Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? - (பாகம் - 7)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2010|
Share:
இதுவரை:
பொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலைத் துரத்தி ஆரம்பித்துவிடக்கூடாது, உங்கள் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech), என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம்.

மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம்.

சென்றமுறை, வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை மட்டும் வேண்டும் போது உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். இப்போது, வலைமேகக் கணினி உபதுறைகளில் மூலதன வாய்ப்புப் பற்றிய மேல்விவரங்களைக் காண்போம்.

★★★★★


SaaS, PaaS, IaaS போன்ற பல வலைமேகக் கணினி உபதுறை கணினிகளைப் பற்றி அறிமுகம் செய்துவைத்ததற்கு நன்றி. அவற்றில் எந்த மாதிரி ஆரம்பநிலை மற்றும் மூலதனம் பெறும் வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறுங்களேன்?

SaaS என்னும் பயன்பாட்டு மென்பொருள் சேவை தருவதில் ஆரம்பநிலை வாய்ப்பு உள்ளதென்று முன்பே கண்டோம். இப்போது PaaS மற்றும் IaaS போன்ற அடிப்படைத் துறைகளில் என்ன வாய்ப்பு உள்ளது என்று காணலாம்.

இந்த இரண்டு வகைகளிலுமே, நீங்களே ஒரு தகவல் மையத்தை ஆரம்பித்து அந்த சேவையைத் தருகிறேன் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். ஏனெனில், அதற்கு வேண்டிய மூலதனமும் மிகமிக அதிகம் (ஒரு குறைந்தமட்ட அளவுக்கும் வளர்வதற்குக்கூட, பல நூற்றுக் கணக்கான மில்லியன் டாலர்கள் மூலதனம் தேவைப்படலாம்), மற்றும் பலப்பல பெரும் நிறுவனங்கள்கூட இந்த மாதிரிச் சேவையளிக்க முன்வந்துள்ளன (அமேஸான், கூகிள், மைக்ரோஸாஃப்ட் ஆகியவை சில உதாரணங்கள்.)

என்னடா இது, ஆரம்பத்திலேயே வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டாரே என்று எண்ணுகிறீர்களா? தகவல் மையத்தில் கணினிகளை வைத்து அளிக்கும் சேவைக்குத்தான் வாய்ப்பில்லை என்று கூறினேனே ஒழிய, அந்தத் துறைகளிலேயே வாய்ப்பில்லை என்று கூறிவிடவில்லையே.

நிறுவனங்கள் ஒரேயடியாகத் தங்கள் தகவல் மையங்களை இழுத்து மூடிவிட்டு, வலைமேகத்தை மட்டும் பயன்படுத்த இப்போதைக்கு முன்வரப் போவதில்லை. வலைமேக நுட்பம் மிக முன்னேறியிருந்தாலும் கூட, மிகப் பெரிய நிறுவனங்கள் சொந்த மையங்களை நடத்திக் கொண்டிருக்கும்.


இந்தத் துறையே மிகப்புதிது என்பதால், முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த பல மென்பொருள் கருவிகள் இந்தத் துறைக்குச் சரியாகப் பொருந்தி வருவதில்லை. ஒவ்வொரு கணினி வகைக்கும் ஒரு புதுவகை மென்பொருள் கருவித் தலைமுறை வருகின்றன. IBM பெரும் கணினிகளை (mainframe) வைத்து நடத்தியபோது இருந்த கருவிகள் DEC நடுநிலைக் கணினிகளை (mini computers) நடைமுறைக்குக் கொண்ர்ந்தபோது அதற்குப் பயன்படவில்லை.

அதேபோல் அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட கருவிகள், ஸன் மைக்ரோ வேலைநிலையம் (workstation) உருவாக்கியபோது பயன்பெறவில்லை. அத்தகைய வேலைநிலையங்களையும் வின்ட்டெல் (wintel) எனப்படும் தனியார்கணினிகளை (personal compueter) காலத்தில் கேட்கும்-வழங்கும் வலைகள் (client-server networks) என்னும் துறைகளுக்கும் வேறு கருவிகள் தேவைப்பட்டன. இணையத்தை அடிப்படையாக வைத்துத் தரப்பட்ட நடுப்பொருள் (middleware) என்ற துறைக்கும் அதே கதைதான் - புதுக் கருவிகள்!
அதனால், வலைமேகக் கணினித் துறைகளின் சாராம்சத்தை நன்கு உட்புகுந்த மென்பொருள் உருவாக்கும் மற்றும் நிர்வகிக்கும் (development and management) கருவிகள் உருவாக்கும் நிறுவனங்களை ஆரம்பிக்கும் வாய்ப்பும் அவற்றுக்கு மூலதனம் பெறும் வாய்ப்பும் தற்போது உள்ளது. வலைமேகத்தில் ஓடுவதற்கு எப்படி ஒரு மென்பொருளைத் தயார் செய்வது (publishing and on boarding), அது மெய்நிகராக்கச் சூழ்நிலையில் ஓடுகையில் அது எவ்வளவு நன்றாக ஓடுகிறது என்று எவ்வாறு கண்காணிப்பது (monitoring and measurement), எதாவது பிரச்சனை வருமானால் எவ்வாறு ஆராய்ந்து சரி செய்வது (diagnostics) போன்ற பலப்பல உபவாய்ப்புக்கள் உள்ளன.

இன்னொரு மிக முக்கியமான வாய்ப்பும் உள்ளது. அதாவது நிறுவன வலைமேகப் பாலம் என்பது (enterprise cloud bridge). அதாவது, நிறுவனங்களின் சொந்தத் தகவல் மையங்களில் வைத்து நடத்தப்படும் பயன்பாடுகள் (applications) மற்றும் அங்குள்ள சேமிப்பகங்களில் (storage) உள்ள தகவல்கள், வெளி வலைமேகங்களில் நடத்தப்படும் பயன்பாடுகள், மற்றும் வலைமேக சேமிப்பகங்களில் வைக்கப்படும் தகவல்கள் இவற்றையெல்லாம் ஒருமித்துப் பயன்படுத்த உதவும் வசதிகள்.

நிறுவனங்கள் ஒரேயடியாகத் தங்கள் தகவல் மையங்களை இழுத்து மூடிவிட்டு, வலைமேகத்தை மட்டும் பயன்படுத்த இப்போதைக்கு முன்வரப் போவதில்லை. இன்னும் பல வருடங்கள் கழித்து வலைமேக நுட்பம் மிக முன்னேறியிருந்தாலும் கூட, மிகப் பெரிய நிறுவனங்கள் சொந்த மையங்களை நடத்திக் கொண்டிருக்கும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. தகவல் பாதுகாப்பு ஒரு முக்கியமான காரணம். விரிவுப் பரப்பு வலை, அலையகலம் மற்றும் தாமத நேரம் (wide area network bandwidth and latency) மற்றொரு காரணம். அதனால், நிறுவன சொந்த மையங்களையும் வலைமேக மையங்களையும் இணைப்பதற்கான வசதிகளுக்கு இன்னும் பல வருடங்களுக்குத் தேவை இருக்கும்.

அது மட்டுமல்லாமல், நிறுவனங்கள் வெளி வலைமேகங்கள் மட்டுமல்லாமல், தங்கள் சொந்தத் தகவல் மையங்களையும் வலைமேக முறையில் அமைத்துப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. வலைமேகப் பால நுட்பங்கள், வெளிமேகம், உள்மேகம் இரண்டுக்குமே உதவக்கூடும். வலைமேகக் கணினித்துறை இப்போதுதான் பிறந்துள்ளது என்பதால் இந்த மேகப்பாலத் துறைக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ளது.

மேகப்பால நுட்பங்களிலும் உபதுறைகள் உள்ளன: பாதுகாப்பு, தகவல் செலுத்தல் மற்றும் ஒன்றாக்கல் (synchronization and transfer), மேல்நோக்கம் மற்றும் நிர்வாகம் (monitoring and management) போன்ற உபதுறைகள். இந்த உபதுறைகளைப் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline