சோலைக்குப் போகிறான். இன்று, குயில் ஒரு மாட்டோடு காதல்மொழி பேசிக்கொண்டிருக்கிறது! குரங்கோடு பேசியதைக் காட்டிலும் நீண்டதாகவும் விரிவாகவும் மாட்டின் தன்மைகளைப் புகழ்ந்து பேசி, தான் அதன்மேல் காதல் கொண்டதாகச் சொல்லி, தன் பாடலை மீண்டும் இசைக்கிறது. இளைஞன் கோபமுற்று மறுபடியும் வாளை எடுத்து வீசுகிறான். மாடும் தப்பிவிடுகிறது; குயில் மறைந்துவிடுகிறது; மீண்டும் சோலைப் பறவையெல்லாம் ஒலிக்கத் தொடங்குகின்றன. மனம் உடைந்துபோய் இளைஞன், 'இப்படியும் நம் உள்ளம் போயும் போயும் ஒரு பறவையின்மேல் காதல் வசப்படுமா? அந்தக் குயிலும்தான் பலவிதமான நாடகங்களை நாமறியாமல் நடித்து, குரங்கையும் மாட்டையும் காதல் கொள்ளுமா? எனக்குத்தான் பறவையின்மேல் இனம்புரியாத காதலேற்பட்டது என்றால் இந்த விந்தைக் காதலுக்கு 'சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு, முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்' (எப்பேர்பட்ட வில்லன்கள்!) என்றெல்லாம் மனம் புழுங்கி, நான்காம் நாள் இளைஞன் சோலைக்குப் போவதில்லை என்று தீர்மானிக்கிறான். ஆனால், நான்காவது நாளில், இவனுடைய வீட்டின்மேல் அந்தக் குயில் தோன்றுகிறது. 'இது நம்முடைய பொய்க்குயிலோ' என்று இளைஞனுக்குத் தோன்றுகிறது. வானத்திலே அது வழிகாட்ட, 'யானின்றால் தானிற்கும், யான்சென்றால் தான்செல்லும். மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது'குயில் ஆகாய மார்க்கமாக சோலைக்கு இளைஞனை ஈர்த்துச் செல்கிறது.

'குரங்கிடமும் மாட்டிடமும் பேசிய பொய்க் கதையை, நாடகத்தை, மீண்டும் என்னிடம் நடித்துக் காட்ட அழைத்து வந்தாயா' என்று இளைஞன் கோபித்துக் கொள்கிறான். இதுவரையில் மர்மச் சுழலாகவே நகர்ந்துகொண்டிருக்கும் கதை இன்னொரு வடிவத்தை எடுக்கிறது. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையைச் சொல்லத் தொடங்குகிறது!

கவிஞன் என்ன நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் மனம்போன போக்கில் தன் கவியோட்டத்தைச் செலுத்துகிறான் என்று நமக்குப் புரிவதில்லை. ஆனால், கவிதையின் நடையும், ஓட்டமும் வேகமும் அவன் விவரிக்கும் நாடகப் பாங்கும், இசையின் இன்பத்தைப் பற்றி அவன் பேசும் பேச்சும், மாலைப் பொழுதின் வர்ணனையும், அண்டகோளங்களையெல்லாம் படைத்த ஆண்டவனுடைய படைப்பிலேயே 'கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா' என்றெல்லாம் அவன் பேசுவதும் நம்மையும் கிறங்க அடிக்கின்றன; அந்த இளைஞனைப் போலவே நாமும் 'என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர, உள்ளத் திடையு முயிரிடையு மாங்கந்தப் பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்' என்று நம் சிந்தனையாற்றலையே முற்றிலும் இழந்துபோய் பாட்டின் ஓட்டத்திலும் இன்பத்திலும் மனம் பறிகொடுத்துப் பேதுற்று நிற்கின்றோம்.

இதுவரையில் நான் விவரித்திருக்கும் இந்தக் கதையைப் பார்த்தால், 'what an absurdity!' என்றல்லவா தோன்றுகிறது! என்னய்யா கதை இது? இதைப் போயா இவ்வளவு நீள நெடுக எழுதிக் கிறங்க அடித்திருக்கிறான் இந்தக் கவிதைக் கிறுக்கன் என்று கேட்கத் தோன்றுகிறது. கதையோ இப்போதுதான் திருப்பத்தையே அடைந்திருக்கிறது. குயில் புதிதாய் ஒரு பூர்வ ஜன்மக் கதையைச் சொல்லப் போகிறது!

குயிலின் பூர்வ ஜன்மக் கதையையும், அது இந்தப் பிறப்பிலேயும் மானிடப் பெண்ணாகப் பிறந்து, முற்பிறப்பில் அது குயிலியாக (வீர முருகனெனும் வேடன் மகளாகப்) பிறந்திருந்த சமயத்தில் அந்தப் பெண்ணிடம் மனத்தைப் பறிகொடுத்த அதன் முறைமாமன்களான நெட்டைக் குரங்கனும் மாடனும் இந்தப் பிறவியில் பேய் வடிவத்தில் அதைத் தொடர்ந்து வந்து, அதைக் குயில் உருவத்துக்கு மாற்றிவிட்டதையும் இன்னமும் நாம் காணவேண்டும். அங்கேதான், 'குயிலே பரமான்மா' என்ற தெ.பொ.மீ. அவர்களின் ஆய்வு தூள்தூளாகிறது. பரமான்மா, மாயையின் அடையாளங்களான மாடன், குரங்கன் ஆகிய பேய்களிடம் அலைப்புண்டு, வடிவம் இழந்து வாடும் நிலையும் ஏற்படுமோ! குயில் ஜீவான்மாகவும், இளைஞன் பரமான்மாவாகவும் மாறிவிடுகின்றனரே. ஆய்வுச் சௌகரியம்! ஆனால், கவிஞனோ, வேறெதோ ஒன்றை, குறியீடுகளால் சுட்டப்படும் செய்தி ஒன்றைப் பொதிந்து வைத்து, வேடிக்கை பார்க்கிறான்.

தொடர்ந்து குயிலின் பூர்வ ஜன்மக் கதையையும், அதைத் தொடரும் விந்தையான நிகழ்வுகளையும், கடைசியில் 'ஆன்ற தமிழ்ப் புலவீர்' என்று கவிஞன் விளித்து, தன்னுடைய திப்பிசமான வேலையைச் செய்துவிட்டுப் போயிருப்பதையும், இவன் என்னதான் சொல்ல வருகிறான், எந்த ஒரு புள்ளியில்தான் இப்படிப்பட்ட அபத்தக் கற்பனை போலத் தோன்றும்--school of the absurd வகையைச் சேர்ந்ததோ என்று தோன்ற வைக்கும்--இந்தக் கதைக்களத்தின் எல்லாக் குறியீடுகளும் எங்கே வந்து சந்திக்கின்றன என்ற விடையைப் பேராசிரியர் வேணுகோபாலன் அவர்கள் விடுவித்த விதத்தை அடுத்துக் காணலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline