|
|
|
வாரம் தவறாமல் அழையா விருந்தாளியாக வருவது - நமக்குத் தெரிந்த ஒரு குழந்தையின் பிறந்த நாள் அழைப்பு. எதாவது ஒரு வாரம் பிறந்த நாள் விழா இல்லை என்றால் "நிம்மதி, நிம்மதி" என்று பாடி ஆடத் தோன்றுகிறது! கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், வீட்டருகில் இருப்பவர்கள், குழந்தைகளின் பள்ளி நண்பர்கள், தமிழ்ப் பள்ளித் தோழர்கள், மற்ற பயிற்சி வகுப்புத் துணைவர்கள், இந்தியாவில் நம் பெற்றோருக்குத் தெரிந்தவர்களின் பிள்ளை என்பதால் பரிச்சயம் ஆனவர்கள் என்று சுமாராக நமக்கு 50 பேரைத் தெரியும் என்றால், ஒரு வீட்டில் இரண்டு குழந்தை என்னும் கணக்கில் ஒரு வருடத்தில் 100 நாட்கள் நாம் பிறந்தநாள் விழாக்களுக்குப் போகிறோம்! இதில் நாம் முன்யோசனை இல்லாமல்(!) நண்பர்களைத் தேர்வு செய்ததால், சில சனி-ஞாயிறுகளில் 3 அல்லது 4 பிறந்தநாள் வர வாய்ப்பு அதிகம். எந்த அழைப்பை எடுப்பது, எதை விடுப்பது என்ற தர்மசங்கடம் வந்து விடும். போகாவிட்டால் என்ன காரணம் சொல்வது? நாம் ஒரு சாக்குச் சொல்ல, குழந்தைகள் உண்மையைப் போட்டு உடைத்தால் சமாளிப்பது எப்படி? போன்ற தலை வெடிக்கும் கேள்விகள் எழும். பேசாமல் இந்த வாரம் ஊரைவிட்டுக் குடும்பமாகப் போய்விடலாமா என்கிற விபரீத யோசனையும் எழும்.
| யாரையாவது கூப்பிடாமல் விட்டு, இரண்டு வாரத்தில் அவர்கள் நம்மைக் கூப்பிட்டால்? அல்லது இருவருக்கும் பொதுவான நண்பர் நம் வீட்டுப் பிறந்த நாளைப்பற்றி அவரிடம் உளறி வைத்தால்?... | |
அட, வருபவர்களுக்கே இத்தனை கஷ்டம் என்றால், ஏற்பாடு செய்பவர்கள் படும் பாட்டை என்ன சொல்வது? முதலில் எத்தனை பேரை அழைப்பது என்று பட்டியல் போட வேண்டும். யாரையாவது கூப்பிடாமல் விட்டு, இரண்டு வாரத்தில் அவர்கள் நம்மைக் கூப்பிட்டால்? அல்லது இருவருக்கும் பொதுவான நண்பர் நம் வீட்டுப் பிறந்த நாளைப்பற்றி அவரிடம் உளறி வைத்தால்! 'ஹி,ஹி' வழிசல்தான். போதாக்குறைக்கு, நாம் ஒரு பட்டியல் போட்டால், பிள்ளைகள் ரயில்வே அட்டவணை போல ஒரு நீஈஈளப் பட்டியலுடன் வந்து, இத்தனை பேரையும் அழைத்தே ஆக வேண்டும் என்று முரண்டு பிடிப்பார்கள். பின்பு, இடத்தை முடிவு செய்ய வேண்டும். வீட்டிலே வைத்து, பெரியவர்களுக்கு கடையில் வாங்கிய சப்பாத்தி, கலந்த சாதம். குழந்தைகளுக்கு பீட்ஸா, இட்லி என்று சிக்கனமாக முடிப்பதா? இல்லை, பூங்காவில் வைத்து, கைக்குழந்தைகளை வெய்யிலில் காய விடுவதா? இல்லை நிறுவனங்கள் நடத்தும் விளையாட்டு + கேக் + உணவு + பரிசு பேக்கேஜை எடுத்து ஒரு கிரெடிட் கார்டு தேயலில் கால் தேயாமல் வேலையை முடிப்பதா? இடத்தைப் பொறுத்து நம் பட்ஜெட்டில் துண்டு முதல் ரஜாய் வரை விழும். பின்பு கேக் பற்றிய பட்டிமன்றம். என்ன வடிவம், என்ன கதாபாத்திரம், என்ன தீம், என்ன நிறம் போன்ற முக்கியமான தீர்மானங்கள் எடுத்த பிறகே என்ன ருசி (flavor) என்ற சிறு முடிவு எடுக்கப்படும். மனிதக் குடலால் செறிக்க முடியாத, உடலுக்குக் கெடுதல் என்று தெரிந்த பல உணவுச் சாயங்களை நாமாகவே கேக் வழியே ஊட்டிவிடுவது ஏன் என்பதும் ஒரு நல்ல பட்டிமன்றக் கேள்விதான். வந்த குழந்தைகளுக்கு 'goody bag' என்ற தாம்பூலப் பையில் எதைப் போடுவது என்ற கேள்வி வரும்பொழுது நாம் ஏற்கனவே களைத்துப் போயிருப்போம். எதையோ அள்ளிப் போடு என்று 5 நிமிடம் மட்டும் வேலை செய்யும் பொம்மை, சாக்லேட் ஒரு பிடி என்று அள்ளிப் போட்டு வேலையை முடிப்பது வழக்கம். புத்தகம் வாங்கிக் கொடுக்கும் நல்ல எண்ணம் இருந்தால், வந்த குழந்தைகள் முகம் சுளிப்பதை நினைத்தால், "சீனாவே சரணம் சரணம்" என சொல்லத் தோன்றும். |
|
ஒரு வழியாக இத்தனையும் செய்து முடிக்கும் வரை, பிறந்த நாளே வராத பிள்ளை வரம் பெற என்ன வழி என்ற யோசனையும், ஏதோ குசேலர், கௌரவர்கள் போல் 27, 100 என்று இல்லாமல் இருக்கிறதே என்ற சமாதானமும் தமிழ் வருடப் பிறப்பும், வரி தினமும் சேர்ந்து வருவதுபோல வரும்.
| பெண்கள் ஒரு உடையை எடுத்தால், இதைப் போனமுறை நாம் போட்டதைப் பார்த்தவர்கள் யாராவது இந்தப் பிறந்த நாளுக்கு வருவார்களா என்று தீவிர யோசனை செய்து உடையைத் தேர்வு செய்ய வேண்டும். | |
பிறந்த நாள் காணும் குழந்தைக்கு பரிசுப்பொருள் வாங்கும் கதையைச் சொல்லாமல் எப்படி விடுவது? நமக்கு நன்கு தெரிந்தவர்கள் என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் 347 பொம்மைகள் என்னென்ன என்று அறிந்து, அந்தக் குழந்தை விரும்பும் தொலைக்காட்சிக் கதாபாத்திரம் யார் என்று உணர்ந்து 'உபயோகமாக' பரிசு வாங்கலாம். இல்லை என்றால், பொம்மைக் கடையில் மேலும் கீழும் "இதுவா?", "இதுவா?" என்று எடுத்து-வைத்து, எடுத்து-வைத்து, தள்ளுபடியில் இருப்பதை, போதும் போ என்று எடுத்து, அதற்கு நம் மனைவி ஆட்சேபம் தெரிவித்து, அதற்குள் தமக்கு இந்த விளையாட்டுப் பொருள் வேண்டும் என்று நம் குழந்தைகள் அழ ஆரம்பித்து, பொது இடத்தில அவர்களைத் திட்ட முடியாமல், தண்டம் தண்டம் என்று அந்த பொருளை வாங்கி, ஓஹோ வந்த வேலை என்ன, அது மறந்து விட்டதே என்று தோல்வியை ஒப்புக் கொண்டு 'gift card' வாங்கும் கல்யாணம் ஒரு கொண்டாட்டம்தான். பிறந்த நாளுக்குக் கிளம்புவது ஆண்களுக்கு மிகச் சுலபம். அதே நீல ஜீன்ஸ், இந்தியாவில் இருந்து வாங்கி வந்த கோடு போட்ட சட்டை - தயார். பெண்கள் பாடு கொஞ்சம் சிரமம். ஊரில் ஆயிரமாயிரமாகக் கொடுத்து வாங்கிய துணிகளைப் போட்டுக்கொள்ள இதுதானே சந்தர்பம்? ஒரு உடையை எடுத்தால், இதைப் போனமுறை நாம் போட்டதை பார்த்தவர்கள் யாராவது இந்தப் பிறந்த நாளுக்கு வருவார்களா? நாம் அதே உடையை பிறந்த நாள் யூனிஃபார்மாக அணிவதாக நினைப்பார்களா என்ற கவலையில் தீவிர யோசனை செய்து உடையைத் தேர்வு செய்ய வேண்டும். பின், பாவாடை போட்டுக்கொள்ள மாட்டேன், பழைய பிங்க் கால்சராயும் வெளுத்த வயலெட் சட்டையும்தான் வேண்டும் என்று பிடிவாதம் செய்யும் பெண் குழந்தைகளுடன் ஒரு உனக்கா-எனக்கா கயிறு இழுக்கும் போட்டி செய்து, அவர்களைக் கண்ணும் கண்ணீருமாக, ஆனால் குட்டி அம்மன் போல அழகாக அழைத்துக் கொண்டு, 6 மணி நிகழ்ச்சிக்கு 7:30 மணிக்கு முதல் ஆளாகப் போய் சேர்வதற்குள், அப்பாடா! பிறந்த நாள் விழாவில் பீட்ஸா இருந்தால் குழந்தைகள் "ஹய்! பீட்ஸா" என்று நாம் ஏதோ 3 வேளையும் காய்கறியைப் பச்சையாக தின்னக் கொடுத்ததுபோலப் பாய்வார்கள். மூன்று கவளம் சாதம் தின்றதும் உவ்வே என்று குமட்டும் குழந்தை, 1,2,3 என்று பீட்ஸா பெட்டி காலியாகும் வரை உலகை மறந்து உண்பது கண் கொள்ளாக் காட்சிதான். இத்தனை பணம் செலவழித்து, நேரம் செலவழித்து, இந்தக் கொண்டாடத்தின் மூலம் நாம் குழந்தைகளுக்கு சொல்லும் நீதி என்ன? கலாசாரம் என்பது உயிர் வாழ அவசியம் இல்லாதவற்றை நாமாக விரும்பிச் செய்வது. பண்டிகைகள், உணவு முறை, உடைகள் போன்றவற்றில் நம் கலாசாரம் பிரதிபலிக்கும். இந்த விழாக்களை நம் கலாசாரமாக குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா? எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும், சோர்வற்ற உழைப்பையும் முதன்மையாக நினைக்கும் நம் ஆதாரத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தெரிந்தால் அடுத்த பிறந்த நாள் விழாவில் சந்திக்கும் பொழுது கொஞ்சம் சொல்லுங்கள்!
மீரா சிவா, சன்னிவேல், கலி. |
|
|
|
|
|
|
|
|