|
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 8) |
|
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2010| |
|
|
|
|
|
இதுவரை: பொருளாதாரச் சூழ்நிலை சற்றே தலைதூக்கும் இந்தச் சமயத்தில், எந்தத் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலுக்குப் பின்னால் ஓடக்கூடாது, உங்கள் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech), என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
சென்றமுறை, வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை மட்டும் வேண்டும் போது உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். இப்போது, வலைமேகக் கணினி உபதுறைகளில் மூலதன வாய்ப்புப் பற்றி இன்னும் அதிக விவரங்களைக் காண்போம்.
*****
வலைமேகக் கணினிப் பாலம் என்று கூறினீர்களே, அதிலும் பல உபதுறைகள் உள்ளதாகக் கூறினீர்கள்; அதைப்பற்றி கொஞ்சம் விவரிக்க முடியுமா?
ஓ, தாராளமாக விவரிக்கலாமே! வலைமேகக் கணினிப் பாலத்துறையில், தகவல் பாதுகாப்பு (information security), தகவல் ஒருங்கியைத்தல் மற்றும் செலுத்தல் (synchronization and transfer), மேற்பார்வை மற்றும் நிர்வாகம் (monitoring and management), மேகத்தில் ஓட்டப் பயன்பாட்டு மென்பொருட்களை ஆயத்தமாக்கல் (staging and provisioning) போன்ற பல உபதுறைகள் உள்ளன. இவற்றைப் பற்றி ஒவ்வொன்றாகக் காண்போம்.
தகவல் ஒருங்கியைத்தல் (data synchronization) ஒரு பெரிய பிரச்சனைதான். இதை நிவர்த்திப்பதற்குச் சில நல்ல வாய்ப்புக்கள் உள்ளன.
நிறுவனங்களின் தகவல் மையங்களில் உள்ள தகவலின் அளவு மிக அதிகமானது. பயன்பாட்டு மென்பொருட்கள் சேமிக்கும் தகவல் மட்டுமன்றி, மின்னஞ்சல், இணையப் பக்கங்கள், படங்கள், வீடியோக்கள் போன்று பெருமளவு அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவற்றை வலைமேகத்தில் நடத்தப்படும் பயன்பாட்டு மென்பொருட்களுக்கு நிறுவன மைய வேகத்திலேயே கிடைக்க வேண்டுமானால் இவற்றை ஒட்டு மொத்தமாக வலைமேகத்துக்கு நகல் எடுத்து அனுப்ப வேண்டும்.
இருக்கும் தகவலை மாற்றமின்றி ஒவ்வொரு முறையும் அப்படியே அனுப்புவது ஓரளவுக்கு மேல் சாத்தியமில்லை. ஒருமுறை மொத்தமாக அனுப்பி (நாடா அல்லது தகவல் தட்டுக்களை - data tapes and disks - கூட அனுப்பலாம்) நிறுவிவிட்டால், அதன் பிறகு, புதிதாக ஏற்படுத்தப்பட்ட தகவல்களையும், மாற்றப்பட்ட தகவல் துளிகளையும் மட்டும் அனுப்பினால் போதும். இது மொத்த அசல் தகவல் அளவில் குறைந்த சதவிகிதம்தான் இருக்கும். அது மட்டுமல்ல. புதிதாக அனுப்ப வேண்டிய தகவல் மாற்றப் பகுதிகளுக்குள்ளும் சில பைட் தொடர்கள் (byte sequences) ஒரே மாதிரி இருக்கக் கூடும். உதாரணமாக, ஒரு விற்பொருள் பல விதங்களாகச் சிறு மாற்றங்களுடன் விற்கப்படுமானால், அதன் ஒவ்வொரு விதத்துக்கும் உள்ள வணிக விவரிப்புக் கட்டுரைகள் (collateral) சற்றே மாறுதலுடன் பல இருக்கலாம். அதனால், ஒரு விதத்தின் கட்டுரையை மற்றும் அனுப்பிவிட்டு, மற்ற விதங்களுக்கு மாறுதல்களின் பைட் தொடர்களை மட்டும் அனுப்பி வலைமேகத்தில் மீண்டும் முழுக் கட்டுரைகளாக மாற்றிக் கொள்ளலாம். இதுபோன்ற தகவல் அளவைக் குறைக்கும் வாய்ப்புக்கள் பல விதங்கள் உள்ளன. இதற்குப் பொதுவாக தகவல் நகல் குறைப்பு (data de-duplication) என்று பெயர். இதற்கான தொழில் நுட்பங்களை தற்போதுள்ள நுட்பங்கள் தகவலளவைக் குறைப்பதைவிடச் சிறந்த முறையில், இன்னும் பெருமளவுக்குக் குறையும்படிச் செய்யும் வாய்ப்புள்ளது. |
|
| மற்றொரு பிரச்சனை, மென்பொருட்கள் ஓடும் வேகத்துக்கும் அவற்றுக்கு வேண்டும் சமயத்துக்கும் ஏற்பத் தகவல் துளிகளை எவ்வாறு துரிதமாக அனுப்புவது என்பது. இந்த மாதிரிப் பிரச்சனை அதற்கு எதிர்மாறான நிலைக்கும் உண்டு. | |
தகவலை ஒட்டு மொத்தமாகவோ, அல்லது மாற்றங்களை மட்டுமோ, எதுவானாலும் இவற்றைச் சில பயன்பாட்டு மென்பொருட்களுக்கு வெகு வேகமாக அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கக்கூடும். ஒரு குறைந்த சமய இடைவெளிக்குள்ளோ, அல்லது மாற்றங்களை மெய்நேரம் போன்றே (quasi real time), அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கக்கூடும். அதற்காக, நொடிக்கு ஒரு கிகா-பிட் (1 Gbps) வேகத்திலிருந்து, வருங்காலத்தில் 10 Gbps, 40 Gbps, 100 Gbps போன்ற அதிவேகத்தில் அனுப்ப வேண்டிய தேவை இருக்கக்கூடும். அதற்கான தகவல் தொடர்பு நுட்பங்கள், மற்றும் மாற்றங்களை அதிவேகத்தில் கணிக்க வேண்டிய நுட்பங்கள் போன்றவற்றை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதிவேகம் என்பது அனுப்பும் அளவு (throughput) மட்டுமல்ல. மாறிய தகவலை விரைந்து அனுப்ப வேண்டிய கட்டாயத்தால் மிகமிகக் குறைவான தாமதத்துடன் (latency) அனுப்ப வேண்டியிருக்கலாம். இதற்கான தாமதக் குறைப்பு (latency mitigation) நுட்பங்களையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.
அதெல்லாம் சரிதான், ஆனால் சில சமயம் மலை மன்னனிடம் வராது போனால், மன்னன் மலைக்குப் போக வேண்டி வரும்! இதென்ன திடீரென எங்கேயோ குதித்து விட்டேனே என்று எண்ணாதீர்கள். அந்த உதாரணம் இந்த விஷயத்துக்கு மிகவும் பொருந்தும். அதாவது, சில காரணங்களால், தகவலை வலைமேகத்துக்கு அனுப்ப முடியாது. தகவல் அளவு மிக அதிகமாக இருப்பதாலோ, அல்லது மிக அதிக அளவு மாற்றங்கள் இருப்பது அல்லது மிகத் துரிதமாக மாறுவது போன்ற காரணங்களால் இருக்கலாம். அல்லது தகவல் மிக ரகசியமானது (கிரெடிட் கார்டு எண் போன்றவை), அதனால் நிறுவனத்தைவிட்டு வெளிச்சேமிப்பகங்களில் வைக்க முடியாது, கணினியின் தலைமை ஞாபக சிப்களில் (main memory) மட்டுமே தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணலாம். அல்லது வெளிச்சேமிப்பகங்களில் நம்பிக்கையின்றி நிறுவனத் தகவல் எப்படியாவது வெளியாருக்கு ஒழுகிவிடக் (data leakage) கூடும் என்று அஞ்சலாம். இதுபோன்ற காரணங்களால் தகவலை வலைமேகத்தில் சேமித்து வைக்காமல், வேண்டிய தகவலை மட்டும் வேண்டும்போது மட்டும் நிறுவனச் சேமிப்பகங்களிலிருந்தே மின்வலை மூலம் அணுகிப் பயன்படுத்துவது.
தகவல் வலைமேகத்துக்குப் போகாமல், வலைமேக மென்பொருட்கள் தகவலை மின்வலை மூலம் அணுகிப் பயன்படுத்துவதால், இதை மலை மன்னனிடம் வரவில்லை, மன்னன்தான் மலைக்குப் போக வேண்டியாதாயிற்று என்று சொல்வது நியாயந்தானே.
ஆனால், இவ்வாறு மன்னன் மலைக்குப் போவதிலும் இடையூறுகள் இல்லாமலில்லை. முதலாவது பிரச்சனை அவ்வாறு வலைமேகத்திலிந்து நிறுவனத்துக்குள் உள்ள தகவலை அணுகுவதால், உரிமை உள்ள நிறுவனத்தின் வலைமேக மென்பொருட்கள் மட்டும் அவ்வாறு அணுக அனுமதித்து, வேறு யார் யாரோ அணுகித் தகவலைத் திருடிவிடாமால் பாதுகாப்பது. இந்தப் பிரச்சனையை எப்படி நிவர்த்திப்பது என்பதைப் பாதுகாப்புக்கான வலைமேகப் பாலத் துறையைப் பற்றி மேற்கொண்டு விவரிக்கையில் பார்க்கலாம்.
மற்றொரு பிரச்சனை, மென்பொருட்கள் ஓடும் வேகத்துக்கும் அவற்றுக்கு வேண்டும் சமயத்துக்கும் ஏற்பத் தகவல் துளிகளை எவ்வாறு துரிதமாக அனுப்புவது என்பது. இந்த மாதிரிப் பிரச்சனை அதற்கு எதிர்மாறான நிலைக்கும் உண்டு. அதாவது, நிறுவனத் தகவலை வலைமேகச் சேமிப்பகத்திலேயே (cloud storage) வைத்து, நிறுவனத்தில் ஓடும் மென்பொருட்கள் அதை மின்வலை மூலம் அணுகிப் பயன்படுத்தும் வகை. இரண்டு வகைகளுக்கும் தகவல் துளிகள் வெகு துரிதமாக தயாராக அளிக்கப்பட வேண்டும். இதற்காக, தொலைவுத் தகவல் தொடர்பைத் துரிதமாக்கும் நுட்பங்கள் (WAN acceleration), வலைக்கணினிக்கே உரித்தான வகையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும்படி தனித்துவம் (specialization) பெற வேண்டியதாகிறது. இது வலைமேகப் பாலத் துறையில், வலைத் தொடர்பைத் துரிதமாக்கும் ஒரு உபதுறையாக உள்ளது. நிறுவனத்துக்குள்ளேயே தொலைத்தொடர்பைத் துரிதமாக்கும் துறை (enterprise internal WAN acceleration) இப்போது சற்று முதிர்ந்துவிட்டது எனலாம். இந்தப் புதிய மேகப்பாலத் தொடர்புத் துரிதமாக்கல் உபதுறைக்கு இப்போது வளரும் வாய்ப்புள்ளது.
வரும் பகுதிகளில் மேற்கொண்டு பார்க்கலாம்.
கதிரவன் எழில்மன்னன்
(தொடரும்) |
|
|
|
|
|
|
|
|