இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பாடி இதயம் கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழர் விழாவில் மெல்லிசை நிகழ்ச்சிக்காக நியூ ஜெர்ஸிக்கு வந்திருந்த எஸ்.பி.பி.யைத் தென்றலுக்காகவே சென்று சந்தித்தார் சி.எஸ். ஐங்கரன். அமெரிக்காவில் தனது இசைக்குழுவை அமைத்து இந்த ஆண்டில் வெள்ளிவிழாக் காணும் ஐங்கரன், எஸ்.பி.பி. அவர்களோடு விசேட நட்புக் கொண்டவர். "ஒரு சகோதரனைப் போன்ற உறவு" என்கிறார் எஸ்.பி.பி. அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.....
கே: வணக்கம். உங்களுடைய முதல் பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி'; ஆனால் திரைப்படத்தில் முதன்முதலில் வெளிவந்தது 'ஆயிரம் நிலவே வா'தான்; இல்லையா? ப: முதலாவது சரி. ஆனால் இரண்டாவது தவறு. இரண்டு படங்களுமே ஒரே சமயத்தில்தான் வெளியாகின. முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட என்னுடைய பாடல் இடம்பெற்ற படம் 'ஹோட்டல் ரம்பா'. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். எல்.ஆர். ஈஸ்வரியுடன் பாடியது. ஆனால் படம் வெளிவரவே இல்லை. அதன் பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்டதுதான் 'இயற்கையென்னும் இளைய கன்னி'. அதற்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்தாவது பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா'.
இப்போது ஸ்ருதி சேராமல் பாடினாலும், தாளம் சேராமல் பாடினாலும் சரிசெய்து விடலாம். ஒண்ணும் தெரியாதவனையும் பாட்டுப் பாட வைத்துக் கொள்ளலாம். இது பிரம்ம சிருஷ்டி அல்ல, விஸ்வாமித்ர சிருஷ்டி.
கே: உங்களுடைய பழைய பாடல்களை மீண்டும் கேட்கும்போது என்ன தோன்றும்? ப: பெரும்பாலும் ஏன் இத்தனை தவறுகள் செய்திருக்கிறேன் என்றுதான். சில பாடல்களைக் கேட்கும்போது இன்னும் நன்றாகப் பாடியிருக்கலாமே என்று தோன்றும். இதை அடக்கத்துக்காகச் சொல்லவில்லை. எனக்கு அப்போது குரலில் ஏற்ற இறக்கங்கள் காட்டத் தெரியாது. ஆனாலும் எனக்குத் திரையுலகம் தொடர்ந்து வாய்ப்பளித்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான்.
கே: ஒலிப்பதிவில் அனலாக் (analog) முறை பயன்படுத்திய காலம் அது. பாடகர்கள், இசைக்குழுவினர் எல்லோரும் ஒன்றாக, ஒரே சமயத்தில் ஒலிப்பதிவு செய்தார்கள். ஆனால், இப்போது எல்லாம் டிஜிடல் மயம். எங்காவது தவறு செய்தால் கூட, அதை உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். இது குறித்து உங்கள் கருத்து என்ன? ப: நவீன தொழில்நுட்பத்தினால் பாடகர்ளுக்குத் தற்போது நிறைய வசதிகள் கிடைக்கின்றன. But, the human element is missing. சேர்ந்து ஒலிப்பதிவு செய்யும்போது கருத்துக்களை, ஆற்றல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியும். ஒரு மூத்த இசைக்கலைஞர் அந்த இடத்தில் கொஞ்சம் சுருதி சேரவில்லை, பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம். சீனியர்களுடன் பாடும்போது இங்கே இன்னும் கொஞ்சம் உணர்ச்சியோடு பாடுங்கள் என்று சொல்லலாம். இது இன்றைக்கு இல்லை. இப்போது நிறைய நேரம் மிச்சமாகிறது. அரைமணி நேரத்தில்கூட ஒரு பாடலை முடித்து விடலாம். சில நேரங்களில் உடன் பாடும் பாடகர் யார் என்பது கூட கடைசிவரை தெரியாது. இரண்டு பேர் இணைந்து பாடும்போது ஒருவிதமான, நியாயமான போட்டி இருக்கும், நன்றாகச் செய்ய வேண்டும் என்பதற்காக. இப்ப யார் பாடுவாங்களோன்னு நம்ம மனசுலயே நினைச்சுக்கிட்டு, அவங்க என்ன செய்யப் போறாங்களோன்னு யோசனை பண்ணி அதற்கேற்றவாறு செயல்பட வேண்டி இருக்கிறது.
தொழில்நுட்பம் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆனால், முன்னெல்லாம் பாடி முடித்தபின் மிக்ஸிங் ரூமுக்குப் போனால், அங்கே இசையமைப்பாளர் 'பலே' என்று ஒரு பார்வையில் சொல்வார். அதெல்லாம் இன்றைக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. சில சமயம் 20, 23 நாள்கூட ரெகார்டிங் நடக்கும். அதைத் தாக்குப்பிடிக்க வேண்டும். கடைசியில் பாட்டை எல்லோரும் புகழும்போது அந்த உணர்வுக்கு ஈடே கிடையாது. இன்றைக்கு எல்லாமே எந்திரமயமாகிவிட்டது.
டிஜிடல் ரெகார்டிங் எனக்குப் பிடிக்காது. அனலாக் பதிவில் எத்தனையோ குறைகள் இருக்கலாம். ஆனாலும் அதிலும் ஒரு அழகு இருந்தது. இப்போது ஸ்ருதி சேராமல் பாடினாலும், தாளம் சேராமல் பாடினாலும் சரிசெய்து விடலாம். ஒண்ணும் தெரியாதவனையும் பாட்டுப் பாட வைத்துக் கொள்ளலாம். இது பிரம்ம சிருஷ்டி அல்ல, விஸ்வாமித்ர சிருஷ்டி. செயற்கை செயற்கைதான். என்னதான் அதிவேகக் கணினியில் செயற்கை அறிவை உண்டாக்கினாலும், மனித அறிவின் படைப்பாற்றலுக்கு இணையாகாது. அது எந்திரத்தனமானதுதான்.
கே: இப்போதும் சரி, அப்போதும் சரி, எந்த நடிகருக்காகப் பாடப் போகிறீர்கள் என்பது உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா? ப: கண்டிப்பாகத் தெரியும். எனக்கு ஒரு பழக்கம், நான் பாடினால் அந்தப் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர்கள் எல்லா விவரத்தையும் எழுதி வைத்துக்கொள்வேன். இப்போ சிலசமயம், ரொம்ப புதுசா படம் எடுக்கிறவங்க எல்லாம் "சார், ஒரு புதுமுகத்தைத் தேடிக்கிட்டிருக்கோம்"னு சொல்வாங்க. அது நடக்காமலே போகலாம். ஆனால் 99 சதவீதம் தெரிந்துவிடும்.
கே: பாடல்களில் கையாளும் நெளிவுசுளிவுகள் எல்லாம் உங்கள் விருப்பமா, இல்லை இசையமைப்பாளர்களின் ஆர்வத்தைப் பொருத்ததா? ப: பெரும்பாலான சமயங்களில் அது நடிப்பவர்களின் ஈடுபாட்டைப் பொறுத்ததாகவே இருக்கும். இசையமைப்பாளர் மூட் சொல்லலாம். சூழ்நிலை சொல்லலாம். ஆனால் அதை அனுபவித்துப் பாடுவது ஆர்ட்டிஸ்ட்தானே! எனவே அவர்களைப் பொறுத்ததுதான். சில சமயங்களில் எங்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கும் அது அந்தப் பாட்டின் சூழலைப் பொறுத்து நாங்களும் சில சமயம் ஆலோசனை சொல்வோம்.
கே: அந்தக் காலத்தில் உங்களோடு ஜோடி சேர்ந்து பாடியவர்களிடம் திருத்தம் சொன்னதுண்டா? ப: அது யார் பாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு பாடல் பதிவு என்பது குழு முயற்சி. சீனியர் பாடகர்களுடன் பாடும்போது நம்மால் அவர்களுக்குப் பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா என்று பார்ப்போம். ஆனால் ஜூனியர் பாடகர்கள் என்றால் பாடல் பற்றி, அவர்கள் பாடும் விதம் பற்றி நம்முடைய கருத்துக்களை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஏனென்றால் நாம் நன்றாகப் பாடி, அவர் சரியாகப் பாடாவிட்டால் பாடல் நன்றாக அமையாது. ஒருவருக்கொருவர் கலந்து பேசிப் பாடுவதும் உண்டு. அதாவது சின்னச் சின்னக் கருத்துக்கள் - இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் வேண்டும், கொஞ்சம் ரொமான்டிக்காக வேண்டும் இதுமாதிரி சொல்வதுண்டு.
கே: ஆனால் இப்போது அது போன்று செய்வது கடினம் இல்லையா? ப: ம்ம்ம். இப்போதும் சொல்லலாம். ஆனால் ஃபோன் பண்ணித்தான் சொல்ல வேண்டும். நான் இதை இப்படிப் பாடியிருக்கிறேன். நீங்கள்தான் பாடப்போகிறீர்கள். இப்படிச் செய்யுங்கள் என்று. அவங்க அந்த ட்ராக் கேட்டுட்டு அதுக்கேத்த மாதிரி பாடிடலாம்.
கே: இப்போது புதிது, புதிதாகப் பாடகர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். உங்களைப் போலச் சரித்திரம் படைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் குறைவுதான், இல்லையா? ப: ஆமாம். ஒரு சினிமாவில் ஹீரோவுக்கு ஆறு பாட்டு இருந்தால் ஆறு பேர் பாடுகிறார்கள். அது மட்டுமல்ல. ஒரே பாட்டை இரண்டு பேர் சேர்ந்து பாடுவதாகவும் உள்ளது. கேட்டால் வெரைட்டியே இல்லை. இது ஏன் என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால், முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னால் வாய்ப்புக் கிடைப்பதே மிகக் கடினம். ஒரு இசையமைப்பாளரைப் பார்த்து, ஆடிஷன் நடப்பதற்கு நெடுநாள் ஆகலாம்.
இப்போதெல்லாம் நிறைய லைட் மியூசிக் நிகழ்ச்சிகள், ரியாலிடி ஷோக்கள் நடக்கின்றன. டி.வி.யில் நிறையப் பேர் கேட்டுவிட்டு, வாய்ப்புத் தருகிறார்கள். இல்லாவிட்டால் குரல்பதிவை இசையமைப்பாளரிடம் கொடுத்துவிடுகிறார்கள். நேரம் இருக்கும்போது அதைக் கேட்டு, தான் சிறந்ததாகக் கருதும் குரலுக்கு வாய்ப்பும் தருகிறார். புதுசா வந்தவர்களே 50, 60 பேர் இருக்கிறார்கள். அத்தனை பேருமே தொடர முடியுமா? இசையமைப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இசையமைப்பாளர் என்ன செய்ய வேண்டுமென்றால், மிக நல்ல மூன்று நான்கு பேரைத் தேர்ந்தெடுத்து நிறைய வாய்ப்புக் கொடுத்து, அவர்கள் தங்களைச் செப்பனிட்டுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களை ரசிகர்கள் அறிய வேண்டும். பாடப் பாடத்தான் பாடலுக்கு ஒரு பரிணாமம் கிடைக்கும். ஒரு பாட்டைப் பாடியபின் அவரைக் கிடப்பில் போட்டுவிட்டால், "சார் நான் இந்தப் படத்தில் பாடினேன்" என்று இன்னோர் இடத்தில் போய் சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதானே தவிர, இந்தப் பாட்டை இவர்தான் பாட வேண்டும் என்று தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.
இப்பொழுது மொழிக்கு யாருமே முக்கியத்துவம் தருவதில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூடச் சரியாக உச்சரிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. மன்னிக்க முடியாதது.
எனக்கே தெரியாது, நிறையப் பேர் இண்டஸ்ட்ரியில் இருக்கிறார்கள் என்று. நான் சமீபத்தில் என் மகனோடு காரில் போய்க்கொண்டிருந்த போது பாட்டுக் கேட்டேன். யார் பாடினது, எந்தப் படத்துல என்பது எனக்குத் தெரியாது. முன்புபோல் ரேடியோவில் பாடுவோரின் பெயர் சொல்வதும் கிடையாது. விளம்பரத்திலும், தாங்கள் பேசுவதிலுமே அதிக கவனம் கொள்கிறார்களே தவிர, பாடலைப் பாடியது யார், எழுதியது யார், இசையமைப்பாளர் யார் என்பதெல்லாம் அறிவிப்பதேயில்லை.
ஒரு பூவுக்கு என்று ஒரு தனி மணம் இருக்கும். ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் இசையைக் கேட்டாலே இது எம்.எஸ்.வி., இது மஹாதேவன், இது இளையராஜா, குமார் என்று சொல்லிவிட முடியும். இப்ப முடியாது. ரஹ்மான் ஒரு புது ஸ்டைல் கொண்டு வந்தார், அடுத்து நாம் பண்ணணும்னுதான் பண்றாங்க. கேட்கிறவர்கள் கூட ரஹ்மான் அந்தப் படத்தில் நன்றாகப் பண்ணியிருந்தார். எனக்கு அது மாதிரி வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். எனக்கு நல்ல பாட்டு வேண்டும், பாடலின் காட்சி இது என்று யாரும் கேட்பதில்லை. ஏன்னா இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எல்லாருமே புதியவர்கள். தனக்குத் தானே guide பண்ணிக்க வேண்டியதுதான். பக்கத்தில் ஒரு சீனியர் இருந்து, தெரிந்த இசையமைப்பாளர் கம்போஸ் செய்து, பாட்டுப் பதிவது என்பதே போச்சு.
கே: அந்தக் காலத்தில் நீங்கள் பாடிய படங்களையெல்லாம் பார்க்க உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்வீர்களா, இல்லை தனியாகத்தான் படம் பார்ப்பீர்களா? ப: முன்பெல்லாம் குடும்பத்தோடு போய்ப் பார்த்தேன். ஆனால் தற்போது தியேட்டருக்குப் போய் படம் பார்த்தே ஆறேழு வருடம் ஆகி விட்டது. ஒரு படம் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவதே அரிதாக இருக்கிறது. யாராவது மிகவும் நன்றாக இருக்கிறது என்று வலியுறுத்திச் சொன்னால் சில சமயம் பிரிவியூ பார்ப்பதுண்டு. தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் passion போய்விட்டது.
கே: நான் ஒரு பாடகன். புதிதாக நிறைய மேடைப் பாடகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் உங்கள் அறிவுரை என்ன? ப: பாட்டைப் பற்றி என்ன அறிவுரை சொல்வது? ஸ்ருதில பாடுங்க. தாளத்துல பாடுங்க. அனுபவிச்சுப் பாடுங்க. இதெல்லாமே பொதுவாகச் சொல்வதுதான். இதை மீறி என்ன அறிவுரை சொல்ல முடியும்? நல்லா பயிற்சி பண்ணுங்க. இதை ஒரு வேலையைப் போல நேசித்துச் செய்யுங்கள். வாரக் கடைசியில் ஒரு நிகழ்ச்சி என்றால், முன்னதாகவே, அர்ப்பணிப்போடு பயிற்சி செய்யுங்கள். நேரடியாக மேடைக்குப் போக முடியாது.
பாலமுரளி சாரிலிருந்து பாலசுப்ரமண்யம் வரை ஒவ்வொரு நாளும் பயிற்சிதான். நம்மகிட்ட இத்தனை மேளகர்த்தா, இத்தனை ஜன்ய ராகங்கள் என்று சொல்கிறார்கள். சஞ்சாரத்தில் வேறுவிதமாகப் பாடினால், ஒரே ராகத்திற்கு அது இன்னோரு பேராகிறது. ஹிந்துஸ்தானியில் அதற்கு வேறு பெயர் வரும். இதெல்லாம், இந்த அறிவெல்லாம் பயிற்சினால்தான் சாத்தியமாகும். நேற்று நீங்க பாடினதுக்கும் இன்று பாடுவதற்கும் 0.001% ஆவது வித்தியாசம் இருக்கணும். இல்லைன்னா உங்க பயிற்சியினால பிரயோஜனமே இல்லை. இதையெல்லாம் விட, உச்சரிப்பு சுத்தம் முக்கியத்துவம் பற்றித்தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன்.
சிலர் பாடுகின்றனர், அதில் ல, ள, ழ வித்தியாசமே கிடையாது. கொல்லு, கொள்ளு - இந்த வேறுபாடு கூடத் தெரியவில்லை! எவ்வளவு பொருள் மாறிப்போய் விடுகிறது. இது எனக்கு சில சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. நான் முதன்முதலில் வாய்ப்புக்காக எம்.எஸ். விஸ்வநாதனைச் சந்தித்தபோது, அவர் என் பாடலைக் கேட்டுவிட்டு, நீ மிகவும் நன்றாகப் பாடுகிறாய். ஆனால் உன் தமிழ் உச்சரிப்பு மட்டமாக இருக்கிறது. தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டு வந்தால் வாய்ப்புத் தருகிறேன். அதற்கு உனக்கு அவகாசமும் தருகிறேன் என்றார். முழுமையாக நான் உச்சரிப்பு சுத்ததுடன் தமிழைக் கற்றுக்கொள்ள 2 வருடம் ஆனது. சுத்தமாகத் தமிழைப் பேச, சொற்களை உச்சரிக்க இரண்டரை வருடம் ஆனது. இப்பொழுது மொழிக்கு யாருமே முக்கியத்துவம் தருவதில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூடச் சரியாக உச்சரிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. மன்னிக்க முடியாதது. பாவம் கவிஞர்கள்.
வைரமுத்து சார் ஒலிப்பதிவுக்கு வந்தால் எத்தனையோ டேக்ஸ் அவருக்காகப் பாடியிருக்கிறோம். அவருக்கு க், ச் ப் எல்லாம் கூட சுத்தமாக இருக்கணும். அதேபோல ராஜா சார், விஸ்வநாதன் சார் எல்லோருமே மொழியில், அதன் உச்சரிப்பில் மிகவும் அக்கறை கொண்டிருப்பார்கள். இப்போது பாடலாசிரியர்கள் இதுபோன்று ஏதாவது சொல்கின்றனர் என்பதால் ஒலிப்பதிவுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.
டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, வாணி ஜெயராம், ஜானகி, ஏ.எல். ராகவன், ஜிக்கி, லீலா, ஏம்.எம்.ராஜா என்று யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். டி.எம். சௌந்திரராஜன் தாய்மொழி சௌராஷ்டிரம், சுசீலா தெலுங்கு, சித்ரா மலையாளம், பாலு தெலுங்கு. எங்கள் உச்சரிப்பை யாராவது குறை சொல்லமுடியுமா? மொழியால்தான் இசை கலந்து உணர்வுகளாக, பாவத்துடன் வெளிப்படுகிறது. அதில் "உன்னைக் காதலிக்கிறேன்" என்பதை "ஒண்ண காதளிக்கிரேன்" என்று சொன்னால் எப்படி? அடச்சீ போடா என்று கன்னத்தில் அடிக்கிற மாதிரி இல்லையா?
உச்சரிப்பும் பெரிய வித்வான்களும் ஸ்ருதி, தாளம் உட்பட எல்லாம் பெரிய வித்வான்களிடம் போய் கற்றுக்கொள்ளலாம். ஆனால் உச்சரிப்பு நீங்களாகவே தான் சரி செஞ்சுக்கணும். இது கர்நாடிக் பாடுறவங்க கிட்டயும் இருக்கு. துண்டுதுண்டா பண்ணி பாட்டுக்கே அர்த்தம் இல்லாம பாடறாங்க. பெரியவங்க பத்தி தப்பா ஆயிடுமேன்னு நான் எதுவும் பேசுவதில்லை. அந்தக் காலத்திலெல்லாம் பக்தி ஒண்ணுதான். அதுக்காகதான் பாடினாங்க. வேற ஒண்ணுமே கிடையாது. பக்தி வரும் போது வார்த்தை புரியலேன்னா அப்புறம் அது என்ன பக்தி. எந்தரோ மகானுபாவுலு...ன்னு தியாகையர் பாடியிருக்கிறார்னா, உலகத்துலயே எத்தனையோ மகா மேதைகள் இருக்காங்க. கடவுளுக்கு அதை அப்படியே அர்ப்பணம் பண்ணினா அதுதான் வரும். அதையே அர்ப்பணம் பண்ணிடுவோம்ங்குறார்.
நிறைய வேதங்கள், புராணங்கள் படித்தவர்கள், சங்கீதத்தில் சாதனை செய்த சாம்ராட்களை விட எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு சிறு துளி, இந்த இசைக் கடலில் அப்படின்னு தியாகையர் சொல்லியிருக்கார். கடவுள் கேக்குறாரோ இல்லையோன்னு அந்த உணர்வை, அந்த பக்தியை, அந்த பாவத்தை, அந்தப் பணிவைப் பாடலில் கொண்டு வராமல், என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது என்ற தொனியில் பாடினால் அது வெறும் ஆரவாரம் தானே!
எந்தரோ மகானுபாவுலுவை எந்தரோஓஓஓஓ..... மகாஆஆஆனு... பாஆ......வூ...........லூஊஊஊஊ. - அப்படின்னு பாவுலுவை ஏன் இப்படி துண்டாக்கி இழுத்துப் பாட வேண்டும்? இதுதான் சம்பிரதாயம் என்றால் அந்தச் சம்பிரதாயம் வேண்டாமே! நாம் இதைக் கேட்டுப் பாராட்டுகிறோம். பாடியவர்கள் எல்லாம் மகா மேதைகள். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஏன் இப்படிப் பாட வேண்டும்? உச்சரிப்பு சரியில்லாத, பாவம் இல்லாத எந்த இசையும் என்னைத் தொடுவதில்லை. It should touch your heart. இதனால்தான் நிறைய பேருக்கு கிளாஸிக்கல் மியூசிக் என்றாலே பயம் வந்து விட்டது.
நம் வித்வத்தைக் காட்டுகிற இடத்தில் காட்டலாம். ஸ்வர விந்யாசம் பண்ணும்போதோ, ஆலாபனை பண்ணும்போதோ நம் திறனைக் காட்டலாம். நாம் இசையைக் கடவுளுக்குச் சமரப்பணம் செய்கிறோம். இப்படி பக்தி, பாவம் இல்லாமல் வெறுமனே பாடினால் கடவுள் எங்கே கேட்பார்? நான் குளத்தில் இல்லை. சேற்றில் இல்லை. எங்கெல்லாம் பக்தியுடன் நீங்கள் பாடத் துவங்குறீர்களோ அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கே: உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று எதைச் சொல்வீர்கள்? ப: பாடகனாக ஆனதுதான். ஒரு பின்னணிப் பாடகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. எஞ்சினியர் ஆவதுதான் என் கனவு. ஆனால் சிலர் எனக்குள் விதைத்த விதைதான் பாடகன். ஒருமுறை ஜானகி அம்மா என் குரலைக் கேட்டுவிட்டு சினிமாவுக்கு முயற்சி செய்யச் சொன்னார். அப்போதுகூட எனக்கு ஒண்ணுமே தெரியாது. ச, ப, ச கூடத் தெரியாது, எனக்கு எதுக்கு சினிமா என்றேன். எனக்கும் தெரியாதுய்யா, நான் பாடலையா என்றாங்க அவங்க. அவர்கள் சும்மா ஜோக்கிற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன்.
நீங்க சிங்கார வேலனேன்னெல்லாம் பாடியிருக்கீங்க. என்னால் எப்படி முடியும்னு சொன்னேன். இல்ல பாலு, நான் பயிற்சி பண்ணி யார்கிட்டயும் போய்ப் பாடினது கிடையாது. Some people are meant for something. நீங்க இதை நழுவ விடாதீங்கன்னு சொன்னாங்க. அதனாலதான் முயற்சி பண்ணினேன். அப்போது எனக்கு 18 வயது இருக்கும், யாருமே எனக்கு வாய்ப்புத் தரவில்லை. நிறைய இசையமைப்பாளர்களைச் சந்தித்தேன். அவர்கள், நீ நல்லாப் பாடறே, குரல் பக்குவப்படணும்னு சொன்னாங்க. இரண்டு வருஷம் முயற்சி செய்துவிட்டு, அப்பா கஷ்டப்பட்டு பணம் அனுப்பிட்டிருக்காரு. நல்லபடியா படிச்சா போதும்னு நினைச்சேன். அப்புறம் கோதண்டபாணி சார்தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வாங்கித் தந்து, என்னை எல்லோரும் அறியும்படிச் செய்தார். அவர் இல்லை என்றால் பாலசுப்ரமணியம் இல்லை.
இரண்டாவது, ஒரு பாடகர் ஆனப்புறமாவது ஒரு குருகிட்ட போய் சங்கீதம் கத்துக்கிட்டு இருக்கலாம். முடியல. சிலநாள் தினமும் 13, 14 பாட்டுக்கூடப் பதிவாகும். அவ்வளவு பிஸி. என்னுடைய குடும்ப வாழ்க்கையைக் கவனிக்க முடியாத அளவுக்கு பிஸி. குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது.
ஒரு பாட்டு கொடுத்தால் கஷ்டப்பட்டு உழைப்பேன். முடியாத பாட்டுக்கள் எத்தனையோ. நான் ரெகார்டிங் தியேட்டருக்குப் போய், எனக்கு இது தெரியாது, என்னால முடியாது, நான் மாட்டேன்னு சொல்லியிருக்கேன்.
கே: உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் யார்? ப: முகமது ரஃபி, ஜானகி அம்மா.
கே: இலங்கைத் தமிழர்கள் படும் துயரங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ப: அவர்கள் படும் கஷ்டங்களைக் கேட்கும்போதே வேதனையாக இருக்கிறது. அப்பாவிகள் ஏன் இதில் துன்பப்பட வேண்டும். எல்லாம் அரசியல்தான் காரணம். இரண்டு குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்ளலாம். ஆனால் இரண்டு நாடுகள்? அந்தக் காலத்தில் சண்டை என்றால் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி இரண்டு படைகளும் மோதிக் கொள்ளுவார்கள். வெல்பவர்களுக்கு ராஜ்யம் சொந்தம். இப்போது அப்படியா நடந்தது? பல சாதாரண மக்களுக்கு ஏன் சண்டை நடக்கிறது என்றுகூடத் தெரியாது. எங்களுக்குச் சாப்பாடு கொடுங்கள், தண்ணீர் கொடுங்கள், குழந்தைக்குப் பால் கொடுங்கள் என்று கேட்கும் அவர்களுக்கு எத்தனை கஷ்டம். எங்கேயோ பாதுகாப்பான குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு, மக்களின் கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்குக் கீழே உள்ளவர்களை போருக்கு அனுப்புகிறார்கள் சிலர். போரை மக்கள் மீது திணிக்கிறார்கள்.
மொழிப் பிரச்சனை, இனப் பிரச்சனை எல்லாம் எதற்கு? நாம் எல்லோரும் ஒரே மனித இனம்தான். ஆண், பெண்ணிலிருந்துதான் இத்தனை பேர் வந்திருக்கிறோம். நிறம், மொழி, இனம் என்று வேறுபடுகிறோம். ஆனால் உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதானே, உலகில் எங்கிருந்தாலும். அப்புறம் ஏன் இந்த வேறுபாடுகள், பிரச்சனைகள், சண்டைகள், போர்கள், மரணங்கள். ஈழச் சகோதரர் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு சோகக் கதை இருக்கிறது. மனிதத்தன்மை மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இது வேதனையான விஷயம்.
"நான் எல்லா தென்றல் வாசகர்களுக்கும் நிம்மதியும் ஆரோக்கியமும் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்" என்று தனக்கேயுரிய ஆழமான அன்புநிறைந்த குரலில் சொல்லி முடித்தார் பாடும் நிலா பாலு. நாமும் நன்றி கூறி விடைபெற்றோம் |