Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
இண்டிகா பேசுகிறது
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|பிப்ரவரி 2010||(1 Comment)
Share:
Click Here Enlargeஅருமையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெண்ணெயாக வழுக்கிக்கொண்டு பறந்த எனக்கு வந்த விதியைச் சொல்லி அழுவதா, சொல்லாமலே அழுவதா தெரியவில்லை. எனக்குக்கூட இப்படி ஒருநாள் புலம்பும் நிலை வரும் என்று இரண்டு மாத முன்பு யாராவது கூறியிருந்தால் அவருக்கு உலக மகா முட்டாள் பட்டம் கட்டியிருப்பேன். எல்லாம் இரவோடிரவாகத் தலைகீழாக மாறியதுதான் கொடுமை. "நீங்கபாட்டுக்குக் காரை எடுத்துக்கிட்டு கிளம்பிடுறீங்க. கோயில் குளம் ஷாப்பிங்னு நாலு இடத்துக்குப் போகணும்னா ஆட்டோ உண்டா, கால் டாக்ஸி உண்டான்னு நாங்க அலைய வேண்டியிருக்கு. எனக்காவது பரவாயில்லை; அத்தையை இந்த வயசான காலத்தில் அலைக்கழிக்கணுமா?" என்று புலம்பலும், ஆதங்கமுமாக வீட்டம்மா அடுக்கிய ஆவலாதிகளுக்கு ஒரு கட்டத்தில் அடிபணிய வேண்டிய நிலை வந்து விட்டது என் எஜமானர் நீலகண்டன் அவர்களுக்கு. அடிமேல் அடி அடித்தால் அம்மியே நகருமாமே; அகத்துக்காரர் நகராமல் இருப்பாரா? முடிவு, பளபளக்கும் வண்டி வந்து நின்றது; லெக்ஸஸ் என்று பெயராம். இதுதான் எனக்கு ஒரு இளையாள் (இளையான்?) வந்து, நான் வீட்டில் இரண்டாந்தரப் பிரஜை ஆகி, அஷ்டமத்து சனி பிடித்த சோகக் கதை.

"புது வண்டியை நீங்களே ஓட்டிக்கொண்டு போகலாம்; இண்டிகாவை வீட்டு உபயோகத்துக்கு, டிரைவர் பரசுவுடன் வச்சிக்கலாம். லீவுக்கு சுப்ரபாவும் வருகிறாள். நாலு இடம் போக வர உதவும்" எல்லாம் அடுக்கடுக்காக எஜமானியம்மாள் போட்ட உத்தரவுகளே. எஜமானைப் பொறுத்தவரை மணமான அன்று முதலே அவர் பேச்சிலர்தான். அவ்வளவுதான். அந்த சுபதினத்திலிருந்து பாட்டியம்மாளுக்கு சௌகார்பேட்டை பைராகி மடம், திருவள்ளூர், மாங்காடு, போரூர் எனக் கோயில்களுக்கும், அரை டிக்கெட்டுகளுக்கு கிஷ்கிந்தா போக, அடுத்த தெருவிலிருக்கும் சினேகிதர்கள் வீட்டுக்கு (படிக்கப் போவதும், புத்தகம் வாங்குவதும் சாக்காக) விளையாடப் போகவுமாக அலைக்கழிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் யாரோ சுப்ரபாவாமே, அந்த அம்மணி வந்தால் என்னாகுமோ? ஆற்காடே இத்தனை அதிசயமாக இருக்கும்போது, வேலூர் எத்தனை வேடிக்கையாக இருக்குமோ? ஹூம், விதி யாரை விட்டது?

” என்ன அண்ணா, ஏதோ புது வண்டி வாங்கியிருக்கீங்கன்னு அம்மா சொன்னாங்க; அதைக் கொண்டு வந்திருக்கக் கூடாதா?" என்று குறைப்பட்டவாறே அரை மனதுடன் ஏறி அமர்ந்தாள்.
அன்று பொழுது விடியு முன்பிருந்தே வீடு கல்யாண திமிலோகப்பட ஆரம்பித்து விட்டது. வாழைமரம், தோரணம் மட்டும்தான் பாக்கி; ஒரு வாரமாகவே என்னை மார்க்கெட், ஜவுளிக்கடைகள், மளிகைக்கடை எனப் பலமுறை அலையவிட்டு ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்டனர். "சுப்ரபாவுக்கு இது பிடிக்கும், பெரியவளுக்கு இந்த டிரஸ் எடுப்பாக இருக்கும்; சமையல்கார மீனா மாமியிடம் சொல்லிப் பலகாரம் செய்ய ஒரு ஆளை வரவழைத்து திரட்டுப்பால், கை முறுக்கு, தட்டை, அதிரசம் என்று செய்து வைக்கணும். கடைகளில் கண்ட எண்ணெயில் செய்து நாள்பட்டதாக வத்திருப்பாங்க. குழந்தைகளுக்கு ஒத்துக்காது" என்று ஒரே ஆர்ப்பாட்டம். "பெட்டிகள் நாலைந்து இருக்கும். புது வண்டியில் அத்தனை சாமான் கொள்ளாது; பழையதிலேயே போய் வாங்க" என்று கூறிவிட்டார் எஜமானியம்மா.

சரி; விமான நிலையத்துக்குப் போவோம். குடும்பம் முழுதும் வாய்க்கு வாய், மூச்சுக்கு மூச்சு உச்சரித்த அந்தப் பெயருக்குரிய சுப்ரபாவும் அவளுடன் அவள் பெற்ற செல்வங்களான ஆறு, மூன்று வயது அக்காள், தம்பி இருவருடன், பூதம், பெரும்பூதம் என்னும்படியான மூன்று பெட்டிகளும், அவற்றுக்குத் தம்பி என்னும்படியான இரு தோள் பைகளுமாக வந்தனர். பாட்டியம்மாவின் மகளும், பேரக்குழந்தைகளும் என்று புரிந்து கொண்டேன். சாமான்களை ஏற்றும் பொழுதே என்னை ஏற இறங்கப் பார்த்த சுப்ரபா, "என்ன அண்ணா, ஏதோ புது வண்டி வாங்கியிருக்கீங்கன்னு அம்மா சொன்னாங்க; அதைக் கொண்டு வந்திருக்கக் கூடாதா?" என்று குறைப்பட்டவாறே அரை மனதுடன் ஏறி அமர்ந்தாள். "அண்ணா, எனக்குப் போக வர இந்த வண்டிதான்னா நான் இங்கிருக்கும் வரை பேசாமல் ஒரு வாடகைக் கார், ஏ.சி.யுடன் ஏற்பாடு பண்ணிக்கொள்கிறேன். என் உறவுக்காரங்க வீடுகளுக்கு இதில் போய் இறங்கினால் என் கௌரவம் என்னாவது?" என்று சிடுசிடுத்தாள். "கொஞ்சம் பொறுத்துக்கோ சுபி, வீட்டுக்குப் போய் பேசிக்கொள்ளலாம்." என நீலகண்டன் அவளுக்கு ஆறுதலளித்தார்; ஆனால் அதில் சற்றும் சுரத்தே இல்லை.

வீடு வந்து சேர்ந்ததும் வழக்கமான நலவிசாரிப்புகள் முடிந்து, மிகவும் நேரமாகிவிட்டதால், அவரவர் படுக்கப் போய்விட்டனர். மறுநாள் காப்பிக் கோப்பையுடன் வந்த மனைவியிடம் நயந்து, முகம் பார்த்துத் தங்கையின் மனுவைச் சமர்ப்பித்தார் நீலகண்டன். "புது வண்டியைக் கண்டபடி விட்டடித்தால் நாலு நாளில் நாஸ்தியாயிடும். இஷ்டமானால் இண்டிகாவில் போகட்டும்; இல்லாட்டா அவள் சொன்னபடி வாடகைக் கார் வைச்சுக்கட்டுமே." என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வந்தது பதில். ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான்.

அடுத்ததாகத் தங்கையைத் தாஜா பண்ணும் படலம். "அம்மா, நீ, பசங்கள் நாலு பேர், அண்ணி என்று இத்தனை பேருக்கும் வாடகை வண்டி என்றால் பெரிய வேன்தான் அமர்த்த வேண்டும்; இண்டிகா என்றால் டீசல், அதில் போனால் செலவும் குறைவு. உன் வீட்டு உறவுக்கு ஏதாவது பொருளாக வாங்கித் தந்தாலும் பிரயோஜனமாகும். என்ன சொல்றே?" என்று ஆலோசனையையே உத்தரவாக்கிவிட்டார் எஜமானர். முணுமுணுப்புடன் சம்மதித்தாள் சுப்ரபா. பின்னே? என் விதி விளையாட ஆரம்பித்த பிறகு சம்மதிக்காமல் இருப்பாளா?

படப்பையிலிருக்கும் புகுந்த வீட்டு அத்தை, புழலிலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் கடந்து ஏதோ ஒரு குக்கிராமத்திலிருக்கும் பாட்டியம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை என்று திக்விஜயம் செய்யப் புறப்பட்டுவிட்டார்கள். அமெரிக்காவில் ஏதோ ஒருடாலர் கடையாமே, நம் ஊர் நடைபாதைக் கடைபோன்றது, அங்கு சிறு சிறு பர்ஸ்கள் (அதில் ஒரு ரூபாய் நோட்டைக்கூட நாலாக மடித்துதான் வைக்க முடியும்), ஊசி, நூல் வைக்கும் கையடக்கப்பெட்டி, விற்காது கிடந்த, ப்ளாஸ்டிக் பூக்கள், வண்ண ரசகுண்டுகள் என்று எதை எதையோ வாங்கி வந்துவிட்டு அவர்களிடம் அலட்டிக் கொள்வதைக் காது கொடுத்துக் கேட்க சகிக்கவில்லை. ஒரே ஆறுதல்; நான் ஜடப்பொருளாக இருந்து இத்தனையையும் அனுபவிக்கிறேன் என்றால் பாவம் ஓட்டுனர் என்ற பெரிய பதவியைத் தலைமேல் தாங்கிக்கொண்டு அந்த மனிதரும் இரண்டுகால் ஜடமாக எனக்குத் துணையாக இருக்கிறார் என்பதுதான். எங்கள் இருவரையும் நன்றாக இழுத்தடிக்கிறார்கள். அவர் நிலை இன்னும் மோசம். தங்களுக்கு இணையாக விளையாடத் துணையில்லாமல் நச்சரிக்கும் பசங்கள் இருவரையும் "போய் டிரைவர் அங்கிளுடன் இருங்க" என்று விரட்டி விடுவதும், அதுகள் அவரை 'பர்ஸ் அங்கிள், பர்ஸ் அங்கிள்' என்று (பரசுவின் புதுப் பெயர்!) உண்டு இல்லை என்று செய்வதும் அவர்களது தொணப்பல்களுக்கு ஏதாவது பதில் கூறினால், 'ஏக்குப் புளியலே' என்று விழிப்பதும் பார்க்க, நானே பரவாயில்லை. பாட்டியம்மாள் 'ஆமாம், புளி இல, வேப்பில நல்ல தமிழ் பேசறாம்மா உன் பிள்ளை' என்று மகளிடம் விமர்சிப்பதும் அடிக்கடி நடக்கும்.
"ஐயோ இங்கே பாரேன்; லட்ச லட்சமாக் கொட்டி வாங்கின வண்டியிலே அழுக்கு உடம்பை உரசிக்கிட்டு நிற்கிறா ஒருத்தி, இன்னொண்ணானா நிலைக்கண்ணாடியா நினைச்சு மினுக்கிக்கிட்டு நிக்குது....”
ஏதோ வழக்கமாக இப்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் செய்வது போல் புடவை, துணிமணிகள், நகைகள், சில கலைப் பொருட்கள் என வாங்கிக் குவித்துக் கொண்டு, பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிடுவார்கள் என நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். விஷயம் மிகத் தீவிரமாகப் போய்க் கொண்டிருந்தது. பாட்டியம்மாள், சுப்ரபா, அவர்களுக்குப் போட்டியாக எஜமானியம்மாளும் தத்தம் வழியிலுள்ள எட்டத்து உறவுகளை, அந்தந்த ஊரில் சுவாமி தரிசனம் செய்யும் சாக்காக விசிட் செய்து, கூடவே அங்கங்கு தங்கள் வெளிநாட்டுப் பெருமையையும் முழக்கிவிட்டு (அதுதான் எழுதப்படாத விதியாயிற்றே), வரும் ஒர் பெரிய பயணத் திட்டத்தையே தீட்டிவிட்டிருந்தனர். ஆக, ஒரு வாரகால 'இன்பச் சுற்றுலா' முடிந்து திரும்பியதும் என் உருவமே எப்படி மாறியிருக்குமோ?

என் எதிர்பார்ப்புக்குக் குறையாமல் எனக்கும், பாவம், என்னை ஓட்டும் விதி வாய்த்த பரசுவுக்கும் ஒவ்வொரு இடத்திலும் சேதங்களும், சேதாரங்களும் இருக்கத் தான் செய்தன. கும்பகோணம், சுவாமிமலையிலிருந்து, காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர் என்று ஒரு இடத்தை விடவில்லை அவர்கள். அப்படி இப்படியென்று ஒரு வழியாக யாத்திரையின் இறுதிக்கட்டமும் வந்துவிட்டது.

திருத்தணியிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரமே உள்ள, குண்டு குழிகளுக்கிடையே சின்ன ரிப்பன் போல அமைந்திருந்த சாலையில் ஏறிக் குதித்து, எலும்பெல்லாம் கடகடக்கும்படி ஓடி ஒரு ஓட்டு வீட்டை அடைந்தேன். நாலு வால்களும் வழி நெடுக அது வேண்டும், இது வேண்டும், கொஞ்சம் இறங்கி 'ஆசுவாசம்' செய்யவேண்டும் எனத் தொணப்பியது ஒருபுறம் என்றால், மூன்று பெண்மணிகளும், வழி நெடுக வாய் ஓயாது ஒவ்வொருவரின் உறவினரின் பிரதாபங்கள், குற்றம் குறைகள் என சளசளத்தபடி குறுக்கே ஓடும் ஆடு, கோழிகள், குழந்தைகள் கவனத்தைக் கவர ஊதுகுழல் கொடுத்த ஓசைகூட அமுங்கிப் போகும் வகையில் முழங்கிக்கொண்டே வந்தனர். எங்கோ இளநீர் குடித்துவிட்டு வழுக்கையைப் பங்கிட்டுக்கொள்வதில் சுப்ரபாவின் இரு குழந்தைகளும் செய்த துவந்த யுத்தத்தில் இறுதியாகத் தன் கையிலிருந்த இளநீரின் ஓட்டை ஓங்கி என்மீது வீசினாள் பெரியவள். களம் சென்ற வீரத் தழும்பும் கிடைத்து விட்டது! எஜமானியம்மாளுக்கோ கோபம் தலைக்கேறி விட்டது. "இப்படி ஒரு ஆங்காரம் கூட வருமா? இப்போது டிங்கர் செலவு வேறு விழுந்திருக்கு. குழந்தையை வளர்க்கும் விதம் ரொம்ப அழகாயிருக்கு" என்று படபடக்க, சுப்ரபாவும் சளைக்காமல், "சின்னக் குழந்தை ஏதோ செய்துவிட்டுப் போகிறது என்று விடாமல், இந்த இண்டிகாவுக்கே இந்த ஆவேசப் படறீங்களே அண்ணி? நான் ஒண்ணும் இல்லாதவளில்லை; வீட்டில் ஒரு பென்ஸும் ஒரு பி.எம்.டபிள்யூவும் வைத்திருப்பவள்தான். நானே ரிப்பேர் செலவைக் கொடுத்துடறேன்" என்று எதிர்க்கத்தல் போட, பாட்டியம்மாள் மத்யஸ்தத்தில் சமரசம் நிலவியது. ஏதாவது ஒரு மெக்கானிக் ஷெட்டில் ஒரு பத்து நாளாவது ஹாயாகத் தங்கி லொடலொடத்துவிட்ட என் பாகங்களுக்கு வைத்தியம் செய்துகொண்டால்தான் என் 'பாடி' சுதாரிக்குமோ அல்லது ஒரேயடியாகக் காயலான் கடைக்கே செல்ல வேண்டியிருக்குமோ என்னும்படி ஆகி இருததது என் நிலை. படைகள் ஒருவாறு வீட்டில் நுழைந்ததும் டிரைவர் பரசு, பாவம் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். நான் வழக்கம்போல ‘தேமே'னு நின்று கொண்டிருந்தேன்.

திடீரென்று ஒரு மழலையர் பட்டாளம் வந்தது. நாலிலிருந்து ஏழு வயதுக்குள் இருக்கும். அருகே ஏதாவது அரசுப்பள்ளி இருக்கும் போலும். பார்வையிலேயே தெரிந்தது, இவர்களுடைய தலைகளுக்கு மேல், பல மீட்டர் உயரத்தில்தான் வறுமைக் கோடு பூமத்திய ரேகை போல ஓடிக்கொண்டிருக்கும். பளபளக்கும் என் கருநீல வண்ணம் அவர்களைக் கவர, இரண்டு குட்டிப்பெண்கள் என்னையே நிலைக்கண்ணாடியாக பாவித்துத் தங்கள் ரெட்டை ஜடையையும், கொத்து மல்லிக்கட்டு கூந்தலையும், பொட்டையும் சரி செய்து கொண்டார்கள். ஒரு பையன் ரியர்வியூ கண்ணாடியில் பார்த்து, "டேய், இங்கே பாரேன், நம்ம வேலு எத்தனை குட்டையா, பாப்பாவைப்போல இருக்கான்" என்று வியந்து கொண்டிருந்தான். மற்றொருவன், "இந்தக் கார் ஒண்ணும் நம் ஊர் பாங்கு ஆபீசர் காரைவிட ஒசத்தியில்லை" என்று பந்தயம் கட்டிக்கொண்டிருந்தான். மொத்தத்தில் நான் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்குப் பொருளாக இருந்தேன். ஒரு குழந்தை என் வழவழப்பான உடலின்மீது தன் கன்னத்தை இழைத்துக் கண்மூடி மகிழ்ந்திருந்தது. என் உடல் சிலிர்த்தது. இந்த அல்ப சந்தோஷம் கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை போலிருக்கிறது.

அந்த வேளை பார்த்துதானா உள்ளே சென்றிருந்தவர்கள் தடதடவென்று வெளியே வர வேண்டும்? குழந்தைகள் கூட்டத்தையும், உறக்கத்திலிருந்த பரசுவையும் சேர்த்துப் பார்த்ததுதான் தாமதம்; அனைவரும் ஒரே குரலாக வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். "ஐயோ இங்கே பாரேன்; லட்ச லட்சமாக் கொட்டி வாங்கின வண்டியிலே அழுக்கு உடம்பை உரசிக்கிட்டு நிற்கிறா ஒருத்தி, இன்னொண்ணானா நிலைக்கண்ணாடியா நினைச்சு மினுக்கிக்கிட்டு நிக்குது என்ன அநியாயம் நடக்குது இங்கே?" என்று பாட்டியம்மா காட்டுக் கூப்பாடு போட, அதிர்ந்து வாரிச்சுருட்டி எழுந்தார் பரசு. பாவம், அந்தப் பொடிசுகள் அன்று யார் முகத்தில் விழித்தார்களோ, பாட்டியம்மா தன் வயதையும் மறந்து அவர்களை ஓட ஓட விரட்டி, கைக்கு அகப்பட்ட குட்டிப் பெண்ணை நன்றாகக் குட்டிவிட்டு வந்துதான் சற்று நிம்மதியடைந்தார். பரசுவுக்கு வழி நெடுக அர்ச்சனை.

அடைமழை பெய்து ஓய்ந்த மாதிரி சற்று அமைதி நிலவியது வண்டியில். ஒரு குழந்தை கேட்டது, "ஏன் பாட்டி, மனீஷா தேங்காயை எறிந்து வண்டியையே சொட்டையாக்கினபோது கூட அவளைக் கோபிக்கவேயில்லை, இந்தப் பசங்கள் சும்மா வேடிக்கை பார்த்ததுக்கு இப்படி எல்லாருமா அவங்களைத் திட்டி அடிக்கிறீங்களே?" பாட்டியின் பதில், "ஆமாம், இதுங்க முகம் பார்த்து மினுக்கவும், கன்னத்தை இழைக்கவும்தான் வண்டி வாங்கி வெச்சிருக்கோம் பார்; திட்டாம, கொஞ்சுவாங்களாக்கும்". உதட்டைப் பிதுக்கிய அந்தக் குழந்தை கூறியது, "ஏக்கு ஒண்ணுமே புளியலை".

ஏக்கும் தான் ஒண்ணுமே புளியலே (ஐயய்யே! எனக்கும் இந்தப் பேச்சு தொற்றிக் கொண்டு விட்டதே). ஆனால் ஒன்று; இந்தக் குழந்தைகள் இன்று போல புரிந்து கொள்ளாமல் இருந்தாலே சற்று மனிதாபிமானத்துடன் வளர்வார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பெரியவர்கள் அவ்வாறு இருக்க விடுவார்களா?

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோஸே, கலி.
Share: 




© Copyright 2020 Tamilonline