Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவிஞர் பூவை. செங்குட்டுவன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஏப்ரல் 2010||(1 Comment)
Share:
'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற பாடலை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு ரசிக்காதவர் உண்டோ! இதையும் இன்னும் 6000க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் எழுதியவர் பூவை செங்குட்டுவன். இளவயதில் பகுத்தறிவாளராக இருந்தபோது பிள்ளையார் சிலையைத் தூக்கிக் குளத்தில் போட்ட இவரே பிற்காலத்தில் 'யாரை வணங்கிட வேண்டும், பிள்ளையாரை வணங்கிட வேண்டும்' என்று பாடல் எழுதினார். இவர் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இலக்கியவாதி. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். 'கலைமாமணி', 'கலைச்செல்வம்', 'கவிமன்னர்', 'கண்ணதாசன் விருது' உட்படப் பல விருதுகள் பெற்றவர். அமைதியான, எளிய வாழ்க்கை நடத்தி வருபவர். ஒரு மாலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம், அதிலிருந்து....

கே: கீழப்பூங்குடி முருகவேல் காந்தி, பூவை செங்குட்டுவன் ஆனது எப்படி?

ப: கீழப்பூங்குடி எனது சொந்த ஊர். ராமையா அம்பலம்-லட்சுமி அம்மாள் எனது பெற்றோர்கள். நான் ஆறாவது குழந்தை. ஊரிலேயே மிகவும் செல்வாக்கான, வசதியான குடும்பம் எங்களுடையது. சிறிது காலம் ரங்கூனில் இருந்தோம். எனது ஆரம்பக்கல்வி அங்குதான். பின்னர் சிவகங்கையில் படித்தேன். சிறுவயதிலேயே நாடகம், சினிமா ஆர்வம் இருந்தது. எங்கள் குடும்பத்தினர் ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து நடத்தினார்கள். அங்கு சென்று அடிக்கடி நண்பர்களோடு படம் பார்ப்பேன். படம் ஆரம்பித்ததும் பெயர்கள் வரிசையாக வரும். என்னுடைய பெயரும் அவ்வாறு வர வேண்டும் என்ற ஆசை எனக்கு அப்போது இருந்தது. அந்த ஆசைதான் பூவை. செங்குட்டுவன் உருவாகக் காரணம். எனக்குப் பெற்றோர் வைத்த பெயர் முருகவேல் காந்தி. பின்னர் நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் செங்குட்டுவன்.

சிறுவயதில் வாசக சாலையில் நான் அண்ணா திராவிட நாடு இதழில் எழுதியிருந்த 'கல் சுமந்த கசடர்' நாடகத்தைப் படித்தேன். அது என்னைக் கவர்ந்தது. பாரதி, பாரதிதாசன் பாடல்களையும் படிக்கப் படிக்க தமிழார்வம் அதிகமானது. கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. பின்னர் ஏற்பட்ட திராவிட இயக்கத் தொடர்பு அந்த ஆவலை வளர்த்தது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். பல ஊர்களுக்கும் சென்று நிறைய நாடகங்கள் நடத்தினேன். இப்படி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்குத் திருமணமானது. சொந்த மாமா பெண்தான் மணமகள். ஆனால் எனக்கு இருந்த திரைப்படத் துறை ஆர்வத்தால் மணமான மறுவருடமே சென்னைக்கு வந்து விட்டேன்.

கே: சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது?

ப: சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில் உடன் இருந்த நண்பர் ஒருவர், நாடகத்திற்குப் பாடல் எழுத ஒருவர் தேவை என்று சொல்லி என்னை ஒருவரிடம் அழைத்துச் சென்றார். எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. குறைந்தது ஒரு நூறு ரூபாயாவது கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் எல்லோரும் இருந்தோம். நானும் போய் பாடல் எழுதி முடித்தேன். மொத்தம் மூன்று பாடல்கள். பாடலை எழுதி முடித்ததும், அழைத்துச் சென்ற நண்பர் ஒரு ரூபாய் நாணயத்தை என் பாக்கெட்டில் வைத்தார். 'என்னங்க இது, பஸ்ஸூக்கா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர், 'பஸ்ஸுக்கு இல்லைங்க. பாட்டுக்குதான்' என்றார். எனக்கு ஒரே அதிர்ச்சி. நண்பர் என்பதால் பதில் பேசவும் முடியவில்லை. அந்தக் காசை வைத்துக் கொண்டு மற்ற நண்பர்களுக்கு என்னால் டீதான் வாங்கிக் கொடுக்க முடிந்தது. கிட்டத்தட்ட பதின்மூன்று வருட காலம் இப்படி மிகவும் கஷ்டப்பட்டேன்.

பகுத்தறிவு இயக்கத்தினர், "திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றால் தினசரி பல் துலக்குவானேன்" என்று சுவர்களில் பாடலைக் கேலி செய்து விளம்பரம் செய்திருந்தனர். ஒரு திரைப்படத்தில் கூட அந்தக் கருத்து நகைச்சுவைக் காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது.
ஒருமுறை குன்னக்குடி என்னை மிகவும் வற்புறுத்தி பக்திப் பாடல் ஒன்றை எழுதச் சொன்னார். நான் மிகவும் தயங்கினேன். ஏனென்றால் நான் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன். அந்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவனாக அப்போது இருந்தேன். ஆகவே பக்திப் பாடலை எப்படி எழுதுவது என்று மிகவும் தயங்கினேன். ஆனாலும் குன்னக்குடியின் வற்புறுத்தலால் ஒரு பாடலை எழுதினேன். அதுதான் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்..." என்ற பாடல். தொடர்ந்து "ஆடுகின்றானடி தில்லையிலே... அதைப் பாட வந்தேன் அவன் எல்லையிலே" என்ற பாடலையும் எழுதினேன். இரண்டையும் பாடியது சூலமங்கலம் சகோதரிகள். இசை குன்னக்குடி. சீக்கிரத்திலேயே இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமாகி, சூலமங்கலம் சகோதரிகள் எங்கு கச்சேரிக்குச் சென்றாலும் இந்தப் பாடல்களையே முதலில் பாடும் நிலை வந்தது.

கே: திரைப்படத்துக்கு முதலில் எப்போது பாடல் எழுதினீர்கள்?

ப: ஒருசமயம் பிலிம் சேம்பரில் ஒரு விழா நடந்தது. அதில் முன் வரிசையில் கண்ணதாசன், ஏ.பி.நாகராஜன், ஏ.எல்.சீனிவாசன் எல்லோரும் அமர்ந்திருந்தனர். இறைவணக்கப் பாடலைச் சூலமங்கலம் சகோதரிகள் பாடினர். அந்தப் பாட்டு 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற எனது பாட்டு. அதைக் கேட்ட கண்ணதாசன் ஏ.பி.நாகராஜனிடம், "ஏ.பி.என்., நீங்கள் என்னிடம் கந்தன் கருணை படத்தில் முருகனைப் புகழ்ந்து வள்ளியும், தெய்வானையும் பாடுவது போன்று ஒரு சிச்சுவேஷன் சொன்னீர்களே. அதற்கு இந்தப் பாடல் மிகப் பொருத்தமாக இருக்கும். யார் எழுதியது என்று கேட்டு வாங்கி இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று சொன்னார். அந்தப் பாடலை ஏ.பி.என். 'கந்தன் கருணை' படத்தில் பயன்படுத்திக் கொண்டார். அதுதான் எனது முதல் திரைப்பட வாய்ப்பு. தமிழ்த் திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த ஒரு மாபெரும் கவிஞனான கண்ணதாசனின் மூலம் எனது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது.

அதில் ஒரு சிறப்பும் உண்டு. பாடல் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் நான் ஏ.பி.நாகராஜனைச் சந்தித்தேன். அவர், "செங்குட்டுவன், பாடலில் ஓரிடத்தில் 'சென்னையிலே கந்த கோட்டமுண்டு' என்ற வரி வருகிறது. ஆனால் புராணப் படமான இதில் 'சென்னை' என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. கவிஞர் அதை 'சிறப்புடனே கந்த கோட்டமுண்டு' என்று மாற்றித் தந்திருக்கிறார். அதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாமா அல்லது வேறு வார்த்தைகள் ஏதேனும் நீங்கள் தருகிறீர்களா?" என்று கேட்டார். நான். "வேண்டாம், கவிஞர், சிறப்புடனே என்ற வார்த்தையைச் சேர்த்து பாடலுக்குச் சிறப்புச் செய்திருக்கிறார். இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும். அது அப்படியே இருக்கட்டும்" என்று சொன்னேன். அதன்படியே அந்தப் பாடல் பதிவானது. பாடலுக்கு இசை : கே.வி. மகாதேவன். பாடியது சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் சுசீலா. படத்தில் குன்னக்குடி வைத்யநாதன் எவ்வாறு மெட்டமைத்திருந்தாரோ அதே மெட்டையே கே.வி.எம் பயன்படுத்தி இருந்தார். அவர் ஒரு பெரிய இசைமேதை. நினைத்திருந்தால் வேறு மெட்டு அமைத்திருக்கலாம். ஆனாலும் ஏற்கனவே பிரபலமான அந்தப் பாடலை மேலும் பிரபலப்படுத்துவது போலவும், ஏ.பி.என். கேட்டுக் கொண்டதனாலும் அதே மெட்டையே பயன்படுத்தினார். அடுத்து ஏ.பி.என். 'வா ராஜா வா' படம் எடுத்தபோது குன்னக்குடியே முழுக்க முழுக்க அதற்கு இசையமைத்தார். தொடர்ந்து எங்கள் இருவருக்கும் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

நான் கதை-வசனம் எழுத வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன், ஆனால் கவிஞனாக ஆனேன்.

கே: தொடர்ந்து பக்திப் பாடல்கள் தான் எழுதினீர்களா?

ப: ஆம். எனக்கு அப்படித்தான் அமைந்தது. ஒருமுறை சரவணா பிலிம்ஸில் கண்ணதாசனின் பாடல் ஒன்றுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார். ஒரு வேலையாக அங்கு சென்ற நான் யதேச்சையாக அவரைச் சந்தித்தேன். நான் அப்போது எங்கு வெளியில் சென்றாலும் கையோடு எனது பாடல்கள் கொண்ட கோப்பையும் கொண்டு செல்வேன். அதை வாங்கிப் பார்த்தார் எம்.எஸ்.வி. முதல் பக்கத்தில் 'திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்' என்ற பாடலை எழுதியிருந்தேன். அந்தப் பாடலை என்னை வாசிக்கச் சொன்னார். பின் டியூன் போட்டுப் பார்த்தார். உடனே பக்கத்து அறையிலிருந்த இயக்குநர் கே. சங்கரையும், தயாரிப்பாளர் வேலுமணியையும் வரச் சொல்லி, பாடலைப் பாடிக் காட்டினார். "நல்லாருக்கு இல்லையா, நாளைக்கே ரெகார்டிங் வச்சுக்கலாமா?" என்று கேட்டார் அவர்களிடம். அவர்களும் "நன்றாக இருக்கிறது. தாராளமாக வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டனர். எனக்கு எல்லாம் கனவில் நடப்பது போல் இருந்தது. ஒரே ஆச்சரியம். காரணம், எம்.எஸ்.வி அவர்களை நான் யதேச்சையாகத்தான் சந்தித்தேன். சங்கரையோ, வேலுமணியையோ அதற்கு முன்னால் எனக்குத் தெரியவே தெரியாது. இப்படி எதிர்பாராத அந்தச் சந்திப்பு ரெகார்டிங் வரை போனது என்னைப் பொருத்தவரை மிகவும் ஆச்சரியமான ஒன்று.

மூன்றாவதாக நான் எழுதிய பாடலும் பக்திப் பாடல்தான். அது ராமச்சந்திரன் என்பவர் இசையில் 'கற்பூரம்' என்ற படத்தில் இடம் பெற்றது. 'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் தெரியுதடி' என்ற அந்தப் பாடலைப் பாடியதும் சூலமங்கலம்-சுசீலா தான். எனது முதல் மற்றும் இரண்டாவது பாடலைப் பாடியதும் அவர்கள்தான். இதில் சிறப்பான விஷயம் மூன்றுமே முருகன் மீதான பாடல்கள். இதெல்லாம் பார்க்கும்போது முருகனே எனக்கு, என் வாழ்க்கை வளத்திற்கு வழிகாட்டியது போல்தான் தோன்றியது.

கே: பகுத்தறிவு இயக்கத்தினர் அதை எப்படி எதிர்கொண்டார்கள்?

ப: பகுத்தறிவு இயக்கத்தில் நான் இருந்தேன். இப்போதும் எனக்குப் பகுத்தறிவு நம்பிக்கைகள் உண்டு. ஆனால் நமது உள்ளே ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை வழிநடத்துகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இல்லாவிட்டால் ஒரு சாதாரண பக்தனாகக் கூட இல்லாத என்னால் எப்படி முருகன் மீதானபாடல்களை - அதுவும் எல்லோரும் பாராட்டக்கூடிய பாடல்களை எழுதியிருக்க முடியும்? அந்தச் சக்தியினால் தானே அது சாத்தியமாகியிருக்கும்? இன்னொரு முக்கியமான விஷயம் திருப்பரங்குன்றம் முருகன்தான் எங்கள் குலதெய்வம். சிறுவயதில் அந்தக் கோயிலுக்குப் போயிருக்கிறேன். மலையைச் சுற்றி வரும்போது ஓரிடத்தில் 'முருகா' என்று கத்தினால் அது அப்படியே எதிரொலிக்கும். அதனால்தான் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்' என எழுதினேனோ, என்னவோ?

ஆனால் அந்தப் பாடல் வெளிவந்தபோது நிறையப் பகுத்தறிவுவாதிகள் கிண்டல் செய்தனர். முருகன் என்ன ராட்சஸனா, திருத்தணி மலைக்குக் கேட்கும் அளவுக்கு அவன் குரல் அவ்வளவு சப்தமாக இருக்குமா என்றெல்லாம் கேலி பேசினர். ஆனால் இன்றைக்கு நாம் இங்கே சிரித்தால் எங்கேயோ கேட்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அதுபோல திருப்புகழைப் பாடப்பாட பாடலுக்கும் எதிர்ப்பு. பகுத்தறிவு இயக்கத்தினர், "திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றால் தினசரி பல் துலக்குவானேன்" என்று சுவர்களில் பெரிதாக அந்தப் பாடலைக் கேலி செய்து விளம்பரம் செய்திருந்தனர். ஒரு திரைப்படத்தில் கூட அந்தக் கருத்து நகைச்சுவைக் காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது. திருப்புகழ் என்பது மகா மந்திரம். முருக பக்தர் அருணகிரியால் பாடப் பெற்றது. அதைப் பாடினால் நமக்கு நன்மை கிடைக்கும், நல்லது நடக்கும் என்பதுதான் பாடலின் கருத்து. ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை.

நமக்குளேயே இறைவன் இருக்கிறான், சக்தியாக இருந்து நம்மை வழிநடத்துகிறான் என்பது உண்மை. இந்த நம்பிக்கைகள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்குள் வேரோடிப் போய் இருக்கிறது. அதை எந்தப் பகுத்தறிவாலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் மாற்றி விட முடியாது. இதெல்லாம் நம் பண்பாட்டு வழியாக, கலாசாரமாக வழிவழியாக வந்து கொண்டிருப்பவை. அவ்வளவு எளிதில் யாராலும் தடை செய்துவிட முடியாது. அதே சமயம் பகுத்தறிவு என்பதும் தேவைதான். ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. எனக்குப் பகுத்தறிவு இயக்கத்திலும் சரி, ஆன்மீக அமைப்புகளிலும் சரி, நண்பர்கள் இருக்கிறார்கள். நான் யார்மீதும், எதையும் திணிப்பது கிடையாது. அவரவர் கருத்து, கொள்கை அவரவருக்கு.
கே: வேறு என்னென்ன பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்?

ப: தத்துவம், காதல், மெல்லிசை என்று நிறையப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். அலாதீன், லயன் கிங் போன்ற ஹாலிவுட்டின் வால்ட் டிஸ்னி மொழிமாற்றப் படங்களுக்குக் கூட தமிழில் பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதற்கு எனக்கு வால்ட் டிஸ்னியில் இருந்து பாராட்டுக்கள் கூட வந்திருக்கிறது. மெல்லிசை மற்றும் பக்திப் பாடல்கள் சுமார் 6000த்திற்கு மேல் எழுதியிருக்கிறேன். முருகன், விநாயகர் மீது நிறையப் பாடல்களை எழுதியிருக்கிறேன். மாயவநாதன் ஒரு முருக பக்தர். எனது முருகன் மீதான பாடல்களை மனமுவந்து பாராட்டியிருக்கிறார். முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே, முத்தமிழைப் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் என்று நிறைய பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறேன். சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம், சுசீலா, எஸ்.பி.பி, சிவ சிதம்பரம், மகராஜன், டி.எம்.எஸ். என்று நிறைய பேர் எனது பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்குக் கூட பாடல் எழுதியிருக்கிறேன். அதை என்னால் மறக்க முடியாது.

கே: அது எந்தப் பாடல்?

குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறட்பாவை எடுத்து அதை இசைப்பாடலாக எழுதியிருக்கிறேன். ஒரு சிறு குழந்தை கேட்டாலும் திருக்குறளில் வள்ளுவர் இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிய நடையில் அதை எழுதியிருக்கிறேன்.
ப: 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை; அது ஊரறிந்த உண்மை...' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காக எழுதியது. புதிய பூமி என்ற படத்தில் இடம் பெற்றது. அந்தப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்ததுகூடச் சுவையான அனுபவம்தான். அந்தப் படத்தில் கண்ணதாசன் ஏற்கனவே மூன்று பாடல்கள் எழுதியிருந்தார். தயாரிப்பாளர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் எனக்கும் பாடல் எழுத ஒரு வாய்ப்பு வந்தது. நானும் எழுதி விட்டேன். ஆனால் அந்தப் பாடலுக்கு எம்.ஜி.ஆரின் ஒப்புதல் பெற வேண்டும். அது அவ்வளவு சுலபமானது இல்லை. நான் புதிய கவிஞனும் கூட என்பதால் அதை அவரிடம் சொல்லி ஒப்புதல் வாங்குவதற்கு எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தனர். நான் எழுதியிருந்த பல்லவியைப் பார்த்த ஃபைனான்ஸியர் கனகசபைச் செட்டியார், அதை எடுத்துக் கொண்டுபோய் நேரடியாக எம்.ஜி.ஆரிடம் காண்பித்தார். அதைப் படித்துப் பார்த்தவுடன் அது வாலி எழுதியதோ என்று நினைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். செட்டியார் என்னைப் பற்றிச் சொல்லவும், எம்.ஜி.ஆர். சரி என்று சொல்லிவிட்டார். பின் எம்.எஸ்.வி. இசையில் அது படமாக்கப்பட்டது. அந்தப் பாடல் எனக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது.

கே: திரையுலகில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்?

ப: ஒருமுறை பெங்களூரைத் தாண்டி உள்ள ஒரு மலைப்பகுதிக்கு படப்பிடிப்புக்காகச் சென்றிருந்தோம். அங்கு குளிர் அதிகம் என்பதால் நான் அடிவாரத்திலேயே தங்கிவிட்டேன். நானும் இன்னொரு நண்பரும் மாலை நேரத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றோம். ஒரே ஒரு டீக்கடைதான் அங்கே இருந்தது. அந்தக் கடைக்காரர் கர்நாடகாவிலேயே பிறந்து வளர்ந்தவர். என்னைப் பார்த்ததும் யார், என்ன என்று விசாரித்தார். நான் சினிமாக்காரன், பாடலாசிரியன், படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன் என்று சொன்னேன். உங்களுக்கு 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்' பாடலை எழுதியவரைத் தெரியுமா என்று கேட்டார். எனக்கு ஒரே ஆச்சரியம். அதேசமயம் அது நான்தான் என்று சொன்னால் நம்புவாரா என்று சந்தேகம் வேறு. இருந்தாலும் சொன்னேன். அவருக்கு ஒரே சந்தோஷம். என்னை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டவர், அவரது வீட்டிற்குக் கூட்டிச் சென்று மனைவி, உறவினர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

கே: இன்றைய பாடல்கள் மற்றும் கவிஞர்கள் குறித்து...

ப: அந்தக் காலச் சூழ்நிலை என்பது வேறு, தற்போதைய சூழ்நிலை என்பது வேறு. அக்காலத்தில் எங்களது பாடல்களை இசையமைப்பாளர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதும் உண்டு. அவர்களது இசைக்கேற்ப நாங்கள் பாடல் எழுதுவதும் உண்டு. இசையை கேசட்டில் பதிவு செய்து கொண்டு, அதை வீட்டிற்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துக் கோடிட்ட இடங்களை நிரப்புவதெல்லாம் எங்களைப் போன்ற அந்தக் காலப் பாடலாசிரியர்களிடம் அறவே கிடையாது. இசையமைப்பாளர் தத்தகாரம் சொன்னால் போதும். பாடல், பல்லவி, சரணம் என்று எல்லாம் உடனே அங்கேயே முடிந்து விடும். மேலும் அன்று பாடல்கள் எழுதும் போது, ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு, இவையெல்லாம் காலம் கடந்தும் நிற்க வேண்டும் என்ற அக்கறையோடு எழுதுவோம். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. உடனடித் தேவையை நிறைவு செய்தால் போதும் என்ற நிலை இருக்கிறது.

இப்போது வரும் பாடல்கள் எப்படி இருக்கின்றன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. என்னையும் சமயங்களில் இது போன்ற பாடல்களை எழுத அழைப்பார்கள். ஆனால் நான் மறுத்து விடுவேன். என்னால் இந்தக் காலத்திற்கேற்றவாறு எழுத முடியும். ஆனால் நான் எழுத மாட்டேன். ஏனென்றால் முருகனைப் புகழ்ந்து எழுதிய கைகளால் அர்த்தமில்லாத பாடல்களை எழுதுவதற்கு என் மனம் ஒப்பவில்லை. அதற்காக இன்றைய கவிஞர்கள் திறமை குறைவானவர்கள் என்பது பொருளல்ல. திறமை இல்லாமல் இந்தத் துறையில் நிலைக்க முடியாது. இன்றைய கவிஞர்கள் தங்கள் கவித்துவத்தை வெளிப்படுத்தும் அளவுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

கே: உங்கள் நினைவில் நிற்கும் வேறு விஷயங்கள் என்ன?

ப: இசைஞானி இளையராஜா திரைப்படத்துக்கு இசையமைப்பதற்கு முன்னால் ஒரு பாடலுக்கு இசையமைத்தார் என்றால் அது நான் எழுதிய பாடலுக்குத்தான். அது நாடகத்துக்காக எழுதியது. நாங்கள் அப்போது நண்பர்கள். அதுபோல கங்கை அமரன் இசையமைத்த முதல் படத்திற்கும் (மலர்களிலே அவள் மல்லிகை) பாடல் எழுதியது நான்தான். டி.கே. கலா முதலில் பாடிய 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்ற பாடலும் நான் எழுதியதுதான்.

கே: உங்களது குறள் இசைப் பாடல்கள் குறித்து...

ப: திருக்குறளை யாரும் இதுவரை இசைப்பாடலாக வெளியிட்டத்தில்லை. ஒருசிலர் சில ராகங்களின் அடிப்படையில் சில குறள்களுக்கு இசைக் கோர்ப்பு செய்துள்ளனர். ஆனால் குறளே இசைப்பாடல் வடிவத்தில் வருவது இதுதான் முதல்முறை. இதை உருவாக்குவதற்காக, கிட்டத்தட்ட ஏழுமாதம் வேறு எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல் எல்லா திருக்குறள் உரைகளையும் வாங்கிப் படித்தேன். குறளுக்கு மணக்குடவர், பரிமேலழகர் முதல் கி.வா.ஜ., நாமக்கல் கவிஞர், நாவலர், டாக்டர் மு.வ., கலைஞர் என்று 400க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கின்றனர். அதில் சுருக்கமாகவும் சிறப்பாகவும் இருப்பது டாக்டர் மு.வ.வின் உரைதான். நான் குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறட்பாவை எடுத்து அதை இசைப்பாடலாக எழுதினேன். ஒரு சிறு குழந்தை கேட்டாலும் திருக்குறளில் வள்ளுவர் இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிய நடையில் அதை எழுதியிருக்கிறேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், சீர்காழி சிவசிதம்பரம், டி.எல். மகராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சன்மானம் இல்லாமல் பாடியுள்ளனர். 133 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஏப்ரல் 25ம் தேதி நாரத கான சபாவில் இந்தக் குறள் இசைத்தகடு வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமை வகிக்கிறார். பாண்டிச்சேரி அமைச்சர் நாராயணசாமி, இயக்குநர் விசு, வி.சி. குகநாதன் உட்படப் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

இளைஞர் போல சுறுசுறுப்பாக இன்றளவும் செயல்பட்டு வரும் திரு பூவை. செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

***


கைகளைக் கண்ணில் ஒத்திக்கொண்டார் கொத்தமங்கலம் சுப்பு

அப்போது என்னைப் போலவே குன்னக்குடி வைத்தியநாதனும் திரைப்படத்துறையில் கால்பதிக்க முயன்று கொண்டிருந்தார். யதேச்சையாக இருவரும் ஒருமுறை சந்தித்தோம். நாம் இருவரும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்துவோம். அதன் மூலம் திரைப்படத் துறையில் நுழைய முயற்சி செய்வோம் என்று அவர் சொன்னார். என்னைக் கதை-வசனம், பாடல்கள் எழுதச் சொல்லி, முழுக்க முழுக்க அவரே செலவு செய்து 'ஓவியன் மகள்' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்தான் நாடகத்திற்குத் தலைமை.

நாடகம் முடிந்து சிறப்புரையாற்றிய சுப்பு, இந்த நாடகத்திற்குப் பாடல்களை எழுதியது யார் என்று கேட்டார். ஓரத்தில் நின்று கொண்டிருந்த நான் சங்கோஜத்துடன் முன்வந்து நின்றேன். அப்படியே எனது இரு கைகளையும் பிடித்துக் கொண்டவர், கண்களில் ஒற்றிக் கொண்டார். என் வாழ்க்கையிலேயே நான் மறக்க முடியாத, நெக்குருகி மகிழ்ந்த சம்பவம் அது. கொத்தமங்கலம் சுப்பு மிகப் பெரிய மேதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நாடகம்,நடிப்பு, இயக்கம் என்று அவருக்குத் தெரியாத வேலைகளே எதுவும் இல்லை. மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவர், பலர் கூடியிருந்த சபையில் எல்லோருக்கும் முன்னால் எனக்கு அளித்த அந்த கௌரவம் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. "நான் எத்தனையோ நாடகங்களுக்குப் போயிருக்கிறேன், தலைமை தாங்கியிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு அழுத்தமான பல்லவியை, இறைவன் கட்டிய கோயில் மனிதன்தான் என்பதை மிக அற்புதமாகச் சொன்ன பாடலை இதுவரை கேட்டதில்லை. எழுதியவருக்குப் பாராட்டுகள்" என்று கூறி என்னை வாழ்த்தினார் சுப்பு.

***


யாரை வணங்கிட வேண்டும்?

ஊரில் இருந்த காலத்தில் பகுத்தறிவு நாட்டம் எனக்கு அதிகம் இருந்தது. ஊருக்கு அருகில் திருமலை என்று ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலைமேலே ஒரு சிவன் கோயில். வெளியே ஒரு பிள்ளையார் சிலை இருக்கும். மக்கள் ஏறி வந்து அவரை வணங்கி வழிபடுவார்கள். அப்போதிருந்த பகுத்தறிவின் தாக்கத்தால் நாங்கள் நண்பர்கள் சிலர் அந்தப் பிள்ளையாரைத் தூக்கி அருகில் உள்ள குளத்தில் தள்ளி விட்டு விட்டோம். அறியாமை, வயதின் துடிப்பு, பகுத்தறிவுப் பற்றுதான் இவற்றிற்குக் காரணம். ஆனால் நாங்கள்தான் அதைச் செய்தோம் என்பது ஊர்மக்களுக்குத் தெரிந்து விட்டது. நாங்கள் அந்தப் பகுதியிலே மிகவும் செல்வாக்குப் படைத்தவர் வீட்டுப் பிள்ளைகள். ஆனாலும் அவர்கள் அஞ்சவில்லை. மறுநாள் அந்தக் கிராமமே திரண்டு வந்து விட்டது. பஞ்சாயத்துக் கூடி எல்லோரும் ஒன்று சேர்ந்து கேள்வி மேல் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பெரிய பிரச்சனை ஏற்படும் நிலை. பிறகு எங்களுக்காக, ஊரிலேயே மிகவும் வசதி படைத்த எங்கள் சித்தப்பாக்கள், ஊருக்கு முதன்மையாக இருப்பவர்கள், தங்கள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டனர். நாங்கள் விளையாட்டுத்தனமாய்ச் செய்த விஷயம் வினையானது. ஆனால் அப்படி அலட்சியமாகப் பிள்ளையாரைத் தூக்கிக் குளத்தில் போட்ட நான்தான் பிற்காலத்தில் "யாரை வணங்கிட வேண்டும், பிள்ளையாரை வணங்கிட வேண்டும்" என்ற பாடலை எழுதினேன்.

***


கனவில் வந்த கட்டளை

குறள் அதிகாரங்களை நான் இசைப்பாடலாக உருவாக்கியிருக்கிறேன். ஏன் தெரியுமா? ஒருநாள் விடியற்காலை மூன்று மணி இருக்கும். ஒரு கனவு வந்தது. அதில் 12 வயதுப் பையன் ஒருவன் வந்து, 'நீதான் நிறைய மெல்லிசைப் பாடல்கள் எழுதியிருக்கிறாயே, திருக்குறள் கருத்துக்களை எளிய நடையில் எழுது' என்று என்னிடம் சொல்லி மறைந்து விட்டான். நான் திருக்குறளை முழுமையாகப் படித்தவனோ ஆய்வுகள் செய்தவனோ அல்ல. ஏதோ சில குறள்கள் தெரியும். அவ்வளவுதான். அதனால் இந்தக் கனவு ஏன் வந்தது என்று புரியவில்லை. காலை எழுந்ததும் மனைவியிடம் இந்தக் கனவைப் பற்றிச் சொன்னேன். உடனே அவர், "கனவில் வந்து சொன்னது வேறு யாருமில்லை. நம்ம முருகன்தான் உங்களை இந்த வேலையைச் செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறான். இதற்காக இனிமேல் நீங்கள் புதிதாகப் பிறந்து வந்தா செய்யப் போகிறீர்கள்? எத்தனையோ பாடல்களை எழுதியிருக்கிறீர்கள். அதுபோல இதையும் எழுதுங்கள்!" என்றாள். நானும் அதை ஏற்றுக் கொண்டேன். அப்படி உருவானதுதான் இந்தக் குறள் இசைப் பாடல்கள்.

***


சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
மேலும் படங்களுக்கு
Share: 
© Copyright 2020 Tamilonline