|
|
|
|
தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. வாசகர்களின் தன்மைக்கேற்பவும், இதழ்களின் கொள்கைகளுக்கேற்பவும் இயங்கும் அவற்றில், தீவிர இலக்கியத்திற்குச் சற்றேனும் குறையாத காத்திரமான படைப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் வெளியாகியிருக்கின்றன. அத்தகைய படைப்பூக்கம் பெற்ற எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜெயந்தன்.
ஜெயந்தன் என்ற புனைபெயர் கொண்ட பெ. கிருஷ்ணன், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜூன் 15, 1937 அன்று பிறந்தார். பெற்றோர் பெருமாள்-ராஜம்மாள். மணப்பாறை நகராட்சிப் பள்ளியில் பள்ளிப்பருவம் கழிந்தது. இண்டர்மீடியட் படிப்பை முடித்தவுடன் ஆசிரியராகச் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னர் வருவாய்த் துறை அலுவலராகப் பணியாற்றியவர், கால்நடை ஆய்வாளர் பயிற்சியை முடித்ததும் அத்துறை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
இலக்கிய ஆர்வம் தூண்ட, மணப்பாறையில் நண்பர் மணவை முஸ்தபாவுடன் இணைந்து 1956ஆம் ஆண்டில் மணவைத் தமிழ் மன்றத்தைத் துவக்கினார். சில நாடகங்களை எழுதி, இயக்கி, அவற்றில் நடிக்கவும் செய்தார்.
| சமூகத்தின் போலி வேஷங்களை, பாசாங்குகளை, நடிப்பை, துரோகத்தை மிகைப்படுத்துதல் இல்லாது பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன். | |
பணி நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு ஜெயந்தனுக்கு ஏற்பட்டது. தாம் பழகிய மனிதர்களையும், தமக்கும் சுற்றியுள்ளோர்க்கும் ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார். அவை சுபமங்களா, கணையாழி, குமுதம், விகடன் போன்ற இதழ்களில் வெளியாகி வாசக கவனத்தைப் பெற்றன. படைப்புக்கள் பலவும் வெகுஜன இதழ்களிலேயே வெளியான போதும் இதழின் போக்குக்காகப் படைப்பின் தரத்தை ஜெயந்தன் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை.
'மொட்டை', 'பிடிமானம்', 'உபகாரிகள்', 'பைத்தியம்', 'துக்கம்', 'ஊமை ரணங்கள்', 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்', 'துப்பாக்கி நாயக்கர்', 'ஞானக்கிறுக்கன்' போன்ற இவரது கதைகள் வெளியான போதே பரவலாக விவாதிக்கப் பெற்றன. இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 'சாய்வு', சாதியம் பற்றிப்பேசும் மிக முக்கியமான சிறுகதையாகும்.
"ஜெயந்தனின் 'ஒரு ஆசை தலைமுறை தாண்டுகிறது' மிகவும் அற்புதமான சிறுகதை. இதைப் படித்து விட்டு, எனது மற்ற நண்பர்களும் இதை அவசியம் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அதுபற்றிக் கடிதங்கள் மூலம் தெரிவித்தேன்" என்கிறார் கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன், தமது 'அன்னப்பறவை' எனும் விமர்சன நூலில்.
எளிய, நீரோட்டம் போன்ற நடையைக் கொண்ட ஜெயந்தனின் கதைகளில் அநாவசிய வர்ணனைகளோ, வாசகனைக் குழப்பும் உத்திகளோ, தேவையற்ற சிடுக்குகளோ இருக்காது. பாத்திரப் படைப்பு, சம்பவங்கள் மூலம் முன்வைக்கும் கேள்விகளால், வாசக மனதில் சிந்தனையையும், சமூகம் பற்றிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. இவரது எழுத்தில் தெரியும் ஒருவித அறச்சீற்றம் வாசகர் மனதிலும் அதனை உருவாக்க வல்லது. சமூகத்தின் போலி வேஷங்களை, பாசாங்குகளை, நடிப்பை, துரோகத்தை மிகைப்படுத்துதல் இல்லாது பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன். நம்முள் இருக்கும் நாமை வெளிக் கொணர்வதாகவே இவரது பெரும்பான்மையான சிறுகதைகள் அமைந்திருக்கின்றன எனின் அது மிகையில்லை. |
|
"நுட்பமாகவும், ஈவிரக்கமில்லாமலும் செயல்படும் அநீதிகளை ஜெயந்தனின் படைப்புகள் நம் முன் கோபத்துடன் மறுபரிசீலனைக்கு வைக்கிறது. இக்கோபம், இச்சமூகம் விமோசனமற்றது என்று வெறுத்து ஒதுக்கிவிடும் கோபமில்லை. மனிதன் மாறுவான், மனித இனம் மாறக்கூடும் என்ற நம்பிக்கையை உள்ளடக்கிய கோபம். இது மனித சமூகத்தின் மீது உண்மையான நேசமுள்ள ஒரு உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதனின் கோபம்" என்கிறார் அசோகமித்திரன், ஜெயந்தனின் படைப்புகள் குறித்து.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து சில ஆண்டுகள் பணியாற்றிய ஜெயந்தன், காத்திரமான சிறுகதைகளைத் தந்திருப்பதுடன் கவிதை, நாடகம், இதழியல் போன்ற பிற துறைகளிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். கணையாழியில் வெளியான இவரது 'நினைக்கப்படும்' என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. 'சிறகை விரி, வானம் உனது' என்னும் வானொலி நாடகம் அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது. 'காட்டுப்பூக்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இவரது 'பாஷை' என்னும் சிறுகதை பாலுமகேந்திராவால் தொலைக்காட்சித் குறுந்தொடராக எடுக்கப்பட்டது. பல சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
| சமரசம் செய்துகொள்ளாதவராகவும், கொள்கை வழுவாதவராகவும் வாழ்ந்த ஜெயந்தன், ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 'நித்யா' என்னும் அறிவியல் புனைகதை ஒன்றை எழுதி வந்தார். | |
'பாவப்பட்ட ஜீவன்கள்', 'இந்தச் சக்கரங்கள்', 'முறிவு' ஆகியன குறுநாவல்கள். ஜெயந்தனின் நாடகங்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்', 'பகல் உறவு', 'நாலாவது பிரயாணம்', 'இந்தச் சக்கரங்கள்', 'ஞானக் கிறுக்கன்', 'மீண்டும் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' ஆகிய இவரது சிறுகதைத் தொகுப்புகள் முக்கியமானவை. கால்நடை மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் சிலகாலம் சென்னையில் வசித்த ஜெயந்தன், 'கம்ப்யூட்டர் பார்க்' என்னும் கணிப்பொறி மையத்தை நடத்தி வந்தார். அவர் நடத்திய 'கோடு' சிற்றிதழ் தரமான பல கட்டுரைகளைத் தாங்கி வந்தது.
ஓய்வுகாலத்தைப் பிறந்த மண்ணில் கழிக்க விரும்பிய ஜெயந்தன், மணப்பாறைக்குக் குடிபெயர்ந்தார். தான் ஐம்பதாண்டுகளுக்கு முன் உருவாக்கிய மணவைத் தமிழ் மன்றத்தில் மீண்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 'சிந்தனைக் கூடல்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, இளைஞர்களுக்கு எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சியை அளித்தார். சமரசம் செய்துகொள்ளாதவராகவும், கொள்கை வழுவாதவராகவும் வாழ்ந்த ஜெயந்தன், ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 'நித்யா' என்னும் அறிவியல் புனைகதை ஒன்றை எழுதி வந்தார். அந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, பிப்ரவரி 07, 2010 அன்று காலமானார்.
வெகுஜன, தீவிர இலக்கியங்களுக்கிடையே பாலமாகத் திகழ்ந்த ஆதவன், கந்தர்வன் போன்றோர் வரிசையில் ஜெயந்தனும் மிக முக்கிய இடம் பெறுகிறார்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|